First
கோயிற்றமன் வாணிக வாணிளவரையர் 2 குதிரை வீரர்களை கொன்று இறந்த நடுகல் செய்தி
———————————————-
சென்ற பதிவில் சொன்னதுபோல இன்று அகமுடையார் என்ற பெயரில் அறியப்படும் சாதியினருக்கு முன்னர், அகத்தார், அகம்படி,அகம்படியர், அகம்படி முதலி , கோயிற்றமர், உள்மனையார்,பரிவாரத்தார்,மனைமகன்,மனைப்பெருஞ்சனம் ,அரசமக்கள் போன்ற பல பெயர்கள் வரலாற்றில் இருந்துள்ளன.
இந்த 3000 வருட காலத்தில் பெயர்கள் எத்தனை வடிவங்களில் கால்த்திற்கேற்றபடியும்,இடத்திற்கு தங்குந்தபடியும் மாறி மாறி வந்தாலும் , அது தரும் பொருள் அனைத்தும் ஒன்றாகவே இருந்துள்ளது.
ஆம் மேலே சொன்ன பெயர்கள் அனைத்தும் குறிக்கும் ஒரே பொருள் அரண்மனையில் உறைபவர் அல்லது அரசர் என்பதாகும்.
உதாரணத்திற்கு ஒன்றிரன்டை இப்போது விளக்கலாம்.
அகம்படியர் (அகம்படி= அரண்மனை, ஆர்= மக்கள் தொகுதியை குறிக்கும் ஆர் விகுதி ,மொத்தத்தில் அரண்மனையில் வாழும் மக்கள்= அரசன்)
கோயிற்றமர் (கோவில்== அரண்மனை அமர்= அமர்ந்திருப்பவன் அல்லது வாழ்பவன் அல்லது தமர் =உறவினன் மொத்தத்தில் அரண்மனையில் வாழ்பவன் அல்லது அரசனின் உறவினன்)
உள்மனையார் ( உள்மனை= அரண்மனை ஆர் ஆர்= மக்கள் தொகுதியை குறிக்கும் ஆர் விகுதி ,மொத்தத்தில் அரண்மனையில் வாழும் மக்கள்= அரசன்)
இவ்வாறு நமக்கு வழங்கிய அனைத்து பெயர்களுமே ஒரே பொருளை கொண்டு நிற்கின்றன( அகமுடையார் வரலாறு நூலில் இதைப்பற்றி மட்டும் 100 பக்கங்களில் பல்வேறு ஆதாரங்களில் விளக்க உள்ளோம் ) ஆகவே இப்போது இக்கட்டுரையின் மையக்கருவான நடுகல் செய்திக்கு வருவோம்.
குறிப்பிட்ட இந்த நடுகல் தற்போதுள்ள வேலூர் மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் – ஊத்தங்கரை சாலையில் அமைந்துள்ள கொரட்டி எனும் ஊரில் கிடைத்துள்ளது.
கி.பி 9 ஆம் நூற்றாண்டு என மதிக்கப்படும் இந்த நடுகல் கல்வெட்டு பற்றிய செய்தி தமிழக தொல்லியல் கழகத்தால் வெளியிடப்படும் ஆவணம் இதழ் 12ல் பக்கம் எண் 5ல் காணக்கிடைக்கின்றது.
கல்வெட்டின் மூலப்பாடத்தினை பதிவின் இணைப்பு 2ல் காணலாம்.
கல்வெட்டு தரும் செய்தி
——————
வலியடக்கியார் எனும் சிற்றரசருக்கு ஏழாவது ஆட்சி ஆண்டில் வலியடக்கியார் போவூர் நாட்டு ஐநூற்று நிலத்தை ஆண்டு கொண்டிருந்த போது பல்லவக் கிளை மரபினனான காடு வெட்டியின் படை ஆறு குழுகூர் மீது வந்து ஊரழித்த போது நடந்த போரில் வலியடக்கியாரின் கோயிற்றமன்(உறவினான) வாணிக வாணிஇளவரையன் காடு வெட்டிப் படையின் இரு குதிரைகளையும் அதன் மேல் அமர்ந்துள்ள வீரர்களையும் ஆய்தத்தால் குத்திக் கொன்று வீர சாவடைந்தான். அதற்கு போரில் குருதி சிந்தியமைக்கு அரசனால் வழங்கப்படும் நெய்த்தோர் பட்டி நிலம் கொடையாக வாணிக வாணிஇளவரையனுக்கு வழங்கப்பட்டது.
கோயிற்றமரும் ,அகம்படி முதலி பொருள் விளக்கம்
——————————————-
கோயிற்றமர்,கோயிற்றமன் என்ற பெயர்கள் கல்வெட்டுக்களில் சில இடங்களில் வருகின்றது. இதைப்பற்றி எழுதிய கல்வெட்டு ஆய்வாளர்கள் .
கோயிற்றமர் என்ற பெயர் முதலில் அரசசுற்றம் (அரசனின் உறவினர்) என்ற பெயரில் விளங்கியது எனவும் பின்னர் அது அரசின் அதிகாரிகள் என்ற பெயரில் வழங்கப்பட்டதாகவும் குறித்துள்ளனர்.
இதைப்போலத்தான் அகம்படியர்,அகம்படி முதலி என்கிற பெயரையும் கல்வெட்டு ஆய்வாளர்கள்,மொழியியல் அறிஞர்கள் அடையாளப்படுத்தியுள்ளனர்.
இதில் கவனிக்கவேண்டிய விசயம் என்னவென்றால் தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கான கல்வெட்டு செய்திகளில் அரசு அதிகாரிகள் பெயர்கள், பட்டங்கள் இடம் பெறுகின்றன ஆனால் ஆயிரக்கணக்கான தமிழ் கல்வெட்டுக்களில் கோயிற்றமர் என்ற பெயர் தாங்கி மொத்தமே 10 முதல் 20 கல்வெட்டுக்களே கிடைத்துள்ளன. வெறும் அதிகாரிகள் என்ற பொருளில் இப்பெயர் பயன்படுத்தப்பட்டிருந்தால் அதிகாரி என்று வரும் பெரும்பாலான இடங்களில் இப்பதம் பயன்படுத்தப்பட்டிருக்கும் ஆனால் 10 முதல் 20 கல்வெட்டுக்குள் இப்பெயர் பயன்பாடு சுருங்கி விடுவதன் காரணம் என்ன?
ஏனென்றால் மற்ற அதிகாரிகளுக்கும் கோயிற்றமர் என்பதற்கும் உள்ள வேறுபாடு என்னவென்றால் கோயிற்றமர் என்பவர்கள் அரசனின் குடி சார்ந்தவர்கள் , அதாவது அரசனின் குடிசார்ந்தவர்கள் அரசனின் பணிக்காக அமர்த்தப்படும் போது ,அப்போது மட்டும் அவர்கள் கோயிற்றமர்கள் என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். ஆகவே தான் மற்ற அதிகாரிகளைக்குறிக்கும் பட்டங்கள் ஆயிரக்கணக்கான இடங்களில் பயன்படுத்தப்படும் போது இந்த கோயிற்றமர் பயன்பாடு ஒரு சில கல்வெட்டுக்களுள் சுருங்கி விடுகிறது.
கோயிற்றமர் என்பதற்குரிய நேரடியான பொருளும் இதைத்தான் தருகிறது.
அதாவது
கோயிற்றமர் (கோவில்== அரண்மனை அமர்= அமர்ந்திருப்பவன் அல்லது வாழ்பவன் அல்லது தமர் =உறவினன் மொத்தத்தில் அரண்மனையில் வாழ்பவன் அல்லது அரசனின் உறவினன்)
இதை கோயிற்றமருக்குரிய இணைபெயராக பின்னாளில் விளங்கிய அகம்படி முதலி என்ற பதத்தை கொண்டு இதை விளக்க முடியும்.
அதாவது கோயிற்றமர் என்ற பெயரைப்போலவே அகம்படியர்,அகம்படி முதலி என்கிற பெயர் வரும்போதெல்லாம் கல்வெட்டு ஆய்வாளர்களும் ,மொழியியல் அறிஞர்களும் இதே தவறையே செய்துள்ளனர்.
ஆனால் பல்வேறு கல்வெட்டு செய்திகளில் பறை முதலி (பரையர்) , கைகோள முதலி , பன்னாட்டு முதலி (வன்னியர்) ,சுருதிமான் முதலி என்பதை எழுதும் போது அதை மட்டும் அந்தந்த இனக்குழுவை சேர்ந்த அதிகாரி என்று எழுதுகின்றனர் .ஆனால் அதாவது அகம்படி முதலி கல்வெட்டு வரும்போதெல்லாம் கல்வெட்டு ஆய்வாளர்கள் அகம்படி முதலி என்பதற்கு அரசு அதிகாரிகள் என்பதாக வழக்கமாக எழுதி முடித்துவிடுகின்றனர். குறைந்தபட்சம் அவர்கள் அகம்படி முதலி என்பதை அகம்படி இனத்தை சேர்ந்த அதிகாரிகள் என்று எழுதியிருக்கலாம்.
அல்லது அகம்படியர் என்பதன் நேரடி பொருளை புரிந்து கொண்டு அகம்படி முதலி என்பது அகம்படியர் எனும் அரசகுடியினரை கொண்ட அதிகாரிகள் ஆவர் என்று சரியான பொருளில் எழுதலாம்.
அரசனின் பணிக்கு அரசனின் குடிசார்ந்தவர்களே முதற்கண் நியமிக்கப்படுவர் என்பதும் விட அரசகுடியினர் சார்ந்த அதிகாரிகளுக்கே மற்ற எல்லா அதிகாரிகளையும் உயர்ந்த அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கும் என்பது இயற்கையாக நடக்கும் விசயமே .
மேலும் அகம்படி முதலி என்பதை பற்றி கல்வெட்டு அறிஞர்கள் எழுதும் போது கூட மற்ற அதிகாரிகளை விட அகம்படி முதலி எனும் அதிகாரிகள் உயர் அதிகாரம் படைத்தவர்கள் என்பதையும் எழுதுகின்றார்கள் . எல்லா அதிகாரிகளுமே அரண்மனை அல்லது அரசனை சார்ந்த அதிகாரிகள் தான் ஆனால் ஏன் அகம்படி முதலி எனும் இவர்களுக்கு மற்றவர்களை விட அதிக அதிகாரம் என்பதை கவனிக்க தவறிவிட்டார்கள் என்றே தோன்றுகிறது.
அகம்படி என்பதன் உண்மை பொருள் குறித்து வரலாற்றிஞர்கள் பார்வையை சரியான பக்கம் திருப்புவதற்கு இது போல் பல்வேறு கேள்விகள் உள்ளன அவற்றை வரும் காலங்களில் வெளிப்படுத்துவோம்.
மறுபடி கல்வெட்டு செய்தியை கவனிக்க
——————————–
இப்போது மறுபடி இக்கட்டுரை குறிப்பிடும் கல்வெட்டின் செய்தியை கவனிக்க.
கல்வெட்டின் 4,5வது வரியில்
வலியடக்கியார் கோயிற்றமன் வாணிக வாணிளவரையன்
இந்த வரியே முக்கியமானது .
இந்த நடுகல் செய்தி விளக்கத்தை இணையத்தில் வெளியிட்ட சிலர் “வலியடக்கியார் கோயிற்றமன் ” என்பதை வலியடக்கியார் அதிகாரி என்பதாக குறித்துள்ளனர் . ஆனால் அந்த பெயரின் பின்னால் வரும் பட்டத்தை கவனித்தால் இந்த கோயிற்றமர் என்பதற்கான உண்மை பொருள் விளங்கும்.
அதாவது வலியடக்கியார் கோயிற்றமன் என்பவன் வாணிளவரையன் என்ற பட்டத்தோடு காணப்படுகின்றான்.வாணிளவரையன் என்பதை இரண்டாக பிரிக்கும் போது வாணி+இளவரையன் என்பதாக பிரியும். பிரிப்பது சரிதான் என்பதை வாணிளவரையன் முன்பதாக உள்ள வாணிக என்ற பெயரும் உறுதி செய்கிறது.
சரி வாணி இளவரையன் என்பதில் உள்ள இளவரையன் என்பதன் பொருள் என்னவென்று எந்த கல்வெட்டு ஆய்வாளரையும் கேட்டால் அதற்கு பொருள் இளவரசன் தான் என்று உறுதியான பதில் வரும்.
சரி இப்போது கோயிற்றமனை அதிகாரியாக பொருள் கொண்டால் அவனுக்கு இளவரசன் என்ற பொருள் எப்படி சரியாக வரும்???
சரியாக வராது அப்படியென்றால் இதன் உண்மை பொருள் என்னவென்றால்
“வலியடக்கியார் கோயிற்றமன் வாணிக வாணிளவரையன் ” என்பது
வலியடக்கியாரின் மகன் அல்லது உறவினனாகிய வாணிளவரையன் எனும் இளவரசன் என்பதாகும். இவன் காடவராயர் எனும் காடுவெட்டி படையெடுத்து வருகையில் இரு குதிரை வீரர்களை கொன்று பின் தானும் கொல்லப்பட்டான் என்பதே இந்த நடுகல் செய்தியின் உண்மை பொருளாகும்.
அதென்ன வாணிக வாணிளவரையன் ? பழந்தமிழகத்தில் அரசர்களுக்கு செல்வங்கள் வணிகப்பாதையினருக்கு பாதுகாவல் வழங்குவதிலும் ,வணிகப்பெருவழியில் கிடைக்கும் வரிவருமானங்கள் மூலமே கிடைத்ததை அனைவரும் அறிவோம்.
குறிப்பிட்ட இந்த இளவரசன் வாணிக பெருவழியை கவனித்தவராகவோ ,வணிகப்பெருவழியில் பாதுகாப்பு வழங்கியவராகவோ இருக்க வேண்டும் அதனாலேயே இவருக்கு வாணிக வாணி என்ற சிறப்புப்பெயருடன் இந்த இளவரையன் குறிக்கப்பட்டிருக்க வேண்டும்.
இன்னும் சொல்லப்போனால் இந்த சன்டையே வணிகப்பெருவழிப்பாதையை கைப்பற்றுவதற்காக நடந்த சன்டையாக இருந்திருக்க வேண்டும் என்பது திண்ணம். ஏனென்றால் அதனால் தான் கல்வெட்டு வரியில் “வாணிக வாணிளவரையன்” என்ற குறிப்பு உள்ளது . ஏனென்றால் பொதுவாக பட்டங்கள் காரணப்பெயராகவே தமிழ்நாட்டில் விளங்கியதை காணமுடியும்.
உதாரணத்திற்கு
மதுராந்தகன் (மதுரைக்கு எமன் போன்றவன்) -சோழர் பட்டம்
பாண்டிய குலாந்தகன்) (பாண்டிய குலத்திற்கு எமன் போன்றவன் ) -சோழர் பட்டம்
ராஜகுல சர்ப கருடன் -ராஜகுலம் எனும் சர்பம்((நாகத்திற்கு) கருடன் போன்றவன் — வாணாதிராயர் பட்டம்
சோழந்தகன் -சோழர்களுக்கு எமன் போன்றவன் — பாண்டியர் பட்டம்
இது போல் ஆயிரக்கணக்கான பட்டங்களை சொல்லலாம். ஆகவே “வாணிக வாணிளவரையன்” என்ற பட்டம் நடுகல்லில் குறிக்கப்படுவதையும் , போரில் இருவர் கொல்லப்பட்டதையும் கவனிக்கும் போது இது வணிகம் சம்பந்தப்பட்ட போர் என்பதை மிகவும் உறுதியாக சொல்லலாம்.
மேலதிக குறிப்பு
————–
கட்டியர் ,மலையர் ,வாணர்,போன்ற அகம்படியர் இனக்குழு அரசர்களிடத்தும் , அகம்படியர் இனக்குழுவை தோற்றுவாயாக கொண்டு பின்னாளில் பல்வேறு இனக்குழுக்களுடன் மணவுறவு கொண்டு பேரரசாக மாறிய சோழர்களிடத்தும் அரசகுடியின் அதிகாரிகளாக செழித்த அகம்படி,அகம்படி முதலிகள் பின் காடவராயர் , சம்புவராயர், பாண்டியர், சேதுபதிகள் என தங்கள் இனக்குழு சாராத அரசர்களிடமும் பணியாற்றிய போதும் அகம்படி முதலி என்ற பெயரிலேயே குறிக்கப்பட்டனர் ஆனால் இந்த முறை இவர்கள் அகம்படி இனத்தை சேர்ந்த அதிகாரிகள் மட்டுமே தாங்கள் சார்ந்த அரசின் குடிவழியினராக அவர்கள் அடையாளப்படுத்தவில்லை. இந்த நிலையில் தான் அகம்படி முதலி என்பதற்கு வெறும் அரசு அதிகாரிகள் என்று எண்ணத்தக்க பொருள் பின்னாளில் உருவாகியுள்ளது.
ஏற்கனவே சொன்னது போல் விரைவில் வெளிவரும் நூலில் பெயர் விளக்கத்தை மட்டும் 100 பக்கங்களுக்கு மேல் பல்வேறு ஆதாரங்களுடன் தர உள்ளோம்.
இணைப்புகள்(ஆதாரங்கள்)
———————-
இணைப்பு 1,2 – ஆவணம் இதழ் 12ல் வெளியான கல்வெட்டு செய்தி
இணைப்பு 3- கல்வெட்டின் மூலபாடம்
இணைப்பு 4- கோயிற்றமர் என்பதன் பொருள் குறித்து கல்வெட்டு அறிஞர் சுப்பராயலு அவர்கள் “சில அரிய சொற்கள் ” என்ற கட்டுரையில் கூறிய கருத்துக்கள்
இணைப்பு 5- பல்வேறு இனக்குழு முதலிகள் -ஆதாரம் கல்வெட்டு இதழ் 13 பக்க எண்கள் 29,30
இணைப்பு 6 – சுருதிமான் முதலி (இனக்குழு முதலி உதாரணம்) ஆதாரம் கல்வெட்டு இதழ் 139 பக்க எண்கள் 54,55
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்