கல்வெட்டில் அகமுடையார் – 3 சோழர்களின் கர்நாடக படைத்தலைவன் “அகம்படியாரில்” நந்தி…

Spread the love
5
(1)

First
கல்வெட்டில் அகமுடையார் – 3

சோழர்களின் கர்நாடக படைத்தலைவன் “அகம்படியாரில்” நந்தி பெரியுடையான் தந்திரபாலனின் 6 கல்வெட்டுக்கள்.

தமிழகம் முழுவதும் பரவியுள்ள ஒரு சில தொன்மையான சமூகங்களில் அகமுடையார் சமூகம் முதலிடம் பெறுகிறது. கடந்த 1000 வருடங்களுக்கு முன் சேர, சோழ, பாண்டியப் பேரரசுகள் எழுச்சி பெறும்போது அதற்கு முதற்காரணமாக விளங்கிய போர்ப்படைகளில் பெரும்பங்காற்றியது அகமுடையார் சமுதாயம்.

நாயன்மார்கள், ஆழ்வார்கள் முயற்சிகளின் காரணமாக பக்தி இயக்கம் பெருகிக் கோயில்கள் உருவாகி வளர்ந்த போது அதைக் கட்டிக் காத்தது அகமுடையார் சமுதாயம்.

அகமுடையார் கல்வெட்டுகளை தேடி பயணித்த போது கிடைத்த கல்வெட்டுகளில் அகமுடையார் சமுதாயம் பற்றிய கல்வெட்டுகள் தனித் தொகுப்பாக தொகுத்து வருகின்றோம். தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும், புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலிருந்தும், அண்டை நாடான இலங்கையில் இருந்தும் கிடைத்த 200 மேற்பட்ட அகம்படியர் கல்வெட்டுகள் இதுவரை தொகுக்கப்பட்டுள்ளது. இன்னும் கள ஆய்வு செய்தால் பல கல்வெட்டுகள் கிடைக்க வாய்ப்புள்ளது. அந்த வகையில்,

கர்நாடகா மாநிலம், கோலார் (குவளாலபுரம்) சோழர் பேரரசின் ஆளுகைக்கு உட்பட்ட நுளம்பர் சிற்றரசின் கீழ் இருந்தது. மேலை சாளுக்கிய அரசுகளின் ஆளுமையை அடக்க கோலார் பகுதியில் சோழர் படைகள் பாடி வீடு அமைத்து நிலை பெற்றிருந்தது. இப்பகுதி நிகரிலி சோழ மண்டலம் என்று அழைக்கப்பட்டது.

மேலைச் சாளுக்கியர்களை வெல்வதற்காக சோழர்களால் அனுப்பப்பட்ட படைகளுக்கு தலைமை ஏற்று வழி நடத்தியது அகமுடையார்கள் என்பதற்கான ஆதாரமே இக் கல்வெட்டுக்கள்.

அகம்படியாரில் சூற்றியாழ்வான் மகன் பெரியுடையானான தந்திர பாலன் என்பவர் குறித்த 4 கல்வெட்டுக்களை நமது அகமுடையார் ஒற்றுமை முகநூல் பக்கத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு பதிவிட்டுருந்தோம்.

ஆனால் இது போன்ற பல்வேறு நூல்களை மின் நூலாக தரவிறக்கி தரவிறக்கி கணிப்பொறியில் தினமும் பார்த்து ஆராய்வது சோர்வளிக்கும் பணி என்பதால் அந்த நூலில் உள்ள சில கல்வெட்டுக்களை சரியாக கவனியாது விட்டுவிடுவோம்.

நல்லவேளையாக, அகமுடையார் அரண் தலைமை ஒருங்கிணைப்பாளர், சோ.பாலமுருகன் அகமுடையார் அவர்கள் இந்த நூலில் இருந்த விடுபட்ட பெரியுடையான் தந்திரபாலன் குறித்த மேலும் 2 கல்வெட்டுக்களை கண்டறிந்து ஆராய்வதற்கு நம் பார்வைக்கு அனுப்பி வைத்தார். அவருக்கு நமது நன்றிகள்.

