First
முன்னூற்றுவராகிய கோயிற் பிள்ளைகள் எனும் அரசகுலத்தவர்
—————————————————–
முன்னூற்றுவர் கோயிற் பிள்ளைகள் என்பது இன்றைய அகமுடையார்களை குறிக்க அன்று பயன்பட்ட பெயர்களில் ஒன்றாகும்.
இன்று நாம் காண இருக்கும் செய்தி “முன்னூற்றுவராகிய கோயிற் பிள்ளைகள்” எனும் அரசகுலத்தவர் பற்றி வரும் குறிப்பு ஆகும்.
விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது வெம்பக்கோட்டை எனும் ஊர் ஆகும். சங்க கால எச்சங்கள் நிறைந்த ஊர் என்பதை கொண்டே இது பழம் காலம் தொட்டே புகழ்பெற்ற ஊராக இருந்ததை அறிந்து கொள்ள முடியும். இவ்வாறு முக்கியத்துவம் பெறுவதற்கு இது வணிகபாதையில் அமைந்ததும் ஓர் காரணம் ஆகும்.
சாத்து வணிகர்கள் பெயரால் அமைந்த பழம் நகரமான சாத்தூர் நகருக்கும் வெம்பக்கோட்டை ஊர் அருகில் அமைந்துள்ளது.
இவ்வாறு சிறப்பு மிகுந்த வணிகப்பாதையில் அமைந்த இந்த வெம்பக்கோட்டை ஊரின் அருகில் உள்ள சிறு கல்குன்றில் ( இன்று குகன் பாறை என்று அறியப்படும் பாறையில்) கி.பி 10ம் நூற்றாண்டை சேர்ந்த வட்டெழுத்து கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது.
அதில் முன்னூற்றுவர் கோயிற்பிள்ளைகள் பெயரால் முன்னூற்றுவர் பெரும்பள்ளி என்ற சமணப்பள்ளி (சமண முனிவர்களின் உறைவிடம்) இருந்தது தெரிவருகின்றது.
பார்க்க இணைப்பு 1 ,2 ஆதாரம்: விருதுநகர் மாவட்ட வரலாறு ,பக்கம் எண் 24,25 ,தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வெளியீடு.
வணிகப்பாதைகளை பாதுகாக்கும் படைவீரர்கள் அரச குலத்தவர்களால் உருவாக்கப்பட்ட படைப்பிரிவு ஆகும். இதை பல்வேறு வரலாற்று அறிஞர்கள் பல்வேறு வேளைகளில் கூறியுள்ளனர் என்றாலும் இக்கல்வெட்டில் வரும் செய்தியை அதை உணர்த்தும் சான்றாக விளங்குகிறது.
கல்வெட்டில் வரும் முன்னூற்றுவர் கோயிற்பிள்ளைகள் என்பதில் கோயில் என்பது கோ(அரசன்) +இல்( வாழுமிடம் = அரண்மனை , பிள்ளைகள் ( உறவினர்) என்பதன் மூலம் கோயிற்பிள்ளைகள் என்பது அரச உறவினர்கள் என்பதும் முன்னூற்றுவர் கோயிற்பிள்ளைகள் என்பவர் அரசகுடி சார்ந்த முன்னூற்றுவர் என்பதும் விளங்கும். இதை நான் சொன்ன வகையில் பொருள் பிரித்து பார்த்தாலே உங்களுக்கே விளங்கும்.
இருப்பினும் இந்த கல்வெட்டு குறித்து தமிழ்நாடு தொல்லியல் துறையும் இதை கருத்தை வெளியிட்டுருப்பதை முன்னர் கண்ட இணைப்பில் காணலாம்.
பார்க்க இணைப்பு 1
அதாவது இச்சமணப்பள்ளிக்கு அரச ஆதரவிருந்ததை , முன்னூற்றுவர் கோயிற்பிள்ளைகள் பெயரால் இப்பள்ளி அமைந்திருந்ததை காட்டி விளக்குகின்றனர். இதன் மூலம் கோயிற்பிள்ளைகள் என்பவர்கள் அரசகுலத்தவர் என்பதும் இவர்கள் இங்கு முன்னூற்றுவர் என்று குறிக்கப்பெறுவது இந்த அரசகுலத்தவர்கள் வணிக பாதுகாவல் செய்வதற்காக அமைக்கப்பட்ட படைப்பிரிவினர் என்பதையும் அறிந்துகொள்ளலாம்.
