தமிழன்னையின் தவப்புதல்வர், “செம்பூர் வீ.ஆறுமுகம் சேர்வை” நீண்டகால வரலாற்றைக்…

Spread the love

First
தமிழன்னையின் தவப்புதல்வர்,
“செம்பூர் வீ.ஆறுமுகம் சேர்வை”

நீண்டகால வரலாற்றைக் கொண்ட
தமிழ் இலக்கியப் பரப்பில் மிகச்சிறந்த அறிஞர்கள் பலரும் அறியப்படாதவர்களாக மறந்தும், மறைக்கப்பட்டும் போயினர்.

இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த கோமளபுரம் இராஜகோபால பிள்ளை, கொன்றை மாநகர் சண்முகசுந்தர முதலியார், ஆரணி குப்புசாமி முதலியார், மன்னார்குடி சோமசுந்தரம் பிள்ளை, காசிவாசி சிவானந்த யதீந்திரர் சுவாமிகள், பெருமழை புலவர் சோமசுந்தரனார், கருப்பக்கிளர் சு.அ.இராமசாமிப் புலவர்,
செம்பூர் வித்துவான்
வீ.ஆறுமுகம் சேர்வை போன்ற பல தமிழ் அறிஞர்களும் இந்த நிலைக்கு ஆளாகி யிருக்கின்றனர்.

1910 தொடக்கம் முதல் 1934 காலகட்டங்களில் தமிழகத்தின் மிகச் சிறந்த தமிழ் இலக்கிய ஆளுமைகளில் ஒருவராக செம்பூர் வீ.ஆறுமுகம் சேர்வை அவர்கள் பெயர் பெற்றிருந்தார். இவர் நாலடியாருக்கும், நளவெண்பாவுக்கும் எழுதிய விரிவுரை மிக சிறப்பானவை. இவர் பதிப்பித்து விளக்க உரை எழுதிய தண்டியலங்காரம் (1920) நூலை அப்படியே எடுத்து வேறு ஒருவர் பெயர் போட்டு (கொ.இராமலிங்கத் தம்பிரான்) சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வெளியிட்டதாக, பேராசிரியர்
கு.சுந்தரமூர்த்தி தன்னுடைய தண்டியலங்காரப் பதிப்பின் முன்னுரையில் குறிப்பிட்டிருக்கின்றார்.

நரிவிருத்தம், கபிலர் அகவல் போன்ற நூல்களுக்கு சிறந்த உரை எழுதியதுடன் சீவக சிந்தாமணி நூலை உரை நடையில் எழுதியிருக்கின்றார். இத்துடன் வேறு பல நூல்களையும் இயற்றி இருக்கிறார்.

இவர் அந்தக் காலகட்டத்தில் நடைபெற்ற பல்வேறு அறிஞர்களின் விவாதங்களில் பங்கு பெற்றவர். திரு.வி.க., சக்கரவர்த்தி நயினார், கா.ர.கோவிந்தராஜ முதலியார் போன்ற அக்காலத்தில் புகழ் பெற்றிருந்த பல்வேறு ஆளுமைகளுடன் தொடர்பு கொண்டவராகவும் அறியப்படுகின்றார்.

பழந்தமிழ் இலக்கியம் சிறப்படைந்ததற்கு முக்கியமான காரணம் சமண சமயம் சார்ந்த புலவர்களின் பெரும்பணியே என்ற கருத்து இவரிடம் வலுவாக நிலை பெற்றிருந்தது. இந்தக் காரணத்தினாலேயே இவர் சைவ புலவர்களால் ஓரங்கட்டப்பட்டதாகக் கருத இடமுள்ளது.

இன்றைய சிவகங்கை மாவட்டம்,
சிவகங்கை – மதுரை சாலையில் உள்ள திருமாஞ்சோலை என்ற ஊருக்கு மிக அருகில் உள்ள மடைமாற்றூர் சேர்க்கை “செம்பூர்” இவர் பிறந்த ஊராகும்.

இவருடைய உறவினர்கள் திருமாஞ்சோலையில் வசிக்கின்றனர் என்ற விவரம் அறிந்து இவரை பற்றிய வரலாற்றை திரட்டுவதற்காக
10 ஆண்டுகளுக்கு முன்பு நான் திருமாஞ்சோலைக்கு சென்றிருந்தேன். , இவரின் நெருங்கிய உறவினர்களிடத்தில் இவரை பற்றிய வரலாற்றை திரட்ட முனைந்தேன். ஏமாற்றமே எனக்கு மிஞ்சியது. அவர்களிடத்தில் செம்பூர்
வீ.ஆறுமுகம் சேர்வை அவர்களின் வரலாறோ, புகைப்படமோ,
இவர் எழுதிய நூல்களோ எதுவும் கிடைக்கவில்லை. காலவெள்ளத்தின் ஓட்டத்தில் முழுவதும் கரைந்து விட்டதாக அவர்களிடத்தில் இருந்து பதில் வந்தது. இவரின் உருவப்படம் கூட கிடைக்கவில்லை என்பதே வேதனை.

அவர் காலத்தில் வாழ்ந்த தமிழ் அறிஞர்கள் சிலர், இவருடைய புலமை சார்ந்த வாழ்க்கை வரலாற்றைப் பற்றிய குறிப்புகள் சிலவற்றை எழுதியுள்ளனர். இவற்றையெல்லாம் ஒருங்கிணைத்தால் இவருடைய வரலாறு ஓரளவு தெளிவாக புலப்படும் என்று எண்ணுகிறேன்.
அக்குறிப்புகள் சிலவற்றில் இருந்த இக்கட்டுரை வரையப்பட்டுள்ளது.

தோற்றம்,

சிவகங்கை மாவட்டம், மடைமாற்றூர்ச் சேர்க்கை செம்பூரில் “அகமுடையார்” பேரினத்தில் ஒரு உட்பிரிவான இராஜகுல அகமுடையார் குலத்தில் தோன்றினார் செம்பூர் வீ.ஆறுமுகம் சேர்வை அவர்கள்.

கல்வி,

இவர் இளமையிற் கல்வியை அதிகம் கற்கவில்லையாயினும், பின்னாளில் கொட்டாம்பட்டி எம்.கருப்பையாப் பாவலர், மதுரை சுப்பராயப் பிள்ளை, மதுரை அமெரிக்கன் மிஷன் ஹையிஸ்கூல் தமிழ்ப் பண்டிதர் பாலகிருஷ்ண நாயுடு
இவர்களிடத்தில் தமிழ் இலக்கண இலக்கியங்களை நன்கு கற்றுத்தேறிச் சிறந்த புலமையடைந்தார். மதுரமாகவும், விரைந்தும் கவிகள் பாடுவதிலும்,
செம்பாகமாக வசன எழுதுவதிலும்
இவர் மிக்க வல்லுநர்.

முறையூர்

இவர் ஆதியில் கல்வி பயின்ற பின்னர் சிற்சில விடங்களில் உத்தியோகத்தில் அமர்ந்து பணிபுரிந்து, அத்தொழில் தம் மனத்திற்குப் பொருந்தாமையின் பொருட்டு அதனை விடுத்துத் தம் கல்வித் திறமையைத் தமிழ் வளர்க்கும் பெருவள்ளல்களிடம் காட்டி பரிசு பெற்று வாழக்கருதி, சில பிரபுக்களை அடுத்து, முடிவில் வித்வான்களுக்கு வேண்டுவன நல்குங் கற்பகமாக விளங்கும் பெருங்கொடை வள்ளல் முறையூர் பழ.சி.சண்முகஞ் செட்டியாரை அடுத்து அவர் சமூக வித்துவானாகச் சில ஆண்டுகள் தங்கியிருந்தார்.
பழ.சி.சண்முகஞ் செட்டியாரவர்கள் இவருடைய கல்வி, நல்லொழுக்கம், அடக்கம் முதலியவற்றை உணர்ந்து இவருக்குப் பலவகையினுஞ் சிறந்த உதவிகளைச் செய்தார். இவர் இரு மனைவியரை மணந்திருந்தாரென்பது என்பது இவருடைய பாடல்கள் சிலவற்றில் அறியப்படுகிறது.

“மல்லோங்கி மதியோங்கி மதிக்கும்
நல்ல

வனப்போங்கி மகிழோங்கி வன்மை
ஈட்டிச்

செருக்குற்ற தொழுவர்மன்னித் திகழு வேதச்

சொல்லோங்கி யொலிக்கின்ற
முறையூர் வாழும்

துரையே! கொடுத்தபொருள் தனக்குத்
தூய

நெல் வாங்கி யீடுகொள்ள நிறைந்தே
னன்றே

நெடியபசிப் பிணியும்விட்டு நீங்கிற்
றம்மா.

திண்டாட்டம் யாவும்விட்டுத்
தொலைந்து மந்தோ

தெரியாமற் சிறுபிள்ளைத் தனமா
யானும்

பெண்டாட்டி இருவர்கொண்ட
பிழையால் வந்த

பிணக்கின்னம் ஒழியவில்லை
பிறங்கி யென்றும்

வண்டாட்ட மாயிருக்கும் தொங்கன்
மார்பா

வந்தவிந்த வழக்கினுக்கோர் மார்க்கம் செய்து

கொண்டாட்ட மாய்வருவேன் நினைக்கே
யாளாய்க்

கொண்டருள்செய் தெனக்குவகை கொடுத்தாள் வாயே. ”

என்பன இவர் பழ.சி.சண்முகஞ் செட்டியாருக்கு எழுதிய செய்யுட்களில் இரண்டாகும்.

சென்னை வாழ்க்கை

முறையூரிற் சில காலம் வசித்திருந்த இவர், பிறகு சென்னை அடைந்தார். அங்கு ஆனந்த போதினி, பிரசண்ட விகடன் பத்திரிகையின் ஆசிரியராக அமர்ந்து பத்திரிகைத் தொண்டு செய்ததுடன், நூல்கள் பலவற்றிற்கு உரையெழுதினார். பல உரைநடை நூல்களநூல்களையும் இயற்றினார்.

செம்பூர் வீ.ஆறுமுகம் சேர்வை அவர்கள் உரையெழுதியனவும், இயற்றியனவுமான நூல்கள்;

1) நாலடியார் மூலமும் விரிவுரயும்
(1932).
2) நளவெண்பா மூலமும் விருத்தியுரை
(1929),
3) நரிவிருத்தம் உரை (1975).
4) தண்டியலங்காரம் உரை (1920),
5) சிறுபஞ்சமூல விருத்தியுரை,
6) சீவக சிந்தாமணி வசனம் (1913).
7) குமரேச சதக உரை,
8) கபிலர் அகவல் உரை,
9) விவேக சிந்தாமணி மூலமும உரையும்
(1928).
10) சீமந்தனி (1927),
11) காந்தாமணி (1910),
12) கந்த சஷ்டி கவசம் மூலமும் உரையும்
(1916),
13) சண்டோ பாக்கியானம் (1924),
14) அரிச்சந்திர புராண வசனம் (1914),
15) அருணாசல புராண வசனம் (1915),
16) கம்பராமாயணச் சுருக்கம்,
17) கம்பர் இராமாயணம் சங்கிரகம் (1924),
18) குசேலோபாக்கியான வசனம் (1919),
19) பகவத் கீதை வசனம், (1915),
20) பாகவத பாடம் ஸ்ரீகிருஷ்ணன் சரிதை
(1928),
21) ஸ்ரீ கண்ணன் பக்திரஸக்
கீர்த்தனைகள் (1923),
22) ஜீவகன் (1920),
23) அண்டப்புளூகன்,
24) ஒயாச்சரிப்பு என்னும் அவுட்டுச்சிரிப்பு
கதைகள் (1928),
25) புதினம் தமிழ் இலக்கணம்,
26) நவீன தமிழ் வாசகப் புத்தகம்,
வகுப்பு – 6 (1930).
27) நவீன தமிழ் வாசகப் புத்தகம்,
வகுப்பு – 7 (1930),
28) மாணவர் தமிழ் வாசகம், வகுப்பு – 6
(1933),
29) மாணவர் தமிழ் வாசகம், வகுப்பு – 7
(1933).
30) அறிவு விளக்கக் கதைகள்,பாகம் – 2,
(1946),
31) அறிவு விளக்கக் கதைகள், பஞ்ச
தந்திரம், பாகம் – 3 (1947).
33) அறிவு விளக்கக் கதைகள், பஞ்ச
தந்திரம், பாகம் – 4,5, (1956).
35) பஞ்சதந்திர வசனம் (1921),
36) விநோத கதை திரட்டு (1924),

இவர் எழுதிய பல நூல்களின் பட்டியல் முழுமையாக கிடைக்கவில்லை. பார்வைக்கு கிடைத்த சிலவற்றை மட்டுமே பட்டியலிட்டுள்ளேன்.

இவர் 1920 – 1930 களில் ‘ஆனந்தபோதினி’ ‘பிரசண்ட விகடன்’ போன்ற இதழ்களில் கதை கட்டுரைத் தொடர்களை எழுதி வந்துள்ளார். மாணவர்களுக்கென்றே பிரத்தியோகமாக ஆத்திச்சூடி செயயுட்களுக்கு விளக்கவுரையுடன் கூடிய உதாரணக் கதைகள் எழுதிப் புகழ் பெற்றார். அவைகளில் கீழ்காணும் செயயுட்களுக்கு அவர் அளித்துள்ள விளக்கங்களும், கதைகளும் புகழ் படைத்தவை;

1) ஆத்திசூடி உதாரணக் கதைகள்,
2) இலவம் பஞ்சிற் றுயில,
3) வஞ்சம் பேசேல்,
4) அழகலாதன செய்யேல்,
5) இளமையிற் கல்,
6) அறனை மற வேல்,
7) அனந்த லாடேல்,
8) கடிவது மற,
9) காப்பது விரதம்,
10) கிழமைப்பட வாழ்,
11) கிழ்மைய கற்று,

இவைகள் யாவும் ஆனந்த போதினி இதழில் வெளியானவை.

இவரால் எழுதப்பட்ட “நொண்டி மாப்பிள்ளையும் மூளிப் பெண்ணும்”, “ஜமீன்தார் காற்றாடி” என்ற சிறுகதைகள் இலக்கியச் சுவையுடையதாய் இன்றளவும் சமுதாயத்தில் பிரதிபலிக்கின்ற தன்மையில் விளங்குகின்றன.

இவர் பண்டிதை ரா.ரங்கநாயகி ‘செம்பியன்’, ‘ஜீவா’ என்ற நாரணதுரைக் கண்ணன், அரியூர் ஸ்ரீபத்மநாப பிள்ளை போன்றவர்கள் பிரசண்ட விகடனில் எழுதிய காலத்தில், அவர்களின் சமகால எழுத்தாளராக இருந்துள்ளார்.

அதற்கு முன்பாக ஆனந்தபோதினியில் 1920களில் ஆரணி குப்புசாமி முதலியார், சிவானந்த சாகர யோகீஸ்வரர், டாக்டர் மோ.மாசிலாமணி முதலியார், கி. ஆ. பெ. விசுவநாதன் போன்றவர்கள் எழுதிய காலத்திலும் எழுதி தமிழ்த்தாய்க்கு அரிய பணி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மதுரை அகம்படிய வாலிபர் சங்கம்,

மதுரை அகம்படியர் வாலிப சங்கமானது, 1929 வருடம் ஜுன் மாதம் 9 தேதியில், நம் குலத்தவரும், தமிழ் வித்வானுமான உயர்திரு செம்பூர்
வீ.ஆறுமுகம் சேர்வை அவர்கள் தலைமையின்கீழ் மதுரையில் கூடிய நம் சமூகக் கூட்டத்தில் நிறுவப்பட்டது.

தமிழ் பெரியார் மறைவு

1934ல் இவர் தம் இன்னுயிரை நீத்தார்.
இவர் மறைவு பற்றி பிரண்ட விகடன் இதழில் வெளியிட்டுள்ள செய்தியில்,

“தமிழ் பெரியார் மறைவு” என்று குறிப்பிட்டு, அவர் தமிழ் மொழியில் மிகவும் புலமை வாய்ந்தவர்; நாடக ஆசிரியர்; இயற்கையாகப் பாடல்களைப் பாடுவதில் வல்லவர்; இனிய உரைநடை வரைவதில் நிபுணர்; சீவக சிந்தாமணி போன்ற செய்யுள் சிலவற்றை வசன நடையில் தந்தவர்; நாலடியார் போன்ற செய்யுள் நூல்கள் சிலவற்றிற்க்கு விளக்கமான உரை வரைந்தவர்.

இவர் இன்னும் தமிழன்னையை விதவிதமான அலங்கரித்திருப்பார். ஆனால் அவரை மரணம் அவ்வளவு சீக்கிரத்தில் கொண்டு போய்விட்டது;
தமிழ்நாட்டுக்குப் பெரும் நஷ்டமே என்று குறிப்பிட்டுள்ளது.

செம்பூர் வீ. ஆறுமுகம் சேர்வை பற்றிய முழு வாழ்க்கைக் குறிப்புகள் முழுமையாகக் கிடைக்கப் பெறவில்லை என்றாலும், அவர் வாழ்ந்த காலத்தில் தமிழன்னைக்கு ஆற்றிய அரிய பல சேவைகளைச் செய்து மறைந்துள்ளார் என்பதைக் கேட்க உள்ளம் இரும்பூ தெய்துகின்றது.

சான்றாதார நூல்கள்,

1) தமிழ் புலவர் வரிசை,
கருக்கிளர் இராமசாமி புலவர்,
சைவ சிந்தாந்த நூற்பதிப்புக் கழகம்.
2) “தமிழ் ஆளுமை செம்பூர் வித்துவான்
வீ. ஆறுமுகம் சேர்வை”
பொ. வேல்சாமி அவர்களின் முகநூல் கட்டுரை.
3) அகம்படிய வாலிபர் சங்கம்,
இரண்டாம் ஆண்டு அறிக்கை கையேடு (28-03-1931),
3) தனிச் செய்யுள் சிந்தாமணி
(முதற்பாகம்),
மு.ரா.கந்தசாமிக்கவிராயர்,
மதுரை விவேகபாநு அச்சியந்திரசாலை,
(1908).
4) ஆனந்தபோதினி (இதழ்கள்).
5) பிரசண்ட விகடன் (இதழ்கள்).
———————————————————-
கட்டுரை ஆக்கம்,

அகமுடையார் வரலாற்று மீட்புப் பணியில்…

சோ. பாலமுருகன் அகமுடையார்,
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
அகமுடையார் அரண்,
பேச: 94429 38890.




இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

We will be happy to hear your thoughts

Leave a reply

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo