அகமுடையார் குலத்தில் தோன்றிய பொதுவுடைமைப் போராளி, மாவீரன் ஜாம்பவான் ஓடை தி.சிவர…

Spread the love

First
அகமுடையார் குலத்தில் தோன்றிய பொதுவுடைமைப் போராளி,

மாவீரன் ஜாம்பவான் ஓடை தி.சிவராமன்
(1925 – 1950)

எழுதப்படாத வரலாற்றுச் செய்திக்கு வாழ்நாள் குறைவு. எழுதி வைக்கும் பழக்கமோ தமிழர்களுக்கு குறைவு. இதனால் தமிழர் சமூகத்திற்கு ஏற்பட்டுள்ள வரலாற்று இழப்புகள் ஏராளம்.

இருபதாம் நூற்றாண்டில் தமிழர் மண் கண்ட புரட்சிகர நிகழ்வுகள் ஏராளம், அவை உரியவாறு அறியப்படாமலே இருக்கின்றன.

இருபதாம் நூற்றாண்டில் அரசியல் களத்தில், சோழ மண்டலத்தில் நிலப்பிரபுக்களின் ஒடுக்குமுறைகளுக்கு ஆட்பட்ட தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் விடியலுக்காக போராடி, ஆளும் வர்க்கத்தின் ஏவல் சேவகர்களான காவல்துறையின் துப்பாக்கி தோட்டாக்களையும், குண்டாந்தடிகளையும் எதிர்கொண்டு களப்பலியான எண்ணற்ற தியாக தீபங்களின் வரலாறு, இன்றைய இளம் தலைமுறையினருக்கு பாடமாக்கப்படாமல் மறைக்கப்பட்டும், மறுக்கப்பட்டும் வருகிறது.

இப்போராட்டத்தின் பெயரை சொல்லி அரசியல் பிழைப்புவாதம் செய்யும் இன்றைய வலது – இடது பொதுவுடைமைவாதிகளும், அக்கட்சியின் தலைமைகளும் கூட இதற்கு விதிவிலக்கல்ல, கன்னடத்தை தாய் மொழியாகக் கொண்ட சீனிவாச ராவுக்கு கொடுக்கிற முக்கியத்துவம், மண்ணின் மைந்தர்களான இம்மாவீரர்களுக்கு கொடுப்பதில்லை.

மாவீரன் சிவராமனின் பிறப்பு

மறைக்கப்பட்ட மாவீரர்களில் ஒர் முத்து ஜாம்பவான் ஓடை சிவராமனும் ஒருவர். இன்றைய திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டைக்கு அருகில் உள்ள “ஜாம்பவான் ஓடை” என்ற அழகிய சிற்றூரில் “அகமுடையார்” குடியில் திருமேனித்தேவர் – சிவபாக்கியத்தம்மாள் தம்பதியினருக்கு, 1925 ஆம் ஆண்டு ஆகத்து மாதம், 10 ஆம் நாள் மாவீரன் சிவராமன் பிறந்தார். சிவராமனுக்கு காத்தப்பெருமாள் என்ற அண்ணனும், நான்கு தம்பிகளும் இருந்தனர்.

மாவீரன் சிவராமனின் தந்தை திருமேனித்தேவர் அவர்கள் வேதநாயகி என்பவரை இரண்டாம் தாரமாகத் திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியினருக்கு வேதையன், இராவுத்தன், சிதம்பரம் என்று மூன்று ஆண் மக்களும், மூன்று பெண் மக்களும் இருந்தனர்.

திருமேனித்தேவர் நெல் வியாபாரத்தில் ஈடுபட்டு செல்வந்தரானார். ஜாம்பவான் ஓடையில் எவரும் கட்டாத அளவுக்கு மிகப்பெரிய வீடு ஒன்றைக் கட்டினார்.

ஜாம்பவான் ஓடை ஆரம்பப் பள்ளியில் சிவராமன் சேர்க்கப்பட்டார். ஐந்தாம் வகுப்புடன் மாவீரனின் பள்ளிப்படிப்பு முற்றுப்பெற்றது.

திருமேனித்தேவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார். அதன்பின் குடும்பம் மெல்ல மெல்ல எல்லா வசதி வாய்ப்புகளையும் இழந்தது.

பொதுவுடைமை அரசியலில் ஈடுபாடு

முத்துப்பேட்டையில் தையற்கடை வைத்திருந்த தோழர் சுந்தரராசன் அவர்கள் அறிமுகம் சிவராமனுக்குக் கிடைத்தது.

ஒவ்வொரு நாள் மாலையிலும், சுந்தரராசன் தையற்கடையில் நண்பர்கள் அனைவரும் கூடி உலக அரசியலிலிருந்து, உள்ளூர் அரசியல் வரை விவாதிப்பர். அவற்றை மாவீரன் சிவராமன் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருப்பார். பொதுவுடைமைக் கருத்துக்களை கொண்ட நூல்களை, தோழர் சுந்தரராசன் அவர்கள் சிவராமனுக்கு படிக்கக்கொடுப்பார். அவர் படித்து முடித்தபின் அது பற்றி விவாதிப்பார். இப்படியாக மெல்ல மெல்ல சிவராமன் பொதுவுடைமைக் கருத்துக்களால் முழுமையாக ஈர்க்கப்பட்டு பொதுவுடைமைப் போராளியாக உருவாகினார்.

“பேட்டை தானா” தர்மலிங்கத்தேவர்

தோழர் சுந்தரராசன் தையல்கடைக்கு அருகிலேயே மாவீரன் சிவராமன் பெட்டிக்கடை வைத்து தங்களின் அரசியல் கருத்துக்களை மேலும் வளர்க்க எண்ணினார். பெட்டிக்கடை வைக்க பண உதவிக்காக காங்கிரசு கட்சியில் தீவிரமாகப் பணியாற்றுபவர் கட்டை நாராயணசாமி அவர்கள், “என் தலையை வெட்டி போட்டாலும், சதையைக் கழித்துப் போட்டாலும் அவை சுதந்திரம் வேண்டும் என்றே துள்ளும்” என்று அடிக்கடி பேசுபவர். அவரிடம் பெட்டிக்கடை வைக்க பண உதவி வேண்டி சென்றார்.

தன்னிடத்தில் தற்போது பணம் இல்லை. நம்ம தர்மலிங்கத்தேவர் அவர்களிடம் வாங்கி தருகிறேன் என்றார். “பேட்டை தானா” என்று அழைக்கப்படும் தர்மலிங்கத்தேவர் முத்துப்பேட்டையில் பெரும்புள்ளி, தீவிரமான சுயமரியாதைக்காரராகவும், காங்கிரசு கட்சிக்காரராகவும் வலம் வருபவர். நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள் எந்தெந்த இடத்தில் இருக்கின்றன என்பதே அவருக்குத் தெரியாது.

பேட்டை தானா ஒன்றில் மட்டும் தாராளமாக இருப்பார். தான் சார்ந்த அகமுடையார் சமூகத்தவர்களுக்கும், மற்ற சமூகத்தவர்களுக்கும் அந்த பகுதியில் ஏதாவது தகராறு வந்து விட்டால், தன் அகமுடையார் சமூகத்தை சார்ந்தவர் களுக்காக எல்லா உதவிகளையும் செய்வார். தவறு தன் சாதியை சார்ந்தவர் பக்கமாக இருந்தாலும் அதை பெரிது படுத்தமாட்டார். அகமுடையார் சமூக இளைஞர் பலருக்கு நிறைய உதவி இருக்கிறார்.

கட்டை நாராயணசாமி “பேட்டை தானா” தர்மலிங்கத்தேவரிடம், மாவீரன் சிவராமன் அவர்கள் பெட்டிக்கடை வைக்க கடனாக பணம் வாங்கி கொடுத்தார்.

