கல்வெட்டில் அகமுடையார் – 2 “அகம்படி முதலிகளில் கூடல் மாறன் குழைந்தான் சேதிராயன்…

Spread the love

First
கல்வெட்டில் அகமுடையார் – 2

“அகம்படி முதலிகளில் கூடல் மாறன் குழைந்தான் சேதிராயன்”
——————————————
அகமுடையார் வரலாற்று மீட்பு குறித்து கல்வெட்டு செய்திகள், செப்பேடுகள், சுவடிகள், இலக்கியங்கள் உள்ளிட்ட அகமுடையார் வரலாற்றுக் குறிப்புகளை பொது வெளியில்
தொடர்ந்து பதிவு செய்து வருகின்றோம்.

இதே போல் மத்திய, மாநில அரசுகள் மற்றும் தனிநபர்கள் மூலம் ஏற்கனவே படியெடுத்து வெளியிட்ட கல்வெட்டு செய்திகளை, அக்கல்வெட்டு கண்டறியப்பட்ட இடங்களுக்கே நேரடியாக சென்று கல்வெட்டுக்களை நேரடியாக பார்த்து அதனை பதிவு செய்யும் அரிய முயற்சியை அகமுடையார் அரண், தலைமை ஒருங்கிணைப்பாளர், சோ.பாலமுருகன் அகமுடையார் அவர்கள் தொடர்ந்து செய்து வருகின்றார்.

அதன் பொருட்டு சென்ற வாரத்தில்
நடு நாட்டில் உள்ள அகமுடையார் கல்வெட்டுக்களை நேரடியாக ஆய்வு செய்துள்ளார். அவ்வகையில் (01-01-2022) அன்று திருப்பாலைப்பந்தல் எனும் ஊரில் உள்ள அகம்படியர் கல்வெட்டு கிடைத்த கோவிலுக்கு சென்று அக்கல்வெட்டினை நேரடியாக சென்று, பார்த்து நமக்கு படம் பிடித்து அனுப்பியுள்ளார்.

மேலும் இந்த கல்வெட்டு பற்றிய குறிப்பு மத்திய அரசின் (ARE) கல்வெட்டு ஆண்டறிக்கையில் பதிவு செய்யப்படிருந்தது. இதை பின்பற்றி பல்வேறு நூல்களில் இச்செய்தி வெளியிடப்படிருந்தது என்றாலும் இக்கல்வெட்டின் முழுவரிகள் எந்த நூலிலும் இடம்பெறாமல் இருந்தது.

இந்நிலையில் அகமுடையார் அரண் தலைமை ஒருங்கிணைப்பாளர், திரு சோ.பாலமுருகன் அகமுடையார் அவர்கள் சில மாதங்களுக்கு முன்பு கர்நாடக மாநிலம், மைசூர் நகரில் உள்ள மத்திய தொல்லியல் துறை அலுவலகத்திற்கு நேரடியாக சென்று இக்கல்வெட்டு படியின் நகலை நேரடியாக பெற்று, இச்செய்தியை ஆராய்வதற்கு நமக்கு அனுப்பியிருந்தார் அதற்காக அவருக்கு எமது நன்றிகள்.

இக்கல்வெட்டு செய்தி பற்றி விரிவாக பார்ப்பதற்கு முன்பு இக்கல்வெட்டு குறிப்பினை முதலில் அறிந்து கொள்வோம்.

தமிழகப் பகுதிகளில் பண்டைய வரலாறுகள் பலவற்றைத் தன்னகத்தே கொண்டு இன்று சிற்றூர் போல் காட்சி தரும் ஊர்கள் எத்தனையோ உண்டு . இவ்வூர்களில் என்றோ ஒருநாள் பண்டைப் பெருமன்னர்களால் தோற்றுவிக்கப் பெற்ற திருக்கோயில்களைக் காணலாம் . அவற்றில் ஒன்று தான் திருப்பாலைப்பந்தல் திருநாகீசுவரர் கோவில். இத்தகைய திருக்கோயில்கள் ஆன்மிகச் சிந்தனைகளை வளர்க்கவும் . ஆத்ம பலத்தைப் பெருக்கவும் உதவுகின்றன.

இருப்பிடம் :

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருக்கோவிலூருக்கு தென்மேற்கே 9 கிமீ தொலைவில் திருப்பாலைப்பந்தல் என்னும் பழம்பெருமை வாய்ந்த சிற்றூர் உள்ளது. அங்கு தொன்மையான சிவன்கோயில் ஒன்றுள்ளது. இறைவன் திருநாகீசுவரர் என்றும் மத்யஸ்தநாதேசுவரர் என்றும் அழைக்கப்படுகிறார்.

ஊர்ப்பெயராய்வு :

இவ்வூரின் பழமையான பெயர் ‘திருப்பாலைப்பந்தல்’ என்றும் ‘திருப்பாலப்பந்தல்’ என்றும் கல்வெட்டுகளில் குறிப்பிடுகின்றன. இவற்றுள் திருப்பாலைப்பந்தல் என்னும் பெயரே பெருவழக்காய் இருந்துள்ளது. பாலை நிலப்பகுதியில் அமைந்துள்ள காரணம் பற்றி இவ்வூருக்கு இப்பெயர் தோன்றியிருக்கலாம் போலும்; ஒரு வேளை இப்பகுதியில் பாலைக் கொடிகள் நிறைந்திருக்கவும் கூடும்.

திருக்கோவிலூர் மன்னன் தெய்வீகன் பாரியின் மக்களான அங்கவை, சங்கவையை திருமணம் செய்து கொண்டபோது திருமணத்திற்காக பவளப்பந்தல் போடப்பட்ட இடம் திருப்பாலப்பந்தல் என தெய்வீகன் புராணம் குறிப்பிடுகிறது. எனவே பவளப்பந்தல் திரு முன்னொட்டமாகச் சேர்ந்து திருப்பவளப்பந்தல் என்றாகி பிறகு பேச்சு வழக்கில் திருப்பாலைப்பந்தல் என மறுவி இருக்கலாம்.

செவிவழிச் செய்தி :

திருநாகீசுவரர் கோயிலின் தென்திசை மூலையில் தெய்வீகன் புராணம் குறிப்பிடும் தெய்வீகன் உருவச்சிலை உள்ளதெனக் கூறப்படுகிறது. மேலும் முன்பொரு காலத்தில் சிவனடியார்கள் இரு சாராருக்குள் பிணக்கு ஏற்பட்டு அவர்கள் இறைவனிடம் முறையிட சிவபெருமானே இத்திருக்கோயில் வளாகத்தில் பாலைக்கொடியில் பந்தலைமைப்பு நடுவராக அமர்ந்து தீர்ப்பு (மத்தியஸ்தநாதேசுவரர்) வழங்கினார் என்பதும் பெயர் காரணத்துக்கான செவிவழிச் செய்தியாகும்.

கோயிலின் காலம் :

இக்கோயிலிலுள்ள மூன்றாம் குலோத்துங்க சோழனின் 11 ஆம் ஆட்சியாண்டு (கி.பி.1189) கல்வெட்டு ஒன்றில் ‘மன்றாடி கரடியூரன் மகனான திருச்சிற்றம்பலக்கோன்’ (ARE-154/1904) என்பவர் இத்திருக்கோயில் அர்த்தமண்டபத்தில் திருநிலைக் கால்களும், படிகளும், கதவும் அமைத்தான் என்று கூறுகிறது. இம்மன்னரின் 20 ஆம் ஆட்சியாண்டில் (கி.பி.1198) வரையப்பட்ட மற்றொரு கல்வெட்டில், தர்மநல்லூருடையான் சவுரி ஆழ்வான் (ARE-161/1904) என்பவன் நிலைக்கால் செய்வித்தான் என்று குறிப்பிடுகிறது. . ஆதலின் இக்கோயில் மூன்றாம் குலோத்துங்கனின் ஆட்சி காலத்தில்
(கி.பி.1178-1218) நிறுவப் பெற்ற செய்தி தெளிவாகிறது.

கோயிலமைப்பு :

இக்கோயில் தெற்கு வடக்காக 280 அடி நீளமும் , கிழக்கு மேற்காக 210 அடி அகலமும் கொண்டு விளங்குகிறது . வெளிச்சுற்று மதில் உள்ளது. இக்கோயிலின் முன் வாயிலில் சோழர் காலத்து இராசகோபுரம் பல அடுக்குகளுடன் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், தற்போது ஒரு நிலையுடன் சிதிலமடைந்து மொட்டை கோபுரமாகக் காட்சியளிக்கிறது.

இராசகோபுரம் வழியே உள்ளே நுழைந்தால் முதலில் பலிபீடமும், கொடி மரமும், நந்தியும் காட்சியளிக்கின்றன. தென்புறத்தில் உள்ள மூத்த விநாயகரை வணங்கி, தென்திசை நோக்கியுள்ள நுழைவாயில் வழியாக கோயிலுக்குள் செல்லலாம்.

இக்கோயில் கருவறை சதுர வடிவமானது. கருவறையின் நடுவே இறைவன் சிறிய பாணலிங்க வடிவில் ஆவுடையாருடன் எழுந்தருளித்துள்ளார். கருவறையின் முன்புறத்தில் நீள்வடிவத்தில் அர்த்த மண்டபமும், அதற்கு முன்புறத்தில் திரு மண்டபமும் பரந்த அளவில் அமைந்துள்ளன.

நாகேசுவரமுடையார் :

இறைவனின் திருநாமம் தமிழில் ‘நடுவறியார்’ என்றும், வடமொழியில் ‘மத்யச்தநாதர்’ என்றும் வழங்கப் பெறுகிறது. இவை இரண்டுமே பிற்காலத்துப் பெயர்கள். ஏனெனில்,
கி.பி.1547 ம் ஆண்டில் வரையப்பட்ட ஒரேயொரு கல்வெட்டில் மட்டும்தான், இவ்விறைவன் ‘நடுவறியும் பெருமாள் நாயனார்’ என்று குறிக்கப் பெறுகிறார். முற்பட்ட எல்லா கல்வெட்டுகளிலும் திரு நாகேசுவரமுடையார் என்றும், திருநாகேசுவரமுடைய நாயனார் என்றும் குறிக்கின்றன. ஆதலின், திருநாகேசுவரர் என்பதே பழமையான பெயராகும்.

கல்வெட்டுக்கள் :

திருப்பாலைப்பந்தல் திருநாகேசுவரர் கோயிலிலும், அதனைச் சுற்றியுள்ள பாறைகளிலும் தொல்லியல் துறையினரால் 43 கல்வெட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டு படி எடுக்கப்பட்டுள்ளன. அவை கி.பி.12 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.17 ஆம் நூற்றாண்டு வரையிலான கால கட்டத்தைச் சார்ந்தவை. சோழர், பாண்டியர், வாணக்கோவரையர், விசயநகர மன்னர்கள் காலத்தவை. இவற்றுள் மூன்றாம் குலோத்துங்கச் சோழன் காலத்துக் கல்வெட்டுகள் பழமையானவை. மத்திய தொல்லியல் துறை 152-165/1904 இல் 14 கல்வெட்டுக்களும், 27-29/1905 இல் 3 கல்வெட்டுக்களும், 401-426/1938 இல் 26 கல்வெட்டுக்களும் ஆண்டறிக்கைகளில் பதிவு செய்யப்பட்டுள்ளன. தென்னிந்திய கல்வெட்டுக்கள் தொகுதி – XVII இல் 152-165/1904 என்ற 14 கல்வெட்டுக் களுக்கான முழுப் பாடங்கள்
வரிசை எண் – 172 முதல் 185 வரை பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றின் துணை கொண்டு இக்கோயிலின் வரலாற்றை நாம் நன்கு அறிந்து கொள்ளலாம்.

கல்வெட்டில் அகமுடையார் :

கோவிலில் கிடைத்த மூன்றாம் குலோத்துங்கச் சோழன் மன்னன் 26 வது ஆட்சியாண்டு (கி.பி.13ம் நூற்றாண்டு) கல்வெட்டு செய்தியில்,

ஆறகளூர் மகதேசன் பொன்பரப்பினான் என்ற வாணகோவரையர் அரசரிடம் அதிகாரியாக பணியாற்றிய “அகம்படியர்” இனத்தை சேர்ந்தவனான “கூடல் மாறன் குழைந்தான் சேதிராயன்” என்பவர். கோவிலில் திருமண்டபம் எழுப்பியதோடு அக்கோவிலில் பூசைகள் சிறப்பாக நடைபெற நன்செய் நிலம் ஒரு வேலி நிலமும், புன்செய் நான்கு வேலி நிலத்தை கோவிலுக்கு இறையிலியாக (வரி நீக்கப்பட்ட நிலமாக) வழங்கியுள்ளார். இந்த நிலங்களில் கிடைக்கும் விளைச்சல் வருமானத்தை கொண்டு கோவிலில் பூசைகள் நடைபெற ஏற்பாடுகள் செய்துள்ளார்.

இதனை இக்கல்வெட்டு செய்தியில் “நான் செய்த திருமண்டபத்துக்கு” என்று கூறியுள்ளதன் மூலமும் “இந்நாயனாருக்கு தேவதானமாக விட்டுக் கல்வெட்டிக் குடுத்தேன் குழந்தான் சேதிராயநென்” என்று கூறி அறிவித்துள்ளதை வைத்தும் தெளிவாக அறிந்துக்கொள்ள முடிகின்றது.

Records a gift of land as devadana to the temple by a certain Maran Kulaindan Sedirayan of Kudal in Tirumunaippadi nadu (an agambadi mudali) of Magadesan Ra(ja*) ra(ja*) devan Ponparappinan of Aragalur in Arrur-kurram. Tiruppalaippandal is stated to be situated in Kilkondai nadu of Vanagoppadi.

(ஆதாரம்: மத்திய அரசு கல்வெட்டு ஆண்டறிக்கை எண் 407, ஆண்டு 1937-38)

கல்வெட்டின் முழுவரிகள் (மூலபாடம்)
————————————
1) ஸ்வஸதி ஸ்ரீ [II*] திரிபுவனச் சக்கரவர்த்திகள் சிரிகுலோத்துங்க
2) சோழ தேவற்கு யாண்டு 26 வது பெண்ணைத் தென்கரை
3) வாணக்கோப்பாடிக் கீழ் கொண்டை நாட்டுத் திருப்பாலைபந்தல்
4) உடையார் திருநாகிசுவரமுடையா நாயனாற்கு ஆற்றூற் கூற்றத்து ஆறகளூர் 5) மகதெசன் இரா(ச*) ரா(ச*) தெவன் பொந்பரப்பினான் அகம்படி முதலி
6) களில் திருமுனைப்பாடி நாட்டுக் கூடல் மாரன் குழைந்தான்
7) செதிராயநென் இந்நாயனார்க்கு நாந் செய்த திருமண்டப
8) த்துக்கு பழந்தெவதானத்துக்குக் கிழக்கு நாந் விட்ட ந
9) ன்சை நிலம் ஒரு வேலியும் புந்சை நாலு
வெலி நிலமிறை
10) யிலியும் அந்தராயம் உட்பட இந்நாயனாருக்குத் தெவதான
11) மாக விட்டுக்கல் வெட்டிக்குடுத்தென் குழைந்தான் செதி
12) ராயநென் இது மாறுவான் ( )னழா நரகத்துக்கு கி
13) ழா நரகமாவான் கெங்கையிடை குமரிஇடைகு ராய்
14) பசுக் குத்துவான் பாவங் கொள்வான் இது பன்மாஹெசு
15) ரர் இரக்க்ஷெ [II*]

கல்வெட்டு தொடர்பான விரிவான செய்திகள்
———————————-
கல்வெட்டில் “அகம்படி முதலிகளில் கூடல் மாறன் குழைந்தான் சேதிராயன்” என்ற பெயர் குறிப்பிடப்படுகின்றது.

இதில் அகம்படி முதலி என்பது அகம்படியர் இனத்தில் முதலி என்கிற தலைவனாக அல்லது அதிகாரம் படைத்தவனாக (அதிகாரியாக) பணியாற்றியவன் என்பதை குறிப்பிடுகின்றது.

மேலும் இதற்கு அடுத்து வரும் கூடல் மாறன் என்பது பாண்டிய அரசு தொடர்புடைய பெயராகும். அதாவது மாறன் என்பது பாண்டிய மன்னர்களை குறிக்கும் மரபுப்பெயராகும். அதே போல் கூடல் என்பது பாண்டிய அரசின் தலைநகரான கூடல் நகரான மதுரையை குறிக்கும் மற்றோரு பெயராகும்.

சோழர் ஆட்சியாண்டில் தொடங்கும் இக்கல்வெட்டில் பாண்டிய அரசு மரபுப்பெயர்களை குறிப்பிடுவதற்கான காரணம், கல்வெட்டில் குறிப்பிடப்படும் கூடல் மாறன் குழந்தான் சேதிராயன் என்பவன் சோழர்களின் சார்பில் பாண்டிய நாட்டை நிர்வாகம் செய்தவன் என்பதை உணர்த்துகின்றன.

வாணர் குல அரசர்கள் சோழர்களால் ஏவப்பட்டு பாண்டிய நாட்டை வென்றனர் என்பதையும், பாண்டிய நாட்டை சில காலம் இவர்கள் ஆட்சி செய்தனர் என்பதை பல்வேறு வரலாற்றிஞர்கள் எடுத்துக்காட்டியுள்ளனர். இக்கல்வெட்டில் குறிப்பிடப்படும் அகம்படியர் இனத்தை சேர்ந்த கூடல் மாறன் குழைந்தான் சேதிராயன், பொன்பரப்பினான் எனும் வாணர் குல மன்னனிடம் அதிகாரியாக பணியாற்றியதையும், இவனுக்கு கூடல் மாறன் என்ற பெயர் சிறப்புப் பெயர் இருப்பதைக்கொண்டும் இவன் சோழர்களின் சார்பாக பாண்டிய அரசப்பிரதிநிதியாகவோ அல்லது பாண்டிய மன்னர்களை கண்காணிக்கும் அதிகாரியாகவோ இருந்திருக்க வேண்டும் என்பதை தெரிந்துகொள்ளலாம்.

இதனை மேலும் ஓர் ஆதாரம் கொண்டும் உறுதி செய்துகொள்ளலாம். அதாவது
இன்றைய கள்ளக்குறிச்சி மாவட்டம், அரகண்டநல்லூர் ஒப்பில்லாமணீஸ்வரர் கோவிலில் கண்டுபிடிக்கப்பட்ட குலோத்துங்கச் சோழர் மன்னன் காலத்து கல்வெட்டு செய்தியில் இதே வாணர் குலத்தில் வந்த மகதை பெருமாளிடம் பணியாற்றிய “அகம்படி முதலிகளில் பெரியபெருமாள் பாண்டிய ராயன்” எனும் அகம்படியர் இனத்தை சேர்ந்தவன் குறிப்பிடப்படுகின்றான். இவன் பெயரிலும் பாண்டிய அரசர்களை விளிக்க பயன்படும் பெருமாள் என்றும் பாண்டிய ராயன் (அரசன்) என்ற பெயர்கள் பயன்பட்டிருப்பதை பற்றியும், இவன் சோழ அரச பிரதிநியாக பாண்டிய நாட்டை நிர்வாகம் செய்தவன் என்பதையும் ஏற்கனவே சென்ற பதிவுகளில் குறிப்பிட்டிருந்தோம்.

ஆதாரம்: தென் இந்திய கல்வெட்டுகள் தொகுதி – 7, கல்வெட்டு எண் – 493.

பார்க்க இணைப்பு:
https://m.facebook.com/story.php?story_fbid=3128710747386027&id=100007413972239

இச்செய்தியை ஒப்பிட்டுப் பார்க்கும் போது இக்கட்டுரையில் குறிப்பிடப்படும் கூடல் மாறன் குழைந்தான் சேதிராயன் என்பவனும் சோழ அரசர்களின் சார்பாக பாண்டிய நாட்டை நிர்வாகம் செய்தவன் என்ற உண்மை உறுதியாகின்றது.

மேலும் இந்த குழைந்தான் என்ற பெயருக்கு பின்னால் சேதிராயன் என்ற பெயர் குறிப்பிடப்படுகின்றது. சேதிராயர் என்பது சோழர்களின் கிளைப்பிரிவினரை அல்லது மலை நாட்டினை ஆட்சி செய்தவர்கள் அல்லது குறிக்கவர்களுடன் திருமண தொடர்பு உடையவர்களை குறிக்க பயன்பட்ட பெயராகும்.

சோழர்கள் என்போர் அகம்படியர் இனத்தை சேர்ந்தவர்கள் என்பது குறித்து ஆதாரங்களுடன் விரிவான காணொளியை ஏற்கனவே
அகமுடையார் ஒற்றுமை யூடிப் சேனலில் வெளியிட்டிருந்தோம்.

அதை நிருபிக்கும் மற்றொரு சான்றாக இக்கல்வெட்டு விளங்குகின்றது. அதாவது சோழர்களின் சார்பாக பாண்டிய நாட்டை ஆட்சி செய்தவனாக இந்த “கூடல் மாறன் குழைந்தான் சேதிராயன்” எனும் அகம்படியர் குறிப்பிடும் நிலையில் இவனின் சேதிராயர் பட்டம் இவன் சோழர்களின் கிளை வழியினராக குறிப்பதை கொண்டும் சோழர்கள் இன்றைய அகமுடையார் இனத்தவர்கள் என்பதை உணர்ந்து கொள்ளமுடியும். நம்மை பொறுத்தவரை சோழர்களான அகம்படியர்கள் மலை நாட்டினருடன் கொண்ட திருமண உறவை நிறுவும் சான்றாக இது விளங்குகின்றது.

இக்கல்வெட்டு கிடைத்த திருப்பாலைப்பந்தல் எனும் ஊரின் சுற்றுப்புற ஊர்களில் இன்றும் அகமுடையார் இனத்தவர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். இக்கல்வெட்டு மட்டுமல்ல எந்த ஒரு அகமுடையார் கல்வெட்டு கிடைக்கின்ற எல்லாவிடங்களிலும் அகமுடையார்கள் இன்றும் வாழ்ந்து வருகிறார்கள் என்பது இக்கல்வெட்டு செய்திகளை மெய்பிக்கின்ற உண்மையாகும்.

இன்னும் நிறைய செய்திகள் உள்ளன. அதையும் வரும்காலத்தில் ஒவ்வொன்றாக பார்ப்போம்.

நன்றி அறிவிப்பு :

இந்த ஆய்வுப் பணிக்கு அனைத்து உதவியும் செய்த திருக்கோவிலூர் அகமுடையார் பேரினத்தின் அடையாளம், உயர்திரு “T.K.T.முரளி” அண்ணன் அவர்களுக்கும்,

“திருக்கோவிலூர் அகமுடையார் (துளுவவேளாளர்) சங்கம்” நிர்வாகக்குழுவிற்கு எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

அகமுடையார் வரலாற்று தேடலின் அவசியம்
——————————————–
அகமுடையார் சாதியினருக்கு பல்வேறு பட்டப்பெயர்களில் காணப்படுவதால் ஒரே சாதியினரையே வேறு சாதியினராக நினைப்பதும், பட்டப்பெயர் ஒற்றுமையை காட்டி மாற்று சாதியினரை தங்கள் சாதி என நினைத்து மயங்கும் நிலைமையும் ஏற்பட்டுள்ளது.

ஆனால் கல்வெட்டுக்களில் சென்று பார்ப்போமானால் இன்றைய அகமுடையார் சாதியினர் உலகம் முழுக்கவே அகம்படி, அகம்படியர் என்ற ஒற்றை பெயருடன் காணப்படுகின்றதை பார்க்க முடியும். அகமுடையார்கள் இந்த உண்மையை உணர்ந்து ஒன்றாக இணைய வேண்டுமென்றால் இது போன்ற வரலாற்று மீட்டெடுப்பு வேலைகளை தொடர்ந்து செய்ய வேண்டும்.

அதற்கு உயர்திரு T.K.T.முரளி அண்ணன் அவர்கள் மற்றும் திருக்கோவிலூர் அகமுடையார் (துளுவவேளாளர்) சங்கம் போன்று மற்றவர்களும் இதுபோன்ற அகமுடையார் வரலாற்று மீட்புப் பணிக்கு உதவ வேண்டும். நன்றி!

தேடல் தொடரும்…..

கட்டுரை ஆக்கம்
மு.சக்திகணேஷ் (மதுரை-திருமங்கலம்)
அகமுடையார் ஒற்றுமை சார்பாக.

சான்றாதார புகைப்படங்கள் :
1) திருப்பாலைப்பந்தல் கல்வெட்டின் முழு வரிகள் (தற்போதைய எழுத்து வடிவத்தில்).
2) கோவிலில் உள்ள கல்வெட்டு (கல்வெட்டின் உண்மை படம்). கல்வெட்டு உள்ள கோவில் அர்த்த மண்டபம் நுழைவு
வாயில் படம்,
3) கல்வெட்டை சுட்டிக்காட்டும் அகமுடையார் அரண், தலைமை ஒருங்கிணைப்பாளர், சோ. பாலமுருகன் அகமுடையார் அவர்கள்.
4) திருப்பாலைப்பந்தல் கோயில் வெளிப்புறம், இராஜகோபுரம் படங்கள்.

சான்றாதார நூல்கள் :
1) திருப்பாலைப்பந்தல் அருள்மிகு திருநாகீசுவரர் ஆலயம் மகா கும்பாபிஷேக மலர் (13-09-2019),
2) தமிழ்நாட்டுச் சிவாலயங்கள்
(தொகுதி -1), மா.சந்திரமூர்த்தி, மணிவாசகர் பதிப்பகம், சென்னை – 108.
முதற்பதிப்பு : திசம்பர் – 2003.
3) Annual Reports on Indian Epigraphy (1935-1938), General Archaeolegical of India, New Delhi – 11 (1986).
————————————————-
அகமுடையார் வரலாற்று மீட்புப் பணியில்…
சோ. பாலமுருகன் அகமுடையார்,
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
அகமுடையார் அரண்.
பேச : 94429 38890.






இப்பதிவு அகமுடையார் அரண் பாலமுருகன் அகமுடையார்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

பாலமுருகன் அகமுடையார பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

We will be happy to hear your thoughts

Leave a reply

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo