First
மற்றுமொரு உதாரண திருமண அழைப்பு- மாற்றத்திற்கான அடையாளம்!
——————————————————————
ஒரே சாதியாக இருந்தாலும் பட்டங்கள் ஏற்படுத்தும் குழப்பங்களால் அகமுடையார் பேரினத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் சொல்லி மாளாது! வெவ்வேறு பட்டங்களைக் கொண்ட ஒரே அகமுடையார் சாதியைச் சேர்ந்த இரு பிரிவினர் ஊருக்குள் இருந்தும் பட்டங்கள் ஏற்படுத்தும் குழப்பத்தால் ஒருவரையொருவர் வேறு வேறு சாதி என்று நினைக்கும் அவலம் தொடர்ந்து வந்தது!
இவ்வாறு வெவேறு சாதி என்று நினைப்பதால் இவர்களுக்குள் ஒற்றுமை ஏற்படாதது மட்டுமல்ல ஒரே ஊரில் ஒருவரையொருவர் வேறு வேறு சாதி என்று நினைத்து பகைகொண்டு வாழ்ந்து வந்த காலமும் இருந்தது இன்னமும் கூட இருக்கிறது!
ஆனால் இந்த குழப்பங்களுக்கெல்லாம் முடிவு கட்டும் வகையில் சமீபத்தில் சிலர் தங்கள் திருமணப் பத்திரிக்கைகளில் பட்டங்களைத் தவிர்த்து தங்கள் சாதிக்குரிய பெயரான அகமுடையார் என்பதை தெளிவாக பதிவு செய்கிறார்கள். இதன் மூலம் அப்பத்திரிக்கையை வாசிக்கும் வாய்ப்புள்ள வெவ்வேறு பட்டத்தைச் சேர்ந்த அகமுடையார்கள், குறிப்பிட்ட பத்திரிக்கையில் உள்ளவரும் அகமுடையார் இனத்தைச் சேர்ந்தவர் என்பதை அறிந்து அவருடன் நெருக்கமாக நட்புகொள்ள வாய்ப்பாக அமையும்.அதுமட்டுமல்லாமல் அகமுடையார் என்ற ஒற்றை அடையாளத்தை பயன்படுத்துவதன் மூலம் அகமுடையார் அனைவரும் ஒரணியில் திரண்டு நமது பெரும்பான்மையை அனைவருக்கும் நிரூபிக்கும் வாய்ப்பு ஏற்படும் அதனால் நல்ல பல மாற்றங்கள் ஏற்படும்.
அந்தவகையில் இப்புதிய மாற்றத்தில் திருவண்ணாமலையைச் சேர்ந்த சகோதரர் தினகரன் அகமுடையார் அவர்களும் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.வரும் ஜீன் மாதம் 17ம் தேதி (14-06-2017) அன்று நடக்கவுள்ள தனது திருமண அழைப்பிதழில் முதலியார் என்ற பட்டத்தை தவிர்த்து அகமுடையார் என்ற தனது சாதியின் பெயரை முழுக்க குறிப்பிட்டு நல்லதொரு மாற்றத்தில் தன்னை இணைத்துள்ளார்.
இவர் செய்துள்ள இவரை நாம் பாராட்டுவதோடு,விரைவில் திருமண வாழ்வில் இணைய இருக்கும் தினகரன் அகமுடையார்- ராணி அவர்களுக்கு அகமுடையார் ஒற்றுமை தளத்தின் சார்பாக வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்!
குறிப்பு:
முகநூலில் வெளியிடப்பட்டுள்ள இச்செய்தி (அழைப்பிதழுடன்) விரைவில் அகமுடையார் ஒற்றுமை தளத்தில் விரைவில் வரும் கட்டுரையில் இணைப்பாக வெளியிடப்படும் அல்லது இதுவே தனிப்பதிவாகவும் வரலாம்!
கூடுதல் செய்திகள்
இவ்வாறு பட்டங்களைத் தவிர்த்து சாதியின் பெயரை வாய்ப்புள்ள இடங்களில் பயன்படுத்துவதன் மூலம் நல்ல பல மாற்றங்களை உண்டாக்க முடியும்.
உதாரணத்திற்கு மதுரை அருகில் உள்ள பரவை எனும் கிராமத்தில் அகமுடையார்களும் ,அகமுடையாரின் ஓர் பிரிவாகிய துளுவ வேளாளர்களும் சம எண்ணிக்கையில் வாழ்ந்து வருகிறார்கள் இவர்கள் பலகாலமாக வெவ்வேறு அடையாளங்களுடன் (சேர்வை ,பிள்ளைப் பட்டங்கள்) வாழ்ந்து வருவதால் ஒருவரையொருவர் இதுநாள் வரை வேறு வேறு சாதி என்று கருதி தேவையற்ற போட்டிகளில் ஈடுபட்டு வந்துள்ளனர். ஆனால் வரலாற்றை எடுத்துச் சொல்லி தக்கமுறையில் உணரவைக்கும் போது அவ்வூரில் வரும்காலத்தில் திருவிழாவோ ,தேர்தலோ போட்டியின்றி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து இணைந்து கொண்டாட முடியும்!
அதே போல் கல்வி,வேலை,வியாபாரம் இதில் ஏதேனும் குறித்து தென்மாவட்ட அகமுடையார் ஒருவர் வடமாவட்டத்திற்கு வரும் போது பட்டங்கள் அடிப்படையில் சிறுபான்மையாகிவிடுகிறார் ஆனால் சாதிய அடையாளத்தோடு தேடும் போது அங்கு பெரும்பான்மையாக அகமுடையார்கள் வாழ்கின்ற அகமுடையார்களைக் காணமுடியும் அவர்களோடு நல்ல நட்பு,உறவு கொண்டு தேவையான உதவிகளைப் பெற முடியும்! இதே நிலை தான் வடமாவட்ட அகமுடையார் ,தென்மாவட்டத்திற்கோ அல்லது தஞ்சைப் பகுதிக்கோ செல்லும் போது நடக்கும் ,சாதிய அடையாளத்தோடு ஒன்றுபடும் போது நமக்கு நல்ல பல உதவிகள்,நட்புக்கரங்கள்,வாய்ப்புகள் நம்மைத் தேடி வந்து சேரும்.
ஒருமுறை வடமாவட்டச் சேர்ந்த முதலியார் பட்டம் கொண்ட அகமுடையார் ஒருவர் இராமேஸ்வரம் பகுதிக்கு பக்தி சுற்றுலா சென்று கொண்டிருந்தார் அப்போது அவர் மண்டபம் பகுதியில் ஓர் திருமண வாழ்த்துச் செய்தியை பார்க்க நேர்ந்ததாம் அதில் ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டு “சேர்வை” என்ற பட்டத்தைக் குறிப்பிட்டிருந்ததாம் வடமாவட்டத்தைச் சேர்ந்த இவர் அதைப் பார்த்தும் தங்கள் பகுதியில் வன்னிய சாதியினர் “சேர்வை” பட்டத்தோடு இருப்பதை எண்ணிப்பார்த்து இத்திருமண வாழ்த்தை வைத்தவர்கள் வன்னிய சாதியினர் என்று ஒருமுறை நினைத்தாராம் ஆனால் அப்பேணரின் கீழே அகமுடையார் அமைப்பு ஒன்றின் பெயர் குறிப்பிடப்பட்டிருப்பதை பார்த்த அவர் பின்னர் தான் இப்பேணரை வைத்தவர்கள் அகமுடையார் சாதியினர் என்பதையும் இப்பகுதியில் அகமுடையார்களுக்கு சேர்வைப் பட்டம் உள்ளதையும் அறிந்து கொண்டார் .அதுமட்டுமல்ல அதுவரை அகமுடையார்கள் வடமாவட்டத்தில் மட்டும் இருப்பதாக கருதி வந்த அவர் பின்னர் தமிழ்நாடு முழுவதும் அகமுடையார் இருப்பதையும் குறிப்பாக தென்மாவட்டத்தில் பெரும் எண்ணிக்கையில் இருப்பதையும் அறிந்து கொண்டாராம்.
.இவ்வாறு வெவ்வேறு பகுதியில் இருந்து தெரியாத இடத்திற்கு வருபவர்கள் அகமுடையாராக ஒன்றினைவதன் மூலம் நல்ல நட்பை ஏற்படுத்தி வரும் இடங்களில் தேவையான உதவியை பெற முடியும்!
எப்படி வடமாவட்ட அகமுடையார் ஒருவர் சேர்வைப் பட்டம் கொண்ட தென்மாவட்ட அகமுடையாரை பட்டத்தினால் ஏற்படுத்தும் குழப்பத்தினால் வேறு சாதி என்று முதலில் நினைத்தாரோ அதே போலவே முதலியார் பெயர் கொண்ட வடமாவட்ட அகமுடையார்களை தென்மாவட்ட அகமுடையார்கள் அவர்கள் முதலியார் சாதி என்று தவறாக எண்ணிக் கொண்டுள்ளனர்.
இவ்வாறு தான் பட்டங்கள் ஏற்படுத்தும் குழப்பங்களால் ஒரு பகுதியில் இருக்கும் அகமுடையார்கள் ,மறுபகுதியில் இருக்கும் அகமுடையார்களை அறிந்து கொள்ள வாய்பில்லாமல் போய் விடுகிறது.
அப்பேணரில் அகமுடையார் என்ற வார்த்தை இல்லாதிருந்தால் குறிப்பிட்ட அந்த வடமாவட்ட அகமுடையார் அப்பகுதியில் அகமுடையார் வாழ்வதையே அறிந்திருக்க வாய்ப்பில்லாமல் இருந்திருக்கும்! ஆகவே பட்டங்களைத் தவிர்த்து வாய்ப்புள்ள இடங்களில் சாதிப் பெயரை பயன்படுத்துவது நாம் ஒன்றினைவதற்கு நல்வாய்ப்பாக அமையும்.
பட்டப்பெயர்களை முழுமையாக நீக்குவது ஏதோ போல் இருக்கும் என்று கருதுபவர்கள் பெயர்களின் அருகில் பட்டத்தைக் குறிப்பிட்டு அடைப்பிற்குள் சாதியை குறிப்பிடலாம் உதாரணத்திற்கு சேர்வை(அகமுடையார்) ,முதலியார்(அகமுடையார்) ,பிள்ளை(அகமுடையார்) , தேவர்(அகமுடையார்) என்று குறிப்பிடலாம்.
பெரும்பான்மையை நிரூபித்து அரசாங்க சலுகைகள் பெறுவதற்கும் நாம் அகமுடையார் என்ற ஒற்றை அடையாளத்தோடு இணைவது அவசியமாகும்! அகமுடையாரில் துளுவ வேளாளர்களில் சிலர் பொருளாதாரத்தில் சிறந்திருந்தாலும் பெரும்பான்மையினர் இன்னும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் உரிய பிரதிநிதித்துவம் பெற இயலாத நிலை நிலவுகிறது. அகமுடையாரும் அகமுடையாரில் ஓர் பிரிவினரான துளுவ வேளாளர்களும் ஒரே சாதியினர் என்பதாலேயே இருவரையும் BC பட்டியலில் ஒரே எண்ணில் (அகமுடையார் ,துளுவ வேளாளர் உட்பட) என அடையாளப்படுத்தியுள்ளது. ஆகவே கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் நல்வாய்ப்பைத் தேடி ( எம்பி பட்டியலில் இணைவதோ அல்லது தனி இட ஒதுக்கீடு கேட்டுப் பெறும் கோரிக்கையோ) எதுவாயினும் நாம் ஒற்றை அடையாளத்தோடு ஓங்கி உரத்தகுரலில் ஒலிக்கும் போது நமக்கு தேவையான வாய்ப்புகள் கிடைக்கும்!நம் குழந்தைகளின் எதிர்காலமும் சிறக்கும்!
ஆகவே நாம் அகமுடையாராக இணைவது எல்லாவகையிலும் நன்மை பயக்கும் செயலாம்!
அகமுடையார் பேரினமாய் ஒன்றினைவோம்! அகமுடையார் ஒற்றுமை வளர்க!
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்