First
கலைத்துறையில் அகமுடையார் – 1
நாடக நடிகர், நகைச்சுவை நடிகர்,
குணச்சித்திர நடிகர், திரைக்கதை ஆசிரியர், நகைச்சுவை வசனகர்த்தா, இயக்குநர், பன்முகக் கலைஞர்,
கலைமாமணி “ஆவணம் அ.வீரப்பன்”
—————————————————
நடிகர் நாகேஷை நம் எல்லாருக்கும் தெரியும், வி.கே.ராமசாமியை தெரியும், தேங்காய் சீனிவாசனை தெரியும், சுருளிராஜனை தெரியும், கவுண்டமணி- செந்திலைத் தெரியும், வடிவேலுவைத் தெரியும்…
ஆவணம் அ.வீரப்பன் அவர்களை தெரியுமா? யார்னு தெரியலையே என்ற பதில் உங்கள் மனதில் ஓடுகிறதா? அவரைப் பற்றித் தெரிந்தால் விழுந்து விழுந்து சிரிக்க மாட்டீர்கள். வியப்பில் ஆழ்ந்து போவீர்கள்.
வயிறு குலுங்க வைக்கும், இவர்களின் அட்டகாசமான காமெடிக் காட்சிகளை உருவாக்கிய பேனாவுக்குச் சொந்தக்காரர்தான், காமெடி வீரப்பன் என்று திரையுலகினரால் அழைக்கப்பட்டவர் ஆவணம் அ.வீரப்பன்.
“கரகாட்டக்காரன்’ படத்தில் இடம்பெற்ற வாழைப்பழக் காமெடிக்கு இணையாக, மக்களிடம் மோஸ்ட் பாப்புலரான ஒரு காமெடி சீன், இந்திய சினிமாவிலேயே இதுவரை வரவில்லை. தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளைக் கடந்து இந்தி வரை பரவியது வாழைப்பழக் காமெடி.
இந்தி சினிமாவோடு முற்றுப்பெறவில்லை என்பதுதான், வாழைப்பழக் காமெடியின் சீரியஸான ஹைலைட். ஆம்! அந்தக் காமெடியை மிகவும் ரசித்த தாய்லாந்து நாட்டின் சினிமா கம்பெனி ஒன்று, மொழி மாற்ற உரிமையை முறையாகப் பெற்று, தாய்லாந்து மொழியில் டப்பிங் செய்து வீடியோ கேஸட்டாக வெளியிட்டது. அந்தக் காமெடி கேஸட் அங்கும் விற்பனையில் “அட்றா சக்க அட்றா சக்க’ என்று சக்கைப் போடு போட்டுச் சாதனை படைத்தது. இது வேறெந்த இந்திய சினிமா நகைச்சுவைக்கும் கிடைக்காத பெருமை.
இனி “கரகாட்டக்காரன்’ படத்தை டி.வி.யில் போடும்போது டைட்டிலைக் கவனியுங்கள். நகைச்சுவைப் பகுதி வசனம்- காமெடி அ. வீரப்பன் என்று ஒரு கார்டு வரும்.
முதன்முதலாக திரைப்படத்தில் நகைச்சுவை பகுதி – காமெடி என பெயர் தனியாக டைட்டில் கார்டில் வந்தது அ.வீரப்பன் அவர்களுக்கு மட்டும் தான்.
இப்படி தனியாக இவர் நகைச்சுவைப் பகுதி வசனம் எழுதிய படங்கள் 28. வசனம் எழுதிய படங்கள் 12. நடித்த படங்கள் 100 மேல், திரைக்கதை, வசனம் எழுதி இயக்கிய ஒரே படம் “தெய்வீக ராகங்கள்’.
தமிழ் சினிமாவின் முக்கிய நகைச்சுவை ஆவணமான அ.வீரப்பன் அவர்கள், தஞ்சை மாவட்டம், பேராவூரணி அருகில் “11 அகமுடையார் நாட்டார்” கிராமங்களின் தலைமை கிராமமான “ஆவணம்” கிராமத்தில், அகமுடையார் பேரினத்தில் அரியகுட்டித்தேவர் – வள்ளியம்மை தம்பதியருக்கு திருமகனாக, 1934 சூன் மாதம், 28 நாள் பிறந்தார்.
சிறு வயதில், இராமநாத தேவர் என்ற ஊருக்காரர் ஒருநாள் கிராம்போன் வாங்கிக் கொண்டு வந்தார். “மீரா” படத்திற்காக எம்.எஸ்.சுப்புலட்சுமி பாடிய “காற்றினிலே வரும் கீதம்” பாடலின் இனிய சுரங்கள், கிராம்போன் கூம்பிலிருந்து ஆவணம் கிராமத்தின் காற்றில் கலந்தது. வயற்காட்டின் ஓரம் சிறு குடிசையில் அமர்ந்து பயிரை காத்துக்கொண்டிருந்தார் வீரப்பன். அப்போது கிராம்போன் இசைத்தட்டில் கேட்ட எம்.எஸ். சுப்புலட்சுமியின் பாட்டு அவர் தொண்டை யிலிருந்து வெளிப்படத் துவங்கியது. சின்ன பையனின் குரலினிமையுடன் பாடலின் இயல்பான இனிமையும் சேர்ந்திருந்தது. அந்த வழியாக பைக்கில் கடந்து சென்ற ஒருவர். வாகனத்தை நிறுத்திவிட்டு பாடல் நின்றவருடன் “இன்னொரு முறை பாடப்பா” என்று கேட்டார்.
இரண்டாவது முறை பாடலை கேட்டுவிட்டு அவர் வெறுமனே செல்லவில்லை. பையனின் முகவரியை கேட்டுக்கொண்டு மாரியம்மன் கோயிலுக்கு எதிரே இருந்த வீட்டுக்குப் போனார். நல்லா பாடுகின்ற பிள்ளைக்கு முறையாக சங்கீதம் கத்து கொடுக்கச் சொல்லிவிட்டு சென்றார்.
வயற்காட்டைப் பார்த்துக்கொண்டு ஆடுமாடுகளை மேய்ப்பதுமாக இருந்த
அ.வீரப்பன், மாயவரம் ராஜகோபால் என்பவரிடம் சங்கீதம் பயின்றார். அதை பின்னாளில் சாதாரண பாட்டு கத்துக்கிட்டேன் என்பார் அ.வீரப்பன்.
1944-ஆம் வருடம் புதுக்கோட்டையில் டி. கே. கிருஷ்ணசாமியின் சக்தி நாடக சபாவின் முதல் நாடகமான “ராமபக்தி’ தயாராகிக் கொண்டிருந்தது. நடிகர்கள் தேர்வின் போது பாலராமர் வேஷத்துக்கு, பாடத் தெரிந்த ஒரு பையன் தேவைப்பட்ட சமயத்தில், குடும்ப நண்பர் ஒருவரால்
அ.வீரப்பன் பரிந்துரைக்கப்பட்டார். சக்தி நாடக சபாவின் நடிகர்கள் சிலர் வீரப்பனைப் பாடச் சொல்லிலி குரல் தேர்வு நடத்தினார்கள். தோடி ராகத்தில் வீரப்பன் பாடிய பாடல், அவர்களை சபாஷ் போட வைத்தது. பாலராமர் வேஷத்துக்கு வீரப்பன் அப்போதே தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவரை அன்று நடிகனாக்கிப் பாராட்டிய மூன்று பெரும் நடிகர்கள் எஸ்.வி. சுப்பையா, எம்.என்.நம்பியார்,
எஸ்.ஏ.நடராஜன், வசனம் சொல்லிக் கொடுத்தவர் நடிகர் எஸ்.ஏ.கண்ணன். நாகப்பட்டிணம் ராபின்சன் ஹாலிலில் அரங்கேற்றம் ஆன அந்த நாடகத்தையும், பாலராமராக நடித்த வீரப்பனையும் பாராட்டி “ஹிந்து’ நாளிதழ் விமர்சனம் செய்திருந்தது.
1945-ஆம் ஆண்டு, மங்கள கான சபாவிலிலிருந்து சக்தி நாடக சபாவுக்கு சிவாஜி கணேசன் வந்து சேர்ந்தார். அ.வீரப்பனும் – சிவாஜியும் அப்போதிலிருந்தே நண்பர்களானார்கள். சினிமாவில் மாலைக் காட்சி, இரவுக் காட்சி என்பதுபோல அப்போதுதான் நாடகத்திலும் இரண்டு காட்சிகள் நடைமுறைக்கு வந்தது.
முதல் காட்சியில் சிவாஜி நடித்த வேடத்தில் இரண்டாம் காட்சியில் வீரப்பன் நடித்துள்ளார். ஓய்வு நேரங்களில் சிவாஜியும் வீரப்பனும் உலக சினிமா, ஆங்கில நடிகர்கள் பற்றியே பேசிக் கொண்டிருப்பார்களாம்.
1950-ல் “என் தங்கை’ என்ற நாடகத்தில் சிவாஜி ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கும்போது, அவருக்கு “பராசக்தி’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் சினிமாவில் நடிக்கப் போனதால், வீரப்பனுக்கு அந்த வேஷம் கொடுக்கப்பட்டு, 25 வாரங்களுக்குமேல் தமிழகத்தின் பல ஊர்களிலும் அந்த நாடகம் நடத்தப்பட்டது. வீரப்பனின் நடிப்பு எல்லாராலும் பாராட்டப்பட்டது. ஆனால் தன் நண்பன் சிவாஜி தன் நடிப்பைப் பார்க்கவில்லையே என்ற மனக்குறை வீரப்பனுக்கு இருந்தது.
வீரப்பனின் நடிப்பைப் பார்க்கவேண்டும் என்ற ஆசை சிவாஜிக்கும் இருந்தது. ஆனால் “பராசக்தி’ படத்தின் படப்பிடிப்பு இடைவிடாது நடந்து கொண்டிருந்ததால் நேரம் கிடைக்கவில்லை. ஒருநாள் வேலூரில் வீரப்பன் நடித்த அந்த நாடகம் நடந்து முடிந்ததும்,பார்வையாளர் பகுதியில் உட்கார்ந்து வீரப்பனின் நடிப்பை ரசித்துக் கொண்டிருந்த சிவாஜி, மேடைக்கு ஓடிவந்து வீரப்பனைக் கட்டிப் பிடித்து, ஆரத்தழுவி நெகிழ்ச்சியுடன் பாராட்டினார். தன் உற்ற நண்பனின் எதிர்பாராத பாராட்டில் வீரப்பனும் திக்குமுக்காடிப் போனார். வீரப்பனுக்கும் சிவாஜிக்கும் அவ்வளவு அன்யோன்யமான நட்பு.
அவர்களுடைய நட்பு எவ்வளவு நெருக்கமானது என்பதற்கு இன்னும் சில உதாரணங்கள்…
சக்தி நாடக சபாவில் இருவரும் இணைந்து நடித்த காலத்தில் வீரப்பனிடம் இரண்டு சட்டைகளும் சிவாஜியிடம் ஒரு சட்டையும் மட்டுமே உண்டு. இருவரும் அந்த மூன்று சட்டைகளை மாற்றி மாற்றிப் போட்டுக் கொள்வார்கள். இரவு நேரங்களில் சட்டைகளைத் துவைத்துப் போடுவதும், காய்ந்ததும் எடுத்து, பித்தளை சொம்புக்குள் சூடான கரிக்கட்டிகளைப் போட்டு இஸ்திரி போடுவதும் வீரப்பனின் வேலை.
நாகேஷ் என்னும் உன்னத நகைச்சுவைக் கலைஞனை தமிழ்த் திரைக்கு அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவர் வீரப்பன் என்பது, திரையுலகிற்கு அப்பாற்பட்டோர் அறியாத உண்மை. இப்படி சினிமாவில் புதைந்துபோன உண்மைகளின் வரலாறு ஏராளம் உண்டு.
அந்த அனுபவத்தை வீரப்பனின் வார்த்தைகளிலேயே கேட்பது, கூடுதல் சுவாரஸ்யமாக இருக்கும்:
“சிவாஜியைப்போலவே எம்.ஜி.ஆர் அவர்களும் எனக்கு நல்ல நண்பராக இருந்தார். சக்தி நாடக சபாவில் நான் நடித்துக் கொண்டிருந்தபோது எம்.ஜி.ஆர். அடிக்கடி நான் நடிக்கும் நாடகங்களைப் பார்க்க வருவார். 1960-களில் நான் நடித்த “பூ விலங்கு’ நாடகம் திரைப்படமாகத் தயாரிக்கப்பட்டது. சினிமாவுக்காக “பணத்தோட்டம்’ எனப் பெயர் மாற்றப்பட்ட, அந்தப் படத்தின் நகைச்சுவைப் பகுதி வசனத்தை என்னையே எம்.ஜி.ஆர். எழுதச் சொன்னார்.
சேது – மாது என இரண்டு கதாபாத்திரங்களை மையமாகக் கொண்டு அந்த காமெடி ட்ராக்கை எழுதினேன். ஒரு ரோலிலில் நான் நடிப்பதென முடிவாயிற்று. இன்னொரு ரோலுக்கு நடிகரைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பையும் எம்.ஜி.ஆர் என்னிடமே ஒப்படைத்தார். சென்னைப் பொருட்காட்சி கலை நிகழ்ச்சி மேடையில் ஒருநாள் “கப் அண்ட் சாசர்’ என்று ஒரு நாடகம் பார்த்தேன். அதில் நாகேஷ் நடித்துக் கொண்டிருந்தார். அவரின் காமெடி நடிப்புக்கு இடைவிடாது கைத்தட்டிய ரசிகர்கள் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தார்கள். நாடகம் முடிந்ததும் அவரைச் சந்தித்துப் பாராட்டிவிட்டு, “பணதோட்டம்’ காமெடி ட்ராக்கின் இன்னொரு ரோலிலில் நடிக்க முடியுமா என்றேன். அவரும் ஒப்புக்கொண்டார்.
அடுத்த நாள் காலை, ஒரு வாடகை சைக்கிளை நாகேஷ் ஓட்ட நான் பின்னால் உட்கார்ந்து கொண்டேன். ஆழ்வார்பேட்டை பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள, சரவணா ஃபிலிலிம்ஸ் படக் கம்பெனி முதலாளியை அந்நாட்களில் பல சினிமா தயாரிப்பாளர்கள், முதலாளி என்றே அழைக்கப்பட்டனர். ஜி.என். வேலுமணியை சந்தித்தோம்.
நாகேஷின் நடிப்பைப் பார்த்து வயிறு குலுங்கச் சிரித்த வேலுமணி, அப்படியே எம்.ஜி.ஆரைப் போய்ப் பாத்திடுங்க என்றார்.
சத்யா ஸ்டுடியோவில் அப்போது எம்.ஜி.ஆர் மேக்கப் போட்டுக் கொண்டிருந்தார். அவருக்கு மேக்கப் போட்டுக் கொண்டிருந்தவர் மேக்கப் மேன் பீதாம்பரம் (இயக்குநர் பீ.வாசுவின் தந்தை) காமெடி சீனை நாங்கள் சேர்ந்து நடித்துக் காட்ட இருவரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள். நீங்க ரெண்டு பேரும் இந்த காமெடி ட்ராக்ல சேந்து நடிங்கன்னு எம்.ஜி.ஆர் அங்கேயே சொல்லிலிவிட்டார். நாங்கள் நடித்தோம்.
படம் வெளியாகி சூப்பர் சக்ஸஸ். தொடர்ந்து எனக்குக் காமெடி எழுத வாய்ப்புகள் வந்தன. நாகேஷ் பெரிய காமெடி நடிகரானார்.
எம்.ஜி.ஆரிடமிருந்த பரோபகாரமிக்க பல நல்ல குணங்களுள் ஒன்று, தன் சக கலைஞர்களில் யார், ஏதேனும் க்ரியேட்டிவாக செய்தாலும் மனம் திறந்துப் பாராட்டி, அதற்கு ஒரு ஊக்கத் தொகையை உடன் வழங்கிவிடுவது…
1964-ல் “படகோட்டி’ படப்பிடிப்பில் நாகேஷும் வீரப்பனும் நடித்துக் கொண்டிருந்தனர். நாகேஷுக்கு மீனவத் தலைவர் வேஷம். வீரப்பன் அவருக்கு உதவியாளர். ஒரு காட்சியில் அவர்கள் சக மீனவர்களுடன் கடலிலில் மீன் பிடிக்கப் போய்க் கொண்டிருப்பார்கள். படகின் விளிம்பில் உட்கார்ந்திருக்கும் நாகேஷ், அலைகளின் ஏற்ற இறக்கத்தில், சட்டென நிலை தடுமாறி கடலிலில் விழுந்து விடுவார். பக்கத்தில் இருக்கும் வீரப்பன் உடனே எழுந்து, நாகேஷைக் காப்பாற்ற முயற்சி செய்யாமல்,
“அடுத்த தலைவர் நான்தான்!’ என சந்தோஷமாகக் குரல் கொடுப்பார்.
கரையில் நின்று படப்பிடிப்பைக் கவனித்துக் கொண்டிருந்த எம்.ஜி.ஆர் ஓவென்று சத்தமாக சிரித்து, வீரப்பனின் அந்த டைமிங் காமெடி பஞ்ச் டயலாக்கை கைதட்டி ரசித்தார்.
படப்பிடிப்பு முடிந்து படகு கரை திரும்பியது. எம்.ஜி.ஆர். வீரப்பனின் கைகளைப் பிடித்துக் குலுக்கினார். “வீரப்பா நாட்டுல நடக்குற அரசியல ஒரு சின்ன டயலாக்ல பளிச்சுன்னு சொல்லிட்டியே. பிரமாதம்!’ என்று சொல்லிலி ஒரு 5,000 ரூபாய் பணக்கட்டை எடுத்துக் கொடுத்தார். 5,000 ரூபாய் பணத்துக்கு அந்தக் காலகட்டத்தில் எவ்வளவு மதிப்பு என்பதை கற்பனை செய்து பாருங்கள்!
பாட்டுக்கோட்டையார் என புகழ்பெற்ற திரைப்படப் பாடலாசிரியர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், முதன்முதலாக நாடகத்தில் பாட்டு எழுத வாய்ப்பு கேட்ட தருணத்தில், அங்கிருந்தவர் வீரப்பன் என்பதும், பட்டுக்கோட்டையாருக்கு அன்று முதல் பாடல் எழுத வாய்ப்பு கிடைத்ததற்கு, ஆவணம் வீரப்பன் அவர்களே முக்கிய காரணம் என்பதும் ஒரு சுவையான சம்பவம்…
1955 -ஆம் ஆண்டு…
நடிகர் டி.கே.பாலச்சந்தர் என்பவர் “கண்ணின் மணிகள்’ என்று ஒரு நாடகம் தயாரித்துக் கொண்டிருந்தார். பாடலாசிரியர் ஆவதற்குமுன் பல வேலைகள் பார்த்த பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், அந்த நாடகத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டு டி.கே. பாலச்சந்தரைச் சந்தித்தார். அப்போது நாடகத்தின் பாடல் தொடர்பாக ஆலோசனை அங்கு நடந்து கொண்டிருந்தது. பாலசந்தருடன் அங்கிருந்தவர்களுள் வீரப்பனும் ஒருவர். உங்கள் நாடகத்தில் எனக்கு ஒரு பாட்டு எழுத வாய்ப்பு தாருங்கள் என கல்யாணசுந்தரம் பாலசந்தரின் கேட்டார். அவருடைய கவிதை எழுதும் ஆற்றலை அறிந்திருந்த வீரப்பன், இவர் நன்றாக பாடல் எழுதுவார். ஒரு வாய்ப்பு தாருங்கள் என அழுத்தமாக பாலசந்தரிடம் பரிந்துரைத்தார்.
உடனே நாடகத்தில் இடம்பெறும் ஒரு பாடலின் சூழலைச் சொல்லி கல்யாணசுந்தரத்தைப் பாடல் எழுதும்படி பாலசந்தர் சொல்ல, சற்றும் யோசிக்காமல் சிறிது நேரத்திலேயே அவர் பாடல் வரிகளை எழுதிக் காட்டினார்.
கதிராடும் கழனியில் சதிராடும் பெண்மணி சுவைமேவும் அழகாலே கவர்ந்தாயே கண்மணி” என தொடங்கும் அந்த பாடலே நாடகத்தில் அரங்கேறிய பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் முதல் பாடல்.
கம்யூனிசக் கருத்துக்களை மையக் கருவாகக் கொண்ட அந்த நாடகத்தில், பதுக்கல்காரர்களை சாடும் விதமாகவும், ஏழை மக்களின் வறுமையைப் படம்பிடித்துக் காட்டும் விதமாகவும் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய “தேனாறு பாயுது செங்கதிர் சாயுது ஆனால் மக்கள் வயிறு காயுது” என்ற வரிகள் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.
சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் திரைப்பட நிறுவனத்தில் எழுத்தாளர் ஆக பணிபுரிந்து கொண்டிருந்த கதை வசனகர்த்தா ஏ.எல்.நாராயணன் அவர்கள் இந்தப் பாடல் வரிகளைக் கேட்டு பாராட்டினார். அதோடு நிற்கவில்லை. அப்போது வீரப்பன் கலந்துகொண்ட மாடர்ன் தியேட்டர்ஸ் கதை விவாதம் ஒன்றில் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் அந்தப் பாடல் வரிகளை பாடியும் காண்பித்தார். அதை ரசித்துக் கேட்ட மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தார், இந்த மாதிரி பாட்டு எழுதும் ஆளைத்தான் இப்போது நாங்கள் தேடிக் கொண்டிருக்கிறோம் என்று கூறி ஏ.எல்.நாராயணன் மூலம் உடனடியாக பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தை சேலம் வரவழைத்து ஒரு படத்தின் எல்லா பாடல்களையும் அவரே எழுத வாய்ப்பளித்தார்கள். பகுத்தறிவுப் பாவலரான பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்துக்கு அதிர்ஷ்டம் பிடித்த கதை இதுதான்!
ஹைதராபாத்தில் தென் இந்திய கலாச்சார கழகம் என்ற அமைப்பு அப்போது செயல்பட்டு வந்தது. அதன் தலைவர்களாக ஜஸ்டிஸ் ஸ்ரீனிவசாசாரி ஆகியோர் இருந்த காலம் (1957) ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் நிகழ்ச்சிகள் நடக்கும். ஒரு முறை செகந்திரபாத் நிஜாம் பள்ளியில் எஸ்.வி.சகஸ்ரநாமத்தின் நாடகங்கள் நடந்தது. மேடை அமைப்பு கலாசாகரம் ராஜகோபால். தி.ஜானகிராமனின் “நாலுவெலி நிலம்,” “வடிவேலு வாத்தியார்” என்று நடந்தது.வடிவேலு வாத்தியாரில் வீரப்பன் பக்காஃப்ராடும், திமுக அனுதாபியுமான ஒரு தையல்காரராக நடிப்பார். இதே நாடகத்தில் ஆப்ரகாம் வாத்தியாராக பிரபாகரென்ற நடிகரும் நடிப்பார். தமிழ் நடகத்துறையும், இலக்கியவாதிகளும் கைகோத்து நடை பயின்ற அற்புதமான காலம் அது.
ஜெயகாந்தன் “உன்னைப்போல் ஒருவன்” என்ற படத்தை இயக்கி அளித்தார். அதில் வீரப்பனும், பிரபாகரும் முக்கிய பாத்திரத்தில் நடித்தனர் அந்தப் படத்திற்கு தேசிய விருது கிடைத்தது. ஒரு தமிழ் படத்திற்கு முதன் முதலில் கிடைத்த தேசிய விருதாகும் அது.
ஜெயகாந்தன் கம்யூனிஸ்டாக அடையாளம் காணப்பட்டதால் அதனை வெளியிட விடாமல் செய்யப்பட்டது. தனிக் காட்சியாக எல்.ஐ.சி ஊழியர்கள் வெளியிட்டு . கையைச் சுட்டுக்கொண்டனர்.
சொல்லத்தான் நினைக்கிறேன் (1973) படத்தில் அ.வீரப்பன் அவர்கள் ஒரு நல்ல பாத்திரத்தில் கே.பாலசந்தர் மிளிர வைத்தார்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடத்த ரோஜாவின் ராஜாவிற்கு (1976) திரைக்கதை வசனம் எழுதியனார் அ. வீரப்பன், இப்படம் மாபெரும் வெற்றிப்படமானது.
கோயில் புறா (1981) படத்தில், தானும் உசிலை மணியும் பங்கு பெற்ற ஒரு அருமையான காமெடி பகுதியை உருவாக்கினார்.
1956-களில் நடிகராகவும், வசனகர்த்தாவாகவும் தொடங்கிய
அ.வீரப்பனின் திரைப்பட வாழ்க்கை
குறிப்பிட்ட காலத்திற்குப் பின் நடிப்பதைக் குறைத்துக் கொண்டு வசன கர்த்தாவாக மாறிவிட்டார். 1980களில் கவுண்டமணி – செந்தில் ஜோடி காமெடியால் சூடுபிடிக்கத் தொடங்கியது. கவுண்டமணி-செந்தில் படங்கள் இவரது வசனத்தினாலேயே பெரும் புகழ் பெற்றன. உதய கீதம், கரகாட்டக்காரன், இதயக்கோயில் துவங்கி தனது இறுதிக்காலம் வரை கவுண்டமணி -செந்தில் கூட்டணிக்கு இவர் வசனம் எழுதினார்.
இயக்குனர் ஆர்.சுந்தரராஜன் அவர்கள் வீரப்பன் அவர்களை தயாரிப்பாளர் மதர்லேண்ட் பிக்சர்ஸ், கோவைத் தம்பியிடம் அறிமுகம் செய்து வைத்தார். ஆர்.சுந்தர்ராஜன் இயக்கத்தில், கோவைத்தம்பி தயாரித்த “நான் பாடும் பாடல்” படத்தின் நகைச்சுவைப் பகுதிக்கு வீரப்பன் வசனம் எழுதினார். அந்தப் படத்தில்தான் வீரப்பனுக்கு கவுண்டமணியுடன் நட்பு ஏற்பட்டது. கோவைத்தம்பி தயாரித்த “உதயகீதம் (1985)” படத்தில் தான் முதன்முதலாக கவுண்டமணியும் – செந்திலும் இணைந்து நடித்தனர். இருவரின் நகைச்சுவை நடிப்பையும் அவதானித்து அவர்களின் தமாஷான உடல்மொழிகளை உள்வாங்கி வீரப்பன் எழுதிய காமெடி டிராக் ஹிட் ஆனது. அதைத் தொடர்ந்து கவுண்டமணி – செந்திலை வைத்து வீரப்பன் காமெடி டிராக் எழுதிய எல்லா படங்களுமே வெற்றி பெற்றன.
“வண்டிச்சக்கரம் (1979)” “பயணங்கள் முடிவதில்லை (1982)” “உன்னை நான் சந்தித்தேன் (1984)” “வைதேகி காத்திருந்தாள் (1984)” “இதயக்கோயில் (1985)” “அமுதகானம் (1985)” “கீதாஞ்சலி (1985)” “கரகாட்டக்காரன் (1989)”
“மருது பாண்டி (1990)” “பெரிய வீட்டு பண்ணைக்காரன் (1990)” “சின்னத்தம்பி (1991)” என வீரப்பன் காமெடி வசனம் எழுதிய வெற்றி படங்கள் பல ஆண்டுகள் தொடர்ந்தன.
நடிகர்களுக்காக, வசனத்துக்காக, கிளாமருக்காக பல திரைப்படங்கள் வெற்றிகரமாக ஓடியதுண்டு. அதைப் போலவே காமெடிக்காக மட்டும் படங்கள் ஓடியது கவுண்டமணி – செந்தில் காம்பினேஷனில்அ.வீரப்பன் அவர்கள் நகைச்சுவை வசனம் எழுதிய படங்கள் மட்டுமே!
இந்தி திரைப் பட உலகில் காதர் கான் என்ற நடிகர் பேரும் புகழும் பெற்றதற்குக் காரணம் அவர் கரகாட்டக்காரன் படத்தின் வாழைப்பழம் காமெடியை பயன்படுத்தியது தான் என்பார்கள். இந்திய மொழிகள் பலவற்றில் இந்த அற்புதமான நகைச்சுவைக் காட்சி பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்தக் நகைச்சுவை முதன் முதலாக கவுண்டமணி – செந்தில் ஆகியோரால் நடிக்கப்பட்டு அவர்களை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. இன்றும் அந்தக் காட்சியை தொலைக் காட்சியில் பார்க்கும் போது செந்தில், கவுண்டமணி, ஜுனியர் பாலையா, சரளா ஆகியோர் நடிப்பை பார்த்து பிரமிப்பே ஏற்படுகிறது
உண்மையில் இந்தக் காட்சியை கற்பனை செய்து உருவாக்கிக் கொடுத்தவர் அ. வீரப்பன் என்ற அற்புதமான நகைச்சுவை நடிகராகும். தமிழ்த்திரை உலகையே புரட்டிபோடும் அளவுக்கு திறமையும் கற்பனை வளமும் கொண்ட அவரை அவர் கம்யூனிஸ்ட் என்பதால் ஒதுக்கித் தள்ளியது தமிழ்த்திரை உலகம்.
கவுண்டமணியும் – செந்திலும் மாதத்தின் 30 நாட்களும் படங்களில் நடிக்குமளவுக்கு பிஸியான நடிகர்கள் ஆனார்கள். பணமும், புகழும் குவிந்தது. ஆனால், வீரப்பனின் வாழ்க்கை?
அவர் எழுதிய வசனத்தைப் பேசி நடித்தவர்கள் எல்லாம் இலட்சம் இலட்சமாக பணம் சம்பாதித்து குவித்தனர். ஆனால், வீரப்பன் மட்டும் கடைசி வரைக்கும் பிழைக்க தெரியாத வராகத்தான் இருந்தார். தயாரிப்பாளர்கள் கொடுக்கறதை வாங்கிக் கொள்வார். அவரின் நகைச்சுவைகளால் வளர்ந்த காமெடி நடிகர்களும் அவரை திரும்பிப் பார்க்கவில்லை. அவரும் அவர்களிடத்தில் ஒரு உதவியோ, நன்றியோ எதிர்பார்க்கவே இல்லை.
இவை யெல்லாவற்றையும் விட வீரப்பனைப் பற்றிய ஒரு வியப்பான செய்தி உண்டு. அது….
உலக புகழ்பெற்ற இந்தி திரையுலகின் சூப்பர் ஸ்டார் நடிகர் அமிதாப்பச்சன் கதாநாயகனாக அறிமுகமாகி வெள்ளி விழா கண்ட இந்தி திரைப்படம் “பாம்பே டூ கோவா” தமிழில் வெளிவந்த வெற்றி பெற்ற “மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி” படத்தின் ரீமேக்தான் அந்த “பாம்பே டூ கோவா” மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி படத்தின் கதை வசனகர்த்தா A.வீரப்பன்.
வீரப்பன் நெருங்கிய நண்பரான எழுத்தாளர் ஜெயகாந்தன் ஒரு நிகழ்ச்சியில் உணர்ச்சிகரமாக தெரிவிக்கும் வரை இந்த தகவல் யாருக்கும் தெரியாது.
குலுங்க குலுங்க தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நகைச்சுவை விருந்து படைத்த என்.எஸ்.கிருஷ்ணன், சந்திரபாபு, சுருளிராஜன் போன்ற உன்னத கலைஞர்களின் இறுதி வாழ்வு மிகவும் துயரம் தோய்ந்ததாகவே இருக்கிறது. வீரப்பனும் இதற்கு விதிவிலக்கல்ல. வீரப்பனுக்கு சேமிப்பு பழக்கம் இல்லை. சம்பள விஷயத்திலும் கறாரில்லை. உடல்நிலையில் அக்கறை இல்லை. குடும்ப பொருளாதாரத்தில் சிரத்தை இல்லை. வரும் வருவாயை மனம் போன போக்கில் செலவழிப்பதும், நண்பர்களுக்கு உதவி செய்வது என்றே வாழ்வைக் கழித்தார்.
தனக்கு சக்கரை நோய் இருப்பதை மிகவும் முற்றிய நிலையிலேயே அறிந்தார். அப்போதும் முறையான மருத்து சிகிச்சை எடுத்துக் கொள்ளவில்லை. 65 வது வயதில்
கண்கள் பார்வை பாதிக்கப்பட்டது. அப்போதும் அவரிடம் வந்து சினிமா காரர்கள் காமெடி டிராக் எழுதி வாங்கிக் கொண்டு போவார்கள். பார்வை இல்லாத நிலையில் சில காலம் உதவியாளரின் துணையுடன் திரைப்படங்களுக்கு நகைச்சுவை வசனம் எழுதினார்.
சக்கரை நோய் முற்றிய நிலையில் 29-08-2005 அன்று மாரடைப்பால் காலமானார்.
அவரைப் போலவே பாய்ஸ் கம்பெனியில் சேர்ந்து சிரிப்பு நடிகராக வளர்ந்த பி.ஆர்.துரை, அ.வீரப்பன் மறைவுக்கு அஞ்சலி கூட்டம் நடத்தினார். அதில் அ. வீரப்பனின் இளமை கால நண்பரான ஜெயகாந்தன் அவர்கள், அ. வீரப்பன் அவர்களுடைய உன்னதமான பண்புகளைப் பாராட்டிப் பேசினார்.
எப்படியெல்லாமோ தமிழ்த் திரையுலகில் சத்தமில்லாமல் சாதனைகளை நிகழ்த்திய ஆவணம் வீரப்பன் அவர்களுக்கு கவுரத்தையோ, மரியாதையையோ திரை உலகத்தினர் அவருக்குத் தரவேயில்லை. அவரும் கவலைப்படவில்லை. தமிழ் திரையுலகம் தனது நூற்றாண்டைக் கொண்டாடிய போதும், தமிழ்த் திரையுலகம் அவரை மறந்து விட்டது. மறக்கடிக்கவிட்டது.
கலைமாமணி, ஆவணம் அ.வீரப்பன் அவர்கள் பல்லாயிரம் நாடகங்கள், திரைப்படங்களில் நடித்து அனுபவம் பெற்ற புடம் போட்ட தங்கம். நகைச்சுவை கலையில் வேறு எவரும் வீரப்பன் அவர்களுடன் எந்த வகையிலும் ஈடாக மாட்டார்கள்.
இவருக்கு பொற்கொடி என்ற மனைவியும் சாந்தி, உமா என்ற இரு மகள்களும் ஆனந்த் என்ற ஒரு மகனும் உள்ளனர்.
இவர் நடித்த படங்களில் சில:-
1)தெனாலி ராமன் (1956),
2) நாலு வேலி நிலம் (1959),
3) சாரதா (1962),
4) படித்தால் மட்டும் போதுமா (1962),
5) பணத்தோட்டம் (1963),
6) படகோட்டி (1964),
7) தாயின் மடியில் (1964),
8) ஆயிரம் ரூபாய் (1964),
9) அம்மா எங்கே (1964),
10) தாழம்பூ (1965),
11) கலங்கரை விளக்கம் (1965),
12) அலோ மிஸ்டர் ஜமீன்தார் (1965),
13) நாடோடி(1966),
14) யார் நீ? (1966),
15) மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி (1966), 12)பொண்ணு மாப்பிள்ளை(1966),
16) கண்கண்ட தெய்வம் (1967),
17) பூவும் பொட்டும் (1968),
18) உயிரா மானமா (1968),
19) ஒளி விளக்கு (1968),
20) குடியிருந்த கோயில் (1968),
21) ஜீவனாம்சம் (1968),
22) சோப்பு சீப்பு கண்ணாடி (1968),
23) குழந்தை உள்ளம் (1969),
24) நம்ம வீட்டு தெய்வம்(1970),
25) துள்ளி ஓடும் புள்ளிமான் (1971),
26) இரு துருவம் (1971),
27) சவாலே சமாளி (1971),
28) தெய்வம் பேசுமா (1971),
29) அன்னை அபிராமி (1972),
30) அவசரக் கல்யாணம் (1972),
31) பொன்னுஞ்சல் (1972),
32) நீலகண்டர் (1972),
33) பட்டிக்காட்டு பொன்னையா’(1973),
34) சொல்லத்தான் நினைக்கிறேன்(1973),
35) எல்லோரும் நல்லவரே (1975),
36) நல்லதுக்குக் காலமில்லை (1977),
37) பட்டணத்து இராஜாக்கள் (1981),
38) சின்ன முள் பெரிய முள் (1981),
39) கோயில் புறா (1981),
40) ஆணிவேர் (1981),
41) கைவரிசை (1983),
42) அந்த ஜுன் 16ஆம் நாள் (1984),
43) உதயகீதம் (1985),
44) செண்பகமே செண்பகமே (1989),
உட்பட 100 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார்.
ஆவணம் அ.வீரப்பன் அவர்களைப் பற்றிய ஆவணப்படம் முழுமையாக கீழே இணைப்பில் பார்க்கலாம்….
நன்றி! வணக்கம்!!
1) இக்கட்டுரை வரைய பல தகவல்களை தந்த ஆவணம் அ.வீரப்பன் அவர்களின் அருந்தவப்புதல்வர் வீ.ஆனந்த் அவர்களுக்கும்,
2) ஆவணம் அ.வீரப்பன் அவர்களை பற்றி அரிய தகவல்களை கட்டுரை வடிவாக முகநூலில் தந்த Parthiban R அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்!
3) தினத்தந்தி நாளிதழ் – 31.8.2005,
4) தீக்கதிர் நாளிதழ் – ஆகஸ்ட் 2011,
———————————————————-
அகமுடையார் வரலாற்று மீட்புப் பணியில்…
சோ. பாலமுருகன் அகமுடையார்,
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
அகமுடையார் அரண்.
பேச : 94429 38890.
இப்பதிவு அகமுடையார் அரண் பாலமுருகன் அகமுடையார்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
பாலமுருகன் அகமுடையார பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்