“கல்வெட்டில் அகமுடையார்” உதிரப்பட்டி நடுகல் – உள்வீட்டு கோயிற் சேவகர், ——-…

Spread the love

First
“கல்வெட்டில் அகமுடையார்”

உதிரப்பட்டி நடுகல் –
உள்வீட்டு கோயிற் சேவகர்,
————————————————–
இன்றைய தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டம், கழுகுமலை எனும் ஊரில் குசக்குடி தெருவில் நடப்பட்டுள்ள நடுகல் கல்வெட்டில் கீழ்கண்ட செய்தி காணக்கிடைக்கின்றது.

கோமாறன்சடையன் எனும் பாண்டிய மன்னனின் 23வது ஆட்சியாண்டின் போது (கி.பி 889ம் ஆண்டு) ஆய்குல மன்னன் கருநந்தனுக்கும், பாண்டிய மன்னன் கோமாறன்சடையனுக்கும் இடையே போர் நடைபெற்றுள்ளது. போரில் அருவியூர் கோட்டை அழிக்கப்பட்டது. மேலும் இப்போரில் பாண்டியர் அரசின் படைத்தலைவனாகவும் (ஏனாதி) பெருநெற்சுரம் எனும் பகுதிக்கு அரசனாக (குறுநில அரசனாகவும்) இருந்த எட்டி மன்னன் மங்கல ஏனாதி என்பவனிடம் பணிபுரிந்த “உள்வீட்டு கோயிற் சேவகர்” சென்னை அருகே உள்ள பூந்தமல்லி பகுதியை சேர்ந்த வினையன் தொழுசூரன் மற்றும் பேரெயில் குடி சாத்தன் நக்கன் ஆகிய இருவரும் போரில் வீரமரணம் அடைந்தனர். இவர்களின் வீரமரணத்தை போற்றும் வகையில் 20 கழஞ்சு பொன் பெறுமானம் உள்ள நிலம் இவர்களின் உறவினர்களுக்கு உதிரப்பட்டியாக வழங்கப்பட்டது.

ஆதாரம்: தென் இந்திய கல்வெட்டுக்கள் தொகுதி – 4, கல்வெட்டு எண் – 31,
மத்திய அரசு தொல்லியல் துறை வெளியீடு. குறிப்பு: கல்வெட்டின் முழுவரிகளை இப்பதிவின் இணைப்பு 1ல் காணலாம்.

மேலதிக செய்திகள்
————————————-
உள்வீட்டு கோயிற் சேவகர் என்னும் அகம்படியர் சாதியினர்
——————————————
இந்த நடுகல் செய்தியில் வரும் இருவரும் “உள்வீட்டு கோயிற் சேவகர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளனர். உள்வீடு என்பது அரண்மனையை குறிப்பதாகும். உள்ளே அமைந்த வீடு என்பது இதன் பொருளாகும். நகரத்தில் உள்ள அரசன் வாழும் அரண்மனை என்பது நகரத்தின் நடுவிலும் மற்ற வீடுகள் அரண்மனையை சூழப்பட்டும் அமைந்திருக்கும். இது ஒரு பாதுகாப்பு நடவடிக்கைகாக பண்டைய நாளில் இருந்த நடைமுறையாகும். இந்த காரணத்தினாலேயே பண்டைய காலத்தில் அரண்மனையை குறிக்க “உள் வீடு” என்ற பதமும் பயன்பட்டு வந்துள்ளது தெரிகின்றது.

இந்த நடுக்கல்லில் வரும் “உள்வீட்டு கோயில்” என்ற வரிகளும் நமது கருத்தை உறுதிப்படுத்துகின்றன. அதாவது கோவில் என்பது இன்று ஆலயம் என்ற பொருளை இன்று தருவதை போல கோவில் என்பதில் கோ என்பது அரசனையும் இல் என்பது வாழும் இடம் என்பதையும் குறித்துநிற்க கோவில் என்பது அரண்மனையும் குறித்து வந்துள்ளது.

அதே போல் சேவகர் என்பது பண்டைய காலத்தில் (போர் வீரர்) என்ற பதத்திலேயே பயன்பட்டுள்ளது. இதனை இப்பதிவில் உள்ள இணைப்புகளில் நீங்கள் விரிவாக படிக்கலாம்.

ஆகவே போரில் மாண்ட “உள்வீட்டு கோயிற் சேவகர்” இருவரும் அரண்மனையை சேர்ந்த போர் வீரர் என்ற செய்தியை நமக்கு அளிக்கின்றது.

இன்றைய அகமுடையார் சாதியினரின் முந்தைய பெயரான அகம்படியர் என்ற பெயர், நடுகல்லில் வரும் “உள்வீட்டு கோயிற் சேவகர்” என்ற பிரிவினரை குறித்துள்ளது தெரிகின்றது.

இக்கருத்தை “நடுகற்கள்” என்ற நூலில் சரித்திர செம்மல் திரு.ச.கிருஷ்ணமூர்த்தி அவர்களும் எடுத்துரைக்கின்றார்.

அதாவது “உள்வீட்டு கோயிற் சேவகர்” என்பது அரண்மனையில் பணிபுரிந்த போர் வீரர், அகம்படியர் அல்லது மனைமகன் எனலாம்” என்று குறிப்பிடுகிறார்.

பார்க்க இணைப்பு :

ஆகவே இந்த நடுக்கல்லில் குறிக்கப்படும் இருவரும் பண்டைய காலத்தில் அகம்படியர் என்றும் இன்று அகமுடையார் என்று அறியப்படும் சாதியினர் என்பதையும் அறிந்து கொள்ளலாம்.

வட தமிழக அகமுடையார் போர் வீரர்கள் தென்னகப் போரில் கலந்து கொண்டமை
————————————————————–
நடுகல் செய்தியில் மாண்டவர்களின் ஊரும், பெயரும் தெளிவாக கூறப்பட்டுள்ளது. அதாவது அவ்வீரர்களில் ஒருவனாகிய “வினையன் தொழுசூரன்” என்பவன் தொண்டை நாட்டு பூந்தமல்லி பகுதியை சேர்ந்தவன் மற்றொருவனாகிய “குடிச்சாத்தன் நக்கன்” என்பவன் பேரெயில் எனும் தொண்டை நாட்டு காஞ்சிபுரத்தை சேர்ந்தவன்.

ஆகவே இருவரும் இன்றைய வட தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர்கள். இன்று அகமுடையார் என்று அறியப்படும் சாதியினர் அது தென் தமிழகமாக இருந்தாலும் சரி, வடதமிழகமாக இருந்தாலும் சரி கி.பி 10ம் நூற்றாண்டு தொடங்கி, கி.பி 16ம் நூற்றாண்டு வரை கல்வெட்டுக்கள், செப்பேடுகள், நில ஆவணங்களில் “அகம்படியர்” என்ற ஒற்றைப்பெயரிலேயே அழைக்கப்பட்டுள்ளனர். இதற்கு நமது அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்திலேயே நிரம்ப கல்வெட்டு ஆதாரங்களை வெளியிடுள்ளதை,
நமது பக்கத்தை தொடர்ந்து வாசித்து வருபவர்கள் அறிந்திருக்கக்கூடும்.

மேலும் நடுக்கல்லில் போரிட்டு மாண்ட போர் வீரர்கள் இருவரும் வடதமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர்கள். ஆகவே, வடதமிழகத்தில் வாழ்ந்த அகம்படியர்களும் (அகமுடையார்களும்) போர் குடியினர் என்பதை எடுத்துக்காட்டுவதாக இந்த நடுகல் செய்தி அமைந்துள்ளது.

இந்த நடுகல் செய்தி மட்டுமல்ல வட தமிழகத்தில் கிடைத்த பல்வேறு கல்வெட்டுகளில் வடதமிழகத்தில் வாழ்ந்த அகம்படியர்கள் (அகமுடையார்களும்) பலர் படைத்தளபதிகளாகவும், பெரும் போர் வீரர்களாகவும் இருந்ததை எடுத்துக்காட்டுகின்றது.

தற்போது அகமுடையார் சாதியில் குழப்பம் விளைவிக்க விரும்பும் அகமுடையார் சமூகத்திற்கு சம்பந்தமில்லாத வேற்று சாதி புல்லுருவிகளும், குடியைக் கெடுக்க வந்த சில கோடாரிக் காம்புகள் சிலரும், தென் மாவட்டத்தில் இருப்போர் போர்குடி அகம்படியர் என்றும் வடதமிழகத்தில் இருப்போர் வேளாண்குடி அகம்படியர் என்றும் குழப்பம் விளைவித்து வருகின்றனர். அவர்கள் முகத்தில் கரிபூசும் வண்ணமே இந்த வரலாற்று ஆதாரங்கள் திகழ்வதோடு, அறியாமையில் இருக்கும் பலருக்கும் உள்ளங்கை நெல்லிக்கனி போல் எடுத்துக்காட்டுகின்றது.

ஆனால் வடதமிழக போர்வீரர்கள், தென் பாண்டிய நாட்டில் நடைபெற்ற போரில் அதுவும் தாங்கள் சார்ந்த தொண்டை நாட்டு மன்னர் அல்லாத ஒருவருக்காக போரிட காரணம் என்ன???

இதற்கு இரண்டு விதமான காரணங்கள் தான் இருக்க முடியும்.

ஒன்று – கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பதை போல , போரில் வெல்ல வேண்டும் என்று முனைப்புடைய அறிவார்ந்த அரசன் ஒருவன், போரில் சிறந்த மற்றும் தேர்ந்த மரபினரான அகம்படியர்களை போருக்கு அழைத்து வந்து போரில் ஈடுபட வைப்பது மரபான செயலாகும்.

மற்றொன்று – குறிப்பிட்ட மன்னனுக்கு உதவும் பொருட்டே வந்தமையும் காரணமாகலாம். அதாவது இந்த இரு வீரர்களும், எட்டி மன்னன் மங்கல ஏனாதி சார்பாக போரிட்டதை நடுகல் செய்தி வழியாக அறிந்திருக்கிறோம். குறிப்பிட்ட மன்னன் எட்டி என்று குறிப்பிடப்படுவதை கவனிக்கவும். இந்த எட்டி என்பது வணிகர்களுக்கு அரசரால் அளிக்கப்படும் பட்டமாகும். அதே போல் ஏனாதி என்பது படைத்தளபதிகளுக்கு சோழ மன்னர்களால் அளிக்கப்படும் பட்டமாகும். ஆகவே குறிப்பிட்ட இந்த மன்னன் படைத்தளபதியாக இருந்தவன் என்றும் இவன் எட்டி (வணிக) மன்னன் என்ற பெயரில் குறிப்பிட்ட பகுதியை ஆட்சி செய்துள்ளான் என்பதையும் புரிந்து கொள்ள முடியும்.

போர்குடியை சேர்ந்த ஒருவன் எப்படி வணிக (எட்டி) மன்னன் என்ற பெயரில் ஆட்சி செய்வது சாத்தியமா என்று நீங்கள் கேட்கலாம்.

இதற்கு இன்னொரு உதாரணத்தை கொண்டு எளிமையாக இங்கு விளக்க முடியும்.

அகம்படியர்களுக்கு கோயிற்றமர், மனைப்பெருஞ்சனம், உள்மனையார், ஏழகத்தார், அகத்தார் என்ற பல்வேறு பெயர்கள் பண்டைய காலத்தில் வழக்கத்தில் இருந்துள்ளன என்பதற்கு பல்வேறு கல்வெட்டுக்களும், செப்பேடுகளும் சான்று கூறுகின்றன. பல்வேறு பெயர்கள் இருந்தாலும் இவை அனைத்தும் தரும் பொருள் ஒன்று தான், அதாவது அரண்மனையில் வாழ்பவர் அல்லது அரண்மனையை சேர்ந்த அரசகுலத்தவர் என்பதாகும்.

இதில் கோயிற்றமர் என்ற பதத்தை மட்டும் இப்போது பார்போம். கோயிற்றமர் என்பதை பிரித்தால் கோவில் (அரண்மனை) என்றும் அமர் (வசிப்பவர்) அல்லது தமர் (உறவினர்) என்ற பொருளையும் தமர் (உறவினர்) என்பதையும் குறிக்கிறது.

ஆகவே அகம்படியர்களுக்குரிய மற்ற பெயர்களான கோயிற்றமர், மனைப்பெருஞ்சனம், உள்மனையார், ஏழகத்தார், அகத்தார் என்ற பல்வேறு பெயர்களும் இப்பெயர்களுக்கான பொருள் அரண்மனையில் வசிக்கும் அரசகுடியினர் என்பதை விளக்குவதாகும்.

சரி கோயிற்றமர் என்பது இப்போது விளக்க வேண்டிய அவசியம் என்னவென்று கேட்டால், இப்படிப்பட்ட அரசகுடியினர் வாணிகத்திலும் ஈடுபட்டு வந்துள்ளதை நாம் பல்வேறு சான்றுகளில் அறிந்துகொள்ளலாம்.

இதற்கு சான்றாக வடதமிழகத்தில் உள்ள வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அருகில் கிடைத்த 9ம் நூற்றாண்டை சேர்ந்த நடுகல் செய்தியை குறிப்பிடலாம்.

இந்த நடுகல் செய்தியில் “வாணிக வாணிளவரையர்” என்ற அடைமொழியுடன் அறியப்படும் கோயிற்றமன் (அகம்படியன்) ஒருவன் அப்பகுதியில் நடைபெற்ற போர் ஒன்றில் இரண்டு குதிரைகளையும், குதிரை வீரர்களையும் கொன்றதோடு தானும் இறந்தான். அவனுடைய வீரத்திற்காக உதிரப்பட்டியாக நிலம் அளிக்கப்பட்டது.

போர்குடியை சேர்ந்த கோயிற்றமன் (அகம்படியர்) ஓருவன் வாணிகத்திற்கான இளவரசன் என்ற பொருள்படும் “வாணிக வாணிளவரையர்” என்ற அடைமொழியுடன் குறிப்பிடுவதை கவனிக்க முடியும்.

ஆகவே போர்குடியை சேர்ந்தவர்களும், வாணிக அடையாளங்களோடு அரசாட்சி மேற்கொண்டதற்கு இது போல் நிறைய ஆதாரங்கள் உண்டு. மற்றோரு சந்தர்ப்பத்தில் இதை விரிவாக விளக்குவோம்.

ஆகவே போர்குடியை சேர்ந்த ஏனாதி எனும் தளபதியானவன் எட்டி என்ற பட்டம் கொண்டு மன்னனாக ஆட்சி நடத்தினான் என்பதை புரிந்து கொள்ள முடியும். மேலும் போரில் மாண்ட இரு அகம்படியர் போல இந்த எட்டி மன்னனும் அகம்படியர் இனத்தை சேர்ந்தவன் என்பதை புரிந்துகொள்ளலாம்.

இதே நடுகல்லில் வரும் அகம்படியரில் ஒருவன் பெயர், நாம் சொல்லும் கருத்துக்கு மற்றோரு ஆதாரமாக விளங்குகின்றது. அதாவது பேரெயில் பகுதியை சேர்ந்த “குடிச்சாத்தன் நக்கன்” என்ற பெயரில் உள்ள குடிச்சாத்தன் என்பது வணிகர்களையும், வணிகர்களுக்கு பாதுகாப்பு வழங்கிய குடியினரையும் குறிப்பதாகும்.

ஆகவே வடதமிழகத்தை சேர்ந்த வீரர்கள் தன் குடி சார்ந்த அரசனுக்காக தென் பாண்டிய நாட்டில் வந்து போர் புரிந்துள்ளனர். இவ்வாறு அழைத்து வரப்பட்ட இவர்களது வழியினர் இந்த காலத்திற்கு பிறகும் போர் படையில் பணியாற்றியுள்ளனர் என்பதை பல்வேறு அடையாளங்களும் தென் தமிழகத்தில் கிடைத்த மற்றோரு உள் வீட்டு சேவகர் நடுகல் செய்தியும் நமக்கு தெரிவிக்கின்றது. குறிப்பிட்ட இந்த உள் வீட்டு சேவகர் நடுகல் ஆனது மேலே குறிப்பிட்ட அருவியூர் கோட்டை அழிப்பு போரின் போது உயிரிழந்தவன் ஆவான்.

மேலும் அகம்படியர் குடிச்சாத்தன் என்பவர்கள் வழியினர் பெயராலேயே அகம்படியர்கள் நிறைந்தும் பாரம்பரியமாகவும் வாழும் மதுரை மாவட்டம் திருமங்கலத்தின் அருகில் சாத்தன்குடி என்ற ஊர் அமைந்துள்ளது. இதனைப்பற்றி மற்றோரு சந்தர்ப்பத்தில் விரிவாக பேசுவோம்.

தொழுசூரன் – தொழுவ வேளாளர்
—————————————-
இன்று வடதமிழகத்தில் வாழும் அகமுடையார் பிரிவினர் சிலர் தொழுவ வேளாளர் அல்லது துளுவவேளாளர் என்றும் அழைக்கப்படுவதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

இந்த துளுவவேளாளர் பிரிவினர் இன்றும் பூந்தமல்லி பகுதியில் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். நடுகல் செய்தியில் பூந்தமல்லி பகுதியை சேர்ந்த வினையன் தொழுசூரன் என்ற அகம்படியர் குறிப்பிட்டிருப்பவதை கவனிக்கும் போது இந்த தொழு என்ற அடையாளத்தோடு வருவதே பின்னாளில் இன்று அகமுடையார் உட்பிரிவாக இருக்கும் தொழுவ வேளாளர் அல்லது துளுவ வேளாளர் என்பதன் காரணியாகவும் இருக்கலாம் (வரும் காலங்களில் ஆதாரங்களால் இது தெளிவாக உணர்த்தப்படும்)

எழுதுவதற்கு நிறைய செய்திகள் உள்ளன. ஆனால் காலம் கருதி இக்கட்டுரையை இத்தோடு நிறைவு செய்கின்றோம்.

நன்றி:
நடுகல் பற்றிய கட்டுரையை நம் பார்வைக்கு அனுப்பிய அகமுடையார் அரண், தலைமை ஒருங்குணைப்பாளர், சோ.பாலமுருகன் அகமுடையார் அவர்களுக்கு நன்றி.

கட்டுரை ஆக்கம்,
மு.சக்திகணேஷ் அகமுடையார்,
அகமுடையார் ஒற்றுமைக்காக
திருமங்கலம்(மதுரை) .

பட இணைப்புகள்
———————————+
1) கழுகுமலை நடுகல் கல்வெட்டு செய்தி, ஆதாரம், தென் இந்திய கல்வெட்டுக்கள் தொகுதி – 4, கல்வெட்டு எண் – 31,
மத்திய அரசு தொல்லியல் துறை வெளியீடு.

2) கழுகுமலை நடுகல் பற்றிய விளக்க கட்டுரை நூல் – நடுகற்கள்,
ஆசிரியர் : ச.கிருஷ்ணமூர்த்தி,
மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம்,
முதல் பதிப்பு : 2004, பக்கம் : 266-267.

3) உள்மனையார் அகம்படியரே – கட்டுரை, பூலாங்குறிச்சி கல்வெட்டுக்கள்,
பேரா எ.சுப்பராயலு, M.R.ராகவவாரியர், ஆவணம், இதழ் – 1, அக்-1991, தமிழக தொல்லியல் ஆய்வுக்கழக வெளியீடு, பக்கம் : 57-65,

4) கோயிற்றமர் விளக்கம்,
வெளியீடு : குந்தவை நாச்சியார் மகளிர் அரசு கலைக் கல்லூரி.

5) கொரட்டி நடுகல்,
ம.காந்தி, ப.வெங்கடேசன்,
ஆவணம், இதழ் – 12, சூலை 2001,
தமிழகத் தொல்லியல் கழகம், பக்கம் – 5,

6) சேவகர் என்பது போர்வீரரை குறிக்கும் நூல் – நடுகற்கள், ச.கிருஷ்ணமூர்த்தி,
மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம்,
முதல் பதிப்பு : 2004, பக்கம் : 318,
———————————————————-
அகமுடையார் வரலாற்று மீட்பு பணியில்,

சோ.பாலமுருகன் அகமுடையார்,
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
அகமுடையார் அரண்,
புலனம் (WhatsApp) எண் : 94429 38890.







இப்பதிவு அகமுடையார் அரண் பாலமுருகன் அகமுடையார்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

பாலமுருகன் அகமுடையார பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

We will be happy to hear your thoughts

Leave a reply

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo