First
சோழ கங்க தேவனின் அகம்படி படை பற்று
————————————–
நமது பக்கத்தை தொடர்ந்து வாசித்து வரும் சகோதரர் மோகன் குமார் முருகதாஸ் என்பவர் பட்டுக்கோட்டை அருகில் உள்ள அத்திவெட்டி எனும் ஊரில் கண்டறியப்பட்ட அகம்படி பற்று எனும் கல்வெட்டு குறித்து நம் அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தின் கவனத்திற்கு நேற்று(28-12-2020) அன்று கொண்டு வந்தார்.
அகம்படி எனும் இன்றைய அகமுடையார் சாதியை குறிப்பிடும் இந்த கல்வெட்டு செய்தியை தங்கள் சாதியை சேர்ந்தவர் என்பது போல் கள்ளர் சாதியை சேர்ந்த ஒருவர் இணையத்தில் குறிப்பிட்டுருந்தார்.
ஏற்கனவே சொன்னது போல் சொத்துக்கு சொந்தக்காரன் சும்மா இருந்தால், பார்ப்பவன் எல்லாம் பாத்தியத்திற்கு வரவே செய்வான்!
ஆனால் நமக்குரியதை நாம் விடுவோமா என்ன? நம் அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தின் சார்பாக இதனை ஆராய்ந்து ஆதாரங்களுடன் உண்மையை விளக்கியுள்ளோம்.
செய்தியின் உண்மையை ஆராய்வதற்கு முன் கல்வெட்டு செய்தி என்ன குறிப்பிடுகின்றது என்று பார்ப்போம்!
கல்வெட்டு இடமும் ,காலமும்
————————–
இன்றைய தஞ்சாவூர் மாவட்டம் ,பட்டுக்கோட்டை வட்டத்தில் அமைந்துள்ள அத்திவெட்டி எனும் ஊரில் உள்ள செளந்தரேஸ்வரர் கோவிலில்
இரண்டாம் ராஜேந்திரனின் ஆட்சிகாலத்தில் கி.பி 1061ம் வருடம் குறிப்பிட்ட கல்வெட்டு வெளியிடப்பட்டுள்ளது.
கல்வெட்டு செய்தியை முழுமையாக அறிய .பார்க்க படம் 1
கல்வெட்டு சுருக்க குறிப்பு:
பெரியான் அழகிய பெருமானன சோழகங்கன் என்பவன் படைப்பற்றான அகம்படி பற்றுக்கும் நாட்டுப்பற்று கடமைக்கு வரிகள் தவிர வேறு வரிகளை வாங்க கூடாது எனவும் அப்படி செய்யாதவன் தன் வம்சத்தில் பிறந்தவனல்ல என்றும் எச்சரிக்கின்றான்.
சற்றே விரிவான கல்வெட்டு ஆய்வு:
கல்வெட்டு செய்தியை படிக்க தெரிந்து மேலோட்டமாக பார்ப்பவர்களுக்கு மேலே குறிபிட்டப்பட்டுள்ள கலவெட்டு சுருக்க செய்தி தான் கவனத்திற்கு வரும்.
ஆனால் இதை நமது 25 வருடங்களுக்கு மேலான வரலாற்று வாசிப்பு அனுபவத்தோடு அணுகும் போது நிறைய விசயங்களை நாம் பெற முடிகின்றது.
பெரிய பெருமான் என்பவன் சோழர்களுக்கு கீழ் இருந்த சிற்றரசனாகவும் போர்களின் போது சாமந்தனாகவும்(படை தலைவனாகவும்) இருந்துள்ளான். இவன் தான் பிறந்த அகம்படி இனத்தின் தலைவனாக(அகம்படி முதலி) இருந்துள்ளான் . குறிப்பிட்ட பகுதியில் அகம்படி பற்று எனும் அகம்படி இனத்தை சேர்ந்த வீரர்களின் படைமுகாம்(படை வீடு) இருந்துள்ளது இதை இவன் நிர்வகித்துள்ளான் என்று தெரிகிறது.
குறிப்பிட்ட இந்த அகம்படி படைப்பற்றின் செலவீனங்களுக்காகவும் அரசுக்கு செழுத்த வேண்டிய நாட்டுவரி (நாட்டு பற்று) வரியினையும் இந்த சோழகங்கனின் வம்சத்தார்களே (அகம்படி முதலிகளே )வசூல் செய்து செழுத்தியுள்ளனர்.