ஏற்கனவே, மேலே குறிப்பிட்ட 4 கல்வெட்டுக்களை பார்த்திருந்தாலும், இக்கல்வெட்டு வெளியிட்டு பல ஆண்டுகள் நடந்துவிட்டதால் புதிய செய்திகளோடு இக்கல்வெட்டுக்களை மீண்டும் பார்ப்பதோடு இரு புதிய கல்வெட்டுக்களையும் சேர்த்து 6 கல்வெட்டு களையும் ஒவ்வொன்றாக பார்ப்போம்.

கல்வெட்டு – 1
————————-
கர்நாடகா மாநிலம், கோலார் மாவட்டம், பங்காருபேட்டை தாலுகா, மடிவலா கியசம்பள்ளி (MADIVALA KYASAMBALLY) ஊரில் அமைந்துள்ள ஶ்ரீபார்வதி சமேத
ஶ்ரீ சுயம்புவனேஸ்வரர் கோவிலில் பார்வதி சன்னதியின் வாயிற்கதவிற்கு இடதுபுறத்தில் உள்ள சுவற்றில் உள்ள சோழர் காலத்து கல்வெட்டு செய்தியின் மூலம் கீழ்கண்ட செய்தி காணக் கிடைக்கின்றது.

கரையாண்டு 1154வது (கி.பி.1232ம் ஆண்டு) காலத்தில் ஜெயங்கொண்ட சோழ இளவஞ்சியராயரான மாராழ்வான் மகன் கூத்தாடுந்தேவர் என்பவரிடம் பணியாற்றிய அகம்படியர் இனத்தை சேர்ந்த சூற்றியாழ்வான் என்பவனின் மகனாகிய பெரியுடையானான தந்திரபாலன் என்பவன் பிராமணரில் தேவ பட்டன் மகன் உட்பட மூவரிடம் ஒன்பது பொன் கொடுத்து அதில் கிடைக்கும் வட்டியின் மூலம் கோவிலில் திருநந்தா விளக்கு சந்திராதித்தவரை (சந்திர, சூரியர் உள்ளவரை) எரிக்க தானம் அளித்துள்ளான்.

1) ஆதாரம்: Epigraphia Carnatica,
Vol – 10, Bowringpet Taluq,
கல்வெட்டு எண் : 35a

இக்கல்வட்டு செய்தியில் “அகம்படியாரில் சூற்றியாழ்வான் மகன் பெரியுடையானான தந்திரபாலன்” என்பது பதிவாகியுள்ளது.

இதன் மூலம் பெரியுடையான் என்பவன் அகம்படியர் (இன்றைய அகமுடையார்) இனத்தை சேர்ந்த சூற்றியாழ்வான் என்பவனின் மகன் என்பதோடு இவன் தந்திரபாலன் என்பதை குறிப்பிடுவதை நாம் காணமுடியும்.

தந்திரர் அல்லது தந்திரபாலர் என்பது அக்காலத்தில் சேனைத் தலைவர் அல்லது படைத்தலைவர்களை குறிப்பதாகும். தென்னிந்திய கோயிற் சாசனங்கள், பாகம் : 3 – பகுதி – 2 இல் தி.ந.சுப்பிரமணியப்பிள்ளை எழுதிய சாசனசசொல் அகராதியில்… பக்கம் – 1439 பக்கத்தில் கீழ்கண்ட விளக்கத்தை பதிவிட்டுள்ளார்.

1) தந்திரபாலன் – சேனைத் தலைவன்,
2) தந்திரம் – படை (காலாட்கள் கொண்டது).
3) தந்திரி – படைத் தலைவன்,
4) தந்திரிமார் – போர் படையைச் சேர்ந்தவர்; படைக்கானவர் எனவும் பெறுவர்,

தென்காசி மாவட்டம், தென்காசி வட்டம், குத்துக்கல் வலசை, மஜரா அழகப்பபுரம் கிராமத்தில் “தந்திரியார்” என்ற பட்டத்துடன் அகமுடையார் சமூகத்தவர்கள் இன்றும் வாழ்ந்து வருகின்றனர்.

ஆகவே இக்கல்வெட்டு குறிப்பிடும் பெரியுடையான் தந்திரபாலன் என்பவன் படைத்தலைவன் அல்லது தளபதியாக இருந்திருக்க வேண்டும். மேலும் இக்கல்வெட்டின் மேல் வரிகளில் “ஜெயங்கொண்ட சோழ இளவஞ்சி யராயரான கூத்தாடும் தேவர்” என்பவரிடம் பணியாற்றியவர் என்பதாலும், நுளம்பர் ஆட்சிக்குட்பட்டிருந்த இப்பகுதிகளில் சோழர் கல்வெட்டுக்கள் மிகுதியாக கிடைப்பது கொண்டும், இதே கோவில் சோழர்களால் புனரமைக்கபட்டிருப்பது கொண்டும் அகம்படியர் இனத்தை சேர்ந்த பெரியுடையான் தந்திரிபாலன் என்பவர் சோழர்களின் படையிலேயே படைத்தலைவராக இருந்தவர் என்பதை உறுதியாக சொல்லமுடியும்.

மேலும் இதே பகுதிகளில் பெரியுடையான் தந்திரபாலன் வழங்கிய 6க்கும் மேற்பட்ட தானம் குறித்த கல்வெட்டுக்கள் கிடைக்கின்றது. ஒரு தனிமனிதர் வழங்கிய 6க்கும் மேற்பட்ட தானம் வழங்கிய கல்வெட்டுக்களை எண்ணிப் பார்த்தோமானால் இந்த பெரியுடையான் தந்திரிபாலன் என்பவர் சிறந்த ஆளுமையுடையவராக இருந்திருக்க வேண்டும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

கல்வெட்டு – 2
————————-
கோலார் மாவட்டம், பங்காருபேட்டை தாலுகா, மடிவலா கியசம்பள்ளி (MADIVALA KYASAMBALLY ) ஊரில் அமைந்துள்ள
ஶ்ரீ பார்வதி சமேத ஶ்ரீ சுயம்புவனேஸ்வரர் கோவிலில் பார்வதி சன்னதியின் வாயிற்கதவிற்கு வலதுபுறத்தில் உள்ள சுவற்றில் சகரையாண்டு 1159 (கி.பி.1237) காலத்திய கல்வெட்டு செய்தி பதிவாகியுள்ளது.

முன்னர் கல்வெட்டில் பார்த்த பெரியுடையானான தந்திர பாலன் மற்றும் இவன் சகோதரனும் இணைந்து தானத்தை வழங்கியுள்ளனர்.

அதாவது அகம்படியாரில் சூற்றியாழ்வான் மகன்களான நீரணிஞ்சானும், நந்தி பெரியுடையானான தந்திரபாலன் இருவரும் இணைந்து தானத்தை வழங்கியுள்ளனர். ஆனால் துரதிஷ்டவசமாக கல்வெட்டு வரிகள் சிதைந்துள்ளதால் என்ன தானம் கொடுத்தார்கள் எது நடைபெறுவதற்காக தானம் அளித்தார்கள் என்று தெளிவாக அறிய முடியவில்லை.

2) ஆதாரம்: Epigraphia Carnatica,
Vol – 10, Bowringpet Taluq,
கல்வெட்டு எண் : 35b

இந்த இரு சகோதர்களின் பெயரை அதாவது நந்தி பெரியுடையான், திருநீரணிஞ்சான் என்ற பெயர்களை நோக்கும்போது இருவரும் சிறந்த சிவபக்தர்கள் அல்லது இவர்களின் தந்தை சூற்றியாழ்வான் சிறந்த சிவபக்தன் என்பதையும் சைவ சமயத்தவன் என்பதையும் அறிந்துகொள்ள முடிகின்றது.

இவர்கள் பெயர்களில் உள்ள நந்தி என்பது சிவகணங்களில் ஒன்றாகும் என்பதோடு பெரியுடையான் என்பது தஞ்சையில் உள்ள இறைவனை குறிப்பிடும் பெருவுடையார் என்பதோடு ஒப்பு நோக்கலாம். அதே போல் திருநீரணிஞ்சான் என்பது சைவர்கள் சூடும் திருநீரின் சிறப்பை குறிப்பதாகும்.

மேலும் படைத்தலைவனாக விளங்கிய தந்திரபாலனை இக்கல்வெட்டு மூலமாகவே இவனின் முதற் பெயரை அறியமுடிகின்றது. அதாவது தந்திரபாலன் குறித்து கிடைத்த 6 கல்வெட்டுக்களில் இக்கல்வெட்டில் மட்டுமே தந்திரபாலனின் முதற் பெயராகிய நந்தி என்பதை நாம் அறிந்து கொள்ளமுடிகின்றது. இதன் மூலம் தந்திரபாலன் என்பவனின் இயற்பெயர் “நந்தி பெரியுடையான்” என்பதை அறிந்துக்கொள்கின்றோம்.

கல்வெட்டு – 3
————————-
மேற்குறிப்பிட்ட கோவிலில் கிடைத்த சகரையாண்டு 1149 ( கி.பி 1228) கல்வெட்டு செய்தியில் கீழ்கண்ட கல்வெட்டு செய்தி காணப்படுகின்றது.

இக்கல்வெட்டு செய்தியில் பெரியுடையான் தந்திரிபாலனை குறிப்பிடும் ஒரு வரி சிதைந்துள்ளது .

அதாவது “ஜெயங்கொண்ட சோழ இளவஞ்சியராயரான கூத்தாடுந்தேவன் இவர்………ல் பெரியுடையானான தந்திரபாலனேன்” என்று இன்று காணக்கிடைக்கின்றது.

அதாவது கல்வெட்டில் “அகம்படியாரில் ” என்கிற வார்த்தை சிதைந்துள்ளது. ஆனால் இதே பகுதியில் இதே பெயருடன் பதிவாகியுள்ள 4க்கும் மேற்பட்ட கல்வெட்டுக்களில் “ஜெயங்கொண்ட சோழ இளவஞ்சியராயரான கூத்தாடுந்தேவன் பெரியுடையானான தந்திரபாலன் ” என்று பதிவாகியுள்ளது என்பதால் சிதைந்துள்ள “…ல்” என்பது “அகம்படியாரில்” என்பதை உறுதியாக சொல்லமுடியும்.

சரி இப்போது கல்வெட்டு செய்தியினை காண்போம்.

சகரையாண்டு 1154வது (கி.பி 1232ம் ஆண்டு) காலத்தில் ஜெயங்கொண்ட சோழ இளவஞ்சியராயரான கூத்தாடுந்தேவர் என்பவரிடம் பணியாற்றிய அகம்படியார் இனத்தை சேர்ந்த பெரியுடையானான தந்திரபாலன் இக்கோவிலில் உள்ள இறைவனுக்கு சிறுகாலை (அதிகாலை) சந்தி பூசை அமுதுபடைத்திட கோவில் பிராமணருக்கு ஆறு பொன் அளித்து அதன் மூலம் கிடைக்கும் வட்டி கொண்டு நிதம் (தினமும்) நாழி அரிசி படைத்திட ஏற்பாடு செய்துள்ளார்.

3) ஆதாரம்: Epigraphia Carnatica,
Vol – 10, Bowringpet Taluq,
கல்வெட்டு எண் : 37a

கல்வெட்டு – 4
————————-
கோலார் மாவட்டம்,
முல்பாகல் தாலுகாவில் அமைந்துள்ளது அவணி எனும் சிற்றூர். இவ்வூரில் இராமலிங்கேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது .

ஆவணி இராமலிங்கேஸ்வரர் கோவில்
இக்கோவில்களில் இராமர் மற்றும் அவர் சகோதர்களான லெட்சுமணன்,பரத, சத்ருகணன் என்பவர்கள் வணங்கிய லிங்கங்கள் என்ற பெயரில் இராமலிங்கேஸ்வரர் சன்னதி, லெச்மண லிங்கேஸ்வர், பரத லிங்கேஸ்வரர், சத்ருகண லிங்கேஸ்வரர் என்று நான்கு சன்னதிகள் அமைந்துள்ளன.

நாம் இன்று பார்க்கப்போகும் கல்வெட்டு மேற்குறிப்பிட்ட கோவிலின்
சத்ருகண சன்னதியின் அடித்தளத்தில் கண்டறியப்பட்ட சோழர் காலத்திய கல்வெட்டு செய்தியாகும்.

சகரையாண்டு 1148 (கி.பி 1226) காலத்திய கல்வெட்டு செய்தியின் மூலம் அகம்படியரில் பெரியுடையான் தந்திரபாலன் , மூன்றுக்கும் மேற்பட்ட பிராமணர்களிடம் கோவில் இறைவனின் திருப்பள்ளி எழுச்சி பூசை நடைபெற ஐஞ்சரை பொன் அளித்து அதன் வட்டி கொண்டு தினமும் நாழி அரிசி சமைத்து கோவில் இறைவனின் திருப்பள்ளி எழுச்சி பூசை நடைபெற ஏற்பாடு செய்துள்ளான்.

4) ஆதாரம்: Epigraphia Carnatica,
Vol – 10, mulbagal Taluq,
கல்வெட்டு எண் : 53

கல்வெட்டு – 5
————————-
அதே இராமலிங்கேஸ்வரர் கோவிலில் அடித்தளத்தில் கிடைத்த கல்வெட்டு.

இக்கல்வெட்டை படியெடுத்தோர் மிகப்பெரிய தவறை செய்துள்ளனர்.

ஏற்கனவெ சொன்னபடி இதே பகுதியில் பெரியுடையான் தந்திரபாலனின் 4க்கும் மேற்பட்ட கல்வெட்டுக்கள் தெளிவாக ” சோழ இளவஞ்சியராயரான கூத்தாடுந்தேவர் அகம்படியாரில் தந்திரபாலன் பெரியுடையானேன்” என்று தெளிவாக பதிவு செய்திருக்க இக்குறிப்பிட்ட கல்வெட்டை பதிவு செய்தவர் தவறாக ” கூத்தாடுந்தேவர் அகம்படியாரில்” என்பதற்கு பதிலாக ” கூத்தாடுந்தேவரடியான்” என்பதாக பதிவு செய்துவிட்டனர்.

ஒருவேளை கல்வெட்டு சிதைந்துள்ளதால் படியெடுத்தவர் இப்பெயரை தவறாக படித்திருக்கலாம் அல்லது தொடர்ந்து படியெடுத்த அயர்ச்சியில் தவறாக படித்திருக்கலாம்.
எதுஎப்படியாகிலும் 4ற்கும் மேற்பட்ட கல்வெட்டுக்கள் தெளிவாக இவனை குறிப்பிடுவதால் அவற்றில் “கூத்தாடுந்தேவர் அகம்படியாரில்” என்று தெளிவாக இருப்பதால் இக்கல்வெட்டு படியெடுத்தவரே தவறாக படித்திருக்கலாம் என்பது உறுதி .மேலும் பெரியுடையான் என்பவர் தந்திரபாலர் எனும் படைத்தலைவர் பதவியை வகித்தவர் 6க்கும் மேற்பட்ட தானங்களை வழங்கிய கல்வெட்டுக்களில் குறிப்பிடப்படும் மிகப்பெரிய ஆளுமை என்பதால் இதை மிகவும் உறுதியாகவும் ,அறுதியிட்டும் குறிப்பிட முடியும்.

சரி இப்போது இதனை கடந்து கல்வெட்டு சொல்லும் செய்தியினை காண்போம்.

சகரையாண்டு 1148 (கி.பி 1126) திரு வீராமீசுரமுடையார் இறைவனுக்கு நாழி அரிசி கொண்டு அமுதுபடி படித்திட கோவில் பட்டர்களிடம் ஆறு பொன் அளித்துள்ளான்.

5) ஆதாரம்: Epigraphia Carnatica,
Vol – 10, mulbagal Taluq,
கல்வெட்டு எண் : 56a

கல்வெட்டு – 6
————————
அதே இராமலிங்கேஸ்வரர் கோவில் அடித்தளத்தில் கிடைத்த கல்வெட்டு.

சகரையாண்டு 1146 (கி.பி 1224) காலத்தில் ஆவணிய நாட்டு பகுதியை சேர்ந்த ஜெயங்கொண்ட சோழ இளவஞ்சியராயரான மாராழ்வான் மகன் கூத்தாடுந்தேவர் என்பவரிடம் பணியாற்றிய அகம்படியர் இனத்தை சேர்ந்த சூற்றியாழ்வான் என்பவனின் மகனாகிய பெரியுடையானான தந்திரபாலன் என்பவன். திருவீரமீஸ்வரமுடையார் திருப்பள்ளி எழுச்சி பூசையில் தினமும் நாழி அரிசியில் அமுதுபடி படைத்திட கோவில் பிராமணரிடம் தானம் அளித்துள்ளான். (கல்வெட்டு சிதைந்துள்ளதால் என்ன அளித்துள்ளான் என்பது தெளிவாக அறியமுடியவில்லை).

ஆனால், நாம் ஏற்கனவே பார்த்த 5 கல்வெட்டுக்களிலும் பிராமணர்களிடம் பொன் அளித்து அதன் வட்டி கொண்டு பூசை நடைபெற ஏற்பாடு செய்துள்ளதால் இக்கல்வெட்டிலும் இவன் பொன் அளித்த செய்தியே பதிவாகியிருக்க வேண்டும் என்பதை உறுதியாக சொல்ல முடியும்.

6) ஆதாரம்: Epigraphia Carnatica,
Vol – 10, mulbagal Taluq,
கல்வெட்டு எண் : 71

மேலதிக செய்திகள்
————————————–
இந்த சோழ இளவஞ்சியராயர் சோழ அரச பிரதிநிதியாக சேர நாட்டுப் பகுதிகளை ஆட்சி செய்தவராக இருக்க வேண்டும்.

இந்த கல்வெட்டு செய்தியில் குறிப்பிடப்படும் மற்றொரு நபர் சோழ இளவஞ்சியராயர் கூத்தாடுந்தேவர் என்பவர் ஆவார். இவர் பெயரைக் கொண்டும் இவருடைய பெயர் கொண்டு கல்வெட்டு தொடங்குவதால் இவர் சோழர்களின் சார்பாக ஆட்சி செய்த அரசப்பிரதிநிதி என்பதை உறுதியாக சொல்லலாம்.

இன்னும் விரிவாக கூறுவதென்றால் கல்வெட்டில் சோழ பாண்டியன் என்று குறிப்பிடப்படுவர் சோழர்களின் சார்பில் சோழர்களின் சார்பாக பாண்டிய பகுதிகளை ஆட்சி செய்தவர்,

சோழ கங்கன் என்றால் சோழர் சார்பாக கங்கர் பகுதிகளை ஆட்சி செய்தவர் என்பவற்றை குறிப்பதை போல
“சோழ இளவஞ்சியராயர்” என்பதால் இவர் சோழர்களின் சார்பாக சேரர் அல்லது கர்நாடகப்பகுதிகளை ஆட்சி செய்தவர் அல்லது கண்காணித்தவர் என்பதை கூறமுடியும்.

மேலும் அகம்படியர்களே சோழர்களின் சார்பாக அரசப்பிரதிநிதிகளாக 10க்கும் மேற்பட்ட கல்வெட்டுக்களில் குறிப்பிடப்படுவதை ஏற்கனவே “சோழர் அகம்படியர்களே” என்ற காணொளியில் விளக்கியுள்ளோம்.

அதே போல் இன்றைய கல்வெட்டில் குறிப்பிடப்படும் சோழ இளவஞ்சியராயர் கூத்தாடுந்தேவர் என்பவரும் அகம்படியர் இனத்தவராக இருந்திருக்க வேண்டும்.

மேலும் இதே கூத்தாடுந்தேவர் மற்றொரு கல்வெட்டில் அகம்படியர்களுக்குரிய முதலி பட்டத்தில் குறிப்பிடப்படுவதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஆதாரம்: Epigraphia Carnatica,
Vol – 10, கல்வெட்டு எண் : 179a

இருப்பினும் வேறு கல்வெட்டுக்கள் கிடைக்கும் போது வரும் காலத்தில்
இது பற்றி தெளிவாகலாம்.

வரலாறு நீளும்…

கட்டுரையாக்கம்,
மு.சக்திகணேஷ்
(மதுரை, திருமங்கலத்திலிருந்து
(அகமுடையார் ஒற்றுமைக்காக)

சான்றாதார நூல்,
1) Epigraphia Carnatica, Vol – 10,
2) ஆதாரம் : தென்னிந்திய கோயிற் சாசனங்கள், பாகம் : 3 – பகுதி-2
தி.ந.சுப்பிரமணியப்பிள்ளை, —————————————————–
அகமுடையார் வரலாற்று மீட்புப் பணியில்…
சோ. பாலமுருகன் அகமுடையார்,
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
அகமுடையார் அரண்.
பேச : 94429 38890.இப்பதிவு அகமுடையார் அரண் பாலமுருகன் அகமுடையார்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

பாலமுருகன் அகமுடையார பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

We will be happy to hear your thoughts

Leave a reply

Agamudayar Otrumai
Logo
× How can I help you?