First
13ம் நூற்றாண்டை சேர்ந்த அகம்படிநல்லூர்
—————————————–
மானாமதுரை மேலநெட்டூர் எனும் கிராமம் .இங்கு அமைந்துள்ள திருவாலங்காடு உடையார் கோவிலில் பாண்டிய மன்னன் மாறவர்மன் சுந்தர பாண்டியன் காலத்தை சேர்ந்த கி.பி 13ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு செய்தி கிடைத்துள்ளது.
இக்கல்வ்வெட்டு செய்தி மூலம் குறிப்பிட்ட பகுதியில் அகம்படி நல்லூர் என்ற பெயரில் இன்றைய அகமுடையார் சமுதாயத்தினரை குறிப்பிடும் பெயர் இருந்துள்ளதையும் மேலும் பல செய்திகளையும் இதன் மூலம் அறிய முடிகின்றது.
தகவல்களை பார்ப்பதற்கு முன்பு கல்வெட்டு குறிப்பினை காண்போம்!
கல்வெட்டு கண்டறியப்பட்ட இடம்: திருவாலங்காடு உடையார் கோவில்
காலம்: கி.பி 13ம் நூற்றாண்டு
கல்வெட்டு குறிப்பு: கருங்கைநாடு மேலநெட்டூரில் அமைந்துள்ள திருவாலங்காடு உடையார் கோவிலில் கொடை மற்றும் பூசைகள் நடைபெற
கங்கை கொண்ட நல்லூர்,கணவதிஏம்பல்(ஏந்தல்),அகம்படிநல்லூர்,எழுநூற்றுவ மங்களம்,அணிவளநல்லூர்(, சிவமங்களம்,சேருடைநல்லூர்,மருதங்குளம் போன்ற ஊர்களையும் கிழவநேரி எனும் கற்பகநிதி மங்களம்,நெட்டூர்,மஞ்சனேம்பல்(மஞ்சனேந்தல்) போன்ற கிராமத்தில் உள்ள நிலங்களை இறையிழியாக அண்ணன் கங்கை நாராயண சக்கரவரத்தியும் அவனுடைய அலுவலர்களும் சிவபிராமணர்களுக்கும் தேவகண்மிகளுக்கும் வழங்கி இதை நிர்வகிக்க ஆணை பிறப்பித்துள்ளனர்.
பார்க்க இணைப்பு படம் 1:
ஆதாரம் : இந்திய கல்வெட்டு ஆண்டறிக்கை வருடம் 1989-90 , கல்வெட்டு எண் 151
கல்வெட்டு தொடர்பான மேலதிக தகவல்கள்
இக்கல்வெட்டு பற்றிய குறிப்பு மட்டும் மத்திய அரசின் கல்வெட்டு ஆண்டறிக்கை மூலம் கிடைக்கப்பெற்றது. ஆனால் இந்த கல்வெட்டின் முழுமையான செய்தி நமக்கு கிடைக்கவில்லை.
இருப்பினும் கல்வெட்டு குறிப்புகளை மற்ற வரலாற்று செய்தியுடன் ஒப்பிட்டுப்பார்த்து பல்வேறு செய்திகளை நாம் அறிந்து கொள்ள முடிகிறது.
இறையிழி நிலமும் நில தானம் வழங்கிய காரணமும்
—————————————–
இறையிழி என்பது இறை(வரி) இல்லாத நில உரிமை ஆகும். இவ்வாறு கொடுக்கப்படும் நிலங்களுக்கு அந்த நிலத்தின் உரிமையாளர் அரசிற்கு வரி செழுத்த தேவையில்லை .அந்த நிலத்தை அவர் விற்கவோ அல்லது அடமானம் வைப்பதோ முடியாது.
அதே வேளையில் நிலத்தை பெற்றவர் அதில் பயிர் செய்து கிடைக்கும் வருவாயினை கொண்டு குறிப்பிட்ட பயன்பாட்டிற்கு பயன்படுத்துக்கொள்ளலாம். இந்த கல்வெட்டு செய்தியை பொறுத்தவரை கோவிலுக்கு விடப்பட்ட ஊர்களில் மூலம் கிடைக்கும் வரிவருவாய் கொண்டும் ,கோவில் நிலங்களில் வரும் விளைச்சல் வருமானம் கொண்டும் கோவில் வழிபாட்டிற்கு பயன்படுத்திக்கொள்ள கங்கை நாராயண சக்கரவர்த்தி ஆணையிட்டுள்ளது தெரிகிறது.
இதன் மூலம் கோவிலுக்கு தொடர்ந்து வருமானம் கிடைக்க ஏதுவாக்கின்றது.
அகம்படிநல்லூர் -ஊரும் பெயரும்
—————————
அகம்படிநல்லூர் என்ற ஊர் பற்றிய கல்வெட்டு குறிப்பு வழியாக முதலாவதாக அறிய வரும் செய்தி,குறிப்பிட்ட கி.பி 13ம் நூற்றாண்டு காலத்திலேயே கல்வெட்டில் அகம்படி,அகம்படியர் என அறியப்படும் இன்றைய அகமுடையார் இனக்குழுவினர் குறிப்பிட்ட இந்த சிவகங்கை,மானாமதுரை பகுதிகளில் 1000 வருடங்களுக்கு முன்பாகவே பூர்வீகமாக இருந்து வருகிறார்கள் என்பது ஆகும்.
தன் சாதியின் பெயராலேயே ஊர் இருந்ததுள்ளது என்ற குறிப்பின் மூலம் குறிப்பிட்ட பகுதிகளில் இவர்கள் தொகுப்பாக இருந்துள்ளனர் என்பதும் செல்வாக்குடனும் ஆட்சி செய்துள்ளனர் என்பது கங்கை குல சக்கரவர்த்தி என்ற பட்டத்துடன் தென் மாவட்டங்களில் கண்டுபிடிக்கப்பட்ட மேலும் பல கல்வெட்டு செய்திகளால் உறுதிப்படுத்த முடிகின்றது.
குறிப்பிட்ட இந்த அகம்படிநல்லூர் பாண்டியர் காலத்தில் கருங்கைநாடு என்று அழைக்கப்பட்ட பகுதியில் அமைந்திருந்ததாக வரலாற்றஞர் வெ.வேதாச்சலம் தனது “பாண்டியநாட்டு வரலாற்றுமுறை சமூக நிலவியல்” நூலில் குறிப்பிட்டுள்ளார்.
பார்க்க படம் 2,3
குறிப்பிட்ட இந்த கருங்கைநாடு படத்தின் மேப்பை இந்த பதிவின் 3ம் படத்தில் காணலாம். அகம்படிநல்லூர் குறிப்பிட்ட அந்த கருங்கைநாட்டில் அமைந்திருