தமிழ்நாட்டில் இருக்கும் ஒரே சங்ககால கோட்டையும் அதில் கிடைத்த சங்ககால அகம்படியர்…

Spread the love

First
தமிழ்நாட்டில் இருக்கும் ஒரே சங்ககால கோட்டையும் அதில் கிடைத்த சங்ககால அகம்படியர் நடுகல் கல்வெட்டும்
——————————————————–
தற்போதைய புதுக்கோட்டை புதுக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்திலிருந்து 10 கிலோ தொலைவில் ,புதுக்கோட்டை மாவட்டத்திற்குட்பட்ட திருவரங்குளம் வேப்பங்குடி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் அமைத்துள்ளது பொற்பனைக்கோட்டை எனும் சிற்றூர்.

இன்று சிற்றூராக ஆள்அரவமற்று விளங்கும் இந்த பொற்பனைக்கோட்டை எனும் இவ்வூர் தமிழ்நாட்டின் புகழ்பெற்ற சங்ககால ஊர்களில் ஒன்றாக விளங்கிய சிறப்புடையது. அதிலும் குறிப்பாக சொல்லவேண்டுமென்றால் தமிழ்நாட்டில் இதுவரை கிடைத்த மூவேந்தர்களின் கோட்டை மற்றும் அரண்மனை எச்சங்கள் யாவும் கி.பி 10ம் நூற்றாண்டுக்கு பிறகு அமைக்கப்பட்டவையாகும்.

மூவேந்தர்களின் சங்ககால கோட்டையோ அரண்மனையோ நமக்கு இதுவரை வேறு எங்கும் கிடைத்திருக்கவில்லை.

அதிர்ஷ்டவசமாக கடந்த 2012ம் வருடம் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறை மாணவர்களால் மேற்குறிப்பிட்ட பொற்பனைக்கோட்டை எனும் ஊரில் உள்ள கோட்டை அமைந்துள்ள இடத்தில் உள்ள அகழி அல்லது குளத்தின் அருகே துணிதுவைப்பதற்காக பயன்படுத்தப்பட்ட கல்லில் நடுகல் செய்தி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.

ஆய்வு செய்ததில் குறிப்பிட்ட இந்த நடுகல் கி.பி 2ம் நூற்றாண்டை சேர்ந்த தமிழ் பிராமி நடுகல் கல்வெட்டு என்பது உறுதி செய்யப்பட்டது. இந்த நடுகல் செய்தி மூலம் குறிப்பிட்ட பகுதியில் அமைந்திருந்த கோட்டை தமிழ்நாட்டின் சங்ககால கோட்டைகளில் ஒன்று என்பது உறுதி செய்யப்பட்டது.

இந்த நடுகல் கல்வெட்டு அகம்படியர் இனத்தை சேர்ந்த கணங்குமரன் என்பவனின் நினைவாக எடுக்கப்பட்டுள்ளது. வேறு செய்திகளை பார்ப்பதற்கு முன் கல்வெட்டு மூலச்செய்தியை பார்த்துவிடுவோம்.

கல்வெட்டு செய்தி
—————–
1.கோவென்கட்டிற் நெதிர
2.ணாறு பொன்கொங்கர் விண்ண கோன்
3.ஆஎறிஇத்து ஏவ அதவ்வனாரு
4) அங்கபடை தாணைத் தணயன் கணங்
5) குமாரன் கல்

கல்வெட்டு பற்றிய குறிப்பு
——————–
கோவெண் கட்டி எனும் மன்னனுக்கு ஆறு ஆண்டுகளுக்கு பின் ஆட்சிக்கு வந்த பொன் கொங்கர் விண்ண கோன் என்பவன் பசுக்கூட்டத்தை கவர்ந்துவர உத்தரவிட அவன் படைகளுடன் நடந்த சன்டையில் அங்கப்படை தளபதியான கணங்குமரன் என்பவன் வீரமரணம் அடைந்தான் .அவன் நினைவாக எழுப்பப்பட்டதே இக்கல்

கல்வெட்டு பற்றிய விரிவான செய்தி
——————————-
இந்த நடுகல் கல்வெட்டு பற்றி கருத்து தெரிவித்துள்ள கல்வெட்டு மற்றும் வரலாற்று ஆசிரியர்கள் மேலே நாம் கொடுத்துள்ள கல்வெட்டு குறிப்பை மட்டுமே பேசியுள்ளனர்.

அதே நேரம் பல வரலாற்று ஆய்வாளர்கள் அங்கப்படை என்பது இன்றைய அகம்படி சாதியினரின் படை என்பதை பல்வேறு நூல்களில் ,கட்டுரைகளில் கூறியுள்ளனர்.

இருப்பினும் இந்த நடுகல் பற்றி பேசும் போது இக்கல்வெட்டு அகம்படி இனத்தை சேர்ந்தவனை குறிப்பிடும் கல்வெட்டு என்று பேசவில்லை. ஆனால்
இந்த கல்வெட்டு குறிப்பிடும் நாயகன் அகம்படி இனத்தை சேர்ந்தவன் என்பதை நாம் எளிதாக விளக்கமுடியும்.

குறிப்பாக நடுக்கல் கல்வெட்டின் 4,5ம் வரிகளை கவனித்தால்
4) அங்கபடை தாணைத் தணயன் கணங்
5) குமாரன் கல்

அதாவது அங்கப்படையை சேர்ந்தவன் எனும் போதே இவன் அகம்படியர் இனத்தை சேர்ந்தவன் என்பதை பல்வேறு வரலாற்றிஞர்களும் ஒப்புக்க்கொள்வர் .இருப்பினும் அடுத்த வார்த்தைகளை கவனிக்கும் போது நமது கணிப்பு சரியானது என்பது உறுதியாகின்றது.
அதாவது
” தாணைத் தணயன் கணங்
5) குமாரன் கல்”
என்பதில் கணங்குமரன் என்ற பதத்தை கவனிக்கலாம். இதில் வரும் கணம் என்பது அகம்படியர்களுக்கு இன்று வரை தொடர்ந்து வரும் அடைமொழியாகும் . அதாவது அகம்படியர்களை “கணத்ததோர் அகம்படியர்” என்று விளிக்கும் போக்கு இன்றுவரை தொடர்ந்து வரும் பெயராகும்.

ஆகவே அங்கப்படை வீரன் என்பதையும் கணம் என்ற விளிப்பதையும் கவனிக்கும் போது இந்த நடுகல் அகம்படி இனத்தவனுக்காக எடுக்கப்பட்ட நடுகல் என்பது உறுதியாகிறது.

மேலும் ஆய்வாளர்கள் கவனிக்க தவறிய இடம் கல்வெட்டின் 3ம் வரியில் உள்ள “அதவ்வனாரு” என்ற பெயராகும்.
ஆதவனார் என்ற இந்த பெயர் சோழர்களுடன் சம்பந்தப்பட்ட பெயராகும் . ஆதவன் என்றால் சூரியன் என்று பொருள் .

சோழர்களை சூரியனுடன் தொடர்புபடுத்தி ஆதித்தன் என்று அழைப்பது போல ஆதவன் என்ற பெயரிலும் அழைத்துள்ளார்கள் . பிற்காலத்தில் எழுந்த கம்பராமாயாணத்தில் கூட சோழர்களை குறிக்க ஆதவன் என்ற பெயர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதை அறிந்துகொள்ள முடிகின்றது (2)

பொற்பனை கோட்டை பகுதியில் ஏராளமான இரும்பு உலைகள் இருந்ததற்கான பல்வேறு தரவுகள் கிடைத்துள்ளன.

கணங்குமரன் என்பவன் கல்வெட்டில் குறிப்பிடப்படும் ஆதவனார் என்பவனிடம் பணியாற்றியுள்ளான்.

குறிப்பிட்ட இந்த ஆதவனார் என்ற பெயரையும் பெரும் குடியிருப்புகள் இல்லாத இப்பகுதியில் கோட்டை கட்டவேண்டியதன் அவசியம் என்ன என்ற கேள்வியையும் நம் சிந்தனைக்கு உட்படுத்தும் போது
இது சோழர்களின் எல்லைப்புற கோட்டை அரண் பகுதி என்பது தெளிவாகிறது.

கட்டியர்களும்,சேரர்களின் எல்லைப்புற காவலர்களாக இருந்துள்ளதை இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன மேலும் இந்த கல்வெட்டின் வரிகளிகளில்
” பொன்கொங்கர் விண்ண கோன்” என்பதில் உள்ள கொங்கர் என்ற பதம் சேரர்களின் தொடர்பை எளிதாக வெளிப்படுத்தும்.

இவற்றையெல்லாம் பொருத்திப்பார்க்கும் போது குறிப்பிட்ட இந்த நடுகல் குறிப்பிடும் சன்டை என்பது சோழர்களுக்கும் ,சேரர்களுக்கும் நடந்த அதிகார சன்டையாகவும் ஒருவர் செல்வத்தை , இரும்பு உழைகளை கைப்பற்ற நடந்த சன்டையாகவும் இருந்திருக்க வேண்டும்.

மேலும் சோழர்களின் உறவினராகவும் எல்லைப்புற காவல் தலைவனாகவும் விளங்கிய ஆதவனார் என்பவர் கீழ் பணியாற்றிய கணங்குமரன் என்பவனும் இந்த ஆதவனாருக்கு உறவினராக இருந்திருக்க வேண்டும் ஏனென்றால் அங்கப்படை என்பது சங்ககாலத்தில் உறவினர்களை கொண்டே அமைக்கப்பட்டது மேலும் இதே காலத்தில் நடுக்கற்களும் இரத்த உறவினருக்கே எடுக்கப்பட்டது என்பது. இதன் மூலம் சோழர்களுக்கும் ,அகம்படியர் இனத்திற்கும் உள்ள தொடர்பு மேலும் வெளிப்படுகின்றது.

இருப்பினும் இன்னும் அதிகமாக ஆராய்ந்தால் இது பற்றி ஆழமான செய்திகள் வெளிப்படும்.

நிறைவுரை
———–
எது எப்படி இருந்தாலும் இதில் நாம் கவனிக்கவேண்டிய மிக முக்கியமான விசயம் என்னவென்றால்

இந்த கல்வெட்டு சங்ககாலத்தை சேர்ந்த அரிதிலும் அரிதான நடுகல் அந்த அரிதான நடுக்கல்லும் அகம்படியர் இனத்தவன் பற்றி பேசுவதை கவனிக்கும் போது அகம்படியர் இனம் சங்ககாலத்திலேயே எழுதப்பட்ட வரலாறு கொண்ட பாரம்பரியம் கொண்டது என்பது விளங்குகிறது.

சங்க காலம் மட்டுமல்ல அதற்கும் முன்பான சிந்து சமவெளி காலத்திலேயே அகம்படியர் பற்றி குறிப்புகள் இருப்பதாக மறைந்த புகழ்பெற்ற தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் தமிழ்சங்க மாநாட்டில் வெளியிட்ட கட்டுரையை கவனிக்கும் போது அகம்படியர் இனம் சிந்து சமவெளி, சங்க காலம் , இடைக்காலம் ,பிற்காலம் என தமிழக வரலாற்றில் தொடர்ச்சியாக குறிப்பிடப்பட்டுள்ளதை அறிந்துகொள்ள முடிகின்றது.

கட்டுரையாளர்
மு.சக்திகணேஷ் சேர்வை(அகமுடையார்)
அகமுடையார் ஓற்றுமைக்காக

பொற்பனை கோட்டை பற்றி வேறு பல செய்திகள்
————————————
கடந்த நூற்றாண்டுவரை குகைத்தளங்களில் மட்டுமே தமிழி எழுத்துகள் கண்டுபிடிக்கப்பட்டதால், அவை கர்நாடகத்திலிருந்து வந்த
சமணர்களால் நமக்கு அளிக்கப்பட்ட கொடையே இத்தகைய எழுத்துருக்கள், என பரவலாய் நம்பப்பட்டு வந்தது.

இதற்கு நேர்மாறாய் நமது சங்க இலக்கியங்கள்
நம் ஊரிலுள்ள நடுகற்களில் எழுத்து பொறிப்பு இருந்ததாக கூறியது.

ஆனால் இலக்கியம் கூறும் இந்த செய்தியை நிரூபிக்கும் வண்ணம்
பண்டைய எழுத்துபொறிப்புடைய நடுகல் கிடைக்காமல் இருந்தது.

சங்க இலக்கியங்களையே ஏதோ வட்டார வழக்குபாடல்கள்,
நாட்டுப்புறப்பாடல்கள் அவை வரலாற்று ஆவணம் அல்ல,
காலத்தால் பிற்ப்பட்டவை என்றரீதியில் கிளப்பிவிடப்பட்டது.

இக்கூற்றுகளை பொய்யாகச்செய்ய
சங்ககாலத்தை சேர்ந்த மூன்று நடுகற்கள் கண்டறியப்பட்டது. அதில் ஒரு முக்கிய கல்வெட்டு தான் இக்கட்டுரையில் நாம் கண்ட இந்த நடுகல் கல்வெட்டாகும்.

வட்ட வடிவில் உள்ள கோட்டையின் சுற்றளவு 1.63 கிலோ மீட்டருடனும் , 50 ஏக்கர் நிலப்பரப்பு கொண்டதாகவும் உள்ளது. கோட்டை நான்கு புற வாயில்கள் கொண்டதாகவும் தற்போதைய நிலையில் உள்ளது. கோட்டையின் வடக்குப்புற மண் சுவரின் அடிமானம் சுமார் 50 அடி அகலமுடனும் , 40 அடி உயரத்துடனும் சாய்வாக அமைந்துள்ளது, கோட்டையின் மேற்புறத்தில் பத்து அடி அகலத்துடன் மண் மற்றும் செம்புராங்கல் கொண்ட சுற்றுப்பாதை அமைப்பு உள்ளது. இதன் வெளிப்புறத்தில் நான்கு அடி கால அகலத்தில் சங்க செங் கல்கட்டுமானத்துடன் கூடிய கோட்டைச்சுவர் மற்றும் குறிப்பிட்ட இடைவெளிகளில் அம்பு எய்யும் அறைகள் (கொத்தளங்கள்) தொடர்ச்சியாக காணப்படுகிறது. சாதாரண மண் மேடல்ல கோட்டைதான் என்பதை தொல்லியல் ரீதியில் அடையாளப்படுத்த மிக முக்கியமான சான்றாகும்.

பொற்பனைக் கோட்டையில் ஒரு வட்ட வடிவிலான கோட்டை அமைந்துள்ளது. இக்கோட்டையைச் சுற்றி ஓர் அகழி காணப்படுகின்றது. இக்கோட்டைச் சுவரின் மீது செங்கற் கட்டுமானம் காணப்படுகின்றது. இதன் காலம் என்ன என்பது தெரியவில்லை.

கோட்டையின் உள்ளே கருப்பு-சிவப்புப் பானை ஓடுகள் காணப்படுகின்றன. மேலும், இங்கு ஒரு தமிழ் பிராமி கல்வெட்டு தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறை மாணவர்களால் 2012 இல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பொற்பனைக் கோட்டை 50 ஏக்கர் பரப்பளவை கொண்டது. இக்கோட்டையின் செங்கல் கட்டுமானம், 4 அடி அகலமுள்ள சுற்றுச்சுவர் மற்றும் ப வடிவ கட்டுமானத்தின் அடிக்கட்டுமானம் இன்றளவும் சிதையாமல் உள்ளது. சங்க காலத்தை சேர்ந்த நடுகல் ஒன்றும் ஏற்கனவே இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. செந்நாக்குழி என்றழைக்கப்பட்ட இரும்பு உருக்கு ஆலையும் இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளன. சங்ககாலத்தில் இருந்த கோட்டைகள், அரண்மனைகள் அனைத்தும் அழிந்து போயின என்று கருதப்பட்டு வந்த நிலையில் அகழாய்வு நடத்த மத்திய அரசு தற்போது அனுமதி வழங்கியுள்ளது. இந்த அகழாய்வு தமிழக வரலாற்றாய்வில் ஒரு முக்கிய பங்கு வகிக்கும் என்பதில் ஐயமில்லை.

ஆதாரங்கள்-மேற்கோள்கள்
———————
ஆவணம் இதழ் 24,வருடம் 2013 பக்கம் 18,19

“வல்வேற் கட்டி”(குறுந்தொகை:11) “போராடும் தானை கட்டி”(அகம்226), “பல்வேற் கட்டி” (சிலம்பு : 25 : 157 )

ஆதவன் புதல்வன் முத்தி அறிவினை அளிக்கும் ஐயன்,
போதவன் இராம காதை புகன்றருள் புனிதன், மண்மேல்
கோது அவம் சற்றும் இல்லான், கொண்டல் மால்தன்னை ஒப்பான்,
மா தவன் கம்பன் செம் பொன் மலர் அடி தொழுது வாழ்வாம்.

7-கம்பராமாயணம் – பாலகாண்டம் – ஆற்றுப்படலம்







இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

We will be happy to hear your thoughts

Leave a reply

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo