First
கல்வெட்டில் அகமுடையார் – 1
பழங்காலத் தமிழர் வரலாற்றைத் தொகுக்க உதவும் பல சான்றுகளில் கல்வெட்டுகள் மிக முக்கியமானவை. கல்லில் வெட்டப்பட்ட எழுத்துக்களைக் கல்வெட்டுகள் என்று கூறுகிறோம் . கல்லில் எழுத்துக்களைப் பொறித்தால் அவை அழியாமல் நிலைத்து நிற்கும் என்பதை நம் முன்னோர்கள் கண்டனர்.
அவைகள்தாம் நம்முடைய பண்டை தமிழர் வரலாற்றைக் கூறும் ஆதாரங்களாகத் திகழுகின்றன.
கல்வெட்டுகளில் பெரும்பாலும் கோயில்களுக்குச் செய்த திருப்பணிகள், கோயில்களைப் பராமரிக்க வழங்கப்பட்ட இறையிலி நிலங்கள், பொற்காசுகள், ஆடுகள், பசுகள், காளைகள், எருதுகள் போன்றவைதான் அதிகம் இருக்கும். மன்னர்களின் மெய்கீர்த்திச் செய்திகள், வென்றவர், தோற்றவர் குறித்த குறிப்புகள் இருக்கும். அந்தக் கல்வெட்டுகளின் இடையேதான் அரிதான சில தகவல்களும் ஒளிந்திருக்கும்.
இக்கல்வெட்டுகளை ஆதாரமாக வைத்து அரச மரபின் வரலாறுகள் சில எழுதப்பட்டுள்ளன. ஆனால் சமுதாய வரலாறு எதுவும் முறையாக இன்னும் எழுதப் பெறவில்லை. சமுதாய வரலாறு எழுதப்படும் பொழுதுதான் ஒரு நாட்டின் வரலாறு முழுமையடையும், அவ்வகையில் அகமுடையார் சமுதாயத்தின் வரலாற்றைத் தொகுக்க உதவும் கல்வெட்டுகளும், செப்பேடுகளும் இங்கு தொகுத்து ஒரு தொகுப்பாக அளிக்கப்படுகின்றன.
தமிழகம் முழுவதும் பரவியுள்ள ஒரு சில தொன்மையான சமூகங்களில் அகமுடையார் சமூகம் முதலிடம் பெறுகிறது. கடந்த 1000 வருடங்களுக்கு முன்னே பிற்காலச் சோழ, பாண்டியப் பேரரசுகள் எழுச்சி பெறும்போது அதற்கு முதற்காரணமாக விளங்கிய போர்ப்படைகளில் பெரும்பங்காற்றியது அகம்படியர் சமூகம்.
நாயன்மார்கள், ஆழ்வார்கள் முயற்சிகளின் காரணமாக பக்தி இயக்கம் பெருகிக் கோயில்கள் உருவாகி வளர்ந்த போது அதைக் கட்டிக் காத்தது அகம்படியர் சமூகம்,
போர்த் தொழிலுக்கு அடுத்தபடியாகப் பெரும் அளவில் நடந்த உழவுத் தொழில் ஈடுபட்டு, மக்களின் உணவு தேவையை பூர்த்தி செய்யும் மகத்தான உழுவித்துண்ணும் பணியை செய்தது அகமுடையார் சமுதாயம். இவற்றை இந்த ஆவணங்கள் மூலம் அறிகின்றோம்.
அகமுடையார் கல்வெட்டுகளை தேடி பயணித்த போது கிடைத்த கல்வெட்டுகளில் அகமுடையார் சமுதாயம் பற்றிய கல்வெட்டுகள் தனித் தொகுப்பாக தொகுக்கப்பட்டது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும், புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலிருந்தும், அண்டை நாடான இலங்கையில் இருந்தும் கிடைத்த 200 மேற்பட்ட அகம்படியர் கல்வெட்டுகள் இதுவரை தொகுக்கப்பட்டுள்ளது. இன்னும் கள ஆய்வு செய்தால் பல கல்வெட்டுகள் கிடைக்க வாய்ப்புள்ளது.
இக்கல்வெட்டுகளில் அகமுடையார் சமூகம் பற்றிய பல அரிய வரலாற்றுச் செய்திகள் அடங்கியுள்ளன. அவற்றுள்,
நடுநாட்டிற்கும் அகமுடையார் சமூகத்திற்கும் நீண்டநெடிய பாரம்பரிய வரலாற்று தொன்மை உண்டு.
பண்டைய நடுநாட்டின் ஒர் பகுதியும், தற்போதைய கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் வட்டம், அறகண்ட நல்லூர் ஒப்பிலாமணி ஈஸ்வரர் கோவிலில் கிடைத்த கல்வெட்டுகளில் ஒரு கல்வெட்டு “அகம்படி முதலிகளில்
பெரிய பெருமாள் பாண்டியராயன்” என்பவரை பற்றியது இக்கட்டுரைச் செய்தியாகும்.
ஊரும் பேரும்
விரவுநீறுபொன் மார்பினில்
விளங்கப்பூசிய வேதியன்
உரவுநஞ்சமு தாகவுண்
டுறுதிபேணுவ தன்றியும்
அரவுநீள்சடைக் கண்ணியர்
அண்ணலார்அறை யணிநல்லூர்
பரவுவார் பழிநீங்கிடப்
பறையுந்தாஞ்செய்த பாவமே
– திருஞானசம்பந்தர்.
நடுநாட்டில் தேவாரப் பாடல் பெற்ற தலங்கள் இருபத்திரண்டில் ஒன்று திருஅறையணிநல்லூர். தற்போதைய கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகருக்கு வடகிழக்கே 3 கிலோ மீட்டர் தொலைவில் தென் பெண்ணையாற்றின் வடகரையில் அமைந்துள்ளது இப்பேரூர். இந்நாளில் இவ்வூர்ப் பெயரை மக்கள் வல்லின றகரத்துக்குப் பதிலாக இடையின ரகரத்தையே ஆவணங்கள், பெயர்ப் பலகைகள் போன்றவற்றில் பயன்படுத்தி “அரகண்ட நல்லூர்” என வழங்குகின்றனர். தமிழக அரசும் அம்மரபையே பின்பற்றுகிறது.
விஜய நகர மன்னன் கிருஷ்ண தேவராயரின் கல்வெட்டு இவ்வூரை அறைகண்டநல்லூர் என்று கூறுகிறது. தமிழகத்தில் பல ஊர்களின் பெயர்கள் காலப்போக்கில் மருவின. அவற்றின் மூலம் பெயர்கள் மக்களின் மனத்தை விட்டு அகன்றன. சான்றாகக் கண்டராதித்த சோழன் மன்னனின் பெயரால் உருவான கண்டராதித்தபுரம் கண்டாச்சிப்புரமாக மருவியது. ஆனால், மக்கள் இன்று பேச்சு வழக்கில் கண்டாசரம் என்றே கூறுகின்றனர். இதைப் போன்றே அறையண்டை நல்லூர் அறகண்ட நல்லூராக மருவியிருக்கலாம். அறை என்றால் பாறை, அண்டை என்றால் அணித்தே என்று பொருள் படும். பாறையைச் சார்ந்த ஊர் எனக் கொள்ளுதல் பொருத்தம். இப்பொருள்படும் வண்ணம் திருஞான சம்பந்தர் தேவாரமும், இவ்வூர்க் கோயில் கல்வெட்டுகளும் அறையணி நல்லூர் எனச் செப்புகின்றன. இவ்வூரை அறகண்ட நல்லூர் என்று வல்லின றகரமிட்டு எழுதுதலே பொருத்தமாகும்.
சாசனங்களில் இவ்வூர் “அறையணி நல்லூர்” என்றும், பெண்ணை வடகரை உடைக்காட்டு நாட்டில் இருப்பது என்றும் குறிக்கப் பெறுகிறது. மக்கென்ஸியின் காலத்தில் இவ்வூர் திருக்கோவிலூர் பேரூராட்சியின் அங்கமாய் விளங்கியது. தமிழக அரசு 1956 ஆம் ஆண்டு இயற்றிய பஞ்சாயத்துச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட போது திருக்கோவிலூர் பேரூராட்சியினின்றும் பிரிந்து தனி ஊராட்சியாக இவ்வூர் உருவெடுத்தது. பின்னர் மக்கள் தொகைப் பெருக்கத்தால் பேரூராட்சியாக மலர்ந்தது.
ஒப்பிலாமணீஸ்வரர் கோவில்
நீண்ட நெடும் வரலாற்றுப் பின்னணி கொண்ட சிவத்தலங்களுள் அறகண்ட நல்லூரும் ஒன்று. நடுநாட்டுத் திருத்தலங்களுள் பெருஞ்சிறப்புக்குரியதாய்க் கருதப்படுகிறது. தென் பெண்ணையாற்றின் வடகரையில் ஒரு சிறு குன்றின் மேல் இக்கோயில் அமைந்திருக்கிறது. ஆற்றை நோக்கித் தெற்கு வாயிலில் இராஜகோபுரம் அமைந்திருக்கிறது. கோயிலுக்குள் இரண்டு பிரகாரங்கள் உள்ளன. தென்மேற்கு மூலையில் பல்லவத் தூண்கள் நிறைந்த திருவிழா மண்டபம் இருக்கிறது. சுவாமி சந்நிதி மேற்கு நோக்கியும், அம்பிகை சந்நிதி கிழக்கு நோக்கியும் இருக்கின்றன. வெளிப் பிரகாரத்தில் அருணாசலேசுவரர், அம்பிகை இவர்கள் சந்நிதி இருக்கின்றன. மேற்குப் பிரகாரத்தில் ஒரு பீடத்தின் மேல் இரண்டு பாதங்கள் இருக்கின்றன. திருஞானசம்பந்தர் கோயிலை வலம் வரும்போது இவ்விடத்திலிருந்து திருவண்ணாமலையைக் காட்டினார்களாம். உடனே “உண்ணாமுலை உமையாளொடும்” என்ற திருப்பதிகத்தைப் பாடத் தொடங்கிவிட்டார் என்று கூறப்படுகிறது. அந்த இரண்டு பாதங்களின் இடைவெளி வழியே பார்த்தால் திருவண்ணாமலை நன்கு தெரியும்.
இவ்வூரில் கோயில் கொண்டு எழுந்தருளியிக்கும் இறைவன் “ஒப்பிலாமணீசுவரர்” என்றும், அறையணிநாதேசுவரர் என்றும் வழங்கப் பெறுவர். சாசனங்களில் இவர் பெயர் ஒப்பொருவருமில்லாத நாயனார் என்று குறிக்கப் பெரும். வடமொழியில் அதுல்யநாதர் என்பர். இறைவியின் திருநாமங்கள் அழகிய பொன்னம்மை, அருள் நாயகி, செளந்தரிய கனகாம்பாள் என்பன. தலவிருட்சம் வில்வம் என்று கூறப்படுகிறது. தீர்த்தங்கள் தென் பெண்ணையாறு, பீம தீர்த்தம், சுனை தீர்த்தம் முதலியவை. கோயிலுக்கு வெளியில் பாறைகளின் நடுவே பீம தீர்த்தமும், சுனை தீர்த்தமும் இருக்கின்றன. தீர்த்தங்களுள்ள பாறைகளின் மேல் திரெளபதியம்மன், கங்கையம்மன் கோயில்கள் இருக்கின்றன.
கோயில் அமைந்திருக்கும் பாறையின் தென் கிழக்குப் பக்கத்தில் அடிப்புறம் ஐந்து அறைகளையுடைய குகைக்கோயில் அமைந்திருக்கிறது. இது பல்லவ மன்னர் காலத்தில் குடையப்பட்டது. இதற்குள் விநாயகரின் அழகிய உருவம் செதுக்கப்பட்டிருக்கிறது.
இத்தலத்திற்கு, திருஞானசம்பந்தர் பதினொரு பாடல்களையுடைய திருப்பதிகம் பாடியுள்ளார். அதில்,
” ……. அண்ணலார்
அறையணி நல்லூர்
தலையினால்தொழு தோங்குவார்
நீங்குவார்தடு மாற்றமே”
” …….. அண்ணலார்
அறையணி நல்லூர்
பாவுவார்பழி நீங்கிடப் பறையுந்
தாஞ்செய்த பாவமே”
” …….. அண்ணலார்
அறையணிநல்லூர்
வாரமாய்நினைப்பார்கள் தம்
வல்வினையவை மாயுமே”
என்று அறையணிநாதரைப் தொழுவோர் அடையக்கூடிய பெரும்பயன்களைத் திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார்.
கல்வெட்டுக்கள்
இத்திருக்கோயிலில் பிற்காலச் சோழ மன்னர்களில் முதலாம் இராசராச சோழன், முதலாம் குலோத்துங்கன், விக்கிரம சோழன், இரண்டாம் குலோத்துங்கன், இராசாதிராசன், மூன்றாம் குலோத்துங்கன், மூன்றாம் இராசராசன், மூன்றாம் இராசேந்திர சோழன் இவர்கள் காலங்களிலும், பிற்காலப் பாண்டியர்களின் மாறவர்மன் திருபுவனச் சக்கரவர்த்தி சுந்தரபாண்டியன், மாறவர்மன் திரிபுவனச் சக்கரவரத்தி விக்கரமபாண்டியன் இவர்கள் காலங்களிலும், கோப்பெருஞ்சிங்கன் காலத்திலும் விஜயநகர அரசர்களின் சதாசிவ மகாராயர், கிருஷ்ணதேவ மகாராயர், கம்பப்பண்ண உடையார் இவர்கள் காலங்களிலும் சகலலோக சக்கரவர்த்தி இராசநாராயண சம்புராயர் காலத்திலும் பொறிக்கப் பெற்ற 96 கல்வெட்டுக்கள் இக்கோயிலில் இருக்கின்றன. வரலாற்றுக் கருவூலங்களாகத் திகழும் இக்கல்வெட்டுகள் இவற்றுள் 6 கல்வெட்டுகள் 1902 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தென்னிந்தியக் கல்வெட்டுகள் VII தொகுதியில், கல்வெட்டு ஆண்டறிக்கை (ARE) எண் 386 முதல் 391 வரை வரிசையாக வெளியிடப்பட்டுள்ளன. ஏனைய 90 கல்வெட்டுகள் 1934-35 ஆண்டுகளில் தென்னிந்திய கல்வெட்டு ஆண்டறிக்கையாக (ARE) வெளிவந்தன.
திருவிளக்கு வைத்தல்
விளக்கு இருளை நீக்கித் தன்னுடைய சுடரால் பொருள்களையும் சுற்றுப்புறத்தையும் விளக்கம் செய்வதால் விளக்கு என்று பெயர் பெற்றது. இயற்கையைப் பல்வேறு வகைகளில் வென்ற மனிதன் விளக்கைக் கண்டுபிடித்தது மனித வாழ்வின் திருப்பங்களில் ஒன்று. இருளைக் கண்டு பயந்த மனிதன் ஒளிகொடுத்த விளக்கை வணங்கினான். இறைவனையே
“ஒளிவளர் விளக்கு” என்று போற்றினான் . அருளாளர்கள் தீபசோதியில் இறைவனைக் கண்டனர் . அருட்பெருஞ்சோதி என்று பாடிப் பரவினர் . கோயில்களில் விளக்கு வைப்பது மிகப் பெரிய புண்ணியம் என்று கருதப்பட்டது . பூசை நேரத்திலும், வழிபடுகின்ற காலங்களில் எரியும் சந்திவிளக்குகளும், எப்பொழுதும் கோயிலில் எரியும் நந்தா விளக்குகளும் வைத்தனர். அதற்காக நிலம், நெல், பொன், காசு, ஆடு, பசு, காளை ஆகியவைகளைக் கொடுத்தனர்.
அகமுடையார் குலப் பெருமக்களுள் பலர் இவ்விளக்குகளைக் கொடையாகக் கொடுத்துள்ளனர்.
நிலக்கொடை
அகமுடையார்கள் பலர் பெரும் நில உடைமையாளர்களாக இருந்துள்ளனர். தங்கள் நிலங்களில் ஒரு பகுதியைக் கோயிலுக்குத் தானமாகக் கொடுத்துள்ளனர். சிலர் தங்களுக்குரிய நிலம் இல்லாவிடினும் நிலத்தை விலைக்கு வாங்கிக் கோயிலுக்குத் தானமாகக் கொடுத்துள்ளனர்.
“அகம்படி முதலிகளில்” பெரிய பெருமாள் பாண்டியராயன் இக்கோயிலில் வைத்த மூன்று நந்தா விளக்கெரிக்க, தேவனூர் எல்லைக்குட்பட்ட ஏந்தல் ஏரிக்கரையுள்ளிட்ட நிலங்களை தேவதான மாக்கியுள்ளதாக கையொப்பமிட்டுப் பதிவு செய்துள்ளார்.
“கல்வெட்டில் அகம்படியார்”
இக்கோவில் சன்னதியின் கர்ப்பகிருகத்தில் தென்புறம் மகாமண்டபத்தின் கவாஷிக்குக் கிழக்கு வச்சிரப்படையில் பொறிக்கப்பட்டிருக்கிறது.
கல்வெட்டு விளக்கத்தைப் பார்ப்பதற்கு முன், முதலில் கல்வெட்டு மூலவரிகளைப் பார்த்து விடுவோம்.
1. ஸ்வஸதி ஸ்ரீ திரிபுவநச் சக்கரவத்திகள் ஸ்ரீகுலோத்துங்க சோழதெவற்கு யாண்டு ௩௰௧ வது இராஜராஜ
2. வளநாட்டு வாணகொப்பாடி பெண்ணை வடகரை உடைக்காட்டு நாட்டு திருவறையணி நல்லூருடை
3. யா ரொப்பொருவருமில்லாத னாயநாற்கு ஆறகளூருடையா னிராச ராசதெவன் பொன்பரப்பினானான மகதை
4. ப்பெருமாள் திருமெனி நன்றாக இவ ரகம்படி முதலிகளில் பெரியபெருமாள் பாண்டியராயனென் வை
5. த்த திருநுந்தாவிளக்கு முந்று இவ்விளக்கு முந்றுக்கு நான் தெவனூ ரெல்லையிற் விட்டன என்தல் ஏ
6. ரிகரை உட்பட நாற்பாற்கெல்லையும் விட்டு கல் வெட்டுக்குடுத்தென் பெரியபெருமாள் பாண்டிய
7. ராயனென் இது மாறுவாந் கெங்கை இடை குமரியிடை செய்தார் செய்த பாவங் கொள்வான் இது பந்மாஸ்வர ரக்ஷெ
8. ஸ்வஸதி ஸ்ரீ ஆடுவான் கொல்லதரையன் இட்ட பித்தளைக்கொம்பு இரண்டினால் இடை ௩௰எ லம்.
ஆதாரம்: தென் இந்திய கல்வெட்டுத் தொகுதி – 7, கல்வெட்டு எண்: 1020.
கல்வெட்டு ஆண்டறிக்கை
எண் – 388 /1902.
தென்னிந்திய கோயிற் சாசனங்கள், பாகம் – 1, சாசனம் எண் – 35.
இக்கல்வெட்டுச் செய்தியின் விளக்கம்,
மூன்றாம் குலோத்துங்க சோழனின் 11 ஆம் ஆட்சியாண்டு, பொ.ஆ.1189 இல் இராசராச வளநாட்டு வாணகோப்பாடி பெண்ணை வடகரை உடைகாட்டு நாட்டுத் திருவறையணி நல்லூர் உடையார் ஒப்பொருவருமில்லாத நாயனார்க்கு, ஆறகளூருடையான் இராசராசதேவன் பொன்பரப்பினான மதகைப் பெருமாள் திருமேனி “அறகளூருடைய ராச ராச தேவன் பொன் பரப்பினான மகதைப் பெருமாள் திருமேனிக்கு நன்றுண்டாக (உடல்நலமற்று இருந்ததால்) இவர் “அகம்படி முதலிகளில்” பெரிய பெருமாள் பாண்டியராயன் இக்கோயிலில் வைத்த மூன்று நந்தா விளக்கெரிக்க, தேவனூர் எல்லைக்குட்பட்ட ஏந்தல் ஏரிக்கரையுள்ளிட்ட நிலங்களை தேவதான மாக்கியுள்ளதாக கையொப்பமிட்டுப் பதிவு செய்துள்ளான்.
அதாவது ஆறகளூரை தலைமையிடமாக கொண்டு வாணகோப்பாடி நாட்டை ஆண்ட இராசராச தேவன் பொன்பரப்பினான மகதைப் பெருமாள் எனும் அரசனின் நல்வாழ்விற்காக இவனது அதிகாரியாக விளங்கிய அகம்படியர் இனத்தைச் சேர்ந்த தலைவன் (முதலி) ஒருவன், மூன்று திருநுந்தா விளக்குகளை (தூண்டா மணி விளக்கு) வைத்துள்ளான். இந்த விளக்குகளின் பராமரிப்புக்காக (நெய்விடும் செலவிற்காக) இவ்வூர் எல்லையில் நிலம் அளித்து, அதன் நான்கு எல்லையையும்(நாற்பாற்கெல்லை) கல்வெட்டில் குறித்துள்ளான். குறிப்பிட்ட நிலங்களில் இருந்து கிடைக்கும் வருமானங்களைக் கொண்டு அந்த விளக்கு எரிக்க ஏற்பாடு செய்துள்ளான். இதுவே இக்கல்வெட்டு குறிப்பிடும் அடிப்படைச் செய்தியாகும்.
கல்வெட்டு பெருவிளக்கம்
மேற்கே சேர்வராயன் மலை, தெற்கில் கொல்லி மலை, வடக்கில் சவ்வாது மலை எனும் மலைகளிடைப்பட்டு செங்கம் கணவாய் வழியாக திருவண்ணாமலை மற்றும் அதன் கிழக்கில் அமைந்துள்ள பெண்ணையாறு பாயும் நிலப்பரப்பிற்கு உட்பட்ட இடம் அன்று மகதை நாடு என்றழைக்கப்பட்டது.
இம்மகதை நாட்டினை அகமுடையார்களாகிய வாணகோவரையர் எனும் பெரும் குடிச்சிறப்பு மிக்க அரசர்கள்
பல நூற்றாண்டுகள் ஆண்டு வந்துள்ளனர். அச்சிறப்பு மிக்க குடியில் தோன்றியவனே பொன்பரப்பினான் மகதைப் பெருமாள் எனும் பெயருடைய வாணகோவரையன் (மகாபலி வம்சத்தவன்) ஆவான். இவன் மேற்குறிப்ப்ட்ட மகதை நாட்டிலுள்ள ஆறகளூர் எனும் ஊரினை தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்தவன் ஆவான். மகதை தேசத்து அரசன் என்பதால் இவன் மகதைப் பெருமாள் எனவும் திருவண்ணாமலைக் கோவில் கருவறை கோபுரத்திற்கு பொன் வேய்ந்த காரணத்தால் “பொன்பரப்பினான் மகதைப் பெருமாள்” என்றும் வாணர் வழியினன் என்பதால் வாணகோவரையன் என்ற அடைமொழியையும் பெற்றான்.
இந்த பொன்பரப்பினான் மகதைப் பெருமாள் வாணகோவரையன் மேற்குறிப்பிட்ட மகதை நாட்டை சிறப்புற ஆட்சி செய்ததோடு மட்டுமல்லாமல்
மூன்றாம் குலோத்துங்கச் சோழனுக்கு படைத்தலைவனாகவும் விளங்கி சோழர்களின் போர்களில் வெற்றிகள் பலவற்றையும் தேடித் தந்தவனாவான். குறிப்பாக பாண்டியர்களுக்கு எதிரான சோழப் படையெடுப்பில் வாணகோவரையர்கள் மிகப் பெரும்பங்கு வகித்துள்ளனர். மகதைப் பெருமாள் வாணகோவரையன் மிகவும் ஆற்றல் பொருந்தியவனாக விளங்கியிருக்கிறான். அறையணி நல்லூர் கோயிலில் அவனது பெருமையைப் பாடும் கல்வெட்டுகள் முன்று உள்ளன. அங்கு உள்ள மற்றொரு கல்வெட்டு அவனது வீரத்தைப் புகழ்ந்து பாடப்பெற்ற 15 செய்யுள்களைத் தாங்கி நிற்கிறது. இதனைப் போன்றே திருவண்ணாமலைக் கோயிலிலும்
இவனுடைய பெருமையைச் சொல்லும் 22 பாடல்கள் கல்வெட்டாகச் செதுக்கப்பட்டுள்ளன.
வாணர்களிடம் தோல்வியடைந்த பாண்டிய மன்னர்கள்,
கி.பி.1180 ஆம் ஆண்டில் மூன்றாம் குலோத்துங்கன் பாண்டிய நாட்டின் மீது படையெடுத்துச் சென்று வீரபாண்டியனை வென்றான். மேலே கண்ட போர்களில் எல்லாம் இராசராச வாணக்கோவரையன் சோழ மன்னர்களுக்கு ஆதரவாகப் பங்கேற்றிருக்க வேண்டும். பல இடங்களில் சோழ மன்னர்கள் பெற்ற வெற்றிகளையும் தன் வெற்றிகளாகக் கூறிக்கொள்ளும் இவ்வாணர்கள், திருவண்ணாமலை கல்வெட்டில் “ஆறுமுறை பாண்டியர் முடிபறிக்கும் பேறு பெற்றேன்” என்று கல்வெட்டில் பதிந்துள்ளான்.
மற்றொரு சாசன பாடலில்,
வாணன் வடிவேலால் தேல்வியைத் தழுவி தென்னன் போன திசையில் இவ்வண்ணம் ஆனதே என்று கண்ணீரும் கம்பலையும் நிறைந்து நின்ற காட்சி காட்டப்பட்டுள்ளது.
குடுமியான்மலையிலுள்ள இரண்டு பாடல் கல்வெட்டுகளில் இவ்வாணர் பாண்டியர் மீது வெற்றி கண்டு அவர்களை மதுரைக்குத் தெற்கே விரட்டிப் பழம்பெருமையை இழக்கச் செய்ததைத் தெரிவிக்கிறது.
நூல்: பாண்டிய நாட்டில் வாணாதிராயர் பக்கம் – 12, 13.
இவ்வாறு பாண்டிய மன்னர்களை வெல்வதற்கு பெரும் காரணமாகிய விளங்கிய காரணத்தினாலேயே வாணகோவரைய அரசர்களுக்கு பாண்டிய நாட்டு அரசனாக முடிசூட்டினான் இதனை தொண்டைமண்டலச் சதகம் மற்றும் பெருந்தொகை (பெருந்தொகை, செ. 1188) போன்றவை உறுதி செய்கின்றன.
சோழ மன்னன் வாணர் குலத்தவனை பாண்டிய அரசனாக முடிசூடல்,
மூன்றாம் குலோத்துங்கன் தனக்கு மதுரையை வெற்றி கொள்ள உதவிய வாணன் ஒருவனுக்குப் பாண்டியன் என்று பெயர் கொடுத்து பாண்டியர் பட்டத்தைச் சூட்டினான் என்று அவனது மெய்க்கீர்த்தியில் குறிப்பிடுகின்றன.
பாண்டியர் பட்டத்தை வாணனுக்குப் பட்டஞ்சூட்டிய இச்செயலைத் தன் படைத்தலைவனாக விளங்கிய இராசராச வாணகோவரையன் பொன்பரப்பினான் மகதைப் பெருமாளைக் கொண்டே குலோத்துங்கன் நடத்தினான்.
-நூல்: பாண்டியநாட்டில் வாணாதிராயர்,
பக்கம் – 15, 16
இப்பாண்டியர் பட்டம் சூட்டப்பட்ட வாணன் பெரியபெருமாள் பாண்டியராயன் இருக்க வாய்ப்பிருக்கிறது.
“பெரிய பெருமாள் பாண்டியராயன்” என்று கல்வெட்டில் குறிப்பிடப்படுவதில் இதில் பாண்டியராயன் எனும் இவன் பெயரின் பின்னால் உள்ள அடைமொழி இவன் பாண்டிய நாட்டை வெற்றி கொள்வதற்கு பெரும் உதவி செய்துள்ளான் என்பதைக் காட்டுகிறது.
முன்னர், மகதைப் பெருமாள் வாணகோவரையர் பாண்டிய நாட்டில் சோழர்களால் முடிசூட்டப்பட்டதைப் பார்த்தோம். உண்மையாகவே வாணக்கோவரையர்கள் பாண்டிய நாட்டில் முடிசூட்டப்பட்டு அவர்கள் ஆட்சியதிகாரம் செலுத்தினர். அதையும் தாண்டி வாண அரசர்கள் பாண்டிய நாட்டு மக்களிடமிருந்து வரிவசூலும் செய்துள்ளனர் என்ற தகவலும் பதிவாகியுள்ளது.
நூல்: பாண்டிய நாட்டில் வாணாதிராயர் பக்கம் – 14
முன்னர் மகதைப் பெருமாள் வாணகோவரையரின் கீழ் உயர் அதிகாரியாக பணிபுரிந்த இவன் மகதைப் பெருமாளுக்கு இவன் நெருங்கிய உறவினராக இருக்கக் கூடும் என்பதை இவனுடைய பெயரும் கல்வெட்டுச் செய்தியும் உறுதிப்படுத்துகிறது. பாண்டிய நாட்டு வெற்றியின் பின்னால் அங்கு உயர் அதிகாரியாக மட்டுமல்ல பாண்டியர் பட்டம் பெற்று சிற்றரசன்(ராயன்) போல் வாழ்ந்துள்ளான் என்பதையே இவனது பாண்டியராயன் பட்டம் எடுத்துக்காட்டுகிறது.
அகம்படியர் வம்சத்தாராகிய மகாபலி வழிவந்த மகதைப் பெருமாள் வாணகோவரையரும், பெரிய பெருமாள் பாண்டியராயரும் அகம்படியர் சாதியினர் என்பதையும்
மகதைப் பெருமாள் நலனுக்காக இந்த பாண்டியராயன் கோயிலில் விளக்கெரிக்க நிலம் அளித்துள்ள செய்தியையும், மகதைப் பெருமாள் வாணகோவரையரிடம் இவன் சிற்றரசர் அளவிற்கு அதிகாரம் பெற்று பாண்டியராயர் பட்டத்துடன் விளங்கியுள்ளது போன்ற எல்லா விசயங்களையும் பொருத்திப் பார்க்கும் போது இந்த பெரியபெருமாள் பாண்டியராயன் என்பவன் மகதைப் பெருமாள் வாணகோவரையரின் உறவினராக இருந்திருக்க வேண்டும் என்பதை உறுதியாக சொல்ல முடியும்.
சான்றாதார நூல்கள்,
1) SOUTH INDIAN INSCRIPTIONS,
VOLUME – VII,
ARCHAEOLOGICAL SURVEY
GOVENMENT OF INDIA (1932).
2) ANNUAL REPORTS ON INDIAN EPIGRAPHY, (1887-1905).
ARCHAEOLOGICAL SURVEY GOVENMENT OF INDIA (1986).
3) தென்னிந்திய கோயிற் சாசனங்கள், பாகம் – 1, பதிப்பு – 1953,
தி.ந.சுப்பிரமணியம் பிள்ளை,
GOVERNMENT ORIENTAL MANUSCRIPTS LIBRARY, MADRAS.
4) THE COLAS, VOL – 2 (PART – 2),
K.A.NILAKANTA SASTRI,
UNIVERSITY OF MADRAS, (1937).
5) பொன் பரப்பின் வாணக்கோவரையன்,
புலவர் ந.வேங்கடேசன், மா.சந்திரமூர்த்தி,
ஜூபிடர் பிரிண்டர்ஸ், சென்னை.
பதிப்பு – 2012,
6) பாண்டியநாட்டில் வாணாதிராயர்கள்,
வே.வேதாசலம், பதிப்பு – 1987,
தொல்பொருள் தொழில்நுட்பப் பணியாளர் பண்பாட்டுக்கழகம்.
7) தேவாரத் தலங்கள் நடு நாடு,
ஜீ.ச.முரளி, முதற்பதிப்பு : 2005,
சதுரா பதிப்பகம், சென்னை.
(பக்கம் : 254,255).
8) ஒப்பிலாமணி ஈஸ்வரர் ஆலயம் அறகண்ட நல்லூர்,
முனைவர் பி. இராசாராமன்,
பூம்பொழில் பதிப்பகம், சென்னை.
முதற்பதிப்பு : பிப்ரவரி 2003.
——————————————————
கட்டுரை ஆசிரியர்,
சோ.பாலமுருகன் அகமுடையார்,
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
அகமுடையார் அரண்,
புலனம் (WhatsApp) எண் : 94429 38890.
இப்பதிவு அகமுடையார் அரண் பாலமுருகன் அகமுடையார்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
பாலமுருகன் அகமுடையார பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்