மேலும் சிவராமன் “ஜனசக்தி” இதழையும் விற்பனை செய்தும், பல நூல்களை பயில்வதற்காகவும் ஒரு நூல் நிலையம் “ஜனசக்தி வாசகசாலை” என்ற பெயரில் உருவாக்கினார்.

முத்துப்பேட்டை கடைவீதிக்கு
திருப்பூர் குமரன் பெயர்

முத்துப்பேட்டை கடைவீதிக்கு ஒரு பெயர் இல்லை. கடைவீதி என்றும் பஜார் என்றும் அந்தப் பகுதி அழைக்கப்பட்டு வந்தது. அந்தப் பகுதியில் கடை வைத்திருப்பவர்கள் அகமுடையார்களும், இசுலாமியர்களும், அந்த வீதிக்கு மாவீரன் சிவராமன் ஒரு பெயர் வைக்க எண்ணினார். இதுபற்றி தோழர்கள், நண்பர்கள், வியாபாரிகள் ஆகியோர்களிடம் கலந்து என்ன பெயர் வைக்கலாம் என்ற கேள்விக்கு? சிலர் காரல் மார்க்ஸ் கடைவீதி அல்லது லெனின் கடைவீதி என்றும், சிலர் காந்திஜி கடைவீதி என்றும், ஊர் பெரியவர்களும், வியாபாரிகளும் “பேட்டை தானா” என்று அழைக்கப்படும் தர்மலிங்கத்தேவர் பெயரை வைக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

இறுதியில் எவரும் எதிர்பாராத வகையில் ஒரு பெயரை அனைவரும் ஏற்கவும் வைத்தார் சிவராமன்.
ஆம்! வளமில்லாத குடும்பத்தில் பிறந்து, போதுமான கல்வி கற்பதற்கும் வாய்ப்பின்றி, தேச விடுதலையை உயிர் மூச்சாகக் கொண்டு வீதியில் அடிபட்டு வீழ்ந்த போதும் பற்றிய கொடியை பற்றியபடி செத்து மடிந்த திருப்பூர் குமரன் பெயரை, முத்துப்பேட்டை கடைவீதிக்கு சூட்டினார். இன்றும் முத்துப்பேட்டை கடைவீதிக்கு “குமரன் பஜார்” என்றுதான் அழைக்கப்படுகிறது.

போராட்ட வாழ்க்கை

முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி பகுதிகளுக்கெல்லாம் சென்று இரவு பகலாக இயக்கப் பணியில் தீவிரமாக தீவிர கவனம் செலுத்தினார்.தோழர் சீனிவாச ராவ், மணலி கந்தசாமி, வாட்டாக்குடி இரணியன் போன்றவர்கள் தொடர்பும், அறிமுகமும் சிவராமனை முழுமையாக போராளியாக உருமாற்றியது.

தஞ்சை மண்டலத்தில் சேரி மக்கள் மீது பண்ணையார்கள் நடத்திய கொடுரம் சொல்லி மாளாது. ஒவ்வொரு பண்ணையாரும், ஒவ்வொரு விதத்தில் ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்கள் மீது அடக்குமுறையை ஏவினர். இதில் வடபாதி மங்கலம் தனிரகம். வடபாதிமங்கலம் பண்ணையார் செய்யும் கொடுமைகளை அறிந்ததும் அந்த கொடியவனை அவன் குகையிலேயே சந்திப்பதற்கு, மாவீரன் சிவராமன் வடபாதிமங்கலம் சென்றார். அங்கு உழைக்கும் சேரி மக்களை சந்தித்து பண்ணையார் கொடுமையிலிந்து விடுபடுவதற்கு விவசாய சங்கம் ஒன்றுதான் வழி, எனவே நீங்கள் அனைவரும் விவசாய சங்கத்தை இந்த ஊரில் உடனே ஆரம்பிக்க வேண்டும் என்று சேரி மக்களிடம் வலியுறுத்தினார்.

சிவராமனின் கோரிக்கையை ஏற்று வடபாதிமங்கலத்தில் கொடி ஏற்றும் நாள் முடிவு செய்யப்பட்டு, மாவீரன் சிவராமன் தலைமையில் நூற்றுக்கணக்கான தோழர்கள் வடபாதிமங்கலம் நோக்கி அணி வகுத்தனர். இதை அறிந்த காவல்துறை நூற்றுக்கணக்கில் அங்கு குவிந்தனர். இந்த ஊரில் ‘செங்கொடி ஏற்றக்கூடாது, அப்படி ஏற்றினால் ஊர் அமைதி கெடும்’ என்று சிவராமன் தலைமையில் சென்ற தோழர்களையும், உழைக்கும் மக்களையும் தடுத்தனர்.

தொடர்ந்து இங்கு நடக்கும் கொடுமைகளை எங்களால் சகித்துக்கொண்டு இருக்கமுடியாது, நாங்கள் கொடி ஏற்றுவதைத் தடுக்க உங்களுக்கு உரிமை கிடையாது என்று சிவராமன் ஆணிந்தரமாக பதில் சொன்னார். நீண்ட விவாதத்திற்கு பின் திரண்டு வந்த மக்களின் எழுச்சியைத் தடுக்க முடியாது என்ற காரணத்தால் வடபாதிமங்கலம் சேரிப் பகுதியில் செங்கொடி ஏற்ற காவல்துறை அனுமதித்தனர். இதைக் கண்டு பண்ணையாரும், அவருடைய அடியாட்களும் அஞ்சி நடுங்கினர்.

இல்லற வாழ்க்கை

மாவீரன் சிவராமன் ஊர் ஊராக அலைந்து கொண்டிருந்தது அவருடைய தாய்க்கு வேதனையைத் தந்தது. தன் மகனுக்கு திருமணம் செய்து பேரன், பேத்திகள் காண வேண்டுமென அவர் மனம் விரும்பியது. அதுபற்றி பலமுறை சிவராமனிடம் பேசிப் பார்த்தும் பயனில்லை. பொது வாழ்க்கைக்கு குடும்ப வாழ்க்கை தடையாக அமையலாம் என்று எண்ணி தட்டிக்கழித்து வந்தார். இறுதியில் தாயின் கண்ணீர் வென்றது. தன்னுடைய அக்காள் மகள் வைரக்கண்ணுவை திருமணம் செய்ய ஒத்துக்கொண்டார்.

இந்த வேளையில் குன்னியூர் பண்ணையாரின் கொடுமைகளை பற்றி மாவீரன் சிவராமனிடம் கூறுகிறார் தோழர் களப்பால் குப்பு. குன்னியூர் பண்ணையாருக்கு சொந்தமான ஆலந்தூர் பண்ணையில் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்துவது என சிவராமன் முடிவு செய்தார். அதன்படி ஆலந்தூருக்கு புறப்படும் போது, “தன் அன்னையிடமும், உறவினர்களிடமும் திருமண வேலைகளைச் செய்யுங்கள்…. என்னை எதிர் பார்க்காதீர்கள்….. தாலிகட்டும் நேரத்தில் உறுதியாக வந்து விடுகிறேன்” என்று கூறி செல்கிறார்.

அதே போன்று குன்னியூர் பண்ணைக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு, தன்னுடைய திருமண நாளன்றுதான் மாவீரன் சிவராமன் ஜாம்பவான் ஓடைக்கு வந்தார்.அக்காள் மகள் வைரக்கண்ணுவின் கழுத்தில் தாலிகட்டி தன்னுடைய தாயின் ஆசையை நிறைவேற்றினார். அப்பொழுது அவருக்கு வயது இருபது, திருமணத்திற்குப் பின்பு சிவராமனின் பொது வாழ்க்கைப் பணிகள் தீவிரமாயின.

தஞ்சை மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி பகுதிகளில் தோழர் பி.சீனிவாசராவ் கலந்து கொண்ட அனைத்துக் கூட்டங்களிலும் சிவராமன் கலந்துகொண்டு பேசுவது, போராட்டங்களில் முனைப்புடன் கலந்துகொள்வது எனக் காலம் கடந்தது.

இவ்வேளையில் மனைவி வைரக்கண்ணு கர்ப்பமானார். இந்த செய்தியும் சிவராமன் வெளியூரில் இருந்த போதுதான் அவருக்குக் கிடைத்தது. ஓடோடி வந்து மனைவியின் அருகில் இருந்து அவருக்குத் துணைபுரிய எண்ணினாலும் ஊர் ஊராக சென்று ஒடுக்கப்பட்ட மக்களைச் சந்தித்து விவசாய சங்கம் அமைக்கும் பணியே அவருக்கு உயிர் மூச்சாக இருந்தது.

மாவீரன் மனைவி வைரக்கண்ணு நிறைமாதக் கர்ப்பிணி….இன்னும் இரண்டொரு நாளில் குழந்தை பிறந்துவிடும் என்ற சூழலில் திருத்துறைப்பூண்டியில் இயக்கப் பணி ஒன்றை முடிக்க வேண்டியிருந்தது. அதனால் அதை முடித்துவிட்டு வந்து விடுவதாக உறுதி கூறிவிட்டு திருத்துறைப்பூண்டி சென்றார். பணிகளை முடித்துவிட்டு ஜாம்பவான் ஓடைக்கு திரும்பிக் கொண்டிருந்தார். எதிர்பட்ட தோழர் ஒருவர் சிவராமனைக் கண்டு தேம்பித்தேம்பி அழுதார்.

சிவராமனின் வாரீசு, வைரக்கண்ணு வயிற்றிலிருந்து வெளிவந்த சில மணி நேரத்திலேயே இறந்துவிட்டது… இந்த செய்தி சிவராமனை வீட்டிற்கு விரைந்து செல்லத் தூண்டியது.

திருமணத்திற்குத் தாலி கட்டுவதற்கு அதற்குரிய நேரத்தில் வந்தார். இப்பொழுது குழந்தையை மண்ணில் மூடியபின் வருகிறார்…. இது உறவினர்களை மாவீரன் சிவராமனின் மீது வருத்தம் கொள்ள செய்தது. என்ன செய்ய? ஆயிரக்கணக்கான ஒடுக்கப்பட்ட மக்களின் குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கைக்காக தன்னை அர்பணித்துக் கொண்ட சிவராமனால் தன் குழந்தையைப் பற்றி மட்டும் எப்படி எண்ணிப் பார்க்கமுடியும்?

மஞ்சக்கொல்லை பண்ணையார், பண்ணைத்தொழிலாளர்களை கொடுமைப்படுத்தி வந்தார். முடிவில் மஞ்சக்கொல்லை பண்ணையாருக்கு பாடம் புகட்டுவது என் முடிவு செய்யப்பட்டது. ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவரும் மாவீரன் சிவராமன் தலைமையில் பண்ணையாருக்கு எதிராக ஆவேசத்துடன் அணிவகுத்து வந்தனர். எப்படியோ செய்தியறிந்த பண்ணையார், காவல்மதுறையை உதவிக்கு அழைத்தார். பண்ணையார் வாயில் கதவுகளை அடைத்து வாசலில் காவலர்களை பாதுகாப்பிற்கு நின்றனர்.

கூட்டம் பண்ணையாரின் வீடு மீது கையில் கிடைத்தவற்றை கொண்டு எறிந்தனர். துப்பாக்கியுடன் நின்றிருந்த காவலர்கள் செய்தவறியாது திகைத்து நின்றனர். ஒரு கட்டத்தில் ஆவேசத்தின் உச்சிக்குச் சென்ற பொதுமக்கள் காவல்துறையினரை முற்றுகையிட்டு அவர்களின் துப்பாக்கிகளை பறித்துக்கொண்டனர். பொதுமக்களிடம் துப்பாக்கியைப் பறிகொடுத்த காவலர்கள், சிவராமனிடம் மன்றாடினர். இறுதியில் சிவராமனின் வேண்டுதலுக்கு இணங்கி தங்கள் கைப்பற்றிய துப்பாக்கிகளை காவல்துறையிடம் திருப்பிக் கொடுத்தனர்.

இதுபோன்ற எண்ணிலடங்கா வீரச்செயல்களை ஒவ்வொரு பகுதியிலும் சிவராமன் செய்து காட்டினார்.

மனைவியின் பிரிவு

காலங்கள் சென்றன. சிவராமனின் மனைவி வைரக்கண்ணு நிறைமாதக் கர்ப்பிணி, இருப்பினும் இயக்கப் பணிகளுக்காக சிவராமன் வெளியூர் செல்வது தொடர்ந்தது. ஒருநாள் திருத்துறைப்பூண்டியில் கட்சிக் கூட்டம் முடிந்து ஜாம்பவான் ஓடைக்கு திரும்பிக் கொண்டிருந்தார். வழியில் சிவராமனை கண்டவர்கள் எல்லாம் வாய்மூடி அழுதனர். ஏதோ விபரீதம் நடந்துவிட்டது என்பதை அறிந்து ஊருக்குள் வேகமாகச் சென்றார். வீதிகள் வெறிச்சோடிக் கிடந்தன. தன்னுடைய வீடு இருக்கும் வீதியில் நடந்தார்…. அவர் வீட்டின் முன் ஊர் மக்கள் திரண்டிருந்தனர். சிவராமனைக் கண்டதும் அழுகுரல் அதிகரித்தது. வாசலில் வந்து நின்ற சிவராமனை கட்டிக் கொண்டு அவருடைய தாயும், சகோதரிகளும் கதறினர். அந்தக் கதறல் ஊர் முழுவதும் எதிரொலித்தது.

எது நடக்கக் கூடாது அது நடந்துவிட்டது…. தன் மனைவிக்கு முதல் குழந்தை பிறந்து இறந்தபோது, சிவராமன் ஊரில் இல்லை. இருப்பினும் அவருடைய மனைவி வைரக்கண்ணு இருந்தார். ஆனால்! இன்று … மனைவி வைரக்கண்ணு வீட்டின் ஒரு பகுதியில் பிணமாக கிடந்தார். அவர் அருகில் பிறந்த குழந்தையும் பிணமாக….
ஆம் தாய் இறந்த பின் அவர் வயிற்றிலிருந்து உயிரற்ற சேய் எடுக்கப்பட்டிருக்கிறது. என்ன செய்ய? நாட்டை நினைப்பவர்களால் வீட்டை நினைக்க இயலாது. வீட்டை நினைப்பவர்களால் நாட்டை நினைக்க இயலாது.

தலைமறைவு வாழ்க்கை

1948 இல் கல்கத்தாவில் நடந்த பொதுவுடைமைக் கட்சி மாநாட்டில் காங்கிரசு கட்சி ஆட்சியை அகற்ற ஆயுதம் ஏந்தி போராடுவது என முடிவு செய்யப்பட்டது. இதை அறிந்த காங்கிரசு ஆளும் அரசு, பொதுவுடைமைக் கட்சியைத் தடை செய்ததுடன், பொதுவுடைமைக் கட்சி தலைவர்களையும், தோழர்களையும் கைது செய்யும் முயற்சியில் இறங்கியது.

தமிழகத்தில் முக்கிய தலைவர்களும், தோழர்களும் தலைமறைவு ஆகின்றனர்.
தஞ்சை மண்டலத்தில் மணலி கந்தசாமி, வாட்டாக்குடி இரணியன், சீனிவாச ராவு போன்ற முதன்மையான தலைவர்கள் தலைமறைவாயினர். காவல்துறையினர் தன்னை கைது பண்ணும் முயற்சியை அறிந்து தலைமறைவானார் சிவராமன்,

துரோகியால் காட்டிக் கொடுக்கப்படுதல்

ஆம்பலாப்பட்டிலிருந்து ஜாம்பவான் ஓடையை நோக்கி மாவீரன் சிவராமன் நடக்கிறார். நாட்டுச்சாலை என்ற ஊரில் நுழைந்ததும் ஒரு தேநீர் கடைக்குச் சென்று தேநீர் கேட்கிறார். அப்பொழுது மஞ்சு வேளான் என்பவன், மாவீரன் சிவராமனை விசாரிக்கிறார். அதற்கு ‘மாடு வாங்க வந்தேன்’ என்கிறார் சிவராமன்.

தேநீர் கடையிலிருந்து மாவீரன் சிவராமன் வெளியேறிய போது ஒரு தண்ணீர் குடத்துடன் ஒரு சிறுவன் தேநீர்க் கடைக்குள் நுழைகிறான். சிவராமனை கண்டதும் அந்த சிறுவனுக்கு மிகுந்த மகிழ்ச்சி, அவரிடம் ஏதோ கேட்க நினைக்கிறான் அவனால் முடியவில்லை அந்த சிறுவனை தெரிந்திருந்தும் அதைக்காட்டி கொள்ளாமல் அங்கிருந்து வெளியேறுவதிலேயே சிவராமன் குறியாக இருந்தார்.

நாட்டுச்சாலையை விட்டு வெளியேறியாக வேண்டும் என்ற எண்ணத்தில் வேகமாக நடக்கிறார். அவர் சென்றதும் மீண்டும் தண்ணீர் எடுக்க சென்ற சிறுவனை வழி மறித்து “வந்து சென்றது யார்?” என மஞ்சு வேளான் விசாரிக்கிறான்.

சைகையாலும் சாடையாலும் மாவீரன் சிவராமனைப் பற்றி அந்த சிறுவன் பெருமையாகவும், புகழ்ந்தும் சொல்லுகிறான். அவன் சொன்னதிலிருந்து காவல்துறை தேடும் சிவராமன்தான் தேநீர் கடைக்கு வந்து சென்றது என மஞ்சு வேளான் புரிந்து கொண்டு, அடுத்த கணமே காவல்துறைக்கு தகவல் தருகிறான்.

நாட்டுச்சாலையிலிருந்து ஜாம்பாவான் ஓடைக்குச் செல்லும் குறுக்கு வழியில் நடந்து கொண்டிருந்த சிவராமனை மடக்கிப் பிடித்த காவல்துறை, வாகனத்தில் ஏற்றுகின்றனர். இந்த செய்தி காட்டுத்தீ போல் பரவுகிறது.

நாட்டுச்சாலைக்கு வெளியே ஒரு சவுக்குத் தோப்புவிற்கு கொண்டுச் சென்ற காவல்துறை, அவரை கீழே இறக்கி விடுகின்றனர். இந்த காட்சியை சிவராமனை தொடர்ந்து வந்த மக்கள் திகைப்போடு நடப்பதை பார்த்துக் கொண்டிருக்க…..

அந்த இடத்திற்கு உயர் காவல்துறை அதிகாரிகள் வந்து சேர்கிறார்கள்.உயர் அதிகாரிகள், சிவராமனிடம் முக்கியமான பொதுவுடைமைத் தலைவர்களான வாட்டாக்குடி இரணியன், மணலி கந்தசாமி, சீனிவாச ராவு உள்ளிட்டோர்கள் மறைந்திருக்கும் இடத்தை சொல், என்று சிவராமனிடம் கேட்கிறார்கள்.

உண்மையிலேயே தெரியாது… தெரிந்தாலும் சொல்ல முடியாது என்கிறார் ஆணித்தரமாக,

அப்போது நீ போகலாம்! என்று சொல்லுகிறார் காவல்துறை அதிகாரி,

“ஏ! காவல்துறை அதிகாரியே! உன்னுடைய நரித்தனமும், நாடகமும் எனக்குத் தெரியும்…. என்னை போகச் சொல்லிவிட்டு என் முதுகில் சுட்டு கொன்றுவிட்டு தப்பி ஓட முயன்றான். அதனால் சுட்டோம் என்று செய்தி பரப்ப நீ நினைப்பது எனக்குத் தெரியும். ”

மரணத்திற்குப் பயந்தவன் மாந்தர் குலத்திற்கு சேவை செய்ய இயலாது….. நான் கோழையல்ல…. மாவீரன் என்பதை வருகின்ற தலைமுறையினர் தெரிந்து கொள்ள வேண்டும்….. உனக்கு என் உயிர் தானே வேண்டும். நெஞ்சிலே சுடு” என்று சொல்லிய மாவீரன் சிவராமன், நெஞ்சை நிமிர்த்திக் காட்டி,

“என்னை சுடுவதால் போராட்டம் நின்றுவிட போவதில்லை. பாட்டாளி மக்கள் தலைநிமிர்கிற வரைக்கும் போராட ஆயிரம், ஆயிரம் சிவராமன்கள் இந்த மண்ணில் தோன்றுவார்கள்”

‘பொதுவுடைமைக் கட்சி வாழ்க!
செங்கொடி வாழ்க!!’

தொழிலாளர் ஒற்றுமை ஓங்குக! என்று முழங்கியபடியே காவல்துறையினரின் மூன்று துப்பாக்கி குண்டுகளை தாங்கி மாவீரன் சிவராமன் தமிழ்த்தாயின் மடியில் சரிந்தார். 1950 மே – 3 ஆம் தேதி அன்று மாவீரன் சிவராமன் உயிரை பறித்து அன்றைய ஆளும் காங்கிரசு கட்சியும், முதலாளி வர்க்கமும் மகிழ்ந்தன.

மாவீரன் சிவராமன் உடலை பிரேத பரிசோதனைக்கு எடுத்துச் சென்று, மே -5 ஆம் தேதி சுட்டுக்கொல்லப்பட்ட மாவீரன் வாட்டாக்குடி இரணியன், ஆம்பலாப்பட்டு ஆறுமுகம் ஆகிய போராளிகள் இருவருடைய உடல்களுடன் பட்டுக்கோட்டை தொடர்வண்டி நிலையம் அருகில் உள்ள சுடுகாட்டில், ஒரே இடத்தில் மூன்று மாவீரர்களின் வித்துடல்களும் எரியூட்டப்பட்டன.

மாவீரன் ஜாம்பவான் ஓடை சிவராமன் மறைந்து 70 ஆண்டுகள் கடந்து விட்டன. அம்மாவீரனின் ஈகையை, “அகமுடையார் அரண்” வணங்கி தனது வீரவணக்கத்தை காணிக்கையாக்குகிறது.

வாழ்க மாவீரன் சிவராமனின் புகழ்!
வளர்க அவர்தம் புகழ்!!

சான்றாத நூல்கள்,

1) சாம்பவான் ஓடை சிவராமன்,
ஆசிரியர் : ச.சுபாஷ் சந்திரபோஸ்,
வெளியீடு : பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை,
பதிப்பு ஆண்டு : டிசம்பர் 2010.

2) தோழனைக் காப்பாற்றத் துடித்த தோழன்,
ஆசிரியர் : வை.அறிவொளி,
வஎளியீடு : முரசு பதிப்பகம், தஞ்சை,
பதிப்பு ஆண்டு : டிசம்பர் 2006.
————————————————————-
கட்டுரை ஆக்கம்,

சோ.பாலமுருகன் அகமுடையார்,
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
அகமுடையார் அரண்,
புலனம் (WhatsApp) எண் : 94429 38890.



இப்பதிவு அகமுடையார் அரண் பாலமுருகன் அகமுடையார்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

பாலமுருகன் அகமுடையர் பக்கம் லிங்க்

திரு. பாலமுருகன் அகமுடையார் ப்ரோபல் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

1 Comment

Leave a reply

Agamudayar Otrumai
Logo
× How can I help you?