அப்படி வசூல் செய்யும் போது அகம்படி பற்று,நாட்டுபற்று வரி தவிர்த்த வேறு வரி /பணம் வசூல் செய்ய கூடாது என்றும் அப்படி வசூல் செய்தால் அவர்கள் தன் வம்சத்தவர்கள் (இனத்தினர்) இல்லை என்றும் அறுதியிடுகின்றான். இதில் இருந்து அகம்படி பற்று படையில் இருந்தவர்கள் சோழகங்கனின் உறவினர்கள் என்பதும் இது ஓர் இனமாகவே கல்வெட்டு செய்தியில் காட்டப்பட்டுள்ளதும் தெரிகின்றது. மேலும் அகம்படி என்பதில் படைத்தொகுதியும் அடங்கும் என்பதை அகம்படி பற்று (அகம்படி சாதியினரின் படை வீடு) என்பதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.
இக்கருத்தை மேலும் இந்த கல்வெட்டு செய்து மூலம் உறுதி செய்வோம்!
வரி வசூலிப்பவருக்கும் சோழகங்கனுக்குமான தொடர்பு
———————————————-
முதலில் இந்த கல்வெட்டு செய்தியில் அகம்படி பற்று என்பது படைப்பற்று என்று குறிப்பிடப்பட்டுள்ளது. படைப்பற்று என்பது போர்வீரர்கள் தங்கியிருக்கும் இடம் என்று அறியப்படும் இதனை படைப்பற்று என்றும் படைவீடு என்றும் குறிப்பிடுவர்.
இந்த அகம்படி பற்று நாட்டு பற்று கடமை எனும் வரிகளை மட்டுமே வசூலிக்க வேண்டும் அப்படி இல்லாமல் கூடுதலாக வசூலிப்பவர்கள் தன் வம்சத்தில் பிறந்தவனல்ல என்று சோழகங்கன் சூளூரைத்ததை பார்தோம்.ஆகவே வரி வசூலில் ஈடுபட்டவர்கள் சோழகங்கனின் உறவினர்கள் அல்லது இனத்தவர்கள் ஆவர் என்பது உறுதி!
சரி யார் இந்த வரிகளை வசூலித்தார்கள் என்று ஆராய்ந்தோமானால் அதற்கான தகவலும் இந்த கல்வெட்டு செய்தியிலேயே கிடைக்கின்றது.
அதவது ” முதலிகளுக்கு இறுக்கும் பொன் வரியும்” என்பதன் மூலமாக இந்த வரி வசூலிக்கும் அதிகாரிகளுக்கு முதலி பட்டம் இருந்ததை கல்வெட்டு செய்தி உறுதி செய்கின்றது. ஆகவே கல்வெட்டு குறிப்பிடும் சோழகங்கனின் உறவினர்கள் முதலி பட்டம் கொண்டவர்கள் என்பது உறுதி.
ஏற்கனவே நாம் கண்ட நூற்றுக்கணக்கான கல்வெட்டு செய்திகளில் அகம்படி முதலி என்று வருவதையும் இந்த கல்வெட்டு செய்தியிலும் அகம்படி பற்று அதை வசூலிப்பவர்கள் முதலி என்ற பட்டத்திற்கு உரியவர்கள் எனும் போது சோழகங்கன் எனும் இந்த கல்வெட்டு நாயகனின் இனத்தவர்கள் அகம்படி இனத்தவர்கள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாக விளங்கும்.
இருப்பினும் நாம் சொல்லும் கருத்திற்கு துணை சான்று கொண்டு விளக்கினால் இன்னும் இந்த உண்மை தெளிவாகும் என்பதால் இதனை மற்றோரு கல்வெட்டு செய்தியுடன் ஒப்பிட்டுக்காண்போம்.
கங்கர்,கங்கன் பட்டம் கொண்டு பெரும் தளபதிகளாக ,ஆட்சியாளர்களாக(பெருமாள்/பெருமான்) என்று அகம்படி இனத்தவர் கல்வெட்டு செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
“அகம்படி முதலிகளில் நாயகன் எல்லாம் தருவானன தென்ன கங்க தேவனும்” எனும் கல்வெட்டு செய்தி பாண்டியர் காலத்து கல்வெட்டு ஒன்றில் பதிவாகியுள்ளது.
பார்க்க படம் 2
ஆதாரம்: தென் இந்திய கல்வெட்டு தொகுதிகள் 3 , கல்வெட்டு எண் 412 – மத்திய அரசு தொல்லியல் துறை வெளியீடு.
மேற்குறிப்பிட்ட தென்ன கங்க தேவனும் கங்கர்/கங்கன் பட்டம் கொண்ட அகம்படியர் என்பது தென்ன கங்க தேவன் எனும் பெயரையும் அகம்படி முதலிகளில்(அகம்படி இனத்தின் தலைவன்) என்ற வகையிலும் குறிப்பிட்டுருப்பதை காணலாம். ஆகவே கங்கர்/கங்கன் பட்டம் என்பது அகம்படிய சாதியினருக்கு சோழர்,பாண்டியரின் சமகாலத்திலேயே இருந்து வந்துள்ளதை அறிய முடியும்.
சோழ நாட்டில் இருக்கும் போது சோழ கங்கன் என்றும் பாண்டி (தென்னவர்) நாட்டில் இருக்கும் போது தென்ன கங்கன் என்றும் பட்டத்தை பயன்படுத்தியுள்ளதை அறிய முடிகின்றது.
சோழகங்கனின் பூர்வீகம்
—————————–
அடுத்தது இந்த கல்வெட்டில் குறிப்பிடப்படும் சோழகங்கனின் பூர்வீகம் கல்வெட்டு காணப்பட்ட அத்திவெட்டி அன்று அவனுடைய பூர்வீகம் அன்று. உண்மையில் சோழகங்கனின் பூர்வீகம் பையூர் கோட்டம் என்று அழைக்கப்பட்ட இன்றைய செங்கற்பட்டு மாவட்டத்தின் பொன்னேரி தாலுகா பகுதியில் அமைந்துள்ள பழவேற்காடு பகுதியாகும்.
இது அந்த கல்வெட்டு செய்தியில் உள்ள “தொண்டை மண்டலமான செயங்கொண்ட சோழமண்டலமான பையூர் கோட்டத்து பைய்யூர் பெரியான் அழகிய பெருமானன சோழகங்கனேன்” என்ற தனது அறிமுகத்தின் வழியே தனது பூர்வீகத்தை சோழ கங்கன் அறிவித்துள்ளான்.
சோழ நாடு கூற்றங்களாக பிரிக்கப்படிருந்ததை போல பண்டைய காலத்தில் தொண்டைமண்டலம் 24 கோட்டங் களாக பிரிக்கப்ட்டிருந்தது. அதில் பையூர் கோட்டம் என்ற பகுதியே இன்றைய பொன்னேரி தாலுகாவில் அமைந்துள்ள பழவேற்காடு பகுதியாகும் .
இதையெல்லாம் ஏன் சொல்கிறோம் என்றால் இதே பொன்னேரி பகுதியில் இன்றும் பொன்னேரி முதலியார் என்ற பெயரில் அகமுடையாரின் உட்பிரிவுகளாக குறிப்பிட்ட வழியினர் இன்றும் உள்ளனர் என்ற செய்தி கங்கர்/கங்கன் எனும் பட்டத்தில் காணப்படும் அகம்படி முதலிகள் என்பவர்கள் இன்றைய அகமுடையார் சாதியினர் என்ற கருத்துக்கு கூடுதல் வலுசேர்க்கும் செய்தியாகும்.
கர்நாடகத்தை பூர்வீகமாக கொண்ட கங்கர்கள் தொண்டை மண்டலத்தை பல காலம் ஆட்சி செய்துள்ளனர் இவர்களுடன் இப்பகுதியில் வாழ்ந்த அகம்படியர்கள் செய்து கொண்ட மணவுறவு காரணமாக கங்கர்/கங்கன் என்ற பட்டத்தை சூடிக்கொண்டனர் என்று தொல்லியல் அறிஞர் எஸ்.ராமச்சந்திரன் “தமிழக வேளாளர் வரலாறு” என்ற நீள்கட்டுரையின் 11ம் பாகத்தில்
குறிப்பிட்டுள்ளார் (பார்க்க படம் 3)
ஆகவே தான் தொண்டை மண்டலத்தை சேர்ந்த அகம்படியர்களுக்கு (அகம்படி முதலிகளுக்கு) கங்கன்/கங்கர் என்ற பட்டம் வாய்க்கப்பெற்றுள்ளது.
மேற்குறிப்பிட்ட பொன்னேரி பகுதியை சேர்ந்த அகம்படி முதலியான இவர் சோழ நாட்டில் இருந்தாதால் சோழ கங்கன் என்றும் பின்னர் இவனுடைய வழியினர் பாண்டிய நாட்டில் பரவிய போது தென்ன கங்க தேவன் என்ற பட்டத்தை புனைந்ததை முன்னர் பார்த்த கல்வெட்டு செய்திகள் வழியே அறிய முடிகின்றது.
மேலும் சில செய்திகள்
குலோத்துங்கனின் 34 ஆம் ஆட்சி யாண்டின்போது கலியுகமெய்யன் ஆகிய நந்தி பன்மன் என்பவன் இன்றைய சென்னை பகுதியை சேர்ந்த திருநீா்மலை கோயிலுக்கு விளக்கு கொடையாக அளித்துள்ளான். சோழகங்க தேவனின் அகம்படி முதலிகளில் இவனும் ஒருவன் என்பதை ஒரு கல்வெட்டு தொிவிக்கின்றது.(546/1912)
இதே கோவிலுக்கு மூன்றாம் இராஜராஜனின் ஒரு கல்வெட்டு பிள்ளையாா் சோழகங்க தேவரின் அகம்படியாா்களில் ஒருவரான ஈழப்படை வென்றான் என்பவன் ஒரு விளக்கு வைக்க நன்கொடையாகக் காசு அளித்துள் ளான். (549/1912)
இவ்வாறு சோழ கங்கன் மற்றும் அவர்களது உறவுகளான அகம்படியரின் கல்வெட்டு செய்திகள் நீள்கிறது.
மேலும்
காலிங்க மாகனது காலத்தில் பெளத்த சங்கத்தவர்களிற் பலர், நாட்டைவிட்டோடித் தமிழகம் சென்றனர். அங்கு பாண்டிய மன்னனின் சாமந்தனான (மெய்க்காப்பாளன் அல் லது துணைவன்) ஒரு சோழகங்க தேவனைச் சரணடைந் தனர் என இப்பாலி நூல் கூறுகிறது. (Upasakajanailanka’a- By Bhandata Anarda) ši svibaoy 35 Gavs nr F sus (Dalada Siritha) என்ற பாளி ஆவணத்திலும் இடம்பெறுகிறது (பார்க்க படம் 4)
சோழகங்க தேவனை மெய்க்காப்பாளன் அல்லது துணைவன் என்று நூல் குறிப்பு சொல்கிறது ஆனால் கல்வெட்டு செய்தியில் அகம்படி என்றொ அகம்படி முதலி என்றோ தான் இருந்திருக்க வேண்டும். ஏனென்றால் பல்வேறு ஆய்வாளர்களும் கல்வெட்டில் அகம்படி என்ற இடத்தில் எல்லாம் மெய்காப்பாளர் அல்லது அரண்மனை அதிகாரி என்றே நிரப்பி விடுகின்றனர். அதனால் அந்த கல்வெட்டு வரிகளில் அகம்படி என்றே இருந்திருக்கும் என்பதை நிச்சயமாக சொல்லலாம்.
இந்த நூல் செய்திக்கு ஆதாரமான கல்வெட்டு ஆண்டறிக்கை நமக்கு இன்னும் கிடைக்காததால் இச்செய்தியுடன் இணைக்க முடியவில்லை. விரைவில் அச்செய்தியை பெற்று வெளியிடும்போது கூடுதல் ஆதாரங்கள் வெளியாகும்.
இவற்றாறு சோழகங்கனுடன் தொடர்பு நீள்கிறது அதனை வரும் நாட்களில் விரிவாக பேசுவோம்.
குறிப்பு:
வரலாற்றிஞர் எஸ்.ராமசந்திரன் அவர்கள் கருத்துக்கள் சிலவற்றில் நமக்கு உடன்பாடில்லை குறிப்பாக அகம்படியர் சாதியினர் தனிச்சாதி என்று அவர் குறிப்பிட்டாலும் அவர்கள் மறவர் ,கள்ளருடன் தொழில் முறையில் நீண்ட தொடர்பு கொண்டிருந்தார்கள் என்று கூறுவதை நாம் ஏற்கவில்லை.
எனினும் நாம் காட்டிய முதன்மை கல்வெட்டு ஆதாரங்கங்களுக்கு ஒப்புதலாக துணைச்சான்றாகத்தான் எஸ்.ராமசந்திரன் கருத்தை நாம் இங்கு பதிவு செய்துள்ளோம்.
2000 வருடங்களுக்கும் மேலாக நிலைப்படையாக இருந்த அகம்படி சாதியினர் கி.பி கி.பி 1300களுக்கு பின்னால் போர்தொழிலுக்கு வந்த கள்ளர் ,மறவர்களுடன் தொழில் ரீதியான தொடர்பை மட்டும் கொண்டிருந்தனர் என்பதையும் அந்த தொடர்பும் முரண்கள் ,எதிர்வினைகள் ,இணங்கங்கள் என்று மாறி மாறி வந்ததையும் அறிய முடிகின்றது. மற்றொரு சந்தர்பத்தில் இதை விரிவாக பேசுவோம்!
சில நகை முரண்கள்
கள்ளர் சாதியை சேர்ந்த எழுத்தாளர் என்ற பெயரில் வலம் வரும் ஒருவர் இந்த கலவெட்டு செய்தியில் குறிப்பிடப்படும் சோழகங்கனை தங்கள் இனத்தவர் என்று கூறுகின்றார்.
அதாவது அகம்படி என்பது அரண்மனை அதிகாரி என்றும் தங்கள் சாதியினர் தான் அந்த சோழ கங்கன் என்றும் சொல்கிறார். ஒரு வாதத்திற்கு வைத்துக்கொண்டால் கூட அதற்கு சோழகங்கனின் சமகாலத்தில் கல்வெட்டு ஆதாரம் காட்ட வேண்டும் அல்லவா? ஆனால் அதை காட்டுவதில்லை.
அவ்வளவு ஏன் சோழகங்கன் பெயர் வரும் இடங்களில் முதலி என்ற பட்டமும் சேர்ந்து வருகிறது . அப்படி ஏதேனும் ஓர் முதலி பட்டத்திலாவது சோழகங்கனின் சமகாலத்தில் கள்ள முதலி என்ற பெயரில் ஏதேனும் சாசனம் உள்ளதா அல்லது சோழ கங்கன் என்ற பெயரில் கள்ளன் என்ற சாதிப்பெயர் அல்லது குறைந்தது கள்ள என்ற வார்த்தையாவது வருகிறதா என்று கேட்டால் இல்லை!
வார்த்தையால் வானத்தை வளைக்க முடியாது! ஆதாரம் இல்லாமல் அனர்த்தங்கள் செய்ய கூடாது!
முதலில் இந்த கல்வெட்டு செய்தியில் அகம்படி பற்று என்பது படைப்பற்று என்று குறிப்பிடப்பட்டுள்ளது. படைப்பற்று என்பது போர்வீரர்கள் தங்கியிருக்கும் இடம் என்று அறியப்படும் இதனை படைப்பற்று என்றும் படைவீடு என்றும் குறிப்பிடுவர்.
அந்த வகையில் அகம்படி பற்று என்பது அகம்படியர் சாதியை சேர்ந்த வீரர்கள் வசிக்கும் இடம் என்பதை சொல்லும் போது இல்லை அகம்படி என்பது சாதி அல்ல அகம்படி என்பது அரண்மனை சேர்ந்த அதிகாரிகள் என்றும்
இதே போல் நாங்களும் கள்ளர் படைபற்று என்பதில் உள்ள கள்ளர் என்பது சாதி பெயர் அல்ல அதன் கள்ளர் என்பதற்கு அகராதியில் உள்ள பொருளை வைத்து திருடர் என்ற பொருள் கொண்டு திருடர் படைபற்று என்றும் அது திருடர்களை கொண்டு அமைக்கப்பற்ற படை தொகுதி என்று எடுத்துக்கொள்லலாம் என்றால் சம்பந்தப்பட்டவர்கள் ஏற்பார்களா? ஆகவே
அவரவர்க்குரியதை அவரவர் உரிமை கொண்டாடுவது நல்லது! மற்றவர்களுடையதை தங்களுடையது என்றால் பிணக்குகள் தான் மிஞ்சும்.
இருப்பினும் நமது கல்வெட்டை அவர் சாதியுனுடையது என்று சொன்னாலும் நமக்கான கல்வெட்டை நம்மிடம் அறிமுகம் செய்து வைத்ததற்காக அந்த மாற்று சாதி நண்பருக்கும் ஒருவகையில் நாம் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம்! நன்றி!
பறை முதலி, அகம்படி முதலி , வேளான் முதலி என்று பல்வேறு கல்வெட்டுக்களில் பல்வேறு சாதி சேர்ந்த தலைவர்கள் குறிப்பிடப்பட்டுள்ளார்கள். எனினும் அகம்படி என்பதற்கு சரியான விளக்கங்களை பல்வேறு ஆதாரங்களுடன் விரைவில் வெளியிட்டு பொதுப்புத்தியில் உள்ள குழப்பத்தை விளக்குவோம்.
வரலாற்று மீட்பு தொடரும்!
கட்டுரை ஆசிரியர்: மு.சக்தி (அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்திற்காக)
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்