First
இன்று ஜீன் 16- #1801_ஜம்புத்தீவுபிரகடனம்
மருதுபாண்டியர்களின் முன்னாலும் ,சமகாலத்திலும் , மருதுபாண்டியர்களின் காலத்திற்கு பின்னாலும் பல்வேறு அரசர்கள்,தலைவர்கள் ,தனிமனிதர்கள் தேசவிடுதலைக்காக பாடுபட்டனர்?
ஆனால் மருதுபாண்டியர்கள் ஏன் தனித்துவமானவர்கள் ,விடுதலை போராட்டத்தின் விடிவெள்ளியாக திகழ்ந்தார்கள் என்றால் அதற்கு பல காரணங்கள் இருந்தாலும் குறிப்பிட்டு சொன்னால்
1) மதங்களை , சாதியை மீறி மக்களை ஒருங்கிணைய சொன்னவர்
மருதுபாண்டியர்கள் ஆண்ட காலம் , மக்கள் மதங்களின் பிரிவுகளால் பிரிந்து கிடந்த காலம் ,மதத்தின் பெயரால் கொலை கொள்ளைகள் நாட்டின் வேறு பல பகுதிகளில் நடைபெற்றா காலம் , இடங்கை வலங்கை என்று சாதிகள் குழுக்களாகவும்,ஆண்டான் அடிமை என்று சாதிகள் ஒருவரை ஒருவர் அடிமைப்படுத்தி , மக்களின் ஓரு தரப்பினரை அடிமை என்றும் சவுக்கடியும் சாணிப்பாலும் கொடுத்து கொடுமைப்படுத்திய காலம் .அக்காலத்தில் தான் மக்கள் எந்த மதமாக இருந்தாலும் இந்து ,முஸ்லீம் என்றும் ,எந்த மதமாக ,எந்த சாதியாக இருந்தாலும் அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஆங்கிலேயரை எதிர்க்க வேண்டும் என்று தனது சுதந்திர பிரகடணத்தில் அறைகூவல் விடுத்தவர்.
மக்கள் சாதிகளால் பிரிந்து கிடப்பதையும், அரசர்கள் தங்களுக்குள் போரிட்டு பலவீனப்பட்டு இருப்பதையும் தனது திருச்சி அறிக்கையில் சுட்டிக்காட்டி அனைவரும் ஒன்றினைய வேண்டும் என்று அறைகூவல் விடுத்தார்.
மக்கள் அனைவரும் மதம்,சாதி கடந்து ஒன்றினைய வேண்டும் என்ற குரல் இவருக்கு முன்னும் இருந்ததில்லை இவருக்கு பின்னும் பல நூறு ஆண்டுகள் கழித்தும் வரவில்லை.
2) சுயநலமும் சமரசமும் இல்லாமல் போரிட்டவர்கள்
ஆங்கிலேயரை எதிர்த்த பல அரசர்கள், தங்கள் அதிகாரத்தின் மீது ஆங்கிலேயர்கள் தலையிட்டதால் அது தங்களுக்கு ஏற்பட்ட அவமானமாக கருதி தனிப்பட்ட நோக்கங்களுக்காகவே ஆங்கிலேயரை எதிர்த்தனர் என்பதே உண்மை!
ஆனால் மருதுபாண்டியர்கள் ,ஆங்கிலேயர் பலரை தனது நண்பராக கொண்டிருந்தவர் என்பது வரலாற்றில் நாம் அறிந்ததே!
ஆங்கிலேயர் பலரை நண்பராக கொண்டிருந்த மருதுபாண்டியர்களே தனது தனிப்பட்ட பலனை கருதாது மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் ,ஜம்புவதீவு எனும் இந்த (பாரத தேசம்) ஏன் இந்த அவல நிலைக்கு ஆளானது. அதற்கு காரணமான ஐரோப்பியர்களை ஒழிக்க வேண்டும் என்கிறார்.
ஆங்கிலேயர் நண்பராக கொண்டிருந்த மருதுபாண்டியர்கள் ஆங்கிலேயருக்கு ஜால்ரா அடித்திருந்தால் மருதுபாண்டியர்களும் அவர் வாரிசுகளும் சுகபோக ஆட்சியை செய்திருக்க முடியும். ஆனால் தனது வாழ்க்கையை பெரிதாக எண்ணாது மக்கள் கஷ்டப்படுகிறார்களே என்று ஆங்கிலேயரை எதிர்த்தவர் தான் மருதுபாண்டியர் .
இதை வரலாற்றில் இருந்தும் சுதந்திர பிரகடனத்தின் “ஒரு மனிதன் ஆயிரமாண்டுகள் வாழ்ந்தால் கூட முடிவில் மரணம் வருவது நிச்சயம்” என்ற வரிகளின் மூலமும் மருதுபாண்டியரின் எண்ண ஓட்டத்தை நாம் புரிந்து கொள்ள முடியும்.
3) பொருளாதார சுரண்டலை வெளிப்படுத்தியவர்
மருதுபாண்டியர்கள் ஆட்சி புரிந்த காலத்திற்கு முன்பும் ,சமகாலத்திலும் வாழ்ந்த அரசர்கள் பலர் அறியாமையிலேயே காலம் தள்ளினர் .
இந்த நாட்டையும் மக்களையும் ஆங்கிலேயர் வரி வரி என்று கசக்கி பிழிந்து மக்களை கஞ்சிக்கு கூட இல்லாது செய்துவிட்டார்கள் என்று ஆங்கிலேயரின் பொருளாதார சுரண்டலை வெளிப்படுத்துகிறார்.
இன்னும் பல்வேறு சிறப்புகள் மருதுபாண்டியருக்கு இருந்தாலும் ஆங்கிலேயர் எதிர்ப்பில் சுயநலம் இல்லாமலும், நாட்டின் பொருளாதாரம் வீழ்ந்து மக்கள் ஏழ்மைப்பட்டதையும், மக்களை சாதி மத வேறுபாடுகளை விடுத்து ஒருங்கிணைய செய்த விடுத்த அறைகூவல் இந்தியாவில் இதற்கு முன்னும் சரி ,பின்னும் சரி எவரும் செய்திராதது.அதனால் தான் விடுதலைப்போராட்டத்தில் மருதுபாண்டியர்கள் விடிவெள்ளியாக திகழ்கிறார்.
மருதுபாண்டியர் 1801ம் வருடம் வெளியிட்ட சுதந்திர பிரகடனத்தின் வரிகளை கீழே கொடுத்துள்ளோம். அதை படிப்பவர்களுக்கு நாம் சொன்னது எவ்வளவு உண்மை என்றும் மருதுபாண்டியரின் என்ன ஓட்டம் எவ்வாறு இருந்தது என்பதை எவரும் அறிந்துகொள்ள முடியும்.
“நாட்டு மக்கள் அனைவரும் இந்தப் பிரகடனத்தை கவனமாகப் படிக்க வேண்டும்.
ஜம்பு தீபத்திலுள்ள எல்லாச் சாதியினர், பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் மற்றும் முசல்மான்களை நான் கேட்டுக் கொள்கிறேன்.
கர்நாடகத்தின் அரசராகிய முகம்மது அலி நவாப் முட்டாள்தனமாக ஐரோப்பியர் களுக்கு இடத்தைக் கொடுத்து இப்பொழுது விதவையைப் போல ஆகிவிட்டார். ஐரோப்பியர்கள் தங்களுடைய வாக்குறுதியை மீறி இந்த நாட்டைக் கைப்பற்றி விட்டார்கள். அவர்கள் இங்கு வசிப்பவர்களை நாய்களாக்க் கருதி அவர்கள் மீது அதிகாரம் செலுத்துகிறார்கள். மேலே குறிப்பிட்ட சாதியினரிடம் ஒற்றுமை யில்லை. நட்புணர்ச்சியில்லை. சுதேசி அரசர்கள், ஐரோப்பியர்களின் மோசடி களைப் புரிந்து கொள்ளாமல் ஒருவரோடு ஒருவர் சண்டை செய்து நாட்டை முற்றாக அவர்களிடம் ஒப்படைத்து விட்டார்கள்.
இந்த இழிபிறவிகளால் ஆளப்படுகின்ற இராஜ்ஜியங்களில் வசிப்பவர்கள் ஏழைகளாகிவிட்டார்கள். வயிற்றுக்குச் சோறில்லை. அவர்கள் துன்பப்பட்டாலும் அதன் காரணத்தைப் புரிந்து கொள்ளும் அறிவில்லாதவர்களாக இருக்கிறார்கள். ஒரு மனிதன் ஆயிரமாண்டுகள் வாழ்ந்தால் கூட முடிவில் மரணம் வருவது நிச்சயம். கர்நாடக நவாப், திருமலை நாயக்கர் பரம்பரையில் விசுவநாத நாயக்கர் (தஞ்சாவூர்) ஆகியோர் அவர்களுடைய பழக்க வழக்கங்கள் சிறிதும் பாதிக்கப்படாதபடி தங்களது பரம்பரை உரிமையைப் பெறுவார்கள். அவருடைய இராஜ்ஜியங் களில் ஐரோப்பியர்களின் அதிகாரம் ஒழிந்து போவதால் நவாப்புகள் ஆட்சியில் இருந்ததைப் போல நிரந்தரமான மகிழ்ச்சியை அனுபவிக்கமுடியும்.
இழிபிறவிகளை ஒழிப்பதற்கு ஒவ்வொரு பாளையத்திலும் ஒவ்வொரு இடத்திலும் உள்ள எல்லோரும் ஆயுதங்களோடு ஒன்று சேர வேண்டும். அப்பொழுது ஏழைகளுக்கும் துன்பமடைந்தவர் களுக்கும் உணவு கிடைக்கும். ஆனால் யாராவது இந்த இழிபிறவிகளின் ஆணைகளை நிறைவேற்றி நாய்களைப் போல மகிழ்ச்சியடைந்தால் அவர்கள் கருவறுக்கப்படவேண்டும். இந்த இழிப்பிறவிகள் ஒருவரோடு ஒருவர் சேர்ந்து கொண்டு இந்த நாட்டை எப்படி அடிமைப்படுத்தினார்கள் என்பதை நாம் அறிவோம். ஆகவே, பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் மற்றும் முசல்மான்கள் ஆகியோர் மீசை வைத்திருப்பவர்கள், வயலில் அல்லது மற்ற இடங்களில் பாடுபடுபவர்கள், இழிபிறவிகளிடம் வேலை செய்கின்ற சுபேதார்கள், ஜமீன்தார்கள், நாயக்குகள், சிப்பாய்கள் முதல் கட்டத்தில் தங்களுடைய வீரத்தைக் காட்டட்டும். அதாவது இந்த இழிபிறவிகளை எங்கு பார்த்தாலும் கொல்லட்டும். இந்த இழிபிறவிகளிடம் வேலை செய்பவர்கள் தங்களுடைய மரணத்திற்குப் பிறகும் நிம்மதி அனுபவிக்க மாட்டார்கள்.
இதை மறவாதீர்கள்! இதை
பின்பற்றாதவனுடைய மீசை என் மறைவிடத்து மயிருக்குச் சமம். அவன் உணவு ருசியில்லாமல் போவதுடன் ஊட்டமளிக்காது. அவர் மனைவி சோரம் போவாள். அவனுடைய குழந்தைகள் இழிப்பிறவிகளுக்குப் பிறந்த பிறவிகளாகக் கருதப்படும்.
ஐரோப்பியர்களால் இரத்தம் கலப்படமாகாத எல்லோரும் ஒன்று சேர வேண்டும். இதை யார் படித்தாலும் அல்லது படிக்கச் சொல்லிக் கேட்டாலும் இதை எழுதி தன்னுடைய நண்பர்களுக்கு அனுப்ப வேண்டும். மேலே சொன்னபடி இதை எழுதாதவர்கள், சுற்றறிக்கையாக இதை அனுப்பாதவர்கள் கங்கைக் கரையில் காராம் பசுவைக் கொன்ற பாவத்தை செய்தவர்களாகக் கருதப் படுவார்கள். நரகத்தின் எல்லா தண்டனைகளும் அவர்களுக்குக் கிடைக்கும். இதைச் செய்யாத முசல்மான்கள் பன்றியின் இரத்தத்தைக் குடித்த பாவியாக இருப்பான். இந்தப் பிரகடனம் ஒட்டப்பட்டிருக்கும் சுவரில் இருந்து இந்தப் பிரகடனத்தை கிழிப்பவர்கள் ஐந்து மாபெரும் பாவங்களைச் செய்த குற்றவாளிகளாகத் தண்டிக்கப்படுவார்கள். ஒவ்வொருவரும் இந்த பிரகடனத்தைப் படித்து இதைப் பிரதியெடுத்துக் கொள்ள வேண்டும்.
இப்படிக்கு
மருதுபாண்டியன்,
பேரரசர்களின் ஊழியன் ஐரோப்பிய இழிபிறவிகளுக்கு ஜென்ம எதிரி.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்