வரலாற்றில் அகமுடையார், வள்ளல் வி.பச்சையப்ப முதலியார் (1754-1794) கட்டுரை ஆசிர…

Spread the love
0
(0)

First
வரலாற்றில் அகமுடையார்,

வள்ளல் வி.பச்சையப்ப முதலியார் (1754-1794)

கட்டுரை ஆசிரியர் :
R.வேங்கடாசலம் பிள்ளை

(1927 ஆம் ஆண்டு S.S.L.C. மாணவர்கள் பள்ளி பாடங்களில் வெளிவந்தது இந்த கட்டுரை, மாணவர் எளிதில் உணருமாறு சுருக்கி எழுதப்பட்டடுள்ளது.)

உலகெலாம் மெச்சுபுகழ் படைத்த பச்சையப்ப முதலியார், காஞ்சிபுரத்திலிருந்த “அகம்படியர்” வகுப்பினராய விசுவநாத முதலியாரும் பூச்சியம்மாளும் புரிந்த தவத்திற் தோன்றியவர். இவர் தம் தமக்கையர் சுப்பம்பாள், அச்சம்மாள் என இருவர். சுப்பம்மாள் கணவர் புங்கத்தூர்த் தெய்வநாயக முதலியார் ; மகள் அய்யாளம்மாள். அச்சம்மாள் கணவர் கூடலூர்த் தெய்வநாயக முதலியார் ; மகன் முத்தையா முதலி.

பச்சையப்ப முதலியார் முதல் மனைவி மேற்கூறிய அய்யாளம்மாள் ; மகப்பேறின்மையாற் புரிந்து கொண்ட இரண்டாம் மனைவி வேதாரண்யத்தி லிருந்த ஒரு வேளாளர் மகள் பழனியாயி. (பழனியாயிக்கு ஒரு பெண் பிறந்திருந்தது, இளமையிலே இறந்து விட்டது.)

நமது முதலியார் தாய் வயிற்றிருக்கும் போதே தந்தையார் காலஞ்சென்றனர். கணவரையிழந்த பூச்சியம்மாள், காஞ்சியில் காலங்கழிப்பது அரிதாக, பெண் மக்களிருவருடன் புறப்பட்டுப் பெரியபாளையம் என்னும் ஊரைச் சார்ந்து, அங்குப் பிறர்க்குதவி செய்யும் பெருந்தகையாகிய “ரெட்டிராயர்” என்பார் ஆதரவிலிருந்து வருகையில், 1754 இல், நமது முதலியார் பிறந்தார். ஐந்தாம் வயரில் ரெட்டிராயரையும் இழந்தார். தாயாரும் மக்கள் மூவரும் அங்கிருந்தும் காலம் தள்ளுவது இயலாமல்,
வெங்கட்டம்மாள் முதலியோர் உதவியால் சென்னை எய்தினர். அங்கே, ‘சென்ற் ஜியார்ஜ்’ கோட்டையை யடுத்த ‘சாமி மேஸ்திரி’ தெருவில் தங்கியிருக்கையில், போனி நாராயண பிள்ளை என்னும் அறப் பெருஞ் செல்வர் ஆதரவை அடைந்தனர்.

“போனி” எனும் துரைக்குத் துபாஷி*யாக இருந்தமையால் போனி நாராயண பிள்ளை என்னும் பெயருற்ற இவர், நெய்தவாயல் எனும் ஊரினர் ; யாதவர் ; பெருஞ்செல்வர் ; பிறர்க்குதவி செய்யும் பெருந்தகை ; ஆங்கில அரசினருக்கு நண்பர் ; அவர்கள் உத்தியோகங்களை இந்தியர் பலர் அடையச் செய்தவர் ; நவாபினிடம் மெதவாயல் என்னும் ஊரை வரியில்லாததாகப் ∆ பெற்று, அதைத் தரும சத்திரத்திற்கு விட்டவர். இவர், பூச்சியம்மாளின் உடன் பிறப்பினர் போல் நின்று, அவர்க்கும் அவர் மக்கட்கும் வேண்டுவனவெல்லாம் புரிந்து காப்பாற்றியவர். (இவருக்குப்பின் இவர் மகனார் அய்யாப்பிள்ளையும், பெயரர் அண்ணாச்சாமி பிள்ளையும் முதலியார் குடும்பத்தில் உறவினரினும் மிக்க அன்புரிமையுடையாராய், முதலியார் ஈட்டிய பெரும் பொருளைப் பாதுகாத்தனர்.) இங்ஙனம் இளமை முதல் பேருதவியாளராய நாராயணபிள்ளையை நமது முதலியார், தந்தையும், தாயும் குருவுமாக எண்ணி, மிக்க பணிவுடன் நடந்துகொண்டார்.

இங்ஙனம் போனி நாராயண பிள்ளையின் உதவியைப் பெற்று வந்த நம் முதலியார், இளமையிலேயே பொருள் ஈட்டும் முயற்சியிற் புகுந்தார். இவருக்குத் தெலுங்கு மொழியிற் சிறிது பயிற்சி யுண்டு ; ஆங்கிலம் பேச மாத்திரம் கற்றுக்கொண்டவர். எனவே, துபாஷித் தொழிலே இவர்க்கு ஏற்றதொன்றாயிற்று. இவர் முதலிற் பிங்கான் கடையில்
——————————————————-
* துபாஷி – (து- பாஷி) ஒருவர் மொழியை ஒருவர் அறியாத இரு வேறு சாதியார்க்கு இடைநிற்கும் தரகர். ஆங்கிலேயர் இங்கு வந்த தொடக்கத்தில் இத்தகையோர் பலர் இன்றியமையாதவராயினர்.

∆ சுரோத்திரியம்.
——————————–
துபாஷியாக விருந்தார். பின்னர் ‘நிக்கலசன் துரை’ எனும் இராணுவ அதிகாரியிடம் சிலகாலம் வேலை பார்த்தார். இவ்விரு தொழில்களிலும் பெரும் ஊதியம் எய்தவில்லை.

என்றாலும், பேரூக்கம் உடைய நம் முதலியார் அக்காலத்தே மிக்க பொருள் வருவாயுடைய தொழில்கள் யாவையென நாடி யறிந்து கொண்டனர். அக்காலம், அரசியற் குழப்பம் மிக்கிருந்ததோர் காலம். ஆற்காடு நவாபுடன் கூடிய ஆங்கிலேயர், பிரஞ்சுக்காரர், ஐதர், நிஜாம் எனும் நான்கு துரைத்தனத்தாரும் இராணுவ பலம் உடையராய், இந்தியாவில் தங்கள் தங்கள் ஆட்சியையும் பொருள் ஈட்டலையும் மிகுத்துக் கொள்ள இடைவிடாது முயன்ற காலம். இத்தேயத்து மன்னர்களும் சிற்றரசர்களும், தம் பண்டைப் பெருமையை இழந்து, தமக்குள்ளிருந்த ஒற்றுமையைக் குலைத்துக் கலகம் விளைவித்துக் கொண்டிருக்க காலம். எனவே மேற்கூறிய இராணுவ பலம் உடையோர், இவர்களுட் புகுந்து பலவகையான குழப்பங்களை விளைவித்து நின்றனர். இக்காலத்தே, இத்துரைத்தனத்தார் உத்தியோகங்களிலிருப்பட்டவருக்கும், அவர்கட்கு உதவி செய்யும் துபாஷி போன்றவர்கட்கும் பொருள் வருவாய்க்கு ஒரு முறையுமின்று ; ஒரு எல்லையுமின்று. இதனை புணர்ந்த நம் முதலியார், ஆங்கிலேய துரைத்தனத்தாருக்கும் சுதேச மன்னர்கட்கும் இடைநிற்கும் குத்தகைத் தொழில், துபாஷித்தொழில், இடையறாப் பணமுடையுடைய சுதேச மன்னர்களிடம் கொடுக்கல் வாங்கல் செய்தல் முதலிய தொழில்களை மேற்கொண்டனர்.

இங்ஙனம் இவர் பொருள் ஈட்டிய வழிகளுள் முதன்மையானவை சில. செங்கற்பட்டு சில்லாவில், பூந்தமல்லி முதலிய இடங்களில் ஆங்கிலேய துரைத்தனத்தாருக்கு வரவேண்டிய மேல்வரங்கள் எனும் தானிய வரியைப் பணமாக்கித்தரும் குத்தகைத் தொழிலை, தர்மராய முதலியார், செங்கல்வராய முதலியார் எனும் இருவரையுங் கூட்டாகக்கொண்டு, நடத்திப் பேரூதியம்
அடைந்ததொன்று.

தஞ்சாவூர் மன்னர் ஆங்கிலேயருக்குத் தரவேண்டிய கப்பங்களைத் தாம் மேற்கொண்டு கட்டியும், அம் மன்னருக்கு வேண்டிய மற்றைச் செல்வுகட்குக் கடன் தந்தும் அவருடன் பலவகையில் கொடுக்கல் வாங்கல் செய்து வந்த வழியில் பெரும் பொருள் ஈட்டியது மற்றொன்று. பின்னே காணப்பெறும் சிறப்பினையுடைய ‘சலிவன் துரை’ என்பாருக்குத் துபாஷியாக விருந்து அவருக்கு வேண்டும் உதவிகள் யாவும் செய்து பெரும் பேரும் பெருஞ் செல்வமும் எய்தியது வேறொன்று.

இங்கே கூறிய சலிவன் துரையின் திறமையினையும் பெருமையினையும் அறியுமிடத்தே அவர்க்குத் துபாஷியாக விருந்த முதலியாரின் பெருஞ் சிறப்புப் புலனாகும். சலிவன்துரை என்பார் அக்காலத்துச் சென்னைத் தலைவராயிருந்த ‘லார்டு மகார்டினி’ யின் கீழ், ‘சிவில்’ உத்தியோகம் பெற்றிருந்த ஒருவர். ‘நவாப் வாலாஜா’ இச்சென்னைத் தலைருடன் சில காரியங்களில் மாறுபட்டு, அதனை, மேல் அதிகாரியாகிய வங்காளம் ‘கவர்னர் ஜனர’ விடம் எடுத்துரைத்து முடித்துக்கொள்ள நினத்தவர், பேற்கூறிய சலிவன் துரையையே தமது பிரதிநிதியாகத் தேர்ந்து அனுப்பினார். வங்காளம் கவர்னர் ஜனரலிடம், இச்சலிவன் துரை மூலம், நவாப் கேட்டுக் கொண்டவை :- கருநாடகத்தில் நவாப் ஆட்சியில் ஆங்கிலேயர் புகுதல் கூடாது ; தஞ்சாவூரைத் தமது வசமாகச் செய்துவிடல் வேண்டும் ; தமக்குப் பிறகு தமது இளைய குமாரருக்குப் பட்டம் கட்டுவதில் ஆங்கிலேயர் உதவி வேண்டும் ; தம்முடைய கூட்டுறவில், ஐதர் மீது நடைபெறவிருக்கும் போரில் வெற்றியடையின், அந்த ஐதர் நாட்டில், தமக்கு ஒரு பங்கு வேண்டும். பத்துப் பட்டாளங்களின் செலவே தம்மிடமிருந்து பெற்றுக் கொள்ளல் வேண்டும். தமக்குள்ள கடன்களைத் தீர்த்துவிட்டு, அவற்றை நாளடைவில் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பன போன்றனவாம். சலிவன் துரை எடுத்துரைத்ததைக் கேட்ட ‘கவர்னர் ஜனரல்’ தஞ்சாவூரை விட்டுவிடத் தமக்கு அதிகாரமில்லை யென்றுகூறி, ஏனையவற்றை யெல்லாம் ஒப்புக் கொண்டனர். அதனொடு, இச்சலிவன் துரையினையே நவாபின் நாட்டிற்குத் தமது பிரதிநிதியாக அமைத்து அனுப்பினர். இனி, இச்சலிவன் துரை, திருச்சிராப்பள்ளி முதலிய தென் தேயங்களின் தலைமை அதிகாரியாகி, கோயம்புத்தூரைப் பிடித்துக் கொள்ளவும், திப்புவை யடக்கவும் வேண்டிய முயற்சிகள் செய்தவர். ‘கர்னல் புல்டன்’ எனும் இராணுவ அதிகாரிக்குத் தஞ்சாவூர் முதலாய இடங்களில் மிக்க படை சேர்த்து உதவியவர். இவ்வளவு முதன்மையுற்ற இவருக்கு நமது முதலியார் துபாஷியாக இருந்ததே மேற்கூறியவாறு பெரும் பொருளும் பெருஞ் சிறப்பும் எய்த எதுவாயிற்று.

முதலியார் ஈட்டிய பொருள் எத்தனை இலட்சம் என வரை யறுத்தறியப் படவில்லை. முதலியார் பொருள் ஈட்டுங்கால், ஒரு முறை ஆங்கிலேய துரைத்தனத்தார் தாமே இவரைத் தஞ்சைக்கு அனுப்பி, மீண்டும் சென்னைக்கு வந்துவிடக் கட்டாயப் படுத்தியதால், இவருக்கு மிக்க நட்டம் எய்தியதுண்டு. இவர் காலஞ்சென்ற பின், சுற்றத்தாரும், இவர் பொருளைப் பறித்துக்கொள்ள எண்ணிய பேராசைக்காரர் சிலரும் செய்த திருட்டுக்கள், வழக்குக்கள் முதலாயவற்றால் அழிந்தன அளவிடற் பாலனவல்ல. (இப்பொருளெல்லாம், நன்னெறியிலேயே ஈட்டப்பெற்ற முதலியார் அறப்பொருள்களோடும் அவரறியாது தாமே வந்து புகுந்த வேறு பொருள்கள் போலும் ! திருவருளே இவற்றை அவ்வறப் பொருள்களினின்று பிரித்துவிட்டது போலும்! ) சிறு வருவாயிலிருக்கும் போதே பல்வகையான அறங்கள் செய்யப் புகுந்த முதலியார், கோயிற்றிருப்பணி, அக்கிரகாரம், சத்திரம் முதலிய அறங்கட்குத் தம் காலத்தில் தாமே செலவிட்ட தொகை எத்தனை இலட்சமென யாவர் அறிவர்? மேற்கூறியாங்கு, அழிந்ததும் அறத்திற்குச் செல்வாகி நிலை பெற்றதும் போக, முதலியார் காலத்தின் பின் அவர் பொருளெனக் கண்டறியப்பட்ட தொகை, வட்டி முதலுடன் கூடியது , 7,61,506 என்ப !

முதலியார் அக்காலத்தே சிறந்த அறங்களாகக் கருதப்பெற்ற பலவகை யறங்கட்கும் தம் பொருளையெல்லாம் ‘வில்’ எழுதி வைத்தனர். முதலியார் செய்த கோயிற்றிருப்பணி முதலாயின :- காஞ்சிபுரத்தில் ஸ்ரீபலி நாயகர், சிவகாமியம்மை எனும் சுவாமி, அம்மன்கட்கு விக்கிரகங்கள் (திருவுருவங்கள்) சமைப்பித்தனர் ; கும்பாபிடேகம் செய்வித்தனர் ; பங்குனியுத்தரக் கலியாண மண்டபம் கட்டினர் ; சிதம்பரத்தில் இரதம் செய்து, மகோற்சவம் முதலியன நடத்தினர் ; காசியிலும், தென்னாட்டில் சென்னை, சீகாழி, திருவிடைமருதூர், திருப்பனந்தாள், கும்பகோணம், திருவையாறு, திருவானைக்கா, திருவரங்கம், தஞ்சாவூர், திருவாரூர், மதுரை, அழகர்கோவில், இராமேசுவரம் முதலாய பல விடங்களிலும் கோயில்களுக்குப் பலவகையான கட்டளைகள் திட்டஞ் செய்து வைத்தனர். பலவிடங்களில் ஏழைகளுக்கு அன்ன சத்திரங்கள் கட்டினர். சிலவிடங்களில் அக்கிரகாரம் கட்டினர். சிலவிடங்களில் வசிக்கும் பிராமணத் தம்பதிகட்கு ஆண்டுதோறும் செய்துவரும் ‘தம்பதி பூஜை’ என்பதோர் அறமும் திட்டம் செய்தனர். இங்ஙனமாய அறங்கள் மிகப்பல.

முதலியார் கற்றறிந்த புலவர்களிடத்து மிக்க விருப்புடையவர். அவர் தம் பிரசங்கங்களையும், பாடல்களையும் கேட்டு மகிழ்பவர். பல புலவர்கள் முதலியாரின் பெருஞ்சிறப்பினைப் பாராட்டிப் பாடியிருக்கின்றனர். இசைப் பாட்டுக்களில் விருப்பமிக்கவர். இதிகாசம், புராணம், அடியார் வரலாறுகள் முதலியவற்றைக் கேட்டுப் பக்தியால் உருகுபவர். ‘தீட்சை’ பெற்றுக்கொண்டு முறைப்படி சிவபூசை இயற்றி வருபவர். தமது நித்திய கடமைகளை எக்காரணம் பற்றியும் விடாது செய்து வருபவர். அடியார்கட்குச் சிறந்த உணவு அளித்து, அவர்கள் செய்யும் திருப்பணி முதலியவற்றிற்குப் பேருதவி செய்து வருபவர். நாயன்மார்கள் குருபூசைகளை விடாமற் சிறப்பாக நடத்தி வருபவர். தேவார திருவாசகங்களை உருக்கத்துடன் ஓதி வருபவர்.

முதலியார், பொறாமை, வஞ்சம், பிறர் பொருளில் ஆசை முதலாய இழிகுணங்களில் எதுவும் இல்லாதவர். விரிந்த மன உணர்வும், யாவரிடத்தும் இனிமையாகப் பேசும் அன்பும் உடையவர். பிறர் தம்மை ஏமாற்றி விடுமாறின்றி, உற்றவிடத்து நய பயமாகப் பேசிக் காரியம் முடித்துக் கொள்ளும் திறமையர்.

இளமையில் சென்னையிலிருந்த முதலியார், பிற்காலத்தில் தொழில் காரணமாகத் தஞ்சையிலும், குழந்தை வீரப்பெருமாள் பிள்ளை என்ற தம் நண்பர் விட்டின் அருகிலிருக்க விரும்பியபடி, சென்னை கோமளேசுவரபுரத்திலும், உடல் நலம் காரணமாகக் கும்பகோணத்திலும், திருப்பணிக்காகச் சிதம்பரம் முதலிய இடங்களிலும், இறைவனடி எய்துவதற்காகத் திருவையாற்றிலும் தங்கியிருப்பராயினர். 1794 மார்ச்சு 31இல் திருவையாற்றில் சிவபெருமான் திருவடி நிழலை எய்தியிருப்பாராயினர்.

அக்காலத்தே கோயிற்றிருப்பணி முதலாய அறங்களே போலக் கல்வியறமும் மக்கட்கு இன்றியமையாத தென்னும் உணர்ச்சி பரவவில்லையாகலின், முதலியார் தமது பேரறங்களுள் ஒன்றாகக் கல்வியையும் சேர்க்கவில்லை போலும். என்றாலும், மக்களெல்லாரும் துன்பொழிந்து இன்புற வேண்டும் என எண்ணிய அவர் தம் தூய எண்ணம், அவர் தம் பொருளைக் கல்வி யறத்திற்குத் தானே பயன்படுவதாக்கிற்று. முதலியார் பொருளைப் பற்றி அவர் குடும்பத்தினர் பலர் ‘தாம் தாமே உரியர்’ என வழக்கிட்டும், எல்லோரும் தோற்றொழிந்தனர். என்றாலும் பிறர் பொருளைப் பறிக்கும் பேராசைக்காரர் ஒருவர் – ஒரு லாயர் துபாஷி – சிதம்பரம் தீட்சதர்களைக் கொண்டு, பெரும் வழக்குத் தொடுத்து நிற்கையில், முதலியார் பொருள்களெல்லாம் அண்ணாச்சாமி பிள்ளையால் நீதிமன்றில் கட்டப்பட்டன. நீதிமன்றத்தார், முதலியார் கருத்தின்படியுள்ள தருமங்களை வரையறை செய்து, அப்பொருளைப் பாதுகாத்து அத்தருமங்களை நடத்திவர, ஒன்பதின்மர் அடங்கிய கழகம் ஒன்று அமைத்தனர். அக்கழகத்தினர், பல ஆண்டுகள் அத்தருமங்களை ஒழுங்காக நடாத்திவராமையால், அத்தொகை எஞ்சி நின்று வட்டியு முதலுமாக ரூ. 7,61,506 ஆயிற்று.

அப்போது, ‘அட்வோகேட் ஜனரலா’ யிருந்த திரு. நார்ட்டன் துரை, இந்தியரது கல்விக்காக உழைத்தும் உதவி புரிந்தும் வரும் பெருந்தகையார். மேலும், அதுபோது சென்னை கவர்னராகிய ‘லார்டு எல்பின்ஸ்டன் என்பாரும் கல்விக்காக உதவிபுரியும் பெருந்தகையாயவர். எனவே, நார்ட்டன் துரையின் வேண்டுகோட்படி ‘லார்டு எல்பின்ஸ்டன்’ பச்சையப்ப முதலியார் பொருளில், முதலியார் விருப்பின்படி சிவதருமம் முதலாய தருமங் கட்கு 3,71,745 வைத்து விட்டு, எஞ்சிய தொகை, 3,89,761 – ஐக் கல்வித் தருமத்திற்கென வைத்தருளினர்.

கல்வி நிதிக்கென ஏற்பட்ட மேற்கூறிய தொகையை மூலப் பொருளாகக் கொண்டு, முதலியார் அறநிலைக் காப்பாளர்கள் ( டிரஸ்டிகள் ) காஞ்சிபுரம், சிதம்பரம், சென்னை இம்மூன்றிடங்களில் மூன்று உயர்தரப் பள்ளிகளும், சென்னையில் ஒரு கல்லூரியும் நடாத்தி வருகின்றனர். எண்ணில் சிறுவர்கட்குக் கண்ணருளும் அன்னையர் நம்
முதலியாரன்றோ !

நம் முதலியாரின் புகழுடம்பென நின்று அவரை நினவூட்டும் ஒரு அழகிய பெரிய கல்விச்சாலைக் கட்டிடம் சென்னையில் கட்டப்பெற்றுள்ளது. அது கட்டி முடிந்ததொரு சிறப்பு எடுத்துரைத்தற்குரியது. மேற்கூறிய நார்ட்டன் துரை, ‘இன்ஜினியர் லட்டோ துரை’ என்பார், பச்சையப்பன் கல்லூரி ஆசிரியர், மாணவர், நகரத்துப் பெரியோர்கள் ஆகிய பலரும் கூடி, அடிப்படை (அஸ்திவாரம்) செய்தனர். கட்டிடம் தொடங்கிய காலம், 1845, அக்டோபர், 2. ‘மேன்மை தங்கிய மகாராணியார் ஆட்சியின் ஒன்பதாம் ஆண்டில் முதலியார் அறநிலைக் காப்பாளர்கள் முன்னிலையில், நார்ட்டன் துரையவர்களால் அடிப்படை அமைக்கப் பெற்றது’ எனும் குறிப்பு விரித்து எழுதப்பெற்ற ‘சாசனம்’ ஒன்றை, தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் எனும் மூன்று மொழிகளில் தோலில் எழுதி, அதனையும், அக்காலத்து வழக்கிலுள்ள எல்லா வகையான நாணய வகைகளையும்,
இரத்தின வகைகளையும் ஒரு சீசாவில் போட்டு அடிப்படையில் காப்பிட்டனர்.
பின், வாழ்த்தொலிகளினிடையே நார்ட்டன் துரை கல்வியைப் பற்றி ஒரு அரிய விரிவுரை நிகழ்த்தினர். இங்ஙனம் அடிப்படை செய்து கட்டி முடிந்த இக்கட்டிடம் ஆயிரக்கணக்கினர் ஒருங்கிருந்து கேட்டு மகிழுங் கூடம் ஒன்றினையுடையது
(65 x 45) ஆழமான அடிப்படையுடையது. அகன்ற சுவர்க்கனம் உடையது. அறுநூறு சிறுவர் பயிலத்தக்க பன்னிரு அறைகளுடையது. ஐரோப்பாவிற் செய்த அழகிய ‘சிலேட்’ பலகையால் உச்சிவேயப்பெற்றது. 1850 மார்ச்சு 20இல், இது முடிவுற்று மனைபுகு விழாக் (கிரகப்பிரவேசம்) கொண்டாடப்பெற்றது .

இவ்விழாவிற்குச் சென்னையிலுள்ள ‘கவர்னர்’ ‘ஸர் ஹென்றி பாட்டிஞ்சர்,’ அவர்தம் அதிகாரிகள், சென்னையம்பதிச் செல்வர்கள், கல்வியாளர்கள் ஆய பலரும், ஜார்ஜ் நார்ட்டன் துரையவர்களும், அவரவர் மனைவிமார்களும் வந்திருந்தனர். கட்டிடம் முடிந்த வரலாற்றை ‘எஞ்சினீர்’ ‘காப்டன் இச்சின்ஸன்’ பாடித்தார். நார்ட்டன் துரை, முதலியார் கல்வியறத்தின் சிறப்பினைப் பாராட்டி, கல்வியைப் பற்றி ஓர் அரிய விரிவுரை யியற்றினர். கவர்னரும் அதனை ஏற்றுப் பேசினர். இங்ஙனம் மிகுசிறப்புடன் மனை புகுவிழா நிகழ்ந்தது.

அக்கட்டிடத்தில் முதலியார் உருவப்படம் ஒன்று அமைக்கப் பெற்று மிளிர்கின்றது. தஞ்சாவூர் மன்னராகிய ‘தொல்ஜா மகாராஜா,’ தத்தாசி அப்பா, முதலியார் இம்மூவரும் கொண்டுள்ளதொரு படம் திருவருட் செயலால் முதலியார் அறக்காப்பாளர்கட்குக் கிடைத்தது. அதனை அவர்கள் சீமைக்கு அனுப்பி முதலியாரைத் தனியே பெரிய உருவில் எழுதச் செய்து வரவழைத்தனர். இப்படம், ஒரு மலையடியிலுள்ள ஆலயத்தின் முன், முதலியார் நின்று, ஒரு மாணவனுக்குக் கல்வியின் உயர்வினை எடுத்துரைத்து, ஒரு நூல் பரிசு அளிப்பது போல் எழுதப்பெற்றது. பச்சையப்பன் கட்டிடத்தில், இப்படம், அவர்தம் பெரும்புகழென என்றும் ஒளிர்கின்றது.

முதலியார் வரலாற்றில் இயைபுடைய சிலர் : – ‘ஆர்ச்சி பால்ட்காமல்’ – முதலியாரைச் சென்னையிலிருந்து தஞ்சைக்கு அனுப்பி, தஞ்சை மன்னர் தமக்குத் தரவேண்டும் தொகையை அவருக்குக் கடன் கொடுக்குமாறு வற்புறுத்தி யனுப்பியவர். ‘உவில்லியம் பீட்டரி’, ‘டிசோசா’ – முதலியாருடன் தஞ்சை சென்று பணத்தை வாங்கி வந்தவர் கன். ‘மிஸ்டர் ராம்’ – தஞ்சையி லிருந்தவர் ; அங்குள்ள இராணுவ அதிகாரி ‘கானல் புல்ட’னுடன் சேர்ந்து, சென்னையரசியலார் ஆணையின்படி, முதலியாரைச் சென்னைக்குப் போய்விட
வற்புறுத்தியவர். மணலி சின்னைய முதலியார், சுப்பராயர் – முதலியாரைப் போலவே தஞ்சாவூரில், கொடுக்கல் வாங்கல் செய்தவர்கள் . (இவர்கள் கொடுக்கல் வாங்கலில் செய்த கடுமையாலே முதலியார் பேரிலும் குறை கூறப்பட்டது.) இவருள் சின்னைய முதலியார் நமது முதலியார் சிதம்பரத்தில் செய்ய நினைந்த திருப்பணிகட்கு, அங்குள்ள வைணவர்கள் செய்த தடைகளைத் தீர்த்து வைத்தவர் வரதப்பிள்ளை, முதலியாருக்குக் கடன் தந்திருந்த ஒருவர். கோவூர் ஏகாம்பர முதலியார் – இவர் வீட்டிலேயிருந்து தான் பச்சையப்பன் கட்டிடம் அடிப்படைபோடும் சிறப்பு விழாத் தொடங்கப் பெற்றது. ‘ஈக்குவிற்றி மாஸ்டர்’ ( Equity Master ) நீதிமன்றத்தாரால் சில வழக்குக்களில் சில காரியங்களை ஆராய்ந்தறிந்துரைக்க ஏற்படுத்தப்பெறும் நடுநிலையாளர். முதலியார் மிக்க நோயுற்றிருந்த காலை, போனி நாராயண பிள்ளைக்கு எழுதிய இறுதி நிருபத்தின் குறிப்புக்கள் :– இரண்டு நானாகச் சற்றுக் குணம். – இனித் திருவருளால் குணம் எய்தலாம். வரவு செலவின் கணக்கு முடித்து அனுப்புக. வரதப்பிள்ளை என்பாருக்கு, எஞ்ச நிற்கும் கடன் ஆயிரம் பூவிராகனையும் உரிய வட்டியையும் செலுத்தி விடுக. எல்லாக் காரியங்கட்கும் வரையறை ( வில் ) செய்துளேன் – என்பனவாம்.

சான்றாதாரம்,

பச்சையப்ப முதலியார். 1754-1794
(மாணவர்க்குரிய பக்கங்கள்.)
கட்டுரை ஆசிரியர் : R.வேங்கடாசலம் பிள்ளை,
தமிழ்ப் பொழில் (இதழ்),
துணர் – 4, மலர் – 1-2,
விபவ – சித்திரை, வைகாசி,
பதிப்பாசிரியர் : கரந்தை த.வே.உமாமகேசுவரன் பிள்ளை,
வெளியீடு : தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கம், ஆண்டு – 1928-29,
பக்கங்கள் : 57 முதல் 66 வரை.
———————————————-
அகமுடையார் வரலாற்று மீட்புப் பணியில்

சோ.பாலமுருகன் அகமுடையார்,
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
அகமுடையார் அரண்,
தொடர்புக்கு : 94429 38890.

இப்பதிவு அகமுடையார் அரண் பாலமுருகன் அகமுடையார்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

பாலமுருகன் அகமுடையர் பக்கம் லிங்க்

திரு. பாலமுருகன் அகமுடையார் ப்ரோபல் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

We will be happy to hear your thoughts

Leave a reply

Agamudayar Otrumai
Logo
× How can I help you?