இதற்கு மற்றொரு சான்று
கல்வெட்டு அறிஞரான எஸ்.இராமசந்திரன் அவர்கள் தமிழினி இதழில் எழுதிய “தமிழக வேளாளர் வரலாறு” என்ற தொடரில்((ஜீன் 2011 வருடத்திய தமிழினி இதழ் 26 )
அகம்படிய சாதியினர் ( இன்றைய அகமுடையார் சாதியினர்)
“கோயிற் பிள்ளை முன்னூற்றுவர் ” என்றும் “கொற்றக்குடை பன்மர் முன்னூற்றுவர்” என்று அழைக்கப்பட்ட செய்தியையும் மேற்கண்ட கல்வெட்டு செய்தியை முதன்மை ஆதாரமாக கொண்டு விளக்குகின்றார்.
பார்க்க இணைப்பு 3: தமிழினி இதழ் 26 ,வருடம் 2011 ,பக்கம் எண்
அதுமட்டுமல்ல
இன்றைய அகமுடையார் சாதியினரை குறிக்க அன்று பயன்பட்ட பல்வேறு பெயர்களுமே இவ்வுண்மையை உணர்த்தும்.
முதலில் இக்கட்டுரையின் மைய கருத்தான் வணிக தொடர்பான பொருளை முதலில் பார்ப்போம்.
ஏழகத்தார் == ஏழு+அகத்தார் ( ஏழு எனும் சோழர் அடையாளம் உ.ம் ஏழாரன் சோழ மன்னன் ,ஏழுலகமுடையாள் –சோழ ராணி) அகத்தார்= உறவினர் ( சோழர்களின் உறவினர்கள் ) இவர்களே சோழர்களின் வணிக பாதுகாவலுக்கு மிக தேர்ந்த படையினர் சோழர்களின் முக்கியமான வணிகர்களான நகரத்தார் எனும் நாட்டுக்கோட்டை செட்டியார்களுக்கு பாதுகாவல் வழங்கியவர்கள். இவர்கள் பெயராலேயே நகரத்தார் சமுதாயத்தில் ஏழு கோவில்,பிரிவுகள் விளங்குகின்றன. இந்த ஏழகத்தார் நகரத்தாருடன் இணைந்து வந்து பின்னாட்களில் பாண்டிய நாட்டுக்குள நுழைந்து பாண்டிய படையில் முக்கிய பிரிவாக சேர்க்கப்பட்டனர். பாண்டியர்களின் சொந்த படை பிரிவு மறப்படை (வீரர் தொகுதி) என்றும் ஏழகப்படை ( ஏழகத்தை சேர்ந்த பிரிவு)) என்றும் அழைக்கப்பட்டது. பாண்டிய ,சோழ பேரின் போது பாண்டிய படையில் இருந்த போதும் ஏழகத்தாரில் சிலர் தங்கள் சோழ மன்னர் உறவு காரணமாக பாண்டியர்களை ஒரு சில சன்டையில் எதிர்த்தனர் (பின்னர் பாண்டியர்கள் அகமுடையார்களான ஏழகத்தார், வாணர்களுடன் கொண்ட திருமண உறவு காரணமாக தொன்மை சோழ உறவை துண்டித்து , பாண்டியர் பக்கம் திரும்பி சோழருக்கு எதிராக அரைமனதுடன் போரிட்டு தோற்றனர்) இதே நிகழ்வு இலங்கையிலும் நடைபெற்றது.
அதே போல் பாண்டிய படையில் ஏழகத்தார் இருந்தாலும் ஏழகத்தாருக்கென தனி கொடி, இராஜ சின்னங்கள் இருந்தன. ஏழகத்தார் தனி வரிகளையும் வசூலித்தனர். ( பாண்டியர்கள் வசூலித்த வரி இராஜ( பாண்டிய) கோயிற்றமத்திலும் , ஏழகத்தார் வசூலித்த வரி ஏழகத்தார் கோயிற்றமத்திலும் என்று அழைக்கப்பட்டது.
கோயிற்றமர் ( கோவில்= அரண்மனை), தமர்(உறவினர்) அல்லது (அமர் =வாழ்வன்) அரண்மனையின் உறவினர், அரண்மனையில் வாழும் அரச குடியினன்
மனைப்பெருஞ்சனம் = (மனை= அரண்மனை), பெருஞ்சனம் (பெரும் குடியினர்) = அரண்மனையில் வாழும் பெரும் குடியினர்)
ஆதாரம் : பார்க்க இணைப்பு: 4
அரச புத்திரர் , அரசமக்கள் = அரசனின் உறவினர்
ஆதாரம் : பார்க்க இணைப்பு: 4,5
அகம்படியர் ( அகம்படி= அரண்மனை) , ஆர் ( மக்கள்) ,அரண்மனையை சேர்ந்த மக்கள்
அகப்பரிவாரத்தார் (அகம் = அரண்மனை) ,பரிவாரத்தார் (உறவினர்) = அரண்மனை உறவினர்
மேற்கூறிய வார்த்தைகள் எல்லாம் ஓரே பொருள் குறித்தன. இவற்றின் பொருளை அறிந்துகொண்டாலே இது எல்லோருக்கும் விளங்கும் இருப்பினும் வரலாற்று அறிஞர்கள் இது எல்லாம் அகமுடையார் சாதியை குறிக்கும் என்பதை ஏற்கனவே விளக்கியுள்ளனர். அந்த ஆதாரங்களை ஏற்கனவே நமது வேறு பதிவுகளில் விளக்கியுள்ளோம் என்பதால் நேரத்தின் அருமை கருதி இங்கு குறிப்பிடவில்லை. இருப்பினும் இந்த அனைத்து பெயர்களையும் விளக்கியும் , அறிஞர்களின் ஆதாரத்தையும் காட்டி காணொளி ஒன்றை விரைவில் உருவாக்குவோம்
குறிப்பாக சோழர்களின் முக்கிய வருவாயே இது போன்ற வணிக பெருவழிகளை பாதுகாவல் செய்வதும் அதில் கிடைக்கும் வரி வருமானமுமாகவே இருந்துள்ளது(இப்பதிவின் மேலதிக செய்தியில் இதை சற்றே விரிவாக பார்க்கலாம்)
மேலதிக செய்திகள்
——————-
தமிழகத்தின் மூத்த தொல்லியல் அறிஞரும் , நடுநிலையான கருத்துக்களை கொண்டு விளங்கும் திரு.ர.பூங்குன்றன் அவர்கள்
தனது ” சோழர்களும் கொங்குநாடும் ” என்ற கட்டுரையில்
“திருநிழலு மன்ன யிருஞ்சிறந்த மைப்ப
ஒருநிழல் வெண்டிங்கள் போலோங்க – ஒருநிழல்போல்
வாழியர் கோச்சோழன் வளங்கா விரிநாடன்
கோழியர் கோக்கண்டன் குலம்”
என்ற கொங்கு நாட்டில் கிடைத்த கி.பி 9ம் நூற்றாண்டு காலத்திய சோழர்களின் வணிக பாதுகாவல் குறித்து வந்த கல்வெட்டு பாடலை ஆராய்ந்து
“”முன்னூற்றுவர் நிழல் என்ற கூறும் போது அரசனுக்குப்பாதுகாப்பாக செல்லும் இரகசியப் படை (Shadow Army) என்று பொருள் கொள்ளவும் பெறுகின்றது. ”
என்ற கருத்தை முன் வைக்கின்றார்.
நம் கருத்து என்னவென்றால்
அரசனின் நிழலாக செல்வர் என்றும் திருநிழல் என்றும் அழைக்கப்படும் இவர்கள் அரசர்ககளின் உறவினர்களால் அரசர்களின் சார்பாக வரிகளை வசூலிக்கவும், வணிகர்களுக்கு பாதுகாப்பு வழங்கவும் கடமைப்பட்டவர்கள். இவர்களே திருநிழல் என்று அழைக்கப்பட்டவர்கள் இவர்களே முன்னூற்றுவர் நிழல் என்று கல்வ்வெட்டு மற்றும் இலக்கியங்களில் அறியப்படுவர்கள் ஆவர் ( இது குறித்து பல்வேறு ஆதாரங்களுடன் மற்றோரு நாள் விரிவாக பார்க்கலாம்)
சோழர்கள் பெரிதும் வருவாய் குறைந்த பகுதிகளையே ஆட்சி செய்து வந்தனர். சோழர்கள் ஆட்சி செய்த பகுதி கிட்டத்தட்ட சமவெளி பகுதி போல தான் இயற்கை வளம் நிறைந்த மலைப்பகுதி என்பதே இல்லை! கடல் பகுதி இருந்தாலும் அதில் பாண்டியர்களின் கடல் பகுதி போல் அங்கு தரமான முத்துக்கள் விளையவுமில்லை.
மற்றொரு புரத்தில் பாண்டியர்களும் சேரர்களும் பவளம் ,மணிகள் போன்ற கனிம வளம் நிறைந்த பகுதிகளை பெற்றிருந்தனர் , பாண்டிய கடல் பகுதியில் முதற் தரமான முத்துக்கள் விளைந்தன, அப்போது பெரும் செல்வமாக விளங்கிய ஆநிரைகளையோ ,சேர்களை போல வாசனை பொருட்கள் விளையும் மலைப்பகுதியையோ சந்தனம் போன்ற வாசனை திரவியங்களையோ, யானை செல்வத்தையும் அது தரும் தந்தம் , கொண்டிருக்கவில்லை.
சங்க காலத்தில் சோழர்களின் முழு முதற் வருமானம் முழுவதும் வணிகர்கள் கொடுத்த வரி வருவாயை நம்பியே இருந்தது.
பின்னாட்களில் காவிரியால் பாசன வசதி செய்யப்பட்டு பயிர் வருமானமும் கிடைத்தது வேறு விடயம்.
பேரசர்களாக இருந்த
சோழர்கள் களப்பிரர் ஆட்சியில் ஒடுங்கியிருந்ததற்கும் ,, ஒவ்வொரு முறை வீழ்த்தப்பட்ட போதும் பாண்டியர்கள் ஒவ்வொரு முறையும் எழுந்து திரும்பி வந்ததற்கும் பாண்டியர்களின் மேற்குறிப்பிட்ட இயற்கை வளமும் , பாண்டியர்களின் ஆநிரைகளின் செல்வமும் அதனால் கிடைத்த தன்னிறைவையும் தாண்டி உட்சபட்சமான செல்வமும் காரணமாகும்.
இயற்கை வளம் நிறைந்த கொங்கு பகுதிகளை தங்கள் ஆட்சி பகுதிக்குள் கொண்டுவர சோழர்கள் பல முறை வென்றாலும் கூட இயற்கை அரண் மிகுந்த ,தங்கள் ஆட்சி பகுதியில் இருந்து தொலைவில் இருந்த பகுதிகளை தொலைதொடர்பு இல்லாத அக்காலத்தில் தங்களது ஆட்சியை தக்க வைப்பது சிரமான விடயமாகவே இருந்துள்ளது.
இயற்கை செல்வம் குறைந்த சோழ அரசர்கள் பேரசாக நிலை நிறுத்துக்கொள்ள ,படையை பராமரிக்க பெரும் செல்வம் தேவைப்பட்டது வணிகப்பாதைகளை தங்கள் கட்டுக்குள் கொண்டுவர முயற்சித்தனர் . பெரும் வணிகர்களின் வணிகப்பாதைகளுக்கு உள்ள இடையூறுகளை நீக்கவும் வணிகப்பாதையை பாதுகாக்கவுமே சோழர்கள் பல்வேறு ஆசிய நாடுகளை படையெடுத்து வென்றார்களேயன்றி சிலர் சொல்வது போல் போர் வெறி காரணமாக அல்ல!
பாண்டிய நாட்டை விட துல்லியமான மற்றும் சரியான நேரத்தில் வரிவசூல் முறை நிகழ்த்தப்பட்டதற்கும் இதுவே காரணமாகும். வாய்ப்பு குறைவான ஒருவன் தனக்குள்ள எல்லா வாய்ப்பையும் பயன்படுத்தி முன்னேறுவான் என்பதற்கு சோழர்களும் , அதீத செல்வம் இருக்கும் ஒருவன் தனது செல்வம் தரும் சுகத்தினாலே வீழ்ந்து சோம்பிவிடுவான் என்பதற்கு பாண்டியர்களையும் உதாரணமாக சொல்லலாம்.
சோழர்களின் இந்த நிர்வாகத்திறனை சரியாக பின்பற்றாத கவனத்தில் கொள்ளாத குலோத்துங்கன் மற்றும் அவன் பின் வந்த சோழர்கள் தங்கள் அலட்சியத்தினாலும், ஆடம்பரத்தினாலும் , போர் நாட்டமில்லாத தன்மையாலும் குறுநில அரசர்கள் சோழர்களுக்கு எதிராக மேலழுவதற்கும் ,பாண்டியர்கள் எழுச்சியடைவதற்கும் காரணமாகி
சோழர் மரபு தனது முடிவை எட்ட காரணமாகியது.
முன்னூற்றுவர் என்பவர்கள் வணிக பாதுகாவல் போன்ற தேவைகளுக்கும் வேறு முன்னூறுவர் என்போர் இறைப்பணிகளிலும் இருந்துள்ளனர்.
வரலாற்றை தொடர்ந்து படிப்பவர்களாக இருந்தால்
முன்னூற்றுவர், ஐநூற்றுவர், எண்ணூற்றுவர், திசை ஆயிரத்து எண்ணூற்றுவர்
என்ற பெயர்களை வாசித்திருக்கலாம்.
பொதுவாக இந்த பெயர்கள் எல்லாம் எண்ணிக்கையை குறிக்கும் அமைப்பாகும்.
முன்னூற்றுவர் என்பது மூன்று நூறு பேர் கொண்ட ஓர் அமைப்பு ஆகும் . ஐநூற்றுவர் என்பது ஐந்து நூறு பேர் கொண்ட அமைப்பு ஆகும்.
இதில் குறிப்பிடப்படும் எண்ணிக்கையினர் படை காவல் படையினராகவோ அல்லது இறைப்பணியில் ஈடுபட்ட தொகுதியினரையும் குறிக்கும் . வணிக பாதுகாவல் குறித்து குறிக்கப்படும் முன்னூற்றுவரே அகமுடையார் தொடர்பானது மற்றவர்களுக்கும் நாம் குறிப்பிடும் முன்னூற்றுவருக்கும் தொடர்பு இல்லை.
இன்னும் பல்வேறு செய்திகள் உள்ளன. நேரமின்மையால் பல்வற்றை இன்னும் விரிவாக விளக்க முடியவில்லை. விரிவான ஆதாரங்களுடன் காணொளி நம் அகமுடையார் ஒற்றுமை யூடிப் சேனலில் வெளியிடப்படும்.
அகமுடையார்கள் வரலாற்று காணொளிகளை விரும்பி பார்ப்பது போல் தெரியாததால் நாங்கள் காணொளிகளை அடிக்கடி வெளியிடுவதில்லை.
அகமுடையார் சமுதாயத்தில் இருந்து ஆதரவு கிடைத்தால் விரிவான காணொளிகளை தொடர்ந்து வெளியிடமுடியும்.
அகமுடையார் ஒற்றுமை ய்யூடிப் சேனல் முகவரி –சப்ஸ்கிரைப் செய்து வையுங்கள். காணொளிகளை பாருங்கள்!
https://www.youtube.com/agamudayarotrumai
கட்டுரையாக்கம்
மு.சக்திகணேஷ்
அகமுடையார் ஒற்றுமைக்காக agamudayarotrumai.com
திருமங்கலம்(மதுரை)
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்