வரலாற்றில் அகமுடையார்,”பச்சையப்ப முதலியார்”———————————-…

Spread the love

First
வரலாற்றில் அகமுடையார்,

“பச்சையப்ப முதலியார்”
——————————————–
Approved by the Madras Text – Book Committee,
…..Vide Ft. St. G.G. Part 1-B., 11th May, 1926.

(ஆங்கிலேய அரசின் பாட திட்டக் கமிட்டியரால் அங்கீகரிக்கப்பட்டு,
பாட புத்தகத்தில் இடம்பெற்றது இந்த கட்டுரை).

“தம்மை மாறியும் புரிவது தருமம் இந்நாடு”
என்று பரஞ்சோதி முனிவர் சொல்லியபடி
“தன்னை விற்றாயினும் தருமம் செய்யும் பெருமையுடையது நம் தமிழ் நாடு.” இதற்கு உதாரணம், நீங்கள் அரிச்சந்திரன் கதையில் படித்திருப்பீர்கள்.

இத்தகைய தமிழ் நாட்டில், சென்னைக்கும் காஞ்சீபுரத்திற்கும் மத்தியிலுள்ள,
பெரியபாளையம் என்னும் ஓர் கிராமத்தில், அகமுடையார் குலத்தில், விசுவனாத முதலியார் என்று ஒருவர் இருந்தார். அவருக்குப் பூச்சியம்மாள் என்ற புண்ணிய வதி மனைவியாய் வாய்ந்திருந்தாள். இத் தம்பதிகளுக்குச் சுப்பம்மாள், அச்சம்மாள் என இரண்டு பெண்கள் உண்டு.

சின்னாட் கழித்துப் பூச்சியம்மாள் கருப்பங் கொண்டாள். அவள் கருவுற்ற சில மாதத்திற்குள் விசுவனாத முதலியார் இறந்தபடியால், பூச்சியம்மாள் தமது குமாரத்திகளுடன் பெரிய பாளையத்தை அடைந்தாள்.

அவ்வூரில் ரெட்டி ராயர் என்று, ஆர்க்காட்டுச் சுபேதாருடைய காரியஸ்தர் ஒருவர் இருந்தார். அவர் தங்கள் குடும்பத்தாருக்கு மிக்கப் பழக்க முடையவராதலால், அந்த அம்மாள் தன் குழந்தைகளுடன் அவர் ஆதரவில் இருந்து வந்தாள். உரிய காலத்தில் 1754-ம் வருஷத்தில் பூச்சியம்மாள், பச்சையப்பன் என்ற ஓர் சற்புத்திரனைப் பெற்றாள்.
ரெட்டி ராயரும் பாலனை ஐந்தாம் வயதில் படிக்க வைத்தார். பச்சையப்பன் கற்கத் தொடங்கிய சில காலத்திற்குள் ரெட்டி ராயர் பரகதியடைந்தார்.

அது கண்ட அவ்வூரார் “சென்னைக்குப் போனால் நன்மை பெறலாம்” என்று அந்த அம்மணியிடம் சொல்லவே, பூச்சியம்மாள் தன் குழந்தைகளுடன் சென்னைக்குச் சென்றாள். அங்கு, போனி நாராயண பிள்ளை என்னும் ஓர் புண்ணியவானை அண்டி, தன்னிடத்துள்ள சொற்ப
ஆஸ்தியை அவரிடம் கொடுத்தாள். அப்பொருளை விருத்தி செய்து, தன்னையும் தன் குழந்தைகளையும் பாதுகாக்க வேண்டினாள். அண்டினவரை ஆதரிக்கும் அக்கனவான், பூச்சியம்மாளைத் தன் சகோதரி போல் பாவித்து, பச்சையப்பனைப் படிக்க வைத்தார். பெண்கள் இருவரையும் தக்க இடத்தில் விவாகம் செய்து கொடுத்தார் .

பச்சையப்ப முதலியார் சிறிது கற்றளவில் தொழில் செய்யத் தொடங்கினார்.
இவர் ஆரம்பத்தில் ஆங்கிலேய வர்த்தகருக்கு, நம்மவரிடமிருந்து சரக்கு வாங்கிக் கொடுக்கும் தரகுத் தொழிலைக் கைக் கொண்டார். அதனால் கிடைக்கும் வரும்படியில், பெரும் பகுதியைத் தான தருமத்தில் செலவிட்டு, மீதியைத் தாயாரிடம் கொடுப்பார்.

பின்பு முதலியார், ஓர் ஐரோப்பிய சேனைத் தலைவரிடம் உத்தியோகத்தில் அமர்ந்தார். சில காலத்தில் அதினின்றும் விலகித் தென்னாட்டில் துரைத்தன அதிகாரியா யிருந்த நிக்கிலீஸ் துரையிடம் துபாஷியாக வேலை பார்த்தார். முதலியார் அவ்வுத்தியோகத்தில் ஏராளமாகச் சம்பாதித்து, நல்ல வழியிற் செலவானது போக, மீதியைத் தமது போஷகர் நாராயண பிள்ளையிடம் கொடுத்தார். தக்க வயது வந்தவுடன் பச்சையப்ப முதலியாருக்கும் அவர் தமக்கை சுப்பம்மாள் புத்திரி ஐயாளம்மாளுக்கும் விவாகம் செய்து வைக்கப்பட்டது. விவாகமான பின்பு முதலியார் சில தனவான்களைத் துணை கொண்டு பூந்தமல்லி, திருப்பாசூர் முதலிய கிராமங்களின் சர்க்கார் மேல்வார
நெல்லைக் குத்தகைக்கு எடுத்து, அதில் அதிக லாபமடைந்தார். பின்பு ஸலவன் என்னும் ஐரோப்பியரிடம் தலைமைத் துபாஷியானார்.

1783-ம் வருஷம் இங்கிலீஷ் துரைத்தனத் தார் ஸலவன் துரை மூலமாய் திப்பு சுல்தான் மீது படையெடுத்தார்கள். அப்பொழுது முதலியாரே அத்துரைக்கு வேண்டிய அனுகூலங்களைச் செய்து அதனால் துரைத்தன மதிப்பும், பொருள் வரும்படியும் பெற்றனர். அது முதல், பல சிற்றரசர்களுக்கு முதலியார் மிகவும் வேண்டியவரானார். அவர்களுக்குத் தேவையான பொருளைக் கடன் கொடுத்து உதவினார்.

அக்காலத்தில், தஞ்சை மன்னர்களால் வரிப் பணமாக இங்கிலீஷ் காரருக்குச் செலுத்தப்பட்ட உண்டியல்கள், மிகவும் தொல்லை தருவதாயிருந்தன. முதலியார், அவைகளைத் தாம் பெற்றுக் கொண்டு, இங்கிலீஷ் காரருக்கு மொத்தமாகப் பணத்தைச் செலுத்தி வந்தார். அதனால் ஏராளமான லாபம் கிடைத்தது.

இப்பொழுது, முதலியார் மூத்த மனைவியிடம் குழந்தை உண்டாக வில்லை என்னும் குறையை நீக்க, வேதாரணியத்திலிருந்து பழனியம்மாள் என்னும் ஓர் பெண்ணை மணந்து கொண்டார். இந்தக் கல்யாணத்திலிருந்து அவருக்கு அதிக மனத்தாங்கல்
உண்டாயிருக்கக் கூடுமென்று எண்ண இடமிருக்கிறது. பழனியம்மாளுக்கும் ஒரே பெண் குழந்தைதான் பிறந்தது.

பிறகு முதலியார் தஞ்சையிலும் சென்னையிலுமாக மாறி மாறி வசித்து வந்தார். தேவார, திருவாசக பாராயணத்திலும், பெரிய புராணம் முதலிய சைவ புராண காலக்ஷேபத்திலும் தன் காலத்தைக் கழித்து வந்தார். சிவ தரிசனத்திலும் சிவனடியார் தொண்டிலும் ஈடுபட்டார். சிவாலயத் திருப்பணிகள் பல செய்யலானார்.

1792-ம் வருஷம் முதலியாருக்கு வியாதி யுண்டாயிற்று. அவர் வைத்தியஞ் செய்து கொள்ளக் கும்பகோணத்திற்குச் சென்றார். வியாதி குணமடையவில்லை. இனி, தேகம் நிற்காது எனக் கருதி, முதலியார் :-

நிலத்துக்கணி யென்ப நெல்லுங் கரும்பும் குளத்துக்கணி யென்ப தாமரை பெண்மை நலத்துக்கணி யென்ப நாணம், தக்கணி தான்செல் லுலகத் தறம்.

என்ற நீதி மொழியைச் சிந்தித்து, தன்னுடன் வருவது தருமம் ஒன்றே என்று எண்ணித் தமது மரண சாஸனத்தை எழுதி வைத்தார்.

பின்பு, இவர் திருவையாறு என்னும்
க்ஷேத்திரத்தை அடைந்து 1794 – ம் வருஷம், மார்ச்சு மாதம் 31-ந் தேதி காலஞ் சென்றார்.

இவ்வள்ளலது மரண சாஸனப்படியே,
காசி முதல் கன்னியா குமரி வரையிலுள்ள அனேகம் சிவாலயங்களுக்கு நித்திய கட்டளைகள் ஏற்படுத்தப்பட்டன. அக்கிரகாரங்கள் அமைத்து, அன்ன சத்திரங்கள் கட்டப்பட்டன. திருக்குளங்கள் வெட்டப்பட்டன. சென்னை, காஞ்சீபுரம், சிதம்பரம் முதலிய நகரங்களில் இவர் பெயரால் கலாசாலைகள் ஸ்தாபித்து இன்றும் குறைவின்றி தடந்து வருகின்றன.

“பிள்ளைகளே! நீங்களும் கல்வியில்
முன்னேற்ற மடைந்து, பொருள் சம்பாதித்து, அதைத் தரும வழியில் செலவிட்டு, இத்தகைய புகழடைய முயலுவீர்களாக.”

“ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு”

என்ற வள்ளுவனார் வாக்குப்படி, பச்சையப்ப முதலியார் செல்வம் உலகில் பயன் படுவதாயிற்று.

சான்றாதார நூல்,

உத்தமர்கள் சரிதம், மலர் – 5
Second Edition, 1926.
Published By,
C.S.DIKSHITAR & Co.,
Book – Sellers & Swadesamitran Agents,
Kumbakonam.
பக்கம் : 21 முதல் 27 வரை.
————————————————-
அகமுடையார் வரலாற்று மீட்பு பணியில்,

சோ.பாலமுருகன் அகமுடையார்,
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
அகமுடையார் அரண்,
புலனம் (WhatsApp) எண் : 94429 38890.




இப்பதிவு அகமுடையார் அரண் பாலமுருகன் அகமுடையார்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

பாலமுருகன் அகமுடையர் பக்கம் லிங்க்

 

திரு. பாலமுருகன் அகமுடையார் ப்ரோபல் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

We will be happy to hear your thoughts

Leave a reply

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo