First
மே – 9
அகமுடையார் குலத்தோன்றல்,
தமிழவேள் த.வே.உமாமகேசுவரன் பிள்ளை அவர்களின் நினைவேந்தல்,
——————————————
முதல், இடை, கடைத் தமிழ்ச்சங்கங்கள் அழிவிற்குப் பின்னர் தமிழ்மொழி தாழ்வு நிலை கண்டது. அன்று தொடங்கி தாழ்வு நிலையடைந்த தமிழ்மொழி பண்டைய காலம் போல் மீண்டும் ஏற்றம் பெற வேண்டுமென்று இரண்டு பேர் விரும்பினார்கள். ஒருவர் பாண்டித்துரை தேவர், மற்றொருவர் உமா மகேசுவரனார்.
பாண்டித்துரை தேவர் 1901ஆம் ஆண்டு மதுரையில் நான்காம் தமிழ்ச்சங்கத்தை தொடங்கினார். 1909இல் மதுரைத்தமிழ்ச் சங்கத்தின் 9ஆம் ஆண்டு விழா தஞ்சையில் நடைபெற்ற போது, தமிழ் ஆர்வலர்கள் சிலர் தஞ்சை மண்ணில் தமிழ்ச்சங்கத்தைத் தோற்றுவிக்க விரும்பினார். தஞ்சை தமிழ்ச் சங்கம் எனும் பெயரில் சங்கத்தை தொடங்கிய போதிலும் அச்சங்கத்தை தொடர்ந்து நடத்த இயலவில்லை.
மீண்டும் 14.5.1911இல் த.வே.இராதாகிருட்டிணப் பிள்ளை முயற்சியில் கரந்தையில் தமிழ்ச்சங்கத்தை நிறுவினர். மதுரை தமிழ்ச் சங்கத்திற்கு அடுத்து தோற்றுவித்த படியால் இச்சங்கம் ஐந்தாம் தமிழ்ச் சங்கம் என்று அழைக்கப்பட்டது. சங்கப்பணிகளை தொடர்ந்து தொய்வில்லாமல் நடத்திக் காட்டிய த.வே.இராதா கிருட்டிணப் பிள்ளை “சங்கம் நிறுவிய துங்கன்” என்று அழைக்கப்பட்டார். (துங்கன் என்றால் வலிமை வாய்ந்தவன் என்று பொருள்).
இவருக்குப் பின் தமிழ் ஆர்வலர் ஒருவர் சங்கப் பொறுப்பினை திறம்பட ஏற்றுப் பணியாற்றினார். இச்சங்கத்தின் ஊடாக தமிழுணர்ச்சியைப் பரப்பி உலகமெங்கும் வாழும் தமிழர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார். அவர் வேறு யாருமல்ல; தமிழவேள் என்றழைக்கப்படும் த.வே.உமா மகேசுவரனார் ஆவார். இவர் இராதா கிருட்டிணப் பிள்ளையின் உடன் பிறந்தவர்.
உமா மகேசுவரனார் தஞ்சை மாவட்டம் கருந்திட்டைக்குடி எனும் (கரந்தை என்பதன் மருவிய பெயர்) ஊரில் வாழ்ந்து வந்த வேம்பப் பிள்ளை – காமாட்சி அம்மை ஆகிய இணையருக்கு மகனாக 7.5.1883இல் பிறந்தார். இவர் 12ஆம் அகவையில் தாயாரையும், தந்தையாரையும் இழக்க நேர்ந்தது. அதன் பிறகு சிற்றன்னையாகிய பெரிய நாயகத்தம்மையார் அரவணைப்பில் தொடக்கக் கல்வியை முடித்தார்.
தஞ்சைத் தூய பேதுரு கல்லூரியில் இளங்கலை வகுப்பு வரை படித்து வெற்றி பெற்றார். தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலக எழுத்தராக பணி புரிந்தவாறே பி.எல். பட்டம் பெற்றார். அதன் பிறகு தஞ்சையில் புகழ்பெற்ற வழக்கறிஞரான கே.சீனிவாசகம் பிள்ளை என்பவரிடம் சேர்ந்து இளம் வழக்கறிஞர் ஆனார். நீதிமன்றத்தில் வழக்காடும் திறனை வளர்த்து கொண்ட உமா மகேசுவரனார் வழக்கறிஞர் தொழிலில் தனித்து நின்று புகழ் பெற்றார். இவரின் திருப்பெயர் தஞ்சை மாவட்டம் முழுவதும் பரவியது.
தம் இருபத்தைந்தாம் அகவையில், உலகநாயகி எனும் அம்மையாரை மணந்தார். இவருக்கு, பஞ்சாபகேசன், மாணிக்கவாசகம், சிங்காரவேலு என்று முத்தான மூன்று பிள்ளைகள். மூன்றாவது பிள்ளை பிறந்த நிலையில் மனைவி உலகநாயகி காலமானார்.
கரந்தைச் தமிழ்ச் சங்கம் தொடங்கிய போது அதன் உறுப்பினர்களாக வி.சாமிநாதப்பிள்ளை, எல்.உலகநாதப் பிள்ளை , ஆர்.வேங்கடாசலம் பிள்ளை, ந.மு.வேங்கடசாமி நாட்டார், நீ.கந்தசாமிப் பிள்ளை , த.வே.உமா மகேசுவரன் பிள்ளை ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். அதன் புரவலர்களாக பெத்தாச்சி செட்டியார், கோபாலசாமி இரகுநாத இராஜாளியார், சர்.ஏ.டி.பன்னீர் செல்வம் ஆகியோர் அறிவிக்கப்பட்டனர். பின்னர் த.வே.உமாமகேசுவரனார் சங்கத்தின் முழுப் பொறுப்பேற்று செயல்பட்டார்.
தொண்டு-தமிழ்-முன்னேற்றம், ஆகிய மூன்றும் சங்க இலச்சினையில் பொறிக்கப்பட்டு, சங்கத்தின் குறிக்கோளாக “உலக மக்களிடையே தமிழின் பெருமையை பரப்புவது” என்று பறைசாற்றப்பட்டது.
அதன் ஐந்து நோக்கங்கள் பின் வருமாறு: 1. வேற்று மொழி விரவாத தூய தமிழில் மக்கள் பிழையின்றிப் பேசுமாறும் எழுதுமாறும் செய்தல் 2. தமிழ்ப் பெரும்புலவர்களை ஒன்று கூடச் செய்தலும், வெளியுலகிற்கு அறிமுகப் படுத்தலும் 3.தமிழ் இலக்கியங்களைப் பரப்புதல் 4.தமிழின் இசை – நாடகப் பகுதிகளை தக்காங்கு வளர்த்தல் 5. தமிழ்மொழிப் பயில்வோர்க்கு ஊக்கமளித்து மக்களிடையே தமிழ்ப்பற்றை வளர்த்தல்.
கரந்தை தமிழ்ச்சங்கத்தின் தனிப்பெரும் தலைவராக விளங்கிய உமா மகேசுவரனார், “இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் சமசுகிருத ஆதிக்கம் காரணமாக தமிழ் தன் பெருமை இழந்து நின்றது. உயர்ந்த பதவியில் இருந்தவர்களுக்கு தமிழ் தெரியாது. தூய தமிழும் பலருக்கு எழுதவோ, பேசவோ வராது . இந் நிலையில் தான் கரந்தைத் தமிழ்ச் சங்கம் தமிழ் வளர்க்கத் தோன்றியது ” என்பார்.
அது அக்காலத்தில் உண்மையுமாகும். அப்போது திருவையாற்றில் கல்லூரி ஒன்று தஞ்சை சரபோசி அறக்கட்டளை மூலமாக நடத்தப்பட்டு வந்தது. அக்கல்லூரியில் சமசுகிருதம் மட்டுமே கற்று கொடுக்கப்பட்டு வந்தது. சரபோசி நிர்வாகத்தினர் தமிழ் கற்பிக்க அறக்கட்டளை ஆவணத்தில் குறிப்பிடப்படவில்லை என்று காரணங் கூறி தமிழைப் புறக்கணித்தனர். இதைக் கேள்விப்பட்டு கொதிப்படைந்த உமா மகேசுவரனார் ஆவணம் முழுவதையும் படித்துப் பார்த்து விட்டு தமிழுக்கான தடை அதில் இல்லையென்று வாதாடினார். அவரோடு வாதிட முடியாமல் சரபோசி நிர்வாகம் தோற்றுப் போய் தமிழ்மொழியில் கற்பிக்க ஒப்புக் கொண்டது.
மேலும், அவர் திருவையாற்று கல்லூரியை தமிழ்மயப்படுத்தும் முயற்சியில் இறங்கினார். அவர் தமிழ்க்கல்வி பாடத் திட்டத்தை தமிழறிஞர் கா.நமச்சிவாயர் அவர்களைக் கொண்டு எழுதச் செய்து வெளியிட்டார். அத்தோடு, திருவையாற்று கல்லூரியை அரசர் கல்லூரி என பெயர் மாற்றினார். தமிழ்ப் பட்டப்படிப்பை ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு கற்றுத் தரவும் ஏற்பாடு செய்தார்.
அந்நாளில் ஒருவரது பெயருக்கு முன் மரியாதை தரும் பொருட்டு வடமொழியில் ஸ்ரீமான் என்றும், ஸ்ரீமதி என்றும் அழைக்கப்பட்டு வந்தது. வடமொழி எதிர்ப்பில் என்றும் உறுதி காட்டி வந்த உமா மகேசுவரனார் இதிலும் உறுதியாய் நின்று திருமகன், திருவாட்டி என்று தனித்தமிழில் மாற்றிக் காட்டினார்.
1916இல் நீதிக்கட்சி உருவான போது, அக்கட்சிக்கு தஞ்சை மாவட்டத்தில் அடித்தளமிட்டவர்கள் மூவர். அதில் சர். ஏ.டி.பன்னீர் செல்வம், ஐ.குமாரசாமி ஆகியரோடு த.வே.உமா மகேசுவரனாரும் ஒருவர்.
காந்தியார் அவர்கள் தஞ்சாவூரில் உள்ள உக்கடை ஹவுசில் தங்கியிருந்த போது காந்தியாரைச் சந்தித்து பிராமணர்கள் , பிராமணர் அல்லாதவர்களுக்கு இழைத்து வரும் அநீதி குறித்து முறையிட்டார்.
1920இல் சென்னை உள்ளாட்சிக் கழகச் சட்டம் கொண்டு வரப்பட்டது. அப்போது நடைபெற்ற தஞ்சை வட்டக் கழகத்தில் உமா மகேசுவரனார் போட்டியிட்டு தலைவரானார். அவரது பதவிக்காலத்தில் வரகூர் – அம்பது மேலகரச்சாலை மற்றும் ஆலங்குடி – கண்டியூர்ச் சாலைகள் போடப்பட்டன. மேலும் நாகத்தி, தொண்டரையன்பாடி என்னும் சிற்றூர்களுக்குச் செல்ல ஆற்றின் குறுக்கே பாலங்கள் கட்டப்பட்டன.
மேலும், ஐம்பதுகளாக இருந்த தொடக்கப்பள்ளிகள் எண்ணிக்கையானது நூற்று எழுபதாக உயர்த்தப்பட்டது.
உமா மகேசுவரனார் அரசுப் பதவியில் இருந்தபடி சமூக நலத் தொண்டுகள் புரிந்த போதிலும் அவரது சிந்தனை முழுவதும் கரந்தை தமிழ்ச் சங்கத்தை நோக்கியே இருந்தது.
மதுரைச் தமிழ்ச் சங்கத்திலிருந்து வெளிவரும் “செந்தமிழ்” இதழ் போல கரந்தை தமிழ்ச் சங்கத்திற்கும் ஓர் இதழ் வெளிக் கொணர முடிவு செய்தார். இதழ் வருவதற்கு பணம் போதாமை காரணமாக இருந்தது. அவரின் சகோதரர் மறைவுக்குப் பின்னும் நிதி திரட்டும் முயற்சியிலிருந்து பின் வாங்க வில்லை. 1919இல் இதழுக்கு “தமிழ்ப்பொழில்” என்று பெயர் சூட்டப்பட்டும் இதழ் தொடங்கப்படாதது கண்டு மனம் வருந்தினார்.
4.9.1921இல் கரந்தை தமிழ்ச்சங்கத்தின் பத்தாம் ஆண்டு விழா கரந்தை கந்தப்ப செட்டியார் அறநிலையத்தில் நடைபெற்றது. கீழையூர் சிவ.சிதம்பரம் தலைமை தாங்கினார். அதில், “தமிழ் மொழியின் மேன்மையைப் பேணுதற் பொருட்டாகத் தமிழ்ப் பொழில் என்னும் திங்கட்டாளை வெளியிடுவதற்கு தக்கவாறு பொருளுதவி செய்ய வேண்டுமென்று தமிழ் மக்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறார்கள்” என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஒருவழியாய், பதினோரு ஆண்டுகள் கழித்து 1925ஆம் ஆண்டு தமிழ்ப்பொழில் இதழ் வெளி வந்தது. மதுரைச் தமிழ்ச் சங்கம் நடத்திய செந்தமிழ் இதழும், திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்பு கழகம் நடத்திய செந்தமிழ்ச் செல்வி இதழும், கரந்தை தமிழ்ச் சங்கம் நடத்திய தமிழ்ப் பொழில் இதழும் அன்றைய தமிழுணர்வாளர்களிடையே மிகுந்த செல்வாக்கு பெற்று திகழ்ந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.
தமிழ்பொழில் இதழின் அட்டைப்படம், உள்ளடக்கம் இவ்விரண்டும் மிகச் சிறப்பாக உமா மகேசுவரனார் அவர்களால் உருவாக்கப்பட்டது. தூய தமிழ்ச் சொற்களை அவ்விதழில் பயன்படுத்தினார். இதழாசிரியர் என்பதை “பொழிற்றொண்டார்” என்றும், தனியிதழ் “மலர்” என்றும், பன்னிரு மலர்கள் கொண்ட ஓராண்டுத் தொகுப்பை “துணர்” (பூங்கொத்து) என்றும், உறுப்பினர் கட்டணம் என்பதை கையொப்பத் தொகை என்றும், விலாசம் என்பதை உறையுள் என்றும் ஆங்கிலத்தில் வி.பி.பி. என்பதை விலை கொளும் அஞ்சல் என்றும் அச்சிட்டு வெளியிட்டார்.
ஒவ்வொரு துணருக்கும் பொழிற்றொண்டர்கள் அமர்த்தப்பட்டனர். துணர் 10 முதல் துணர் 17 வரையிலும் உமா மகேசுவரனார் பணியாற்றினார். தமிழ்ப் பொழில் இதழின் நோக்கம் எதுவெனில், கரந்தை தமிழ்ச் சங்கத்தின் வாய்க்கருவியாக இருத்தலும், தமிழ் ஆய்வில் ஈடுபடுதலும் என்பதாக அறிவித்தார்.
அந்த இதழில் தமிழறிஞர் சதாசிவ பண்டாரத்தாருக்கு ஊக்கமளிக்கும் வகையில் அவர் எழுதிய தமிழ் மன்னர்கள் வரலாறு மற்றும் தமிழ் கல்வெட்டுச் சான்று குறித்து கட்டுரைகள் பலவற்றையும் வெளியிட்டார்.
நக்கீரன், யாழ் நூல், தொல்காப்பிய உரை, நெல்லை வருக்கக் கோவை , தமிழரசி குறவஞ்சி, பரத சாத்திரம் , சிலப்பதிகார புகார்க் காண்டம் , சிவமும் செந்தமிழும் ஆகிய நூல்களையும் அச்சிலேற்றி வெளிக் கொணர்ந்தார்.
மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய ‘நீராருங் கடலுடுத்த’ தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை தமிழ் சார்ந்த நிகழ்ச்சிகளில் முதன்முதலில் அறிமுகம் செய்த வைத்த பெருமை உமா மகேசுவரனாருக்கே உரியதாகும்.
‘எழுத்துச்சீர்திருத்தம்’ எனும் பெயரில் தமிழை அழிக்க முயலும் தமிழினப் பகைவர் செயலைக் கண்டித்து அவர் 11.6.1934 இல் நெல்லை இந்து கல்லூரியில் நடைபெற்ற ‘சென்னை மாநிலத் தமிழர்’ முதல் மாநாட்டில் பேசினார். அது பின் வருமாறு:
“அச்சுக் கோப்போரின் துன்பத்திற்காகச் சிலர் தமிழ் எழுத்துகளிற் சிலவற்றை அகற்ற விரும்புகின்றனர். வேறு சிலர் ‘ f ‘ என்ற ஆங்கில எழுத்தையும் தமிழிற் சேர்க்கக் கருதுகின்றனர். இவை எம்மொழியாளரும் கைக்கொள்ளாதவை. வீரமாமுனிவர், சி.யு. போப்பு போன்ற அயல்நாட்டார் கூட இவ்வாறு சொல்லத் துணிய வில்லை. வடகலை, தென்கலை உணர்ந்த நச்சினார்க்கினியர், பரிமேலழகர் போன்றோர் வடநூலாற் கொள்கையில் அடிப்பட்டிருந்தும், தமிழ் மரபு இழுக்கா வண்ணம் உரைநூல்கள் இயற்றினார்களே! ஆங்கிலம், வடமொழி ஆகியவற்றில் சீர்திருத்தம் செய்ய நிரம்ப இடமிருந்தும் அவற்றைத் திருத்தத் துணியாத போது தமிழ்மொழியை திருத்தலாமென்பது பேதமையாகும்.”
1937ஆம் ஆண்டு இராசாசி அரசு கொண்டு வந்த பள்ளிகளில் கட்டாய இந்தித் திணிப்பை கண்டித்து 27.8.37 அன்று முதன் முறையாக கரந்தை தமிழ்ச்சங்கத்தில் கண்டனக் கூட்டத்தை உமா மகேசுவரனார் நடத்திக் காட்டினார்.
அதற்கு அடுத்த மாதம் சென்னை செளந்தர்ய மகாலில் இந்தி ஆதிக்க எதிர்ப்பு தமிழர் கூட்டம் நடத்தப்பட்டது. அதிலும் நாவலர் சோம சுந்தர பாரதியாருடன் இணைந்து போர் முரசு கொட்டினார். அதன் பிறகே இந்தி எதிர்ப்புப் போர் தீவிரமடைந்தது.
26.12.1937 அன்று திருச்சியில் கி.ஆ.பெ.விசுவநாதம் ஒருங்கிணைப்பில் சென்னை மாகாணத் தமிழர் மாநாடு நடைபெற்றது. முன்னதாக பத்தாயிரம் பேர் பங்கேற்ற எழுச்சி ஊர்வலம் நடைபெற்றது. மாநாட்டிற்கு நாவலர் சோமசுந்தர பாரதியார் தலைமை வகித்தார். உமா மகேசுவரனார் வரவேற்புரை நிகழ்த்தினார். இந்த மாநாட்டில் தான் பெரியார் தமிழறிஞர்களோடு முதன் முறையாக தன்னை இணைத்துக் கொண்டு இந்தி திணிப்பை கண்டித்துப் பேசினார் என்பது நினைவில் கொள்ளத்தக்கது.
15.4.1938 நடைபெற்ற கரந்தை தமிழ்ச்சங்கத்தின் வெள்ளி விழாவில் உமா மகேசுவரனாருக்கு ‘தமிழவேள்’ பட்டத்தை நாவலர் சோம சுந்தர பாரதியார் வழங்கினார். அது முதல் ‘தமிழவேள்’ உமா மகேசுவரனார் என்று அனைவரும் அன்போடு அழைக்கத் தொடங்கினர்.
1939ஆம் ஆண்டு திருச்சியில் நடந்த அகில இந்திய தமிழர் மாநாடு நடைபெற்றது. நாவலர் சோமசுந்தர பாரதியார், திரு.வி.க., மறைமலையடிகள், பாரதிதாசன், பெரியார் ஆகியோரோடு உமா மகேசுவரனாரும் கலந்து கொண்டார். அந்த மாநாட்டில் தைமுதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது முழுமனதோடு ஆதரித்துப் பேசினார்.
கல்கத்தாவில் இரவீந்திரநாத் தாகூர் நடத்தி வரும் சாந்திநிகேதனைப் போல் கரந்தை தமிழ்ச்சங்கம் மாற வேண்டுமென்று விரும்பினார். அதனைப் பார்வையிட்டு கல்கத்தாவை விட்டு திரும்பும் போது உடல்நலம் குன்றியே காணப்பட்டார். பிறகு அயோத்தி அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மருத்துவர்கள் கைவிட்ட நிலையில் 9.5.1941 அன்று தனது தமிழ் மூச்சை நிறுத்திக் கொண்டார்.
மறுமலர்ச்சித் தமிழறிஞர்கள் நூலிலிருந்து,
——————————————–
சோ.பாலமுருகன் அகமுடையார்,
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
அகமுடையார் அரண்,
புலனம் (WhatsApp) எண் : 9442938890.
இப்பதிவு திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கம் லிங்க்
திருத்தணி அகமுடையார் சங்கம் பேஸ்புக் குருப் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்