திருமலை நாயக்கருக்காக உயிர் துறந்த பொன்னழகு சேர்வை (அகமுடையார்) மற்றும் தெய்வமாகிய பொன்னாத்தாள்
—————————————–
“தேமேவு திருமலை மெய்க் காப்பாளர்
தாமேவு சோணைமுத்தர் தாம் கண்டே -தீமேவு
மன்னு புகழ் மறத்தமிழர் மங்கயரே!
பொன்னழகே ! பாப்பாத்தியே! ” – அருள்மிகு பொன்னழகு பாப்பாத்தி துதி
மதுரை என்றாலே சித்திரை திருவிழா!
இந்த சித்திரை திருவிழாவிற்கு அழகர் கோயிலில் இருந்து வைகை ஆறு வரை அழகர் கிட்டத்தட்ட 400 மண்டகப்படிகளுக்கு வந்து செல்வார். அதில் ஒரு பெண்ணிற்காக எடுக்கப்பட்ட நடுகல் கோயிலுக்கும் பல நூறு வருடங்களாக வந்து சென்று கொண்டிருக்கிறார் என்பது வியப்புக்குரிய செய்தி!
ஆம் சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் மதுரையை ஆண்ட திருமலை நாயக்க மன்னரின் படையிலும் மெய்காவலராகவும் பணியாற்றியவர் சோனை முத்தையா சேர்வை எனும் அகமுடையார் இனத்தவர். இவர் திருமலை நாயக்க மன்னருக்கு ஆபத்து நேரிட்ட போது மன்னரை காக்கும் பணியில் உயிர் துறந்தார். இதனை அறிந்த அவரது சோணை சேர்வையின் மனைவி பொன்னழகு நாச்சியார் உடன்கட்டை ஏற துணிந்தார். இதை அறிந்த மன்னர், அரண்மனையில் இருந்து நெருப்பு கங்குகளை வழங்கினார்.
வைகைக்கரையில் இன்று அழகர் ஆற்றில் இறங்கும் பகுதியில் மேடை அமைக்கப்பட்டு அங்கு பொன்னழகு அம்மாள் தனது கணவர் சோணை முத்துவின் உடல் கிடத்தப்பட்ட சிதையில் உடன்கட்டை ஏறி தெய்வமானார்.
இறந்தவர்களின் வழியினருக்கு பொன்னழகு அம்மாள் சிதையில் ஏறிய இடத்தில் கோவில் கட்ட திருமலை நாயக்க மன்னர் நிலம் வழங்கியதாக தெரிகிறது. இன்றும் இக்கோவில்
மதுரை ஆழ்வார்புரத்தில் இருக்கிறது .
இன்றும் வீரர் சோணைமுத்து மற்றும் பொன்னழகு அம்மாள் அவர்களின் வழியினர் இன்று மதுரை அருகில் உள்ள பரவை கிராமத்தில் வாழ்ந்துவருகின்றனர் இன்றும் இவர்கள் இக்கோவிலை நிர்வகித்து வழிபட்டு வருகின்றனர்.
சித்திரை திருவிழாவின் போது அழகர் இந்த மண்டபத்திற்கும் வந்து சோணைமுத்து -பொன்னழகு வழியினருக்கு அருளாசி வழங்குகின்றார்.
மேலதிக செய்திகள்
பொன்னழகு அம்மாள் உடன்கட்டை ஏறிய இடத்தை நாயக்க மன்னர்கள் சோணைமுத்து சேர்வை- பொன்னழகு அம்மாள் சந்ததியினருக்கு வழங்கியதோடு சில வழிபாட்டு உரிமைகளையும் வழங்கியுள்ளதாக தெரிகிறது. இதற்கான ஆவணங்கள் அகமுடையார் சமுதாயத்தை சேர்ந்த
மதுரை பரவையில் வாழும் சோணை முத்து -பொன்னழகு வழியினரிடம் உள்ளது. இந்த ஆவணம் தெலுங்கு மொழியில் எழுதப்பட்டுள்ளதாகவும் தெரிகின்றது.
மேலும் இக்கோவில் உறவின்முறையார் பரவை ” சோணை முத்தையன் அகமுடையார் உறவின்முறை” என்ற பெயரில் அறங்காவலர் குழுவினை நிறுவி இக்கோவிலை நிர்வகித்து வருகின்றனர்.
மேலும் இக்குழுவினர் ஒவ்வொரு வருடமும் வருட காலண்டர் அடித்து இவர்களின் உறவுகளிடம் வழங்கி வருகின்றனர்.
இந்த நாள்காட்டியில் காணப்பட்ட அருள்மிகு பொன்னழகு-பாப்பாத்தி துதியையே இக்கடுரையின் ஆரம்பத்தில் படித்திருப்பீர்கள்.அதாவது
“தேமேவு திருமலை மெய்க் காப்பாளர்
தாமேவு சோணைமுத்தர் தாம் கண்டே -தீமேவு
மன்னு புகழ் மறத்தமிழர் மங்கயரே!
பொன்னழகே ! பாப்பாத்தியே! ”
என்ற அருமையான பாடல் வழங்கி வருகின்றது.
திருமலை நாயக்கரின் மெய்காப்பாளராக சோணைமுத்து சேர்வையை பற்றி கூறினோம் அல்லவா! அவர் இறந்த இடம் மதுரையின் வண்டியூர் பகுதி ஆகும். இந்த வண்டியூர் பகுதியில் நாயக்க மன்னர்களின் படைவீடு (படைவீர்கள் தங்குமிடம் ,பயிற்சி செய்யும் இடம்) இருந்துள்ளது தெரிகின்றது.
மதுரை வண்டியூர் பகுதியில் யானை நடுகல் ஒன்றை திருமதி. ப.தேவி அறிவு செல்வம் அவர்கள் ஆராய்ந்து தனது “மதுரை நடுகற்கள்” என்ற நூலில் வெளியிட்டுள்ளார்.
குறிப்பிட்ட இந்த நடுகல் சிற்பத்தில் நீண்ட தந்தம் கொண்ட யானையை அங்குசத்தை கொண்டு ஒரு வீரன் கட்டுப்படுத்த முனைகின்ற காட்சி பதிவாகியுள்ளது. கோவிலில் இல்லமால் தனிப்பட்ட பலகை சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளதால் இது இறந்த வீரனுக்கான எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம்.
எது எப்படியாகிலும் வண்டியூர் பகுதி நாயக்க மன்னர்களின் படைவீடு இருந்த இடம் என்பது இந்த நடுகல் சிற்பம் மூலமாகவும் உறுதியாகின்றது. அதாவது அலங்காரம் செய்யப்பட்ட யானையை , யானையின் முன்னே நின்று வீரன் கட்டுப்படுத்த முனைவது யாணைகளை பழக்கும் ,பயிற்சி அளிக்கும் முயற்சி என்று தெரிகிறது . ஆகவே நாயக்க மன்னர்களின் படைவீடான வண்டியூர் பகுதியில் யானைப்படையும் நிறுத்தப்பட்டிருந்தது என்பதும் அங்கு யானைகளுக்கு போர் பயிற்சியும் வழங்கப்பட்டது என்பதும் தெரிகின்றது.
சோணைமுத்து சேர்வை இறந்த இடம் வண்டியூர் பகுதி என்று ஆவணங்கள் வாயிலாக அவரது வழியினர் குறிப்பிடுகின்றனர். ஆகவே திருமலை நாயக்க மன்னருக்கும் மற்ற ஏதோ ஓர் அரசருக்கும் வண்டியூரில் போரோ அல்லது கொலைசதியோ நிகழந்து அதற்காக சோணைமுத்து சேர்வை உயிர் துறந்த இடம் வண்டியூர் பகுதி ஆகும்.
இக்கோவிலில் பொன்னழகு என்ற பெயரோடு பாப்பாத்தி என்ற பெயரும் வழங்கி வருகின்றது. பாப்பாத்தி என்ற பெயரை கொண்டு இவர் பிராமண இனத்தை சேர்ந்த பெண் என்றும் இவரும் இறந்த தனது கணவருக்காக உடன்கட்டை ஏறினார் என்று ஒர் செய்தி வழங்கி வருகின்றது.
அரசகுடும்பத்தை சேர்ந்த பிராமண பெண்கள் உடன்கட்டை ஏறியதற்கு வட இந்தியாவில் நிறைய சான்றுகள் உள்ளன. அதேவேளை தமிழ்நாட்டை பொறுத்தவரை
கணவனை இழந்த அரசகுடும்பம் அல்லாத பிராமண பெண்கள் தலையை மழித்துக்கொண்டு கைம்மை நோன்பை ஏற்பதே வழக்கம் ,அவர்கள் சதி எனும் உடன்கட்டை ஏறும் வழக்கத்தை பரவலாக பின்பற்றியதற்கு தகவல்கள் இல்லை.
மேலும் பாப்பாத்தி அம்மாளுக்கு தனியே சிலைகள் இல்லை..பாப்பாத்தியாம்மாளின் கணவர் பெயரும் எவருக்கும் தெரியவில்லை என்பதுவும், துதுப்பாடலில் பாப்பாத்தியம்மாளையும் மறத்தமிழர் ( வீரக்குடியினர்) என்று வழங்குவதாகும் ,பாப்பாத்தி அம்மாள் எனும் பிராமண பெண் வழியினர் எவரும் இக்கோவிலின் வழிபாட்டு உரிமையில் இல்லை என்பதும் பாப்பாத்தி அம்மாள் என்பவர் பிராமண பெண் என்பதை விட
பொன்னழகு அம்மாளின் தொடர்பெயராகவோ அல்லது
சோணைமுத்து சேர்வை அவர்களின் மற்றொரு மனைவியாகவோ இருந்திருக்கலாம்.
அல்லது நாயக்க மன்னர் படையில் பிராமணர்கள் சிலர் படைத்தளபதிகளாக விளங்கியுள்ளனர். நாயக்க மனர்களிடம் இராமப்பய்யன் எனும் பிராமண இனத்தை சேர்ந்த புகழ்பெற்ற படைத்தளபதி விளங்கியதும் இவர் நாயக்க மன்னருக்கும் சேதுபதிகளுக்கும் இடையில் நடந்த போரில் சேதுபதி மன்னர் சடைக்கன் சேதுபதியே கைது செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு படைத்தளபதியாகவோ அல்லது அரசகுடும்பத்தினராகவோ விளங்கியவர்களின் குடும்பத்து பிராமண பெண்கள் உடன்கட்டை ஏறி இருக்க வாய்ப்பிருக்கலாமன்றி சாதாரண பிராமண பெண்கள் உடன்கட்டை ஏறி இருக்கும் சான்று இதுவரை கிட்டவில்லை என்பதுவும் இங்கு குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே சொன்ன நாயக்க மன்னர்கள் வழங்கிய தெலுங்கு மொழியில் அமைந்த அந்த ஆவணத்தில் உள்ள செய்திகள் முழுமையாக கிடைத்தால் இது போன்ற பல கேள்விகளுக்கு பதில் கிடைக்கும்.
இக்கோவிலின் கூகிள் மேப் லோக்கேசன்
https://goo.gl/maps/mkNrGeqb4evD5nkV7
நன்றி:
மதுரையில் வசிக்கும் அகமுடையார்களுக்கே இந்த கட்டுரையில் நாம் கண்ட செய்தி புதிய செய்தியாக இருந்திருக்கும்.
இப்பதிவிற்கான அடிப்படை தரவுகள் மற்றும் புகைப்படங்களை வழங்கியவர் வழங்கியவர் அக்கமுடையார் இனத்தை சேர்ந்த திருமதி. ப.தேவி அறிவு செல்வம் என்பவர் ஆவார் . இவர் குறிப்பிட்ட இக்கோவிலில் தாய்வழியில் கோவிலோடு தொர்புடையவர் என்பதோடு சிற்ப சாஸ்திர பயிற்றுநராக பணியாற்றி வருகிறார் . மேலும் இவர் மதுரை சுற்றியுள்ள பகுதிகளில் கிடைத்த நடுகற்களை ஆய்வு செய்து “மதுரை நடுகற்கள் ” என்ற நூலையும் வெளியிட்டுள்ளார்.
இக்கட்டுரையில் வண்டியூர் பகுதியில் கிடைத்த யானையுடன் போராடும் வீரன் நடுகல் சிற்ப புகைப்படத்தில் காணப்படுவர் இவரே.
இவரது தொலைபேசி எண்: 9865377764
மதுரையை சுற்றி அகமுடையார் சமூகத்தவர் கோவில்களுக்கு நிறைய நற்பணிகளை செய்துள்ளார்கள் அது குறித்த புகைப்படங்களையும் திருமதி. ப.தேவி அறிவு செல்வம் அவர்கள் அகமுடையார் ஒற்றுமை தளத்திற்கு வழங்கியுள்ளார்கள் வரும் காலத்தில் அவற்றையும் நமது பக்கத்தில் வெளியிடுவோம் . இதற்காகவும் அவருக்கு நமது நன்றிகள்!
குறிப்பு:
உடன்கட்டை ஏறும் வழக்கத்தையோ , கணவர் இறந்தபின் பெண் இறக்கவேண்டும் என்பதையோ நாம் ஊக்குவிக்கவில்லை.
அதேவேளை கடந்த காலத்தில் , செயற்கரிய செய்து உயிர் தியாகம் செய்த இவர்களை தெய்வநிலைக்கு உயர்த்திப் பார்க்கும் நம் பழம் மரபில் நின்று அவர்களை நாம் வணங்குகின்றோம்! அவர்கள் தெய்வமாக நின்று இன்றும் நம்மை காக்கின்றார்கள் என்பதையும் நாம் உறுதியாக நம்புகின்றோம்!
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்