First
முதுபெரும் தமிழறிஞர்,
பேராசிரியர் ந. சஞ்சீவி அவர்களின் பார்வையில்…..
“மருது பாண்டியர்”
சிவகங்கை ஸமஸ்தானத்திற்குத் தலைவராக ஏறக்குறைய 150 வருடங்களுக்கு முன்பு மருது சேர்வைகாரர் என்று ஒருவர் இருந்தார். அவருடைய பெருமையையும் நல்லியல்பையும் அறிந்த குடிகளும், வித்துவான்களும், அவரை மருதுபாண்டியர் என்று வழங்கி வந்தனர்; மகாராஜாவென்றும் தங்களுக்குள்ளே பேசிக் கொள்வார்கள். அவர் பல வித்துவான்களை ஆதரித்துப் பல வகையான பரிசுகளை வழங்கினார். தமிழறிவுடையவராதலால், வந்த வித்துவான்களோடு சல்லாபம் செய்து சாதுர்யமாக அவர்களுக்கு ஏற்பப் பேசுதலும் அவர்கள் கூறுவனவற்றைக் கேட்டு மகிழ்ந்து உடனுடன் பரிசளிப்பதும் அவர்க்கு இயல்பு.
அவர் மீது வித்துவான்கள் பாடிய பிரபந்தங்களும், சமயத்திற்கேற்ப இயற்றியுள்ள பல தனிப்பாடல்களும் அங்கங்கே வழங்கி வருகின்றன. அவர் சிறந்த வீரர். அவர் ஆட்சியின் எல்லையில் திருடர்கள் பயம் முதலியன இல்லையென்று சொல்வார்கள். அவருடைய ஆணைக்கு அஞ்சி யாவரும் நடந்து வந்தனர்.
“அவர் தெய்வபக்தி உடையவர். தம் ஆட்சிக்கு உட்பட்ட ஆலயங்களில் நித்திய நைமித்திகங்கள் விதிப்படி காலத்தில் நடந்து வரும் வண்ணம் வேண்டியவற்றைச் செய்து வந்தார். பல ஸ்தலங்களில் அவர் திருப்பணிகள் செய்துள்ளார். ஆலயங்களுக்குத் தேவதானமாக நிலங்களை அளித்திருக்கின்றார்.
முருகக் கடவுள் கோயில் கொண்டெழுந்தருளியுள்ள முக்கிய ஸ்தலமாகிய குன்றக்குடியில் திருவீதிக்குத் தென்பாலுள்ள ஒரு தீர்த்தத்தைச் செப்பஞ் செய்து படித்துறைகள் கட்டுவித்தனர். அக்குளம் மருதாபுரி என்று அவர் பெயராலேயே வழங்கும். அதனைச் சூழ அவர் வைத்த தென்னமரங்களிற் சில இன்றும் உள்ளன. குன்றக்குடி மலைமேற் சில மண்டபங்களை அவர் கட்டியிருக்கின்றனர். அவை கட்டப்பட்ட பொழுது மிக உயர்ந்த சாரங்கள் அமைக்கப் பெற்றன. அவற்றில், மேலே உள்ளது மருது பாண்டியரால் அமைக்கப்பட்ட சாரம். கீழேயுள்ள சாரம் வெங்களப்ப நாயக்கர் என்னும் ஒரு ஜமீன்தாரால் அதற்கு முன் கட்டப்பட்டது. அவற்றைக் குறித்து “மேலைச் சாளரம் எங்களப்பன், கீழைச் சாளரம் வெங்களப்பன்” என்னும் பழமொழி ஒன்று அந்தப் பக்கத்தில் வழங்கி வருகிறது. அக்காலத்தில் ஜனங்கள் மருது பாண்டியரை ‘”எங்கப்பன்” என்று சொல்லி வந்தனரென்பதனாலேயே, அவருடைய உத்தம குணங்களும் குடிகளுக்கு அவர்பால் இருந்த அன்பும் புலப்படும்.
ஆதார நூல்:
பேராசிரியர் ந.சஞ்சீவி கட்டுரைக் களஞ்சியம்,
தொகுப்பாசிரியர்
காவ்யா சண்முகசுந்தரம்,
காவ்யா வெளியீடு, சென்னை.
முதல் பதிப்பு : அக்டோபர் 2006,
பக்கம் : 489 – 490,
—————————————-
அகமுடையார் வரலாற்று மீட்பு பணியில்,
சோ.பாலமுருகன் அகமுடையார்,
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
அகமுடையார் அரண்,
புலனம் (WhatsApp) எண் : 94429 38890.
இப்பதிவு அகமுடையார் அரண் பாலமுருகன் அகமுடையார்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
பாலமுருகன் அகமுடையார பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்