First
மானம்பதி எனும் வானவன் மாதேவிபுரத்தில் மஹா கணபதியை ஸ்தாபித்த உடைய நாயன் எனும் அகம்படியர்
————————————
சோழமன்னனான சுந்தரச்சோழனின் மனைவியும்,
புகழ்பெற்ற சோழ மன்னனான முதலாம் இராசராச சோழனின் தாய் வானவன் மாதேவி ஆவார் .
சுந்தரசோழன் இறந்த உடன் அதை பொறுக்காது உடன் கட்டை ஏறியவர் இந்த வானவன் மாதேவியார்.
இந்த வானவன் மாதேவியின் பெயரால் தமிழ்நாட்டில் ஓரிரு ஊர்களும் ,இலங்கையிலும் ஊர்களும் அன்று முதல் வழங்கி வருகின்றன.
அந்த வகையில் இன்றைய கட்டுரையில் நாம் காண இருக்கும் கல்வெட்டு
செங்கற்பட்டு உத்திரமேரூர் வழியாக வந்தவாசி செல்லும் சாலையில் இன்று மானம்பதி என்று வழங்கப்படும் என்ற ஊரில் உள்ள வான சுந்தரேஸ்வரர் என்ற கோவிலின் திருச்சுற்று மாளிகையின் தெற்கு சுவற்றில் மஹா கணபதி சன்னதி அருகே அமைந்துள்ளது.
மானம்பதி என்ற இவ்வூரின் பழம் பெயர் வானவன் மாதேவி பதி என்பதாகும். கால ஓட்டத்தில் இப்பெயர் இன்று மானம்பதி என்று வழங்கிவருகிறது.
இக்கோவிலும் வான சுந்தரேஸ்வரர் கோவில் என்று வானவன் மாதேவி பெயராலேயே இன்றும் வழங்கப்படுகின்றது.
முன்னர் சொன்னபடி இக்கோவிலின் திருச்சுற்று மாளிகையின் தெற்கு சுவற்றில் மஹா கணபதி சன்னதி அருகே கல்வெட்டு செய்தி ஒன்று காணப்படுகின்றது
இக்கல்வெட்டின் முழுச்செய்தியை இணைப்பு 2ல் காணலாம்.
இக்கல்வெட்டு செய்தியில் உள்ள முக்கிய சாராம்ச செய்தி என்னவென்றால்
“உடையார் திருமாளிகையில் உடையபிள்ளையாரை ஏறியருளப் பண்ணிநார்(பண்ணினார்) தம்பிராநார்(தம்பிரானார்) அகம்படி முதலிகளில் உடைய நாயன் உ. ”
என்ற செய்தி காணப்படுகின்றது.
ஆதாரம்: மத்திய அரசின் கல்வெட்டு ஆண்டறிக்கை ,எண் 380 வருடம் 1923
அதாவது தம்பிரானார் அகம்படி முதலிகளில் (அகம்படி இனத்தில் முதலி பட்டம் கொண்ட) உடைய நாயன் என்பவர் இக்கோவிலின் திருச்சுற்று மாளிகையில் உடைய பிள்ளையாரை ஏறியருள(எழுந்தருள்விக்க) பண்ணினார் என்ற செய்தி காணப்படுகின்றது.
இக்கோவிலின் திருச்சுற்று மாளிகையில் மஹா கணபதி என்ற சன்னதி அமைந்துள்ளது. இச்சன்னதி அருகேயே இக்கல்வெட்டும் காணப்படுவதால் அகம்படியராகிய உடைய நாயன் உருவாக்கிய சன்னதி மற்றும் பிள்ளையார் இவரே ஆவார் என்பது உறுதியாகிறது.
மிகவும் அழகாகவும், நேர்த்தியாகவும் காணப்படுகின்ற இச்சிலை ,பிள்ளையார் முகத்தில் இச்சிலை நிறுவப்பட்டு 700 வருடங்கள் கடந்தும் பளபளப்பு குறையாமல் காணப்படுவது ஆச்சர்யத்தை அளிக்கின்றது.
இதே கோவிலில் மற்றொரு அகம்படியர் கல்வெட்டு ஒன்று உள்ளது.அக்கல்வெட்டு குறித்து மற்றொரு பதிவில் விரிவாக வெளியிடுவோம்.
நன்றி அறிவிப்பு:
————–
இக்கல்வெட்டுச்செய்தி பற்றிய குறிப்பு மட்டும் மத்திய அரசின் கல்வெட்டு ஆண்டறிக்கையில் வெளியிடப்பட்டிருந்தது. பொதுவாக ஆண்டறிக்கையில் கல்வெட்டின் குறிப்பு மட்டுமே கொடுக்கப்பட்டுருக்கும் கல்வெட்டின் முழுவரிகள் கொடுக்கப்படாது.
ஆனால் அகமுடையார் அரண் நிறுவனர் திரு.பாலமுருகன் அவர்கள் இக்கல்வெட்டு குறிப்பில் அகம்படியர் ஒருவர் கல்வெட்டு இருப்பதை கண்டு இக்கல்வெட்டின் முழுச்செய்தியை பெங்களூரில் உள்ள தொல்லியல் அலுவலகம் சென்று பெற்று வந்தார் (இதன் கையெழுத்து பிரதியும் நம்மிடம் உள்ளது)
மேலும் இதே கல்வெட்டு செய்தி குறித்து வேறு நூல் ஒன்றில் வெளியிடப்பட்ட கல்வெட்டு வரிகளையும் நம் பார்வைக்கு ஆராய்வதற்கு அனுப்பியிருந்தார் அதை இணைப்பு காணலாம்.
அதுமட்டுமல்லாமல் இக்கல்வெட்டு அமைந்துள்ள மானம்மதி கோவிலுக்கு நேரில் சென்று இக்கல்வெட்டின் மூலப்படத்தையும் படம் பிடித்து நமக்கு அனுப்பியுள்ளார் அவற்றையும் இப்பதிவின் இணைப்பில் காணலாம்.
அவரின் அரிய முயற்சியை பாராட்டுவதோடு நன்றியையும் இந்நேரத்தில் தெரிவித்துக்கொள்கின்றோம்.
வணக்கங்களுடன்
மு.சக்தி கணேஷ் சேர்வை(அகமுடையார்)
அகமுடையா ஒற்றுமைக்காக
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்