சோழர் குடியினரான அகம்படியார்கள் காவல்பணி மறுத்த கல்வெட்டு செய்தி- துளுவ வேளாள…

Spread the love

First
சோழர் குடியினரான அகம்படியார்கள் காவல்பணி மறுத்த கல்வெட்டு செய்தி- துளுவ வேளாளர் பிரிவின் தோற்றுவாய்
——————————————————
இன்றைய வடதமிழகத்தின் சென்னை திருவொற்றியூர் பகுதியில் உள்ள ஆதிபுரீஸ்வரர் கோவில் கோபுரத்தின் நுழைவாயிலில் வலதுபுறத்தில் கீழ்கண்ட கல்வெட்டு செய்தி காணப்படுகின்றது.

இக்கல்வெட்டு பல்வேறு வரலாற்று தரவுகளுடன் ஒப்பிட்டு தமிழக வரலாற்றில் ஓளிந்திருக்கும் பல உண்மைகளை இக்கட்டுரை வழியே வெளிப்படுத்த இருக்கின்றோம். இது நீண்ட கட்டுரையாக தெரியலாம் ஆனால் பல வரலாற்று உண்மைகளை புலப்படுத்தும் நமது கட்டுரைகளில் இதுவும் ஒன்று.

குறிப்பிட்ட இந்த கல்வெட்டு கி.பி 1348 ம் ஆண்டு காலத்தியது.அதாவது விஜயநகர பரம்பரையை சேர்ந்த மன்னர் புக்கராயன் காலத்தில் விஜய நகர அரசபிரதியாக இருந்த சயன உடையார் என்பவரின் காலத்தியதாகும்.

அதாவது இன்றிலிருந்து சுமார் 700 ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்வெட்டு இதுவாகும்.

வடமாவட்ட அகம்படியர்கள் காவல்பணி தவறிய செய்தி
——————————————–
இக்கல்வெட்டில் உள்ள மூலசெய்தியை இப்பதிவின் இணைப்பு 1ல் க்கொடுத்துள்ளோம் முழுச்செய்தியையும் பார்க்க விரும்புவோர் அதை பார்க்க வேண்டுகிறோம்.

பார்க்க இணைப்பு 1,2 :: ஆதாரம்: தென் இந்திய கல்வெட்டு தொகுதி ,பாகம் 38 , கல்வெட்டு எண் 240

சரி! இக்கல்வெட்டின் முக்கிய கருச்செய்தி என்னவென்றால்

படுவூர் நாடாழ்வார்களாகிய காலிங்கராயன்,சேதிராயன்,ஆதித்தன் மற்றும் காயவடுகன் உள்ளிட்ட 48 அகம்படியர்கள் நெடுநாள் (பரம்பரையாக ) செய்துவந்த காவல்பணியை (பாடிகாவல்) புறக்கணித்தால் பல கேடுகள்(கொள்ளைகள், குழப்பங்கள்) ஏற்பட்டது. இதற்காக குறிப்பிட்ட அந்த 48 அகம்படியருக்கு தண்டனை வழங்கப்பட்டது என்ற செய்தியே இக்கல்வெட்டில் வரும் மூலசெய்தியாகும்.

இக்க்லவெட்டு குறித்து தொல்லியல் அறிஞர்களும்,வரலாற்று ஆய்வாளர்களும் இதே கருத்தை வெளியிட்டுள்ளனர்.

பார்க்க இணைப்பு 4 : நூல் :சம்புவரையர் ஆசிரியர் டாக்டர் கோ.திருமாவளவன் பக்கம் எண் 79

பார்க்க இணைப்பு 5 : ஆதாரம்: Annual Report of Epigraphy Year 1911-1914

கல்வெட்டு விரிவான செய்தி
காவல் பணியை புறக்கணித்த 48 அகம்படியர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டது என்பதை கூறும் அறிஞர்கள்,என்ன தண்டனை வழங்கப்பட்டது என்பதை தெளிவாக குறிப்பிடவில்லை.

கல்வெட்டின் இடையில் சில பகுதிகளும், கல்வெட்டின் இறுதிப்பகுதி முழுமையாகவும் சிதைந்து விட்டதால் சில செய்திகளை தெளிவாக உணர முடியவில்லை என்றாலும் கல்வெட்டை நாம் படித்த போது நமக்கு இது புரிந்தது.

கல்வெட்டு வரிகள் 16 முதல் 20 வரை உள்ள வரிகள் சிதைத்திருந்தாலும் இடையில் உள்ள எழுத்துக்கள் மூலம் இது நிலத்தின் எல்லைகளை குறிக்கிறது என்பதை அறிய முடிகின்றது.

மேலும் கல்வெட்டில் உள்ள 14 வது வரியில் பக்கல் என்ற வரியையும் 15வது வரியில் உள்ள “யிலி” என்பது இறையிலையை குறிக்கும் என்பது தெளிவு அடுத்து வரும் ” காலிங்கரா …..” போன்ற விடுபட்ட வரிகளில் காலிங்கராயன்,ஆதித்தன், சேதிராயன் என்ற பெயர்களும் ,
16 வது வரியில் உள்ள “ட்டோர்” என்பது “உள்ளிட்டோர்” என்பதாக இருக்க வேண்டும் என்பது கல்வெட்டுக்களை நிறைய பார்த்து ஆழமாக புரிந்து கொண்டவர்களுக்கு விளங்ககூடிய செய்தியாகும்..

அடுத்து வரும் 17 முதல் 20 வரை உள்ள வரிகள் நிலத்தின் எல்லையை சுட்டிகாட்டுகின்றன என்பதை உணர்ந்து கொள்ள முடியும்.

அதற்கு அடுத்து வரும் 20,21 ம் வரியில் உள்ள “நாமத்துக்காணியாக” என்ற வரிகள் உள்ளன.

இவற்றை எல்லாம் வைத்துப்பார்க்கும் போது காலிங்கராயன், சேதிராயன்,ஆதித்தன் மற்றும் காய வடுகன் உள்ளிட்ட 48 அகம்படியர்களுக்கு இறையிழியாக வழங்கப்பட்ட நிலங்கள் அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டு கோவிலுக்கு திருநாமத்துக்காணியாக வழங்கப்பட்டதை அறிய முடிகின்றது.
ஆம் இதுவே குறிப்பிட்ட இந்த 48 அகம்படியர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையாகும்.

பொதுவாக பாடிகாவல் அல்லது உள்நாட்டை காவல் செய்வதற்கு பணமாக ஊழியம் அளிக்கப்படாது .மாறாக இறையிழியாக( வரி செழுத்த தேவையில்லாத நிலம் )வழங்கப்படும். அதில் விளையும் விளைச்சலை கொண்டு பாடிகாவல் செய்வோர் வருமானம் பெற்றுக்கொள்ள முடியும்.

இறையிழியாக வழங்கப்பட்ட நிலத்தை பறிமுதல் செய்ததின் மூலம் இந்த நிலத்தில் வழியே அவர்களுக்கு கிடைத்த வருமானத்தை தடைசெய்து தண்டனை அளித்துள்ளனர்.

ஆனால் இந்த 48 அகம்படியர்களும் வெறும் காவலர்கள் தானா என்றால், இல்லை!

இந்த கல்வெட்டு ஆரம்பமே இந்த அகம்படியர்களை குறிக்கும் போது “படுவூர் நாடாழ்வாரான” என்று ஆரம்பிக்கிறது. ஆகவே இவர்கள் குறிப்பிட்ட பகுதியில் ஆட்சியாளர்களாக இருந்துள்ளனர். ஆகவே இவர்கள் ஆளும் பகுதியில் காவல்பணியை மேற்கொள்ளும் பொறுப்பும் இவர்களுக்கு இருந்துள்ளது. இக்கல்வெட்டு குறித்து எழுதிய பல்வேறு அறிஞர்களும் இதே கருத்தையே தெரிவித்துள்ளனர்.

ஆட்சியாளர்கள் காவல் பணியை முதன்மையாக வைப்பது என்பதாலேயே அரசருக்கு காவலன் என்ற பெயரும் விளங்கியது.
இது இன்றும் நமது நாட்டில் உள்ள முதலமைச்சர் பல்வேறு துறைகளுக்கும் தனித்தனி அமைச்சர்களை நியமித்தாலும் காவல்துறையை மட்டும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது போலவும் , முப்படையின் தலைவராக குடியரசுத்தலைவர் இருப்பதை போன்றதாகும்.

சரி இப்போது கட்டுரையின் அடுத்த விசயங்களுக்கு நகர்வோம்.

சோழர்களின் குடிவழியினரான அகம்படியர்கள்
————————————
சோழ அரசர்கள் இன்றைய அகம்படியர் இனத்தில் இருந்து உருவானவர்கள் என்பதற்கு ஏற்கவே பல சான்றுகளை எடுத்துக்காட்டியுள்ளோம்.

அதை மீண்டும் ஒருமுறை நிரூபிப்பதற்கான மற்றுமொரு ஆதாரமாக இக்கல்வெட்டு செய்தி விளங்குகின்றது.

குறிப்பிட்ட இந்த கல்வெட்டில் 48 அகம்படியார்களில் காலிங்கராயன், சேதிராயன், ஆதித்தன் என 4 பேர் பெயர்கள் சுட்டிக்காட்டப்படுகின்றன. சேதிராயன், சித்தவடவன் போன்ற சோழர்களின் இந்த குடிப்பெயர்களை அன்று அகம்படியர் சாதியினரும் , பார்க்கவகுல உடையார் சாதியினர் மட்டுமே பயன்படுத்தியுள்ளனர். இக்கல்வெட்டில் உள்ள பெயர்களின் சோழர்களின் குடிப்பெயரான சேதியராயன் என்ற பெயரும் ஒரு அகம்படியருக்கு பெயராக காட்டப்பட்டுள்ளது.

ஆனால் சேதிராயன் என்ற பெயரோடு சேர்த்து “ஆதித்தன் ,ஆதவன் ” என்ற சோழர் குடிப்பெயர்களையும் அகம்படியர் சமுதாயம் சோழர் காலத்திலும் ,சோழர் காலம் முடிவடைந்த பின்னரும் பயன்படுத்தியுள்ளது. குறிப்பிட்ட இந்த திருவொற்றியூர் கல்வெட்டு மூலமும், பொற்பனைகோட்டை பகுதியில் கிடைத்த சங்ககால கல்வெட்டு செய்தி மூலமும் உறுதியாகின்றது.

சோழர்கள் அகம்படியர் இனத்தவர் என்பதற்கு நிரம்ப ஆதாரங்களுடன் விரிவான கட்டுரை பின்னர் தனியாக வெளியிடப்படும் .இப்போது கட்டுரையின் அடுத்த பாகத்திற்கு நகர்வோம்.

வேற்று அரசர்களின் வருகையால் வீழ்ச்சியடைந்த அகம்படியார்கள்
—————————————————-
5000 வருடங்கள் முன்பான சிந்து சமவெளி நாகரீகம் தொடங்கி சோழர்,பாண்டியர் என பல்வேறு அரசர்கள் காலத்தில் சிறப்புற்று கல்வெட்டுக்களில் தொய்வில்லாமல் தொடர்ந்து சிறப்பாக குறிக்கப்பட்ட அகம்படியர் இனம் வேற்று மொழி அரசர்களின் ஆவணங்களில் முற்றிலும் மறைந்து போயிருத்தலை காணும் போது வேற்று மொழி அரசர்களால் புறக்கணிக்கப்பட்டதை புரிந்து கொள்ள முடிகின்றது.

இன்று தெலுங்கர்,கர்நாடகர் உள்ளிட்ட வடுகர்களால் நாங்கள் பாதிக்கப்பட்டோம் என்று கூறிக்கொள்ளும் பல்வேறு சாதிகளும் உண்மையில் வடுகர் ஆட்சிக்கு முன் கல்வெட்ட்டு போன்ற ஆவணங்களில் காணப்படாத சாதியினர் குறிப்பிட்ட இந்த வடுகர் ஆட்சியின் போது தான் பல உரிமைகள் வழங்கப்பட்டு கல்வெட்டு,செப்பேடு போன்ற ஆவணங்களில் பெரிதும் காணப்படுகின்றனர்.

ஆனால் 5000 வருடங்கள் முன்பு இருந்து சிறப்பாக ஆவணங்களில் காட்டப்பட்ட அகம்படியர் இனம் சோழர் ஆட்சிக்கு பின் சிதறடிக்கப்பட்டும், பாண்டியர் ஆட்சியில் ஆதிக்கம் செழுத்தியும் பின்னர் விஜயநகரம் மற்றும் நாயக்கர் ஆட்சியாளர்களின் காலங்களில் முற்று முழுதாக காணப்படாதற்கான காரணங்களை என்ன என்ற கேள்விக்கு ஓர் விடையாக இக்கல்வெட்டு செய்தி அமைகின்றது. அதை பின்வரும் செய்தியில் காணலாம்.

வடுகர் என்ற பெயர் -துளுவ வேளாளர் தோற்றுவாய்
———————————————–
பழந்தமிழ் குடியான அகம்படியர் பேரினம் நூற்றுக்கணக்கான கல்வெட்டு செய்திகளில் குறிக்கப்பட்டிருந்தாலும் வடுகர் என்ற பெயரில் அகம்படியர் ஒருவர் குறிக்கப்படுவதான முதலும் கடைசியுமான கல்வெட்டு இது ஒன்று தான்.

இக்கல்வெட்டு செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள 4 பெயர்களில் 4வது பெயராக காய வடுகர் என்ற பெயரில் அகம்படியர் ஒருவரும் சுட்டிக்காட்டப்படுகின்றார்.

ஆனால் பழந்தமிழ் குடியினரான அகம்படியர்கள் வடுகர் என்ற பெயருடன் காணப்படுவது எதனால்?

காரணம் ஒன்று தான்.கடைசி சோழ அரசும் கி.பி 1279ம் ஆண்டு முடிவடைகின்றது.
அதன் பின் விஜநகர ஆட்சியாளர்களின் பிரதிநிதிகள் தமிழகத்தை ஆள தலைப்படுகின்றனர். வடுகர்களான விஜய நகர ஆட்சியாளர்களிடம் நன்மதிப்பை பெற விரும்பிய அகம்படியர்கள் தங்களை வடுகர் என்றும் துளுவர் என்ற வகையிலும் அடையாளப்படுத்த முனைகின்றனர்.

இதே கருத்தை தான் இல.தியாகராஜன் போன்ற முத்த வரலாற்றிஞர்கள் தங்கள் நூல்களில் குறிப்பிடுகின்றனர்.

ஆனாலும் வடுகர்களான விஜயநகர ஆட்சியாளர்களுக்கும் ,பூர்வகுடி ஆட்சியாளர்களான அகம்படியர்களுக்கும் சரிவர ஒத்துப்போகவில்லை என்பதையே இக்கல்வெட்டு செய்தியும் வடுக ஆட்சியாளர்களின் ஆவணங்களில் அகம்படியர்கள் காணப்படாததும் இந்த உண்மையை எடுத்துக்காட்டுகின்றது.

அதாவது பாடிகாவல் உரிமை என்பது தந்தைக்கு பின் மகன் என பரம்பரை பரம்பரையாக தொடர்வது ஆகும்.

இந்த கல்வெட்டு செய்தியின் 5 மற்றும் 6 வது வரியில் “அகம்படியார் நெடுநாட்பட ஊரிலே குடியும் இருந்து காவலும் காத்து இருந்து” என்ற வரிகள் மூலம் இவர்கள் பரம்பரையாக இவ்வூரில் குடி இருந்து காவல் செய்தவர்கள் என்பதை அறிந்து கொள்ள முடியும்.மேலும் கல்வெட்டு ஆரம்பத்தில் வரும் “படுவூர் நாடாழ்வார் அகம்படியரில்” என்ற வரிகள் மூலம் இவர்கள் இப்பகுதியின் ஆட்சியாளர்கள் என்பதையும், ஆதித்தன் ,சேதிராயன் என்ற பெயர்கள் மூலம் இவர்கள் சோழர் குடியினர் என்பதையும் அறிந்து கொள்ள முடியும். இவற்றை எல்லாம் சேர்த்து வைக்கும் போது சோழர் காலத்திலேயே நாட்டு ஆட்சிப்பணிக்காக நாடாழ்வார்களாக நியமிக்கப்படிருந்த இவர்கள் விஜயநகர ஆட்சியாளர்கள் காலத்தில் தங்கள் பணியில் மெத்தனமாக அல்லது அவர்களது கடமையை புறக்கணித்து வாழ்ந்திருந்தனர் என்பது தெரிகிறது.

ஆனால் நெடு நாள் செய்துவந்த காவல் பணியை புறக்கணிக்க என்ன காரணம்?
ஒரே காரணம் தான் இருக்க முடியும் என்று பிற்காலத்தில் உணரப்படும் செய்திகளால் புரிந்து கொள்ள முடிகின்றது.

சோழர்களின் காலத்தில் சிறப்புற்றிருந்த அகம்படியார்கள் சோழர்கள் வீழ்ந்த பின் அமைந்த விஜய நகர ஆட்சியாளர்களிடம் வடுகர் என்றும் துளுவர் என்று மாற்றிக்கொண்டு வேற்று மொழியாளர்களிடம் நன்மதிப்பு பெற விரும்பிய போதும் வேற்று மொழியினருக்கும் அகம்படியர்களுக்குமான போக்கு சுமூகமாக இல்லை என்பதாலேயே வேற்று மொழி ஆட்சியாளர்களின் அகம்படியர்கள் புறக்கணிக்கப்பட்டனர் என்று தெரிகிறது. அதானாலேயே தொன்று தொட்டு தொடர்ச்சியாக தமிழ் மன்னர்களின் வரலாற்று ஆவணங்களில் காணப்படும் அகம்படியர்கள் வேற்று மொழியினரின் ஆவணங்களில் காணப்படவில்லை என்று தெரிகிறது.

அகம்படியார் மட்டுமல்ல பார்க்கவகுல உடையார், செங்குந்தர் போன்ற ஆதி போர்குடியினரும் வேற்று மொழி ஆட்சியாளர்களிடம் பணி செய்வது குறைந்ததும் இதனை ஈடு செய்ய் மறவர் மற்றும் கள்ளர் சாதியினர் கொண்டு வடுகர்கள் தங்கள் படையையும் , பாடி காவல் பணியையும் நிறைவு செய்தனர் என்று தெரிகிறது.

அகம்படியர், பார்க்கவகுல உடையார், செங்குந்தர் போன்ற ஆதி போர்குடியினர் வடுகர் படை மற்றும் ஆவணங்களில் குறைந்து காணப்படுவதும் வடுகர் அல்லாத தமிழ் சாதியில் மறவர் ,கள்ளர் போன்றோர் பாளையங்கள்,ஜமீன்கள் பெற்றதும் வடுகர்களின் ஆட்சியில் என்பது இந்த ஜமீன்கள் தோற்றம் வடுகர் வருகைக்கு பின் தொடங்குவதை வைத்தே சொல்ல முடியும். மேலும் நாயக்கர்கள் போன்ற வடுகர்களே ,மறவர் இனத்தை சேர்ந்த சேதிபதிகள் போன்ற அரசுகளை உருவாக்கியதன் மூலமும் அறிந்து கொள்ளமுடியும்.

வடுகர் என்ற பெயரை வைத்து தெலுங்கராகவோ ,கர்நாடகர் என்றோ முடிவுகட்டலாகுமா?
——————————————————
அது சரி. அகம்படியரின் பெயரில் வடுகர் என்ற அடைமொழி வருகின்றதே! அப்படியென்றால் அகம்படியர்கள் வடுகர்களா? என்ற விபரீத முடிவுக்கு வரவேண்டியதில்லை!

ஏனென்றால் 5000 வருடங்களாக பழந்தமிழ் குடியாக வரலாற்றில் காட்டப்படும் அகம்படியர் இனம் வடுகர் ஆட்சி தமிழ்நாட்டில் தொடங்கும் போது தான் வடுகர் என்றும் துளுவர் என்றும் தங்களை அடையாளப்படுத்துகின்றனே தவிர இதற்கும் முன் எந்த ஆவணங்களிலும் அகம்படியர் வடுகர் என்று பதிவாகவில்லை.

இது முழுக்க முழுக்க வடுகர்களின் ஆதரவை பெற முயன்ற நடவடிக்கையே என்பதை இன்று தமிழ் சாதிகளாக அறியப்படும் மறவர்,கள்ளர், வெள்ளாளர், வன்னியர், முத்தரையர், நாடார்(சான்றார்) ,தேவேந்திர குல வேளாளர்( பள்ளர்) போன்றவர்கள் தங்களை வடுகர் என்று அழைத்துக்கொள்ளும் சான்று மூலம் அறிந்து கொள்ள முடியும்.

உதாரணத்திற்கு சில செய்திகள்

சிவகங்கை சமஸ்தானத்தை ஆண்ட இரண்டாம் மன்னரான மறவர் சாதியை சேர்ந்த முத்து வடுகநாத பெரிய உடையாத் தேவர் தனது பெயரிலேயே வடுகர் என்ற பெயரை வைத்திருந்தார் என்பது எல்லோரும் அறிந்த செய்தியாகும்.

ஆதாரம் : பார்க்க இணைப்பு 6 : நூல் சீர்மிகு சிவகங்கை சீமை ,ஆசிரியர் எஸ்.எம்.கமால் ,நூல் பக்க எண் 87

இராமநாதபுர சேதுபதிகள் ஒருபடி தாண்டி சென்று இராமநாதபுர சமஸ்தானத்தின் அரசியல் மொழியாக தெலுங்கு கையாளப்பட்டது. மேலும் சேதுபதி மன்னர்கள் தெலுங்கில் தங்கள் கையெழுத்து இட்டு ஆணைகளை வெளியிட்டனர்

ஆதாரம் : பார்க்க இணைப்பு 7 : நூல் பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள் பக்கம் எண் 136
ஆசிரியர் எஸ்.எம் கமால், முகம்மது செரிபு

இதே போல் கள்ளர் சாதியை சேர்ந்த புதுக்கோட்டை தொண்டைமான்கள் தெலுங்கு மொழியை ஆதரித்தனர். ஆகையால் தெலுங்கு மொழியில் பல காவியங்கள் எழுதப்பட்டன. மன்னரான இராயரகுநாத தொண்டைமான் (கிபி 1769 – 1789 வரை) ஒரு புகழ்வாய்ந்த கவிஞராக இருந்தார். இவர் ‘ பார்வதி பரிநயமு’, ‘ கவிஜனோன்னி வாணி’ என்ற இரண்டு தெலுங்கு காவியங்களை எழுதியுள்ளார்.

அதே போல் வெள்ளாளர் சாதியை சேர்ந்த ஆளுடையான் வடுகன் என்பவன் பாளையில் நிலம் வாங்கிய செய்தி தஞ்சாவூர் பாபநாசம் வட்டம் குடிக்காடு ஊரில் கிடைத்த 11ம் நூற்றாண்டு கல்வெட்டு செய்தியில் பதிவாகியுள்ளது.

ஆதாரம் : பார்க்க இணைப்பு 8 : நூல் : ஆவணம் இதழ் 25 ,பக்கம் 33,34

சைவ வேளாளர் மடமான தருமபுரி ஆதினத்தில் வித்வானாக விளங்கிய வடுக நாத தேசிகர் என்ற சைவ வேளாளர் வடுகர் என்ற பெயரை கொண்டிருந்தார். குறிப்பிட்ட இந்த வடுக நாத தேசிகரின் தந்தை வைத்திய நாத தேசிகர் எனும் சைவ வேளாளர் ஆவார்.

ஆதாரம் : பார்க்க இணைப்பு 9 : நூல் : திருமுல்லைவாயிற்ப்_புராணம் ,,முதற் பக்கம்

1951ம் ஆண்டில் எடுக்கப்பெற்ற சென்சஸ் ரிப்போர்டில் வடுக வெள்ளாளர், வடுக சான்றார் (நாடார்) , வடுக வள்ளுவர் போன்ற தமிழ் சாதிகள் பல வடுகர் சாதிப்பிரிவுகளாக பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஆதாரம் : பார்க்க இணைப்பு 10 : நூல் : Census of India_1951 பக்கம் 12

இதே போல் வன்னியர் சாதியின் பாளையமாக கருதப்படும் உடையார் பாளையம் ஜமீன் அரசரான காலாட்கள் தோழ உடையார் தனது அவையில் தெலுங்கு மொழிக்கு பெரும் முக்கியத்துவம் அளித்து உள்ளார் என்பதையும் அவரது அலுவல் மொழியாக தெலுங்கு இருந்ததும் அறிய முடிகின்றது.

ஆதாரம் : பார்க்க இணைப்பு 11 : தெலுங்கு மற்றும் தமிழில் உள்ள காலாட்கள் தோழ உடையார் கல்வெட்டு..

இன்று தேவேந்திர குல வேளாளர் என்ற பள்ளர் சாதியினரின் கி.பி 1528ம் ஆண்டு காலத்தியதாக மதிக்கப்பெறும் பழனி செப்பேட்டில் 180 முதல் 187 வரிகளில் பள்ளரின் சாதி பிரிவுகளாக “வடுக பள்ளற்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆதாரம் : பார்க்க இணைப்பு 12 : பழனி தேவேந்திரர் செப்பேடு

வீட்டிலும் வெளியிலும் தமிழ் பேசும் பல்வேறு தமிழ் குடிகளும் வடுகர் என்று தங்கள் பெயரை மாற்றிக்கொண்டதும் , தெலுங்கு மொழிக்கு முக்கியத்துவம் அளித்துள்ளதற்கும் இது போன்ற நூற்றுக்கணக்கான ஆவணங்கள் சான்றாக உள்ளன. இருப்பினும் காலம் கருதி இத்தோடு முடிக்கின்றோம். .இவை எல்லாம் செய்ததற்கு வடுகர்களான விஜய நகர மற்றும் நாயக்க மன்னர்களின் நட்பையும் ,நன்மதிப்பையும் பெறுவதற்காகவும் தான் என்பதை புரிந்து கொள்ள வேண்டுமே தவிர இவர்களையே வடுகர் என்று கருதிவிடல் அறியாமையில் போய் முடியலாம்.

வடமாவட்டத்தில் இருப்பதும் அகம்படியரே! அவர்களும் காவல் பணி செய்துள்ளனர்
—————————————————–
தமிழ்நாட்டு மட்டுமல்ல, பாண்டிச்சேரி, ஆந்திரா,கர்நாடகா மற்றும் உலகமெங்கும் வாழும் அகமுடையார்கள் எல்லாம் சுமார் 200 வருடங்கள் முன்புவரை அகம்படியர் எனும் ஒரே பெயரிலேயெ இருந்துள்ளனர் என்பது கல்வெட்டு போன்ற வரலாற்று ஆவணங்கள் மூலம் அறிந்து கொள்ளும் உண்மையாகும். 200 வருடங்களுக்கு பின்பாகவே அகமுடையார் என்ற பெயர் சாதியின் பெயராக மாற்றம் கண்டு இன்று உலகம் முழுவதும் உள்ள அகம்படியர்கள் ,அகமுடையார் என்ற ஒற்றை பெயருடன் காணப்படுகின்றனர்.

உண்மை இவ்வாறிருக்க , சமீபகாலமாக அகமுடையார் சமுதாயத்திற்கு சம்பந்தமில்லாத மாற்று சாதியை சேர்ந்த சில மாற்று சாதிகள் தென் மாவட்டத்தில் உள்ளவர்கள் அகம்படியர் எனும் போர்குடியினர் என்றும் , வடமாவட்டத்தில் உள்ளவர்கள் அகமுடையார்கள் அவர்கள் வேளாளர் என்றும் குழப்பம் செய்ய முயன்றனர்.

இந்த கூற்றை உடைக்கும் மற்றொமொரு கல்வெட்டு ஆதாரம் இதுவாகும். குறிப்பிட்ட இந்த 700 வருடத்திற்கு முன்பான இந்த கல்வெட்டு வடமாவட்டத்தில் உள்ளவர்களை அகம்படியினர் என்றே குறிப்பதோடு வடமாவட்ட அகம்படியர்களும் காவல் பணியை ஏற்று போர்க்குடியினராகவே காட்டப்பட்டுள்ள உண்மையை உரக்கச் சொல்கின்றது.

மேலும் இன்று அகமுடையார் என்று அறியப்படும் சாதியினர் தென் மாவட்டம் ,வட மாவட்டம் என்றில்லாமல் அன்று அகம்படியினர் என்ற ஒரே பெயரிலேயே அழைக்கப்பட்டிருந்தனர் என்பதையும் புரிந்து கொள்ளவேண்டும்.

கட்டுரை ஆக்கம்
மு.சக்தி கணேஷ் சேர்வை(அகமுடையார்)
அகமுடையார் ஒற்றுமைக்காக.

நன்றி:
அகமுடையார் அரண் நிறுவனர் திரு.பாலமுருகன் அகமுடையார், தென் இந்திய கல்வெட்டு தொகுதி மற்றும் 48 அகம்படியர் தொடர்பான ஆவணங்களை அளித்தமைக்காக







இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

We will be happy to hear your thoughts

Leave a reply

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo