அகமுடையார் குலத்தில் தோன்றிய பொதுவுடைமைப் போராளி, “மாவீரன் வாட்டாக்குடி இரணியன்…

Spread the love

First
அகமுடையார் குலத்தில் தோன்றிய பொதுவுடைமைப் போராளி,

“மாவீரன் வாட்டாக்குடி இரணியன்”
(1920 – 1950)

செஞ்சுடர் ஏந்தி திமிர்ந்து நிற்கிறது தஞ்சை மாவட்டத்தின் பட்டுக்கோட்டை அருகில் உள்ள வாட்டாக்குடி ஊரில் உள்ள நினைவுச் சின்னம். மாவீரன் இரணியன் நினைவாக இதே மாதிரி பட்டுக்கோட்டை மயானத்திலும் நினைவுச் சின்னம் எழுப்பப்பட்டுள்ளன.

அடக்குமுறைக்கு எதிராக ஒலித்த மாவீரன் வாட்டாக்குடி இரணியனின் கலகக் குரல் 70 ஆண்டுகளுக்கு முன்பு ஒடுக்குமுறைக்கு எதிராக திமிரி உருவான கெட்டி தட்டிய நினைவாக நிற்கின்றன இந்த சின்னங்கள்.

மாவீரனின் பிறப்பு,

பட்டுக்கோட்டை வட்டம், வாட்டாக்குடி என்ற சிற்றூரில் “அகமுடையார்” குலத்தில், இராமலிங்கத்தேவர் – தையல் அம்மாள் தம்பதிகளுக்கு 1920 ஆம் ஆண்டு நவம்பர் 15 ஆம் நாள் இரணியன் பிறந்தார்.

வாட்டாக்குடி இரண்டு உட்பிரிவுகளையுடையது. அவை வடக்கு வாட்டாக்குடி, தெற்கு வாட்டாக்குடி ஆகியவையாகும். இரணியன் தந்தை வடக்கு வாட்டாக்குடியில் வாழ்ந்து வந்தார்.

மாவீரன் இரணியன் அவர்களின் இயற்பெயர் வெங்கடாசலம். தாய், தந்தை இருவரும் திருப்பதி வேங்கடாசலபதியை வேண்டிக் கொண்ட பிறகு பிறந்ததால் வெங்கடாசலம் எனப் பெயர் சூட்டப்பட்டது.

இரணியனுடன் பிறந்தவர்கள் நாராயணன் என்ற ஒரு சகோதரர், இராஜாமணி, சேது, சிவபாக்கியம், மீனாட்சி என்ற நான்கு சகோதரிகள். மூத்த மகனாக இரணியன் பிறந்தார். இரணியன் தந்தை விவசாயத்தை சார்ந்து வாழ்ந்து வந்தார்.

இரணியனுக்கு கல்வி அளிக்க விருப்பம் கொண்ட பெற்றோர் இவரை 1925 இல், வாட்டாக்குடியில் இருந்த திண்ணைப் பள்ளிக்கூடத்தில் சேர்த்தனர். குடும்பச் சூழ்நிலை காரணமாக மேலும் படிப்பைத் தொடர முடியாமல் ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படிக்க முடிந்தது.

குடும்பத்தின் கடன் பிரச்சனைகள் காரணமாக தன்னுடைய 13 வயதில் உறவினருடன் சிங்கப்பூர் சென்றார். அங்கு சென்றவுடன் அழைத்து வந்த சொந்தம் அறுந்து போனது. தனித்து விடப்பட்ட நிலையில் கட்டிட வேலையில் உதவினார். அங்குள்ள தோட்டங்களில் வேலை பார்க்கும் தமிழ் தொழிலாளர்களுக்காக புட்டு, இடியாப்பம் வியாபாரம் செய்தார்.

அத்தமிழ் தொழிலாளிகளுடன் நெருக்கம் கூடியது. தமிழர்கள் ஏன் அங்குள்ள சீனர்கள், மலேயர்கள், ஆங்கிலேயர்களுக்கு சொந்தமான இரப்பர் தோட்டங்களில் அடிமை மாதிரி நடத்தப்படுகிறார்கள்? இந்த கேள்வி அதற்கேற்ற தோழமையை உருவாக்கியது.

பொதுவுடைமை சிந்தாந்ததின் ஈர்ப்பு,

மாவீரன் மலேயா கணபதி, வீரசேனன் உள்ளிட்ட போராளிகளின் தொடர்பு வாட்டாக்குடி இரணியனுக்கு கிடைத்தது. இந்த தொடர்பு இரணியனை புது மனிதனாக மாற்றியது.

பல் நூல்கள் வாசிக்க முடிந்தது. வாசிப்பின் விளைவு மனதின் பிடிப்பு மாறியது. பொதுவுடைமை சித்தாந்தப் பயிற்சி பெற்றார். கல்வி அறிவிலும் நல்ல தேர்ச்சி பெற்றார்.

இரகசியமாக நடந்த சில அரசியல் கூட்டங்களுக்குப் போனார்.

இரணியன் – பெயர் மாற்றம்

வாட்டாக்குடியில் பிறந்த வெங்கடாசலம் பொதுவுடமைக் கருத்திலும், பகுத்தறிவிலும் ஒன்றிணைந்து வளர்ச்சி அடைந்தார். வெங்கடாசலம் என்ற பெயரை சிங்கப்பூரில் இரணியனாக மாற்றிக் கொண்டார். இந்த பெயரே இறுதிவரை நிலைத்து விட்டது. ஆண்டவனே தவறு செய்தாலும் எதிர்க்கும் எண்ணத்தில் நாத்திக கொள்கையை வெளிபடுத்தும் பெயராக வைத்துக்கொண்ட மாவீரன் இரணியன், பொது மக்களின் போராட்டத்தால் ஆதிக்கக் கோட்டைகளை உடைத்தெறியும் ஈட்டி முனையாக விளங்கினார்.

1936 இல் இந்திய இளைஞர் கழகம் என்ற அமைப்பை ஏற்படுத்து மலேயா கணபதி, வீரசேனன், இரணியன் மூவரும், மேலும் நூற்றுக்கணக்கான கம்யூனிஸ்ட் தோழர்களும் சிங்கப்பூர் தொழிற்சங்கங்களில் சேவை செய்தனர்.

1941 டிசம்பர் 7 இல் ஜப்பான் சிங்கப்பூர் மீது படை எடுத்தது. இந்திய இளைஞர் கழகம் யுத்தத்தில் காயம் அடைந்தவர்களுக்கு உதவி செய்யும் நோக்கில் தொண்டர்படை அமைக்கப்பண்டு இரணியன் தலைமையில் செயல்பட்டது.

மாவீரன் இரணியனும் – இந்திய தேசிய இராணுவமும்

1943 ஆம் ஆண்டு செர்மனியிலிருந்து பயங்கரமான அபாயங்களில் இருந்து தப்பி, நேதாசி சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள் சிங்கப்பூர் வருகின்றார். அவர் சிங்கப்பூர் வந்ததும் தமிழ் மக்களிடையே புது எழுச்சி பிறந்தது.

மாவீரன் இரணியனுக்கு இந்தியத் தலைவர்களில் நேதாசியை மிகவும் பிடித்து இருந்தது. ஆங்கிலேயன் நமக்கு சுதந்திரம் கொடுப்பதற்கு யார்? நாம் நம் நாட்டை இரத்தம் சிந்திப் பெறவேண்டும் என்ற நேதாசியின் கொள்கை இரணியனுக்கு மிகவும் பிடித்து இருந்தது.

நீங்கள் இரத்ததைத் தாருங்கள், நான் உங்களுக்கு சுதந்நிரத்தை வாங்கித் தருகிறேன் என்று வங்க சிங்கம் கர்ஜித்தது. கூடி நின்ற மக்கள் புல்லரித்து நின்றார்கள்.

நேதாஜிக்கு ஜே, நேதாஜிக்கு ஜே,

மண்ணிலிருந்து எழுந்த ஒலி விண்ணையே அதிர வைத்தது பெண்கள் தாங்கள் போட்டிருந்த தங்க நகைகளையும், தாலி கொடிகளையும் போர் நிதிக்காக கழற்றிக் கொடுத்தார்கள்.

அந்த நேரத்தில் தான், மாவீரன் இரணியன் இந்திய தேசிய இராணுவத்தில் சேர்ந்தார். ஏற்கனவே இருந்த பயிற்சியோடு இன்னும் தீவிரமாகப் பயிற்சி பெற்றார்.பல்வேறு வகையான கொரில்லாப் போர் முறைகளைத் தெளிவாகக் கற்றுத் தேர்ந்தார்.

இரணியனின் திறமையைக் கண்டு இந்திய தேசிய இராணுவத்தில் பதவி உயர்வு தேடி வந்தது. மலேயா கணபதி, வீரசேனன், இரணியன் போன்ற முக்கிய போராளிகள் நேதாசியை சந்தித்தார்கள்.

சிங்கப்பூர் தொழிற்சங்கத் தலைவர்

ஆசியாவில் மிக முக்கியமான சிங்கப்பூர் துறைமுகம். அத்துறைமுகத்தின் தொழிற் சங்கத்தின் பொறுப்பு இரணியனை தேடி வந்தது. அந்த தொழிற்சங்கத்தில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் மட்டும் 12,000 நபர்கள், அச்சங்கத்தின் தலைவரானார் இரணியன்.

1946 இல் ஆங்கிலேயர்களும், மலேசிய முதலாளிகளும் இரவுடிகளைக் கொண்டு துறைமுகத் தொழிலாளர் சங்கத்தை உடைக்க முயன்றார்கள். ஆங்கிலேயர்கள், மலேசிய முதலாளிகள், காவல்துறையினர், இரவுடிகள், துரோகிகள் ஆகியோர்கள் ஒன்றிணைந்து தொழிலாளர்கள் போராட்டத்தை தடுப்பதற்கும், நசுக்குவதற்கும், அதையும் மீறி போராட்டத்தில் கலந்து கொள்ளும் தொழிலாளர்கறை கொலை செய்வதற்கும் திட்டமிட்டனர்.

இதை அறிந்த மாவீரன் இரணியன் அதற்கு மாற்றாக “இளைஞர் தற்கொலைப் படை”யை உருவீக்கினார். துடிப்பான இளைஞர்களுக்கு துப்பாக்கி சுடுவது உள்ளிட்ட கொரில்லா பயிற்சி கொடுத்தார். மதுபானங்களை தடை செய்தார்.தொழிற்சங்கப் போராட்டத்தை நடத்தி, துறைமுக நிர்வாகத்திடம் பேசி தொழிலாளர்களுக்கு உரிமைகளும், சலுகைகளும் பெற்றுக் கொடுத்தார்.

திரும்பத் திரும்ப அங்குள்ள இரவுடிகளின் மூலம் வன்முறையின் விளைவை அனுபவிக்க வேண்டியிருந்தது. முதலாளி வர்க்கத்தின் கைக்கூலிகளான முக்கிய நான்கு இரவுடிகளை ஒரே இடத்திற்கு வரச்சொல்லி சுட்டுக் கொன்றார். பிணங்கள் கடலில் வீசப்பட்டன. வன்முறை கட்டுக்குள் வந்தது. இந்த செயல் எதிரிகளை குலை நடுங்கச் செய்தது. கிழக்காசிய இரவுடிகளையும், பண முதலாளிகளையும், தொழிலாளர் வர்க்க எதிரிகளையும், மாவீரன் இரணியனின் வீரம் திகைக்க வைத்தது. ஆனால் சிங்கப்பூரில் யாரும் இவரைக் காட்டிக் கொடுக்க முன்வரவில்லை.இந்தக் கொலைகளைச் செய்தவர் யார்? என்று பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது. சிங்கப்பூர் மக்கள் இரணியனை தெய்வமாக வணங்கினார்கள்.

இரணியன் – இந்தியா திரும்புதல்

1948 இல் ஆளும் வர்க்கம் மலேசியாவில் பொதுவுடைமைக் கட்சியை தடை செய்தது. அதனால் முன்னணித் தலைவர்கள் அனைவரும் தலைமறைவானார்கள்.

மலேசிய ஆளும் வர்க்கம் மாவீரன் இரணியனை தீர்த்துக் கட்டும் முயற்சியில் இறங்கியது. அதனால் இரணியன் சிங்கப்பூர் மண்ணிலிருந்து வெளியேறினார்.

1948 இல் மாவீரன் இரணியன் தன்னுடைய 28 ஆவது வயதில் சொந்த ஊரான வாட்டாக்குடிக்கு திரும்பினார்.

அப்போது இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்து ஒரு ஆண்டுகள் முடிந்த காலகட்டம், பகத்சிங், நேதாசி உள்ளிட்ட எண்ணற்ற விடுதலை வீரர்களை ஆங்கிலேயர்களுக்கு காட்டிக் கொடுத்து தனது துரோகத்தால் இந்திய சுதந்திரம் என்ற பெயரில் டாட்டா, பிர்லா போன்ற பணமுதலைகளின் கைக்கூலியாக காங்கிரசு கட்சி ஆட்சிக்கட்டிலில் வீட்டிருந்தது.

மாவீரன் இரணியனின் போராட்ட வாழ்க்கை,

இரணியன் தஞ்சை தரணியில் காலடி எடுத்து வைத்த நேரம் இந்திய பொதுவுடமைக் கட்சி தடை செய்யப்பட்டிருந்தது.

சொந்த ஊரான வாட்டாக்குடிக்கு வந்த இரணியன் தஞ்சை மண்டலத்தில் நிலப்பிரபுக்களின் ஆதிக்கம் அதிகரித்திருந்த நேரம், விவசாய கூலிகள் பல கொடுமைகளை சந்தித்துக் கொண்டிருந்தார்கள். திருக்கை மீனின் வாலினால் செய்யப்பட்ட “சவுக்கடியும்,” “சாணிப்பாலும்” அப்போது இயல்பானதாக இருந்தது.

சிங்கப்பூரிலிருந்து ஏற்கனவே கனத்த இயத்துடன் திரும்பிய இரணியனால் இந்த கொடுமைகளை, இயல்பாக பார்க்க முடியவில்லை.

தஞ்சை மாவட்ட பொதுவுடைமைக் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு, உழைக்கும் வர்க்கத்திற்காகவும். ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும், சமூக கொடுமைகளுக்கு எதிராகவும் விவசாயிகள் சங்கத்தை கட்டமைத்தார்.

நிலப்பிரபுகளுடன் தீவிரமாக மோதினார். கூலி உயர்வை அமுல் படுத்தினார். பயத்துடன் நிலப்பிரபுக்கள் தனியாக ஒரு சங்கத்தை துவங்கினார்கள்.

தென்பரை கிராமம்

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தென்பரை கிராமத்தில் விவசாய சங்கத்தை கட்டமைத்தார். இந்தியாவில் உள்ள மடங்களில் ஒன்றான ஹைதராபாத்தை தலைமை இடமாகக் கொண்ட உத்திராபதி மடத்திற்குச் சொந்தமான கிராமங்கள் 130, இவற்றில் ஒன்றுதான் தென்பரை கிராமம். தென்பரையில் நஞ்சை புஞ்செய் 2000 ஏக்கர் குத்தகைக்கு விடப்பட்டது. இந்த நிலத்தில் வேலை செய்கிறவர்கள் விவசாய சங்கம் அமைத்து கூலி உயர்வு வேண்டி போராடினர். இதனால் பரம்பரை பரம்பரையாக இருந்த பழக்க வழக்கங்களை விவசாய சங்கம் மாற்றியதால் பண்ணை முதலாளிகளுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. அதனால் கூலியை உயர்த்திக் கொடுப்பதாகக் கூறி அனைவரையும் அழைத்தார்கள். கார்வாரி பேசி விட்டுத் துண்டை ஆட்டியவுடன் நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்களும், அடியாட்களும் பயங்கரமாகத் தாக்க ஆரம்பித்தனர். சிறிது நேரத்தில் அவர்கள் ஊருக்குள் சென்று கிணற்றில் கள்ளியை வெட்டிப் போட்டார்கள், வழி பாதைகள் அடைக்கப்பட்டன. இவற்றை அறிந்த இரணியன் தென்பரை பண்ணைக்கு சென்று பண்ணை முதலாளியை மிரட்டினார். அதற்குப் பிறகு கொடுமைகள் ஓரளவு குறைந்தது.

பாமணி ஆற்றுப் பக்கத்தில் நாயுடு ஒருவர் பண்ணை அமைத்து இருந்தார். அங்கு தொழிலாளி ஒருவர் கதிர்க் கட்டுகளை தூக்கிக் கொண்டு வரும்போது கால் தவறிக் கட்டு கீழே விழுந்த்தால் அத்தொழிலாளியை நாயுடு தண்டித்தார். இவற்றைப் பற்றி சீனிவாசராவ் அப்பண்ணை முதலாளியிடம் விளக்கம் கோட்டதற்கு சரியான் பதில் இல்லை. அதனை அறிந்த இரணியன் அந்த பண்ணையின் முதலாளி நாயுடுவை தாக்கினார்.

நில மீட்சிப் போராட்டம்

செம்பாளூர் கிராமத்தில் இனாம் நிலங்களைப் பெற்று பல பிராமணர்கள் குடியிருந்தனர். அந்த நிலங்களை வாங்கி ஒரு பண்ணையை அமைத்தார் சாம்பசிவம் ஐயர். இரணியன் தலைமையில் 1950 ஆம் ஆண்டு பிப்ரவரி திங்களில் சாம்பசிவ ஐயர் அவர்களின் வீட்டை நூற்றுக்கணக்கானவர் தாக்குதல் செய்தனர்.

மன்னார்குடி தாலூக்கா சிறுகளத்தூர், தஞ்சை நிலப்பிரபுகளின் தலைவர் நெடும்பலம் சாமியப்பா அவர்களின் பண்ணை சூறையாடப்பட்டு நெல் சேர் பிரித்து, விவசாயிகளுக்கு இரணியன் கொடுத்தார்.

மதுக்கூர் பண்ணைப் போராட்டம்

வாடியக்காடு இராசக்கண்ணு கோபாலர் ஆம்பலாப்பட்டு கிராமத்தில் இருந்த நூறு ஏக்கர் கிராம குடிக்காணிப் பத்திரத்தை வைத்து இருந்ததனால் கிராமத்தாருக்கும், மதுக்கூர் ஜமீனுக்கும் தகராறு ஏற்பட்டு விளைந்த நெல் மணிகளை ஜமீன்தார் பறித்து சென்றார். இதனால் ஆம்பலாப்பட்டு கிராமத்தினர் இரணியன் தலைமையில் இணைந்து கணக்குப்பிள்ளை தம்புசாமி, மங்கப்பன் அவர்களிடம் ரூபாய் 50 ஆயிரம் மதிப்புடைய பிராமிசரி நோட்டுக்களை பறிமுதல் செய்து தீயிட்டு அழித்தனர்.

காவல்துறையின் வரம்பு மீறிய செயல்கள்

காவல்துறைக்கும், இரணியனுக்கும் மோதல்கள் – தலைமறைவு வாழ்க்கை தொடர்ந்தது. இதனால் மாவீரன் இரணியன் அவர்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் பலவித தொந்தரவுகள் ஆளும் வர்க்கத்தினரால் தரப்பட்டன.

டி.எஸ்.பி சுப்பையா பிள்ளை, இரணியனை பழி வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் வாட்டக்குடியில் உள்ள இரணியன் வீட்டை அடியாட்கள் உதவியுடன் இடித்தான். இரணியனியனுடைய வளர்ப்பு நாய் சுட்டுக் கொன்றும், குடும்பத்தினரைப் பெரிதும் துன்புறுத்தினான்.

இவற்றை அறிந்த இரணியன் எங்களது வீட்டின் அஸ்திவாரத்தைத் தான் இடிக்க முடியும். எனது தைரியத்தை ஒன்றும் இடிக்க முடியாது என்றார்.

இராமலிங்கத் தேவர்- தையல் அம்மாள் அவர்களுக்குத் தன் வீட்டை இடித்தது மற்றும் இரணியன் உடன் பிறந்தவர்களை துன்புறுத்தியது அவர்களை துக்கமுறச் செய்யவில்லை. தனது மகன் தன் வாழ்விற்காகவோ, தனது குடும்பத்திற்காகவோ தவறு செய்யவில்லை, ஒடுக்கப்பட்ட மக்களின் நல்வாழ்விற்காகப் போராடிய மாவீரன் என்ற புன்முறுவலோடு தங்களுக்கு ஏற்பட்ட துன்பங்கள் அனைத்தையும் இன்முகத்தோடு ஏற்றுக் கொண்டனர்.

இல்லற வாழ்க்கை

பொதுவுடைமைக் கொள்கையில் அதிக தீவிர ஈடுபாடு கொண்டு இருந்ததால் திருமணத்தில் விருப்பம் இல்லாமல் இருந்தார். தனது பெற்றோர் வற்புறுத்தலின் காரணமாக, இரணியன் தனது அக்கா இராஜாமணி – சாமித்துரைத்தேவர் மகள் செல்லமணியை, பெற்றோர்களுக்குத் தெரியாமல் தாய், தந்தை, நண்பர்கள், தோழர்களும் ஆவிக்கோட்டைக் கந்தப்ப தேவர் வீட்டில் திருமணம் நடத்தினர். திருமணம் நடந்த சில மணித்துளிகளில் காவல்துறையினர் ஆவிக்கோட்டைக்கு வந்தனர். இவற்றை அறிந்த இரணியன் தனது தோழர்களுடன் தப்பித்துவிட்டார். காவல்துறையினர் மணப்பெண்ணையும், இரணியன் பெற்றோர்களையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று, ஊர் மக்களுக்கு தண்டோரா மூலம் அறிவித்து செல்வமணியின் அத்தை மகன் கணபதியைக் காவல்துறையினர் மிரட்டி இரணியன் போட்ட மூன்று முடிச்சை அவிழ்க்கச் செய்து அதே இரவில் கணபதியிடம் கொடுத்து, செல்வமணியின் கழுத்தில் கட்டச் செய்தனர்.

இந்த செய்தியை அறிந்த இரணியன் மனதில் எந்த மாற்றத்தையும், சோகத்தையும் ஏற்படுத்தவில்லை. இவருடைய வாழ்க்கை தண்ணீரின் மேலுள்ள நீர்க்குமிழி என்பதை அறிந்து மனதிற்குள் மணமக்களை வாழ்த்தினார்.

ஆரம்பம் முதல் இரணியன் படிப்பு, திருமணம் இவைகள் எல்லாம் அவருக்கு எதிராகவே நின்றன.

ஆளும் வர்க்கத்தின் ஏவல் துறையான காவல்துறையினரின் வேட்டை உச்சத்திற்குப் போய் மாவீரன் இரணியனுடன் இணைந்து செயல்பட்டவர்கள் கொடுரமாகக் கொலை செய்யப்பட்டனர்.

இதனையடுத்து 1950 மே -3 ஆம் நாள் மாவீரன் இரணியனுடன் இணைந்து செயல்பட்ட ஜாம்பவான் ஓடை சிவராமன் காவல்துறையினரால் வஞ்சகமாக பட்டுக்கோட்டைக்கு அருகே உள்ள நாட்டுச்சாலையில் வைத்து சுட்டு படுகொலை செய்யப்பட்டார்.

1950 மே -1 அன்று வடசேரி காட்டில் தலைமறைவாக தங்கியிருந்த இரணியனின் காலில் நஞ்சு முள் குத்தியதால் நடக்க முடியாத நிலை ஏற்பட்டது. அவர் தற்காப்பிற்காக வைத்திருந்த கைத்துப்பாக்கியிலும் தோட்டாக்கள் இல்லை. இந்த சூழ்நிலையில் காவல்துறையின் தேடுதல் வேட்டை நெருங்கியது. வடசேரி காட்டில் இருந்தபோது தன்னுடன் இருந்த ஆம்பலாபட்டு ஆறுமுகத்திடம் எவ்வளவோ தடவை தன்னைவிட்டு போக சொல்லியும், “உங்களுக்கத்தான் என் உயிர் போகனும்” என்று கடைசிவரை இரணியனுக்கு துணை நின்றார் ஆம்பலாபட்டு ஆறுமுகம்.

1950 மே -1 அன்று வடசேரி சவுக்கு காட்டிற்குள் புகுந்த மாவீரன் இரணியனும், ஆறுமுகமும் மே -3 வரை அந்தக் காட்டிற்குள்ளேயே தலைமறைவாக இருந்தனர். பசிக்கு சோறில்லை, தாகத்திற்கு தண்ணீரில்லை, தற்காப்புக்காக வைத்திருந்த கைத்துப்பாக்கியிலும் தோட்டாக்கள் இல்லை. நஞ்சு முள் குத்தியதால் இரணியனால் தொடர்ந்து நடக்கவும் இயரவில்லை. இருப்பினும் இரணியனுக்கு நெஞ்சில் துணிவு இருந்தது. தொடர்ந்து மக்களுக்கு உழைக்க வேண்டும் என்ற ஆவல் இருந்தது. அதனால் எது பற்றியும் கவலையின்றி அந்தக் காட்டிற்குள்ளேயே இருந்தார்.

மாவீரனார் – வாட்டாக்குடி இரணியன்

1950 மே -5 ஆம் நாள் மாவீரன் இரணியனும், ஆம்பலாபட்டு ஆறுமுகமும் சவுக்குக் காட்டில் மறைந்திருந்த போது, அங்கு வடசேரி பட்டா மணியகாரர் சம்பந்த மூர்த்தியும், அவரது நண்பர் கல்யாணி இருவரும் கொக்குச் சுடச் சென்றபோது இவர்களை பார்த்து திருடர்கள் என நினைத்து சத்தமிடவே, செங்கல் சூளைக்கல் அடுக்கிக் கொண்டிருந்த தொழிலாளிகள் கற்களால் தாக்கி இருவரையும் பிடித்துவிட்டனர். தான் யார்? என்று கூறித் தப்பித்துக் கொள்ளலாம் என எண்ணியபோது, எந்த மக்களுக்காகப் பாடுபட்டாரோ அதே மக்களால் கைகள் கட்டப்பட்டு இருவரையும் வடசேரி கடைத் தெருவில் ஆல மரத்தின் அருகில் உள்ள கூடத்தில் அடைத்து வைத்து சம்பந்த மூர்த்தி காவல்துறைக்கு செய்தி அனுப்பிவிட்டார். அங்கு வந்த டி.எஸ்.பி.சுப்பையா பிள்ளை, சங்கரநாராயணன் இருவரும் இரணியனிடம் இருந்த கைத்துப்பாக்கியை பறிமுதல் செய்து வடச்சேரி கிராம முன்னேற்றச் சங்க கட்டடத்தில் அடைக்கப்பட்டனர்.

05.05.1950 இருவரையும் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்வதாக கூறி அவ்வூர் மக்களை ஏமாற்றிவிட்டு, மாவீரன் இரணியன், ஆம்பலாபட்டு ஆறுமுகம் இருவரையும் வேனில் ஏற்றி வடச்சேரியின் தெற்குப் பகுதியில் உள்ள கண்ணன் ஆற்றுப்படுகை அருகே உள்ள சவுக்குத் தோப்பில் இறக்கியது. காவல்துறை சுடத் தயாரான போது மாவீரன் இரணியன் உறுதிப்பட சொல்லியது.

“தம்பி ஆறுமுகம், சிவராமனைச் சுட்டுக் கொன்றது முந்தா நாள். 1950 மே மாதம் 3 ஆம் தேதி; நம்மைப் பிடித்தது நான்காம் தேதி; இன்று மே -5 ! வெந்ததைத் தின்று விதியை நினைத்துக் கிடந்த பாட்டாளி மக்களைத் தலைநிமிர வைத்தானே
காரல் மார்க்ஸ் என்னும் மானுடன்! அவன் பிறந்த நாள்! இரும்பாக இருந்தவர் களை இயந்தரமாக்கி, மண்ணாக இருந்தவர்களை மனிதராக்கி வைத்தவன் பிறந்த நாள்.”

“ஒரு தலைவன் பிறந்த நாளில் ஒரு தொண்டனின் உயிர் பிரிவதை விடப் பெரும் பேறு எதுவுமே இருக்க முடியாது. அந்தப் பேறு எனக்குக் காரல் மார்க்ஸ் பிறந்த தினமாகிய இன்று கிடைக்கப் கோகின்றது.”

“இந்த நாடு வற்றிய குளம் இல்லை. நீங்கள் முழுமையாக வலை போட்டு எங்களை அரித்துவிட முடியாது. வாழைக்குக் கீழ் கன்றுகள் நிறையவே வளர்கின்றன.”

புரட்சி ஓங்குக! பாட்டாளி மக்கள் ஒன்று சேரட்டும்; செங்கொடி வாழ்க!!

என்று முழங்கிய சற்று நேரத்தில் நிராயுதபாணியாக நின்று கொண்டிருந்த மாவீரன் இரணியன், ஆம்பலாபட்டு ஆறுமுகம் இருவர் மீதும் குண்டுகள் பாய்ந்தன. இருவருடைய குருதியும் அந்த செம்மண்ணை சிவப்பாக்கியது.

பாட்டாளி மக்களுக்கு நிழலாக இருந்த செம்போத்துகள் சவுத்தழையால் மூடப்பட்டு, இருவருடைய உடல்களும் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு உடல் கூராய்விற்கு எடுத்துச் செல்லப்பட்டன. அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு சுடப்பட்டு உயிரிழந்த ஜாம்பவான் ஓடை சிவராமனின் உடலும் அங்கிருந்தது.

மூன்று உடல்களும் பட்டுக்கோட்டை மயானத்திலேயே காவல்துறையினரால் ஒரே இடத்தில் வைத்து எரியூட்டப்பட்டன.

இந்த நிகழ்வு நடந்து 70 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டன இருந்தும் மாவீரன் இரணியன் சுடப்பட்ட நாளை பொதுவுடைமைவாதிகளால் எளிதில் மறந்துவிட முடியாது.

காரணம் மாவீரன் இரணியன் மறைந்தது காரல்மார்க்ஸ் பிறந்த தினமான மே – 5, இரணியன் இறந்த போது அவருக்கு வயது 30.

இந்திய சமுதாய மாற்றத்திற்காகப் போராடும் இலட்சிய இளைஞர்களுக்கு “மாவீரன் வாட்டாக்குடி இரணியன் ” ஒர்
ஒளி விளக்கு.

சான்றாதர நூல்கள்,

1) வாட்டாக்குடி இரணியன்,
ச.சுபாஷ் சந்திரபோஸ்,
பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை,
பதிப்பு – திசம்பர் 2010.

2) இரணியனின் இறுதி நாட்கள்,
ச.சுபாஷ் சந்திரபோஸ்,
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை, பதிப்பு – அக் 2012.

3) குப்பு – இரணியன் :
சமத்துவப் போராளிகள்,
ந.ரமேஷ்குமார்,
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை, பதிப்பு – மார்ச் 2009.
———————————————————————-
கட்டுரை ஆக்கம்,

சோ.பாலமுருகன் அகமுடையார்,
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
அகமுடையார் அரண்,
புலனம் (WhatsApp) எண் : 94429 38890.



இப்பதிவு அகமுடையார் அரண் பாலமுருகன் அகமுடையார்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

பாலமுருகன் அகமுடையர் பக்கம் லிங்க்

திரு. பாலமுருகன் அகமுடையார் ப்ரோபல் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

We will be happy to hear your thoughts

Leave a reply

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo