First
அன்பு தம்பி ஆரணி விமல் மறைவுக்கு இரங்கல்கள்
——————————-
ஆரணியை சேர்ந்த தம்பி விமல் அகமுடையார் அவர்கள் இறந்ததாக முகநூல் வழியாக அறிந்து மிகுந்த வேதனை அடைந்தோம்.
27 வயதே ஆன விமல் ,இவ்வளவு சீக்கிரம் நம்மை விட்டு செல்வார் என்று நான் கனவிலும் எதிர்பார்க்கவில்லை.
தம்பி விமலை நான் நேரில் சந்தித்ததில்லை என்றாலும் முகநூல் மெசென்சர் வழியாக முன்பு அடிக்கடி சாட் செய்வார் சில வருடங்கள் முன்பு வரை அடிக்கடி கால் செய்தும் பேசுவார். அவர் பேசியதிலிருந்தே மிகவும் நல்ல பையன் என்பது எனக்கு புரிந்தது.
அதே போல் விமல் நல்ல சமுதாய உணர்வாளர்.
வேலூரில் சேர்வை மாணிக்க முதலியார் தெரு, சேர்வை முனுசாமி முதலியார் போன்ற சேர்வை பட்டம் கொண்ட அகமுடையார்கள் இருக்கின்ற தகவல்களை சில வருடங்கள் முன் நமக்கும் முகநூலுக்கும் தெரிவித்தவர் அவர் தான்.
சில வருடங்கள் முன்புவரை அடிக்கடி போனில் தொடர்புகொண்டு பேசுவார் சமுதாய வரலாற்று செய்திகளை கேட்டு தெரிந்துகொள்வார், அவருக்கு தெரிந்த தகவல்களை நம்மிடம் கேட்டு உறுதிப்படுத்திக்கொள்வார்.
சில மாதங்களுக்கு முன்பு(5 மாதங்களுக்கு முன்பு) என்று நினைக்கிறேன். போன் செய்து தனியாக லிப்ட் தயாரித்து வழங்கும் பணியை செய்யப்போவதாக கூறினார். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இந்த சிறிய வயதில் தொழில் முனைவோர் சிந்தனையுடன் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற குறிக்கோளுடன் முன்னேற தம்பி இருக்கிறார் என்கிற மகிழ்ச்சி ஒரு பக்கம் , மற்ற அகமுடையார் இளைஞர்களுக்கு இவர் முன்மாதிரியாக வரப்போகிறார் என்ற நம்பிக்கை மற்றொரு பக்கம் என மகிழ்ச்சியடைந்தோம்.
அதன் பின் சில மாதங்கள் அவர் தொடர்புகொள்ளவேயில்லை. ஒருவேளை வேலையில் அவர் மும்முரமாக செயல்படுகிறார் என்று நினைத்துகொண்டிருந்தேன். மேலும் நானும் நான் செய்யும் ப்ரோஜக்ட் உதவி ஏதும் கிடைக்காததால் வேலை தேடும் பணியில் முழுநேரமாக செய்துகொண்டிருந்தேன்.
இந்நிலையில் தான் நேற்று தம்பி விமல் மரணமடைந்ததாக முகநூல் வழியாக செய்தி கிடைத்தது.
எனக்கு மட்டுமல்ல . அகமுடையார் இளைஞர்கள் ,பெரியவர்கள் என அகமுடையார் உணர்வாளர்கள் பலருக்கும் இது அதிர்சியாக இருந்திருக்கும் என்பது உண்மை. முகநூலில் விமல் மறைவிற்கு அவர்கள் இட்ட இரங்கல் பதிவுகளே இதை வெளிப்படுத்துகின்றது.
கொடுமையிலும் கொடுமையான செய்தி! ஏற்கனவே சங்கர் என்ற தம்பி 1 வருடங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தியும், சிவகங்கையை சேர்ந்த மணி என்கிற தம்பி கொலை செய்யப்பட்டார் என்ற செய்தியும் நம்மை விட்டு அகலாத நிலையில் தற்போது தம்ப்பி ஆரணி விமல் அவர்களுடைய மறைவும் நம்மை வேதனைப்படுத்துகிறது.
அகமுடையார் இளைஞர்களுக்கு ஒன்று மட்டும் உறுதியாக சொல்லிக்கொள்ள ஆசைப்படுகின்றேன்.
தற்கொலை என்பது என்றைக்கும் தீர்வாகாது. உங்களை பெற்று இத்தனை வருடம் படிக்க வைத்து ,நல்ல நிலையில் வரவேண்டும் என்று நினைக்கும் பெற்றோர்களுக்கு இது பேரதிர்ச்சியாக இருக்கும்.
பிள்ளைகள் இறந்துபோவதை பெற்றோர்கள் பார்ப்பதென்பது கொடுமையிலும் கொடுமையானது!
“கடந்த ஞானியரும் கடப்பரோ மக்கள்மேல் கொண்ட காதல்” என்று எல்லா பற்றுக்களையும் துறந்த துறவியருக்கே தங்கள் மக்கள் பிரிவினையை தாங்க முடியாத போது பாமரராய் வாழும் பெற்றோர்கள் இந்த இழப்பை எப்படி தாங்குவார்கள்?
தற்கொலை செய்வதற்கு முன் இதை ஒருகணம் சிந்தித்து பாருங்கள்!
அப்படிப்பட்ட தண்டனையை பெற்றோர்களுக்கு எந்த பிள்ளைகளும் வழங்கக்கூடாது என்பதுவே நமது தம்பிகளுக்கு நாம் சொல்லும் அறிவுரையாகும்.
வாழ்க்கையில் ஏற்படும் ஏமாற்றங்கள்,ஏளனங்கள்,தோல்விகள், இழப்புகள் என இவற்றிற்கெல்லாம் தற்கொலை என்று முடிவெடுத்து விட்டால் இந்த மண்ணில் எந்த மனிதராவது உயிர் வாழ முடியுமா?
அதே போல் இந்த சமுதாயத்தில் உள்ள இளைஞர்களுக்கு ஒருவருக்கொருவர் கைகொடுத்து முன்னேற்றி செல்ல சரியான அமைப்போ ,திட்டமிடுதலோ இல்லை என்பது பெருங்குறையாகும்.
எதற்குமே அசையமாட்டோம் என்ற எண்ணத்துடனே இந்த அகமுடையார் சமுதாயம் தொடர்ந்து மெளனம் சாதித்து வருகின்றது.
உயிர் போகும் பிரச்சனை என்றாலும் உதவுவதில்லை என்கிற மனநிலையோடே இந்த சமுதாயம் தன்னலத்தை மட்டுமே பிரதானமாக கொண்டு தான் மட்டும் முன்னேறினால் போதும் மற்றவர்களுக்கு துயரம் வந்தால் நமக்கென்ன என்று கடந்துபோவதாலேயே இது போன்ற ஆயிரமாயிரம் நிகழ்வுகள் வரலாறு தோன்றும் நடந்துவந்துள்ளதை நான் காண்கின்றேன்.
இது மாறவேண்டும். தம்பி விமல் அவர்களின் இறப்பே இறுதியாக இருக்க வேண்டும்!
அகமுடையார்கள் தன்னலத்தை விடுத்து ஒருவருக்கொருவர் உதவும் மனப்பான்மையை வளர்த்துக்கொள்ள வேண்டும் . வேலை தேடுபவர்களுக்கு வேலை தருபவர்களுடன் இணைப்பையும் , தொழில் முனைவு செய்து முன்னேற விரும்புவர்களுக்கான நெட் ஓர்க் ஏற்படுத்தி தொழில்ரீதியான தொடர்புகளை ஏற்படுத்துவதுடன் கடன் உதவி பெறுவதற்கான உதவிகளையும் செய்து தர வேண்டும் போன்ற முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும். அகமுடையார்களின் இளம் தொழில்முனைவோர்கள் அமைப்பு ஏற்படுத்தப்பட்டால் அதற்கு தம்பி விமலின் பெயரை வைத்து செயல்படுத்த வேண்டும் என்பதன் மூலம் அவரை நாம் என்றேன்றும் நினைவில் வைத்துக்கொள்ளலாம்.
அதே நேரம்
தம்பி விமலை இழந்து வாழும் குடும்பத்தாருக்கு அகமுடையார்கள் சார்பில் ஆழ்ந்த இரங்கல்கள்! இந்த பிரிவில் இருந்து நீங்கள் மீண்டு வர வேண்டுமாய் வேண்டுகிறோம்.
சொர்க்கம் என்ற ஒன்று இருந்தால் அதில் தம்பி விமலுக்கும் இடம் கிடைக்க வேன்டும்!
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்