சோழ அரச மரபினர் அகம்படியர்களே மற்றும் அகம்படியர்களால் உருவாக்கப்பட்ட கண்டி அரச…

Spread the love
0
(0)

First
சோழ அரச மரபினர் அகம்படியர்களே மற்றும் அகம்படியர்களால் உருவாக்கப்பட்ட கண்டி அரசபரம்பரை – இலங்கை மடவெளை கல்வெட்டு மற்றும் இலங்கை இலக்கியங்கள் வழியாக பல்வேறு வரலாற்று உண்மைகள்
————————————————
தமிழ்நாடு மற்றும் இலங்கை வரலாற்றில் மறைக்கப்பட்டுள்ள பல்வேறு வரலாற்று உண்மைகளை இக்கட்டுரையில் வெளிக்கொணரப்போகின்றோம். ஆகவே பொறுமையாகவும்,முழுமையாகவும் படிக்கவும்.

ஒருநாள் இலங்கையில் உள்ள மடவெளி கல்வெட்டு செய்தியில் 10 அகம்படியர்கள் முன்பு தானம் ஒன்று நடைபெற்ற செய்தி குறிக்கப்பட்டுள்ளதாக அகமுடையார் அரண் நிறுவனர் திரு.பாலமுருகன் அகமுடையார் அவர்கள் நமக்கு போனில் தெரிவித்தார்.

இக்கல்வெட்டு செய்தியை பல்வேறு நூல்கள் மற்றும் பழம் இலக்கியங்களில் உள்ள செய்திகளுடன் ஆராய்ந்து பார்த்தபோது அது வெறும் அகம்படியர் இலங்கையில் செய்த தானசெய்தியை மட்டும் குறித்து நிற்கவில்லை,மாறாக அக்கல்வெட்டு செய்தியை பல்வேறு செய்திகளுடன் ஒப்பிட்டுப்பார்க்கையில் அது சோழர்களின் மரபினர் யார்? இலங்கையின் கண்டி அரச வம்சம் யாரால் உருவாக்கப்பட்டது போன்ற வரலாற்றில் மறைக்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு பதில் கிடைத்தது.

இவற்றை எல்லாம் பார்ப்பதற்கு முன்னால் இக்கட்டுரைக்கு தொடக்கப்புள்ளியாக அமைந்த இலங்கை மடவெளி கல்வெட்டு குறித்து காண்போம்.

மடவெளை கல்வெட்டு
——————-
இன்றைய இலங்கையின் கண்டி மாவட்டம் தும்பரா பிரிவில் உள்ள மடவெலை எனும் ஊரில் உள்ள பாறையில்
சிங்கள மொழியில் எழுதப்பட்ட 14ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு செய்தியில் கீழ்கண்ட செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது.

ஶ்ரீபராக்கிரம பாகுவின் 46ம் ஆட்சியாண்டின் போது
தும்பர மாவட்டத்தில் உள்ள மடவெள(மடவெளை) எனும் ஊரில் கிடைக்கும் வரிப்பணமும் இவ்வூரின் வெளியில் உள்ள வயல் வயல்களின் விளைச்சலும் மற்றும் காட்டுப்பகுதியில் கிடைக்கும் பொருட்கள் போன்றவற்றையும் சந்திர சூரியர் உள்ளவரை அனுபவித்துக்கொள்ள உரிமையை சித்தவுள எனும் ஊரில் உள்ள பரமன்யா எனும் கம்மாளனுக்கும்( வெள்ளி நகை ஆசாரிக்கும்) அவன் மகன் சூரியாவிற்கும் பத்து அகம்படியர் முன்னிலையில் வழங்கப்பட்டுள்ளது.

பார்க்க: இணைப்பு (5 ) : epigraphia zeylanica பாகம் 3, பக்கம் 236

கல்வெட்டு விரிவான பார்வை
————————-
கல்வெட்டு வரிகளை மேலோட்டமாக பார்க்கையில் அந்த 10 அகம்படியர்கள் முன்னிலையில் ஆசாரிகளுக்கு தானம் வழங்கப்பட்ட செய்தி மட்டுமே தெரியலாம்.

ஆனால் கல்வெட்டில் உள்ள செய்திகளை மற்ற வரலாற்று தரவுகளுடன் ஒப்பிடுகையில் பல்வேறு உண்மைகள் தெரிய வருகின்றது.

தன்தொடவதுரே தேவன் மற்றும் திவானவத்தே லங்கா அதிகாரி என்ற இருவரது பெயர்கள் கல்வெட்டு செய்தியில் குறிப்பிடப்படுகின்றனர். இவர்கள் கல்வெட்டின் முடிவில்
“நான் அப ” நான் ஜோதி சித்தன” என்று கையப்பமிட்டுள்ளனர்.

குறிப்பிட்ட தன்தொடவதுரே தேவன் என்ற பெயரில் தன்தொடவதுரே என்பது ஊரை குறிப்பிடுவதாகும் தேவன் என்பது அன்று பல்வேறு அகம்படியர் கல்வெட்டில் காணப்படுவதை போல இவரும் தேவன் பட்டத்துடன் காணப்படுகின்றார்.

அதே போல் திவானவத்தே லங்கா அதிகாரி என்பவர் திவானவத்தே (Divanavatte) எனும் ஊரை சேர்ந்தவர் என்பதையும் இவர் லங்கா அதிகாரி (இலங்கை அதிகாரி) என்று அதிகாரி என்ற பெயரில் குறிப்பிடப்படுகிறார். அகம்படியர்களுக்கு அதிகாரி என்கிற பட்டம் பாரம்பரியமாக இருந்துள்ளது என்பதும் இன்றும் அகம்படியர்கள் அதிகாரி பட்டத்துடன் உள்ளனர் என்பதும் நாம் அறிந்ததே.

முக்கியமாக நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால் இவர்களின் பட்டமான தேவன்,அதிகாரி என்பது அகம்படியர்களுக்கான பட்டம் என்பதோடு இவர்கள் இருவரும் தூய தமிழர்கள் என்பதும் இவர்களின் பட்டங்களே எடுத்துக்காட்டுகின்றன.

இந்த மடவெளை கல்வெட்டை முதன் முதலாக அறிந்து வெளியிட்ட ஐரோப்பியரான கோர்டிங்டன் தனது கல்வெட்டு குறிப்பில் குறிப்பிட்ட
தன்தொடவதுரே தேவன் என்பவனே கல்வெட்டில் “நான் அப ” என்று கையப்பமிட்டுள்ளவன் என்றும் திவானவத்தே லங்கா அதிகாரி என்பவனே ” நான் ஜோதி சித்தன” என்றும் கையமிப்பட்டுள்ளவர்கள் என்று கூறியுள்ளார்.

இலங்கையில் இருந்து வரும் மற்ற பல தரவுகளும் இச்செய்தியை உறுதிப்படுத்துகின்றன.

பார்க்க இணைப்பு (6) : The Political History of the Kingdom of Kotte 1400-1521 Page 193

மேலும் தானம் தரும் போது கல்வெட்டின் இறுதியில் தானத்திற்கு சாட்சியாக இருப்பவர்கள் இது தனது எழுத்து என ஒப்பம் இடும் வழக்கம் தமிழ்நாட்டு கல்வெட்டுக்களில் தொன்று தொட்டு காணப்படும் வழக்கம் ஆகும்.

ஆகவே குறிப்பிட்ட திவானவத்தே லங்கா அதிகாரி என்பவரே ஜோதி சித்தன் என்பதும் , தன்தொடவதுரே தேவன் என்பவரே அப அல்லது அபனா என்று அழைக்கப்படுவர் என்பதும் இவர்கள் இருவரும் அகம்படியர்கள் என்பதும் எந்தவித சந்தேகமின்றி உறுதியாகின்றது.

சரி அடுத்த விசயத்திற்கு நகர்வோம்.

அகம்படிய மரபினால் உருவாக்கப்பட்ட கண்டி அரசபரம்பரை
———————————————–
குறிப்பிட்ட இந்த ஜோதி சித்தன என்பவன் ஆறாம் பராக்கிரமபாகுவின் அதிகாரியாக பணியாற்றியன் என்று கண்டோம். பராக்கிரமபாகு அரசன் குறிப்பிட்ட ஜோதி சித்தன என்பவனை மலைநாட்டிற்கு (கண்டி பகுதிக்கு) அரசனாக்கி அவனை தனக்கு கீழ் அடங்கிய சிற்றரசனாக வரிசெழுத்தி ஆட்சி செய்யுமாறு பணித்துள்ளான் என்று பல்வேறு வரலாற்று தரவுகள் வழியே தெரிகின்றது மடவெளி கல்வெட்டை ஆய்வு செய்த கோர்டிங்டனும் இதை குறிப்பிடுகின்றார். ஜோதி சித்தன எனும் இவன் பின்னாளில் விக்ரமபாகு என்ற பெயரிலும் சேனா சம்மத விக்கிரமபாகு என்ற பெயரிலும் கண்டி ராச்சியத்தை ஆண்டுவந்தான்.

இப்படி நடந்து வருகையில் பராக்கிரமபாகு அரசனின் 52ம் ஆட்சி ஆண்டின் போது அதவது இந்த மடவெளி கல்வெட்டு வெட்டப்பட்டு 6 ஆண்டுகள் கழித்து சித்த அரசர் (situ king) என அழைக்கப்பட்ட ஜோதி சித்தன , பராக்கிரமபாகுவின் மேலாதிகாரத்தை எதிர்த்து சுயாட்சி செய்ய விரும்பினான் என்று தெரிகிறது.

அதாவது பராக்கிரமபாகு அரசரின் ஊழியத்திற்கு ஆட்களை வழங்கவும், வழமையாக கொடுத்துவரும் வரியையும் கொடுக்க மறுத்து கிளர்ச்சி செய்தான்.

பார்க்க: இணைப்பு (7 ) : epigraphia zeylanica பாகம் 3, பக்கம் 237

ஏற்கனவே நாம் கண்ட தன்தொடவதுரே தேவன் எனும் அபனா எனும் அகம்படியனும் கம்பளை எனும் ராஜியத்திற்கு இளவரசனாக பராக்கிரமபாகு மன்னரால் முன்னர் முடிசூட்டப்பட்டிருந்தான் .

ஜோதி சித்தன செய்யும் கிளர்ச்சியை ஒடுக்க அம்புலகல(கம்பளை) இளவரசனான அபனா அனுப்பப்பட்டான் என்பது பல்வேறு சிங்கள வரலாற்று தரவுகள் மூலம் தெரிய வருகின்றது.

ஒருவழியாக கிளர்ச்சி முறியடிக்கப்பட்டது ஜோதி சித்தன எனும் விக்ரமபாகு கண்டியை விட்டு வெளியேற்றப்பட்டான் ,விக்ரமபாகுவின் மகனான ஜெயவீர அஸ்தனா என்பவனுக்கு பராக்கிரம பாகு ஆட்சியுரிமை வழங்கினான் என்ற செய்திகள் சிங்கள வரலாற்றில் காணக்கிடைக்கின்றன.

சூரிய குலத்தவரான கம்பளை ராஜ்ஜியமும் , கண்டி அரசவம்சமும்
——————————————————
ராஜவழியா ( Rajavaliya) அல்லது இராஜவழியினர் என்பது மகாவம்சம் என்பதைப்போல் சிங்களர்களால் காலம் தோறும் தொகுக்கப்பட்ட வரலாற்று தொகுப்பாகும் .

இந்த வரலாற்று குறிப்புகளில் ஜோதி சித்தன எனும் விக்ரமபாகு செய்தி கிளர்ச்சிகள் அதன் பின் அவன் மகனான ஜெயவீர அஸ்தனா பட்டமேற்ற போன்ற பல செய்திகள் காணப்படுகின்றன.

குறிப்பிட்ட ராஜவழி எனும் தொகுப்பில் ஜோதி சித்தன மகனான ஜெயவீர , சூரிய குலத்தில் கம்பளை அரசவம்சத்தில் தோன்றினான் என்ற செய்தி குறிப்பிடப்படுகின்றது.

ஆதாரம் 8 : Journal Of The Ceylon Branch Of The Royal Asiatic Society 1913 Vol 23 Pageno 205,206

கண்டி அரசு அமைப்பதற்கு முன்பு ஜோதி சித்தன் கம்பளை ராஜ்ஜியத்திலிருந்தே வந்தான் என்ற வரலாற்று செய்திகள் பிற்கால கம்பளை இராஜவம்சமும், கண்டி ராஜவம்சமும் உறவினர்கள் என்பது தெரிகின்றது.

இதில் முன்னர் கண்ட தன்தொடவதுரே தேவன் எனும் அபனா எனும் கம்பளை இளவரசன் பராக்கிரமபாகுவால் கண்டி அரசன் ஜோதி சித்தனவின் கிளர்ச்சியை அடக்க அனுப்பப்பட்டதை கவனித்தோம் அல்லவா?

இந்நிகழ்ச்சிகளை பரகும்ப சிரித்திரா அல்லது பாராக்கிரம சரித்திரா எனும் சிங்கள நூல் இந்த நிகழ்ச்சிகளை விவரிக்கிறது (பார்க்க இணைப்பு 9: epigraphia zeylanica பாகம் 3, பக்கம் 236 )

இத்தொகுப்பின் 49ம் வரிகள் : கவிஞர்களால் புகழப்படுபவனும், கடவுளின் அரசனும் ,சூரிய குலத்தை சேர்ந்தவனுமாகிய அபனா , பராக்கிரமபாகு மன்னரின் சிந்தனையில் இருந்த துயரத்தை போக்கினான் என்ற வரிகள் காணப்படுகின்றன.

ஆகவே இது போன்ற பல்வேறு வரலாற்று தரவுகள் மூலம் அபனா மற்றும் ஜோதி சித்தன் ஆகிய இருவரும் கம்பளை அரசவம்சத்தவர் என்பதும் உறவினர்கள் என்பதும் உறுதிப்படுகிறது. மேலும் மடவெளை கல்வெட்டில் இவர்கள் இருவரும் அகம்படியர்கள் என்று குறிக்கப்பட்டிருப்பது வரலாற்று தொகுப்பில் உள்ள செய்திகளை உறுதி செய்யும் சான்றுகளாகும்.

மேலும் கண்டி அரசபரம்பரையில் வந்த மன்னர்கள் பெயரை கவனித்தால்

குறிப்பாக
முதலாம் விமலதர்மசூரிய (1592-1604)
இரண்டாம் விமலதர்மசூரிய (1687-1707)
தினஜார வம்சம்- முதலாம் விமலதர்மசூரியன் (1590–1604) தினஜார வம்சம்-இரண்டாம் விமலதர்மசூரியன் (1687–1707)

அதில் சூரியன் என்ற அடைமொழியை நீங்கள் கவனிக்க முடியும்.

சோழர் வழியினரான அகம்படியர்கள்
——————————
ஆனால் சூரிய குலம் என்பதை மட்டும் வைத்து கண்டி அரசமரபும் ,பிற்கால கம்பளை ராஜ்ஜியமும் சோழ அரசமரபினர் என்று நாம் சொல்லவில்லை. அதற்கு மேலும் சான்றாக

சூரிய மரபினர் என்றால் இவர்கள் சோழ அரசமரபினர் என்று கூறவிரும்புகிறீர்களா என்று கேட்டால் ,ஆம் என்று இவர்கள் சோழ மரபினரே! ஆனால் கல்வெட்டுக்களில் , செப்பேடுகள் மற்றும் வரலாற்று தொகுப்புகளில் சூரிய குலம் என்று வருவதை மட்டும் வைத்து இவர்கள் சோழ மரபினர் என்று உங்களை முடிவுக்கு வரச்சொல்லவில்லை. இதற்கு மேலும் சான்று உள்ளது.

கண்டிய அரச வம்சத்தை நிறுவிய ஜோதி சித்தன என்பதை அறிவோம்.
இந்த ஜோதி சித்தன் எனும் பெயரே கவனித்தால் இதில் உள்ள ஜோதி எனும் பெயர் ஒளி ,வெளிச்சம் அல்லது சூரியன் என்பதற்கான ஒப்புமை கொண்ட பொருளாகும் . மேலும் கண்டி அரசர்கள் சித்த அரசன் (situ king) என்ற பெயரில் சிங்கள வரலாற்று தரவுகளில் அழைக்கப்படுகின்றனர்.

பார்க்க: இணைப்பு (5 ) : Epigraphia zeylanica பாகம் 3, பக்கம் 236

தமிழ்நாட்டில் வாழ்ந்த சோழர் வழியினரும் ,ஆந்திர பொத்தப்பி பகுதியில் ஆண்ட சோழ பரம்பரையினரும் தங்களை சித்த வடவன் என்று அழைத்துக்கொண்டனர். இதே சித்த அரசன், சித்தன் என்ற பெயர்களை இலங்கையில் அரசாண்ட கண்டி,கம்பளை அரசர்களும் கையாண்டுள்ளனர்.

சூரிய குலத்தவர் என்பதையும் ,சோழர்களின் மரபுப்பெயர்களையும் இவர்கள் பயன்படுத்துவதை காணும்போது பிற்கால கம்பளை அரசர்களும், கண்டி ராசவம்சமும் சோழர் வழியினர் என்பது உறுதியாகின்றது.

அகம்படிய மரபினரான சோழ,கம்பளை, கண்டி அரசவம்சங்கள்
———————————————–
ஆகவே மேற்சொன்ன செய்திகளை எல்லாம் ஒன்று சேர்த்து பார்க்கும்போது கண்டி அரசமரபும் ,பிற்கால கம்பளை ராஜ்ஜியமும் அகம்படி சாதியை சேர்ந்த சூரிய மரபினராகிய சோழ வம்சத்தவர்களால் உருவானது என்பது உறுதியாகிறது.

அரச வம்சத்தினர் மற்றொரு அரச வம்சத்தினரிடமே பெண் எடுப்பதே என்ற மரபின்படி பின்னாளில் புகழ்பெற்ற தஞ்சாவூர், மதுரை நாயக்கர் அரசபரம்பரையினரிடம் பெண் எடுத்து வந்துள்ளனர்.

பின்னாளில் கண்டி அரசமரபினருக்கு வாரிசு இல்லாமல் போகவே பெண் எடுக்கும் நாயக்கர்களிடமே வாரிசை தேர்ந்தெடுத்து ஆளஆரம்பிக்கவே கண்டி அரசகுடும்பத்தில் நாயக்கர் மரபு தொடங்கியது.

தமிழ்நாட்டில் இருந்து மேலும் சில சோழர் தரவுகள்
——————————-
தமிழ்நாட்டில் நாம் ஏற்கன்ட கல்வெட்டு செய்திகளும் சோழர்கள் அகம்படியினரே என்ற செய்தியை நமக்கு தருகின்றது.

பொத்தப்பி சோழ பரம்பரையினர் சித்த அரசன் என்ற பெயரை கொண்டிருந்தனர்.

பார்க்க இணைப்பு 10: ஆதாரம்
மதுராந்தக பொத்தப்பி சோழ சித்த அரசன் கல்வெட்டு , தென் இந்திய கல்வெட்டு தொகுதி 12, கல்வெட்டு எண் 141.

கோப்பெருஞ்சிங்கனிடம் அதிகாரியாக பணிபுரிந்த அகம்படி இனத்தை சேர்ந்த எதிரி கணநாயன் பொத்தப்பி சோழன் பரம்பரையினன் என்று தன்னை குறித்துள்ளான்.

பார்க்க இணைப்பு 11:
ஆதாரம்: தென் இந்திய கல்வெட்டு தொகுதி 7, கல்வெட்டு எண் 149.

விழுப்புரம் மாவட்டம் எலவானசூர் ஊரில் கிடைத்த கல்வெட்டு செய்தியில் “சித்த வடவன் அகம்பட தேவன்” என்று அகம்படியர் இனத்தை சேர்ந்தவன் சோழர் இனத்தவர்களின் மரபுப்பெயரான சித்த வடவன் என்ற பெயரில் குறிப்பிடப்படுகிறான்.
பார்க்க இணைப்பு 12,13

இவ்வாறு தமிழ்நாட்டில் உள்ள தரவுகள் பலவும் அகம்படியார்களே சோழர் அரசபரம்பரையினர் என்பதற்கு ஆதாரங்களாக உள்ளன.

இணைப்பு 14-கண்டி அரண்மனை

இன்னும் அதிகமான ஆதாரங்கள் உள்ளன. அதையும் தேடி வெளிப்படுத்துவோம்.

கட்டுரையாளர்
மு.சக்தி கணேஷ் சேர்வை(அகமுடையார்)
அகமுடையார் ஒற்றுமைக்காக

********************************இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

We will be happy to hear your thoughts

Leave a reply

Agamudayar Otrumai
Logo
× How can I help you?