First
உத்தம வீரர் A.R..பெருமாள் தேவர்
————————————
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வாழ் அகமுடையார் சமூகம் நீண்டநெடிய வரலாற்று அடையாளத்தை கொண்டவர்கள்.
அருப்புக்கோட்டை மாநகரின் மையப்பகுதியே, பெரிய தெரு ஆகும். அந்த மையப்பகுதியில், அகமுடையார் பேரினத்தின் ஒரு உட்பிரிவான இராஜகுல அகமுடையார் பெரும்பான்மையாக வாழ்ந்து வருகின்றனர்.
இந்த பகுதியில் வாழும், 18 தலைகட்டு அகமுடையார் குடும்பத்தினர் சேர்ந்து,
1935 ஆம் ஆண்டு உருவாக்கிய உறவின்முறையே, “அருப்புக்கோட்டை அகம்படியர் உறவின்முறை சங்கம்”
அந்த 18 தலைகட்டு உறவின்முறையை சேர்ந்த குழந்தைவேல் தேவர் அவர்களின் அருந்தவப்புதல்வர்
கு.இராமுத்தேவர் அவர்கள், சிகப்பித்தாய் அவர்களை இல்வாழ்க்கை துணைவியாக கரம் பிடித்தார். சிகப்பித்தாய்க்கு குழந்தை செல்வம் அமையவில்லை.
பிறகு சிகப்பித்தாய் அவர்களே, தனது உடன்பிறந்த தங்கை பாக்கியத்தம்மாள் அவர்களை தனது கணவருக்கு இரண்டாம் தாரமாக திருமணம் செய்து வைத்தார்.
இராமுத்தேவர் – பாக்கியத்தம்மாள் தம்பதியினருக்கு 6 குழந்தை செல்வங்கள் பிறந்தன.
1) இரா.மகராஜ தேவர்,
2) மீனாட்சியம்மாள்,
3) கண்ணம்மாள்,
4) சுப்பம்மாள்,
5) கணபதியம்மாள்
6) இரா.பெருமாள்தேவர்,
ஆறாவது குழந்தை செல்வமாக இக்கட்டுரையின் நாயகன் ஏ.ஆர்.பெருமாள்தேவர் அவர்கள்,
1925 ஆம் ஆண்டு, மே – 17 நாள் பிறந்தார்.
அருப்புக்கோட்டை தேவாங்கர் உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்றார்.
ஏ.ஆர்.பெருமாள் தேவர் அவர்களின் குல தெய்வம், நெல்லை மாவட்டம், நாங்குநேரி வட்டம், வடுகச்சி மதில் ஊரில் அமைந்துள்ள நல்ல மாடசாமி, சிவனடைந்த பெருமாள் என்ற தெய்வங்களும், அதன் அருகில் உள்ள சித்தூர், தென்கரை மகராஜா தெய்வமும் இவர்களின் குலதெய்வங்கள் ஆகும். இந்த தெய்வங்களின் நினைவாகவே இராமுத்தேவர் அவர்கள் தனது மூத்த மகனுக்கு மகராஜன் என்றும், இளைய மகனுக்கு பெருமாள் என்றும் பெயர் கூட்டினார்.
இல்வாழ்க்கை,
ஏ.ஆர்.பெருமாள்தேவர் அவர்கள், ஆவுடையம்மாள் அவர்களை இல்வாழ்க்கை துணையாக கரம்பிடித்தார். ஏ.ஆர்.பெருமாள்தேவர் அவர்களுக்கு 6 குழந்தை செல்வங்கள் பிறந்தன. 3 ஆண் மகவுகளும், 3 பெண் மகவுகளும்,
1) ஏ.ஆர்.பி.இளங்கோ,
2) ஏ.ஆர்.பி.பாண்டியன்,
3) பிரபாவதி
4) ஏ.ஆர்.பி.சரவணன்,
5) செல்வி,
6) பாக்கியம்
அரசியல் பணி,
1937 சட்டபேரவை தேர்தல் சமயம், பசும்பொன் தேவர் அருப்புக்கோட்டை அகம்படியர் மகாலில் தங்கியிருந்த நேரம் செய்தி கேட்டு மக்கள் கூடி விட்டனர். பின்னர் தேவர் வெளியே வந்து மக்களை வணங்கி விட்டு காரில் ஏறி சென்றார். அக்காலத்தில் தலைவர்களின் பெயரை கூறி விட்டு ஜே என்று கூறுவது வழக்கு, கூட்டத்தில் ஒரு சிறுவன் மட்டும் இவ்வாறு கூறிக்கொண்டு தேவரின் காரை பின்தொடர்ந்து வர, சற்று தூரம் சென்று காரை நிறுத்தி விட்டு அச்சிறுவனை காரில் ஏற்றி யாரப்பா நீ என கேட்க நான் அருப்புக்கோட்டை இராமு தேவரின் புதல்வர் பெருமாள் என தேவரிடம் கூறினான் சிறுவன். அந்த சிறுவனே பின்னாளில் ஏ.ஆர்.பெருமாள்தேவர் என அழைக்கப்பட்டார்.
ஏ.ஆர.பெருமாள் தேவர் தனது இளம் வயதிலே பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் அறிமுகத்தை பெற்றார். அன்றுமுதல் அவரையே மானசீக குருவாக ஏற்று, பார்வர்ட் பிளாக் கட்சியில் தன்னை முழுமையாக இணைத்துக்கொண்டு, பசும்பொன் தேவரின் உண்மை விசுவாசியாகவும், அவரின் அன்பை பெற்றவராகவும் திகழ்ந்தார்.
1966 ஆம் ஆண்டு “நாட்டுக்கு ஒரு நல்லவன்” என்ற தலைப்பில் அரசியல் விழிப்புணர்வு நாடகத்தை எழுதி அதை அரங்கேற்றினார்.
சட்டமன்ற களத்தில் ஏ.ஆர்.பி.
ஏ.ஆர்.பெருமாள் அவர்கள் பசும்பொன் தேவரின் நம்பிக்கைக்கு பாத்தியப்பட்டவராக இருந்தாலும்,
பசும்பொன் தேவர் மறைவுக்கு பின்பே,
பார்வர்ட் பிளாக் கட்சியில், அகமுடையார் சமூகத்தை சார்ந்தவர்களுக்கு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிட்டியது. தேவர் உயிருடன் இருந்த காலகட்டத்தில் அகமுடையார் சமூகத்தினருக்கு எந்த வாய்ப்பு வழங்காது என்பது மட்டுமே குறையாக உள்ளது.
1967 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொது தேர்தலில், காரியாபட்டி தொகுதியில் சுதந்திரா கட்சி வேட்பாளராக களம் இறங்கினார்.
மொத்த வாக்காளர்கள் – 89,931,
பதிவான வாக்குகள் – 65,979,
செல்லாத வாக்குகள் – 2,813,
போட்டியிட்ட வேட்பாளர்கள் – 3,
1) ஏ.ஆர்.பெருமாள் – 28,484.
(சுதந்திரா கட்சி)
2) பாஸ்கரன்சேர்வை – 27,366.
(காங்கிரசு)
3) கல்யாணித் தேவர் – 7,316.
(சுயேட்சை)
இந்த தேர்தலில் ஏ.ஆர்.பெருமாள் அவர்கள் 1118 வாக்கு வித்தியாசத்தில்
வெற்றி பெற்றார்.
1971 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொது தேர்தலில், காரியாபட்டி தொகுதியில் பார்வர்ட் பிளாக் கட்சி வேட்பாளராக களம் இறங்கினார்.
மொத்த வாக்காளர்கள் – 94,337,
பதிவான வாக்குகள் – 63,737,
செல்லாத வாக்குகள் – 2,377,
போட்டியிட்ட வேட்பாளர்கள் – 4,
1) ஏ.ஆர்.பெருமாள் – 31,499.
(பார்வர்ட் பிளாக்)
2) எம்.முத்துவேல்சேர்வை – 22,175.
(நிஜலி.காங்கிரசு)
3) எஸ.டேவிட்ராமசாமி – 7,096.
(சுயேட்சை)
4) வி.மெய்யத்தேவர் – 590
(சுயேட்சை)
இந்த தேர்தலில் ஏ.ஆர்.பெருமாள் அவர்கள் 9,324 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
1967 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட காரியாபட்டி சட்டமன்றத் தொகுதி, 1971 ஆம் ஆண்டு தொகுதி சீரமைப்பில் நீக்கப்பட்டு, அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் இதன் பகுதிகள் சேர்க்கப்பட்டது.
1980 ஆம் ஆண்டு, நடைபெற்ற சட்டமன்ற பொது தேர்தலில், திருமங்கலம் தொகுதியில் பார்வர்ட் பிளாக் கட்சி வேட்பாளராக களம் இறங்கினார்.
மொத்த வாக்காளர்கள் – 1,17,383,
போட்டியிட்ட வேட்பாளர்கள் – 4,
1) என்.எஸ்.வி.சித்தன் – 35,181
(காங்கிரசு)
2) ஏ.ஆர்.பெருமாள். – 31,679
(பார்வர்ட்பிளாக்)
3) எஸ்.ஏ.இங்கர்சால். – 8,033
(ஜனதா (ஜெ.பி))
4) எஸ்.கிருஷ்ணன் – 873
(சுயேட்சை)
இந்த தேர்தலில் காங்கிரசு கட்சி வேட்பாளரிடம், வெற்றி வாய்ப்பை தவறவிட்டார்.
1989 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொது தேர்தலில், அருப்புக்கோட்டை தொகுதியில் பார்வர்ட் பிளாக் கட்சி வேட்பாளராக களம் இறங்கினார்.
மொத்த வாக்காளர்கள் – 1,41,982.
பதிவான வாக்குகள் – 1,00,465.
செல்லாத வாக்குகள் – 1,777.
போட்டியிட்ட வேட்பாளர்கள் – 4.
1) வி.தங்கபாண்டியன் – 44,990.
(திமுக)
2) வி.எஸ்.பஞ்சவர்ணம் – 29,467.
(அதிமுக (ஜெ) )
3) ஆர்.செல்லையா – 18,466.
(காங்கிரசு)
4) ஏ.ஆர்.பெருமாள். – 3,521.
(பார்வர்ட் பிளாக்)
மிதமுள்ளவேட்பாளர்கள் 16 நபர்கள் சுயேட்சைகள்,
திமுக வேட்பாளர் தங்கபாண்டியன் (மறவர்) தவிர மற்ற மூவரும் அகமுடையார் பேரினத்தை சார்ந்தவர்கள்.
இந்த தேர்தல் ஏ.ஆர்.பெருமாள் தேவர் அவர்களுக்கு கை கொடுக்கவில்லை.
1967, 1971, 1980, 1989 என் நான்கு பொது தேர்தல்களில் போட்டியிட்டு 1967, 1971 என இரண்டு முறை வெற்றி பெற்றார். 1980, 1989 என இரண்டு முறை தோல்வி அடைந்தார்.
1971 ஆம் ஆண்டு பார்வர்ட் பிளாக் கட்சியின் சட்டமன்றத் தலைவர்,
1974 ஆம் ஆண்டு இந்திய பாராளுமன்றத்தில் பார்வர்ட் பிளாக் நாடாளுமன்ற உறுப்பினர் மூக்கையா தேவர் அவர்கள் கச்சத்தீவின் தமிழர் உரிமை பிரச்சனையை பற்றி விரிவாக பேசினார். அதே காலகட்டத்தில் தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் பார்வர்ட் பிளாக் சட்டமன்ற உறுப்பினரான ஏ.ஆர்.பெருமாள் அவர்கள் கச்சதீவு உரிமை பிரச்சனையை பற்றி, தமிழக சட்டமன்றத்தில் பேசிய வரலாறு எத்தனை பேருக்கு தெரியும்.
1979 ஆம் ஆண்டு மூக்கையாத்தேவர் அவர்களின் மறைவுக்கு பின் ஏ.ஆர்.பெருமாள் அவர்கள் பார்வர்ட் பிளாக் கட்சியின் அ.இ.தேசிய துணைத்தலைவராக பொறுப்பேற்று சிறப்பாக செயலாற்றினார்.
1991 ஆம் ஆண்டு ஏ.ஆர்.பெருமாள் அவர்கள் அ.இ.பார்வர்ட் பிளாக் கட்சியின் அகில இந்திய தேசிய தலைவராக பொறுப்பேற்று சிறப்பாக செயலாற்றினார்.
அரசியல் காரணங்களுக்காக மும்முறை சிறை புகுந்தார்.
அருப்புப்கோட்டை சிறுவர் நலனுக்காக பள்ளிக்கூடங்கள் நிறுவ உதவி புரிந்தார்.
பத்திரிக்கைகளுக்குக் கட்டுரைகள் வழங்குவதோடு தானாகவே கட்டுரைகளும், “புயலில் தேவர்” என்ற புத்தகமும் வெளியிட்டார். அச்சக உரிமையாளர்.
1993 ஆம் ஆண்டு முடிசூடா மன்னர் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் வீரவரலாறு மகா காவியம் என்ற பெயரில் பசும்பொன் தேவர் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை தொகுத்து நூல் வடிவாக வெளியிட்டார்.
1995 ஆம் ஆண்டு, அருப்புக்கோட்டை மாநகரில், அகம்படியர் மகால் அருகில் பசும்பொன் தேவர் அவர்களுக்கு முழு திருவுருவ வெண்கல சிலை அமைத்தார். அவருக்கு பிறகு அந்த சிலையை அகம்படியார் உறவின்முறையினர் பராமரித்து வருகின்றனர்.
தமிழகத்தில் அமைக்கப்பட்ட பல்வேறு தேவர் சிலைக்கு பாதுகாப்பாக, இரும்பு கம்பியிலான கூண்டுதான் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அருப்புக்கோட்டை அகமுடையார் உறவின்முறையினர், குண்டுதுளைக்காத கண்ணாடி கூண்டு அமைத்து பசும்பொன் தேவருக்கு சிறப்பு செய்துள்ளனர்.
பசும்பொன் தேவரின் முழுமையான நம்பிக்கையை பெற்றவர், அதன் காரணமாக பசும்பொன் தேவர் தன் சொத்துக்களை பிரித்து உயில் எழுதிய போது, அந்த சொத்தின் ஒரு பங்கை,
ஏ.ஆர்.பெருமாள்தேவர் அவர்களின் பெயரில் எழுதினார். பசும்பொன் தேவர் தனது சொத்தை 16 பேருக்கு பிரித்தளித்தார். இதில் ஏ.ஆர்.பெருமாள் தேவர் உட்பட 12 பேர் தேவர் பெயரில் அமைந்த அறக்கட்டளையில் அச்செத்துக்களை இணைத்து விட்டனர்.
ஏ.ஆர்.பெருமாள் தேவர் அவர்கள் அச்சொத்துக்களை தனக்கென வைத்துக் கொள்ளாமல், பசும்பொன் தேவர் பெயரில் அமைந்த பசும்பொன் தேவர் கல்லூரி அறக்கட்டளையில் அச்சொத்துக்களை இணைத்தார்.
பசும்பொன் தேவர் பெயரில் மூன்று கல்லூரிகள் அமைத்திடவும், கோரிப்பாளையம் தேவர் சிலை மற்றும் முதுகுளத்தூர் கலவரத்தினால் பாதிக்க பட்டவர்களை விடுதலை செய்யவும் மூக்கையா தேவர் அவர்களுடன் இணைந்து பணியாற்றினார்.அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களோடு இணக்கமாக இருந்த காரணத்தினால் தேவர் ஜெயந்தியை அரசு விழாவாக அறிவிக்கவும், மாவட்டத்திற்கு தேவர் பெயரை சூட்டவும் காரணமாக இருந்தவர்.
பிற்காலத்தில் முதுமையின் காரணமாக அரசியலில் இருந்து ஒதுங்கி அருப்புக்கோட்டையிலே தங்கி, அகம்படியர் உறவின்முறை வளர்ச்சியில் தன்னை முழுமையாக இணைத்துக் கொண்டார். அச்சங்கத்தின் பொருளாதார மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்தியவர். இன்று பல கோடி சொத்துக்களாக அச்சங்கத்தை மாற்றிய பங்கில் இவருக்கு பெரும்பங்கு உண்டு.
இறுதியில் இம்மண்ணுலக வாழ்க்கையையும் துறந்து
1998 ஆம் ஆண்டு, ஏப்ரல் – 21 ஆம் நாள், நிரந்தரமாக இம்மண்ணுலக வாழ்வில் இருந்து விடைபெற்றார்.
தமிழ்கூறு நல்லுலகில் மொழி, இனம், இலக்கியம், கலை, அரசியல் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் அகமுடையார் பேரினம் தனது பங்களிப்பை திறம்பட பதிய வைத்துள்ளது. ஆனால் தமிழ்கூறு நல்லுலகின் வரலாற்றில் இம்மரபினருக்கு உரிய அங்கிகாரம் உரியமுறையில் அளிக்க தவறிவிட்டது.
அந்த வகையில் ஏ.ஆர்.பெருமாள்தேவர் அவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்காத காரணம்,
அகமுடையார் பேரினத்தில் பிறந்தது மட்டுமே இவரது தவறு!
அ.இ.பார்வர்ட் பிளாக் கட்சியின் சார்பாக ஏ.ஆர்.பெருமாள் அவர்களின் புகழை சிறப்பிக்கும் விதமான படத்திறப்பு, நினைவேந்தல் நிகழ்வு இதுவரை நடத்தப்பட வில்லை என்பதுதான் வேதனை. அ.இ.பார்வர்ட் பிளாக் கட்சி சுவரோட்டிகளில் யார் யார் உருவப்படமோ இடம் பெறுகிறது. ஆனால் கட்சிக்காக பாடுபட்ட ஏ.ஆர்.பி அவர்களை அக்கட்சி மறந்து ஏனோ!
இனிமேல் இவரை போற்ற வேண்டியது, இவரது வரலாற்றை வெளிகொண்டு வருவது, சிலை திறப்பது என எல்லாவற்றையும் அகமுடையார் பேரினத்தின் இளம்தலைமுறையினர் மேற்கொள் வேண்டும்.
ஏப்ரல் 21 ஆம் நாள் அவரது
25 ஆம் ஆண்டு நினைவுநாள் !
ஐயா ஏ.ஆர்.பெருமாள் தேவர் அவர்களுக்கு புகழ் வணக்கம்!
அவர் விட்டுச் சென்ற பொது வாழ்க்கை பணியை, அவரது வாரீசாக உள்ள அவரது பேரன் ஏ.ஆர்.பி.இள.ராமு அவர்கள் தொடர்ந்து செய்து வருகின்றார்.
வாழ்க! ஐயா ஏ.ஆர்.பெருமாள்தேவர்
அவர்தம் புகழ்,
சான்றாத ஆவணங்கள்,
1) தமிழ்நாட்டுச் சட்டப் பேரவை
“யார்-எவர்” 1967,
GOVERNMENT OF MADRAS (1968)
2) தமிழ்நாட்டுச் சட்டப் பேரவை
“யார்-எவர்” 1971
GOVERNMENT OF TAMIL NADU (1972)
————————————–
கட்டுரை ஆக்கம்,
சோ.பாலமுருகன் அகமுடையார்,
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
அகமுடையார் அரண்,
புலனம் (WhatsApp) எண் : 94429 38890.
இக்கட்டுரையை படிக்கும் உறவுகள் லைக் மட்டும் பண்ணாமல் மற்ற உறவுகளின் பார்வைக்கு பகிர்ந்து உதவவும்.
இப்பதிவு திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கம் லிங்க்
திருத்தணி அகமுடையார் சங்கம் பேஸ்புக் குருப் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்