First
“தமிழ்த் தாத்தா”
உ.வே.சாமிநாத ஐயர் அவர்களின்
வரலாற்றுத் தேடலில்….
“மாமன்னர் மருதுபாண்டியர்கள்”
———————————————————-
“தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத ஐயர்” தமிழுக்கு செய்த அரும்பணி போற்றதற்குரியது. தமிழகம் முழுவதும் பயணித்து பலரது வீடுகளின் பரண்களிலும், அலமாரிகளிலும் கவனிப்பற்று கிடந்த தமிழ் ஏட்டுச்சுவடிகளை சேகரித்து அவற்றை பதிப்பித்து அடுத்த தலைமுறைகளுக்கு கையளித்தார். ஏட்டுச்சுவடிகளை தேடி அழைந்த அவரின் வரலாற்றுத் தேடலில் பலரிடம் கேட்டறிந்த செவிவழி செய்திகளை, பிறகு நூலாக தொகுத்து 1936 ஆம் ஆண்டு வெளியிட்டார். “நான் கண்டதும் கேட்டதும்” என்ற நூல், பல கட்டுரைகளை உள்ளடங்கிய இந்நூலில் இரண்டு கட்டுரைகள் மாமன்னர் மருதுபாண்டியர்கள் வரலாறு பற்றியது. அந்த கட்டுரைகளில் ஒன்றே கீழ்காணும் இக்கட்டுரையாகும்.
“முள்ளால் எழுதிய ஓலை”
———————————————-
“காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது. ”
இதற்கு முந்திய வரலாற்றிற் கூறப்பட்ட மருதுபாண்டியரைப் பற்றிய பல செய்திகள் அங்கங்கே கர்ண பரம்பரையாக வழங்கி வருகின்றன.
அவர் பரோபகார சிந்தனையும், சிவபக்திச் செல்வமும், புலவர்களை ஆதரிக்கும் இயல்பும், தம் குடிகளைத் தாய் போல் காப்பாற்றும் தகைமையும் வாய்ந்தவர்.
அவருடைய முன்னோர்கள் அந்த சமஸ்தானத்து அதிபதிகள் அல்லர்; ஆயினும் அவருக்கு முன்பு இருந்த
அரசருடைய உயிரை அவர் புலி வாயினின்றும் காப்பாற்றியதனாலும், இணையற்ற வீரராக இருந்ததலும் அந்த சமஸ்தானத்தின் தலைவராக அவர் பின்பு ஆக்கப்பட்டார்.
அவருடைய ஆஸ்தானத்தில் 21 தமிழ் வித்துவான்கள் இருந்தார்களென்பர். சவ்வாதுப் புலவர், முத்துவேலுப் புலவர் முதலிய பலர் அவரைப் பற்றிப் பாடிய செய்யுட்கள் இப்பொழுதும் வழங்குகின்றன. அவரால் அப்புலவர்களுக்கு அப்பொழுதப்பொழுது சுரோத்திரியமாக விடப்பட்ட கிராமங்கள் உண்டு. அவருடைய வீரப்பிரதாபமும், கொடைப் புகழும் புலவர்களாலே பலவாறு பாராட்டப்பெற்றவை. சில வருஷங்களுக்கு முன் வரையிலும் சிவகங்கையைச் சுற்றிய இடங்களில் கிராமந்தோறும் அவரைப் பற்றிய செய்திகளையெல்லாம் கதை கதையாக முதியவர்கள் சொல்லி வந்ததுண்டு.
மருதுபாண்டியர் தம் இறுதிக் காலத்தில் வலியவரான சிலருடைய பகைமைக்கு இலக்கானார். பகை வீரர்கள் பலமுறை அவரைப் பிடிக்க எண்ணி முயன்றனர். அவர்களுடன் போராடியும், தந்திரமான செயல்கள் புரிந்தும் மருதுபாண்டியர் அவர்கள் கையில் அகப்படாமல் இருந்தார். ஒரு சமயம் அவர் தம் சமஸ்தானத்தைச் சார்ந்த திருக்கோஷ்டியூரென்னும் தலத்தில் பெருமாள் கோயிலுக்கு எதிரிலுள்ள மண்டபமொன்றில் தங்கி இருந்தார். அவருடைய வலக்கையில் ஒரு சிலந்தி உண்டாகி அவரை வருத்தியது. அதனால் அவர் சிறிது துன்புற்று அங்கே இருக்கையில், “பகைவருடைய காலாட்கள் தேடி வருகிறார்கள்; இந்த ஊர் எல்லைக்குள் வந்து விட்டனர்” என்ற செய்தியை ஒரு அந்தரங்க வேலையாள் அவரிடம் வந்து தெரிவித்தான்.
அவன் கூறியதை மருதுபாண்டியர் கேட்டவுடன் வீரத்தால் அவருடைய இரத்தம் கொதித்தது. ஒர் ஆடையை உடனே கிழித்து அவர் கைச் சிலந்தியை இறுகக் கட்டிகொண்டார். தம்முடைய குதிரையை வருவித்து அதன்மேலேறிக் குதிரைக் காரனையும் உடனழைத்துக் கொண்டு புறப்பட்டார். கையிலுள்ள வளரி ஒன்று தான் அவருடைய தனித் துணையாக இருந்தது. அவ்வாயுதம் மரத்தாலேனும், இரும்பினாலேனும், வெண்கலத்தி னாலேனும் செய்யப்பட்டிருக்கும். அதை வீசுவதன் மூலம் பலரை ஒரே தடவையில் கொன்றுவிடும் ஆற்றல் மருது பாண்டியருக்கு உண்டு.
மருதுபாண்டியர் குதிரையின் மேல் வருவதை அறிந்த விரோதிகள் அவரை வளைத்துக் கொண்டனர்; அப்பொழுது மாலைக்காலம். தம்மை வளைத்துக் கொண்ட வீரர்கள் மேல் தம் வளரியை வீசி யெறிந்து மருதுபாண்டியர் கலக்கினார். அது எறிவதும் அதுபட்ட வீரர்கள் வீழ்வதும் அவர்களை வீழ்த்தி நெடுந்தூரத்தில் விழுந்த அவ்வாயுதத்தை அவரிடம் குதிரைக்காரன் கொணர்ந்து கொடுப்பதுமாகச் சிறிது நேரம் போர் நிகழ்ந்தது. எதிர்த்த வீரர்களை மருதுபாண்டியர் சின்னபின்னமாக்கினார். அவர்களை யெல்லாம் சிதைத்து வேகமாகககுதிரையை அவர் செலுத்தலானார். பின்னே வந்த சிலர் மேலும் மேலும் அவரைத் துரத்தினர். அவர்கள் கண்ணிற்கும் கைக்கும் அகப்படாமல் இரவெல்லாம் குதிரையை மனோ வேகத்தில் அவர் விட்டுக்கொண்டு போனார்.
விடியற்காலையில் ஒரு கிராமத்தை அவர் அடைந்தார். இரவு முழுவதும் உணவில்லாமையாலும் பிடிக்க வந்தவர்களோடு போராடியதாலும் அவருக்கு அதிகமான பசியும் தாகமும் உண்டாயின. பிறகு அவர் அவ்வூர் அக்கிரகாரத்தை நோக்கி வந்தார். அங்கே ஒரு கூரை வீட்டின் வெளியே சில குழந்தைகள் நிற்க, ஒரு கிழவி கோலம் போட்டுக்கொண்டிருந்தாள். அவ்வீட்டின் முன்னே மருதுபாண்டியர் தம் குதிரையை நிறுத்தினார்.
கிழவி தலை நிமிர்ந்து பார்க்கையில் மருதுபாண்டியருடைய கம்பீரமான தோற்றம் அவள் மனதில் அன்பை உண்டாக்கியது; உடனே அவள், “யாரப்பா! உனக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டாள். “அம்மா! பசியும் தாகமும் என்னை மிகவும் வருத்துகிறறன. ஏதாவது இருந்தால் போடவேண்டும்” என்றார் மருதுபாண்டியர். அவருடைய குரல் இரவில் அவர் அடைந்த களைப்பை விளக்கியது. “இராத்திரி தண்ணீரில் போட்டுள்ள பழைய சோறுதான் இருக்கிறது; வேண்டுமானால் போடுகிறேன் அப்பா! “என்று அன்பு கனிந்த வார்த்தைகளில் அக்கிழவி
விடையளித்தாள்.
“எதாயிருந்தாலும் எனக்கு இப்போது அமிர்தமாகும். மற்றொரு சமாச்சாரம்; நான் இராத்திரி முழுவதும் பிரயாணம் செய்து தூக்கமே இல்லாமல் கஷ்டமடைந்தேன். ஆகையால் உண்ட பிறகு மறைவாக ஒறிடத்தில் இந்தக் குதிரையைக் கட்டிவிட்டு நான் படுத்துத் தூங்கவேண்டும். அதற்கு இடம் கிடைக்குமா? “என்றார். “இதுதானா பெரிது! இப்போது இந்த வீட்டிற்குப் பின்னே ஒரு கொட்டகை இருக்கிறது. அதன் பக்கத்தில் குதிரையை நீ கட்டிவிட்டுப் படுத்துத் தூங்கலாம். இன்றையஇன்றையக் கெல்லாம் தூங்கினாலும் யாரும் எழுப்ப மாட்டார்கள். குதிரைக்கு ஏதாவது தீனி கொடுக்கிறேன்” என்று சொல்லி விட்டு அவள் அன்போடு பழையமுதும் பழங்கறியும் மருதுபாண்டியருக்கு இட்டாள். அவற்றை உண்டு அவரது பசி அடங்கியது. அந்த உணவு இராஜ போஜனத்திலும் சிறந்ததாக அவருக்கு இருந்தது. உண்ட பிறகு அந்தக் கிழவி கொடுத்த ஓலைப்பாயொன்றை விரித்துக் குதிரைச் சேணத்தையே தலையணையாக வைத்துக் கொண்டு அவர் அக்கொட்டகையிலே படுத்துக் கொண்டார். கண நேரத்தில் தூக்கம் வந்து விட்டது. மெய் மறந்து நெடுநேரம் அவர் தூங்கினார். குதிரைக்காரனும் உண்டு விட்டு ஒரு பக்கத்தில் படுத்துக் கொண்டான்.
மருதுபாண்டியர் விழித்து எழுகையில் சூரியன் உச்சியில் இருந்தான். அந்தக் கூரை வீட்டில் உண்ட உணவும் உறங்கிய உறக்கமும் அவர் உடலுக்கு ஒரு புதுவன்மையையும், உள்ளத்திற்கு ஒரு புதிய உணர்ச்சியையும் அளித்தன. அவர் மனதில் நன்றியறிவு பொங்கி வழிந்தது. தமக்கு அன்போடு உணவு தந்த அந்தக் கிழவிக்குரிய கைம்மாறாக இந்த உலகத்தைக் கொடுத்தாலும் ஈடாகாதென்று அவர் கருதினார்.
“அம்மா! ” என்று கிழவியை அழைத்தார் மருதுபாண்டியர். கிழவி வந்தாள். “உங்களுக்குப் பிள்ளைகள் இருக்கிறார்களா? இந்த குழந்தைகள் யார்?” என்று அவர் கேட்க, அயலூருக்கு ஒரு விசேஷத்துக்காக என்னுடைய பிள்ளைகள் போயிருக்கிறார்கள். இவர்கள் அவர்களுடைய குழந்தைகள்” என்றாள் கிழவி.
” உங்கள் வீட்டில் ஏடு எழுத்தாணி இருந்தால் கொண்டு வாருங்கள்” என்று மருதுபாண்டியர் சொல்லவே, கிழவி, “இங்கே ஏடேது? எழுத்தாணியேது? அவர்கள் எங்கே வைத்திருக்கிறார்களோ தெரியாதப்பா” என்றாள். உடனே அவர் குதிரைக்காரனை அழைத்து அந்த வீட்டுக் கூரையிலிருந்து ஒரு பனையோலையும், பக்கத்திலிருந்த வேலியிலிருந்து ஒரு முள்ளையும் கொண்டுவரச் சொன்னார். அவன் கொணர்ந்து கொடுத்தான். அந்த முள்ளைக் கொண்டு அவ்வோலையில் அவர் ஏதோ எழுதலானார். கிழவி அவர் எழுதுவதை வியப்போடு பார்த்துக் கொண்டு நின்றாள். மருதுபாண்டியர் அந்தக் கிராமம் அக்கிழவிக்குச் சுரோத்திரியமாக விடப்பட்டதென்று எழுதிக் கையெழுத்திட்டார். பிறகு முள்ளாலெழுதிய அந்தத் தர்ம சாஸனத்தைக் கிழவியின் கையிலே கொடுத்து, அம்மா! சிவகங்கை சமஸ்தான அதிகாரிகளிடம், இதை நீங்கள் கொடுத்தால் உங்களுக்கு ஏதாவது அனுகூலம் உண்டாகும்” என்று சொல்லிவிட்டு அவர் குதிரையின் மேலேறிக் குதிரைக்காரனையும் அழைத்துக்கொண்டு போய் விட்டார்.
பழையது போட்ட கிழவி தன் குமாரர்கள் ஊரிலிருந்து வந்த பிறகு அவர்களைக் கொண்டு அவ்வோலையேச் சிவகங்கை அதிகாரிகளிடம் காட்ட எண்ணினாள். ஆனால் சில நாள் கழித்து அந்த சமஸ்தானத்தை விரோதிகள் கைப்பற்றிக் கொண்டதை அறிந்து வருந்தினாள்.
மருதுபாண்டியரை அப்பால் பகைவர்கள் பிடித்துச் சிறையில் வைத்தனர். சிலகாலம் சென்ற பிறகு அவருடைய அந்திய காலத்தில், “உம்முடைய விருப்பம் யாது?” என்று பகைவருடைய முக்கிய அதிகாரிகள் கேட்டார்கள். “நான் சுரோத்திரியமாக யார் யாருக்கு எந்த எந்தக் கிராமத்தை அளித்தேனோ, எந்த எந்தப் பொருளை வழங்கினேனோ அவைகளெல்லாம் அவரவர்களுக்கு உரியனவாகவே இருக்கும்படி செய்யவேண்டும்; இதுதான் என் பிரார்த்தனை; வேறு ஒன்றும் இல்லை” என்று அவர் வேண்டிக் கொண்டார்.
நன்றியறிவின் மிகுதியால் எழுந்த அவருடைய இறுதி விருப்பத்தை விரோதிகள் அங்கீகரித்து நிறைவேற்றினார்கள்.
மருதுபாண்டியர் வழங்கிய பொருள்கள் உரியவர்களுக்குக் கொடுக்கப்படுகின்றன என்ற செய்தியை அறிந்த கிழவி, தன்னிடமுள்ள ஓலையைக் காட்டினால் ஏதாவது கிடைக்கலாமென்ற நம்பிக் கையினால் அதனை அனுப்புவித்தாள்; தான் இந்த *கிராமத்தைச் சுரோத்திரியமாகப் பெற்றாள். தன் வீட்டிலே பழையது உண்ட வீரர் மருதுபாண்டிய ரென்பதை அப்பொழுதுதான் அவள் உணர்ந்தாள். முள்ளால் எழுதிய ஓலைக்கு அவ்வளவு மதிப்பிருப்பதைக் கண்டு அவள் வியந்தாள்; மருதுபாண்டியருக்கு இருந்த நன்றி அறிவை நினைத்து உருகினாள்; அவருடைய முடிவை அறிந்து அவள் அடைந்த வருத்தத்திற்கு எல்லையே இல்லை. கையில் சிலந்தியைக் கட்டிய கட்டுடன் வீட்டிறப்பிலுள்ள பனை ஓலையையும் வேலி முள்களையும் ஏடெழுத்தாணியாகக் கொண்டு முகமலர்ச்சியுடன் மருதுபாண்டியர் எழுதிய காட்சியைத் தன் மரண காலம் வரையில் அக்கிழவி தன் மனத்திற் பதித்து வைத்து வாழ்த்தினாள். அங்கனம் அவள் செய்தது ஆச்சரியமில்லையல்லவா?
(இவ்வரிய செய்தியை எனக்குக் கூறியவர்கள் இராமநாதபுரம் சமஸ்தானத்து வடமொழி வித்துவானும் திருக்கோஷ்டியூர் வாசியுமான
ஸ்ரீ சாமிநாத சாஸ்திரிகளும், அரண்மனைச் சிறுவயல் ஜமீன்தாரும் மருதுபாண்டியருடைய அரண்மனை யையே தம்முடைய இடமாகக் கொண்டு இருந்தவருமான ஸ்ரீ முத்துராமலிங்கத் தேவருமாவர்.)
* இக்கிராமத்தின் பெயர் இப்பொழுது “பழஞ்சோற்றுக் குருநாதனேந்தல்” என்று வழங்குகின்றதென்பர்.
சான்றாதார நூல் :
———————————
நான் கண்டதும் கேட்டதும்,
ஆசிரியர் : உ.வே.சாமிநாத ஐயர்,
முதற்பதிப்பு :1936
பதிப்பு : கேஸரி அச்சுக்கூடம், சென்னை.
(பக்கங்கள் : 80 முதல் 87 வரை ) ——————————————————————-
அகமுடையார் வரலாற்றுத் தேடலில்…
சோ.பாலமுருகன் அகமுடையார்,
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
அகமுடையார் அரண்,
புலனம் (WhatsApp) எண் : 94429 38890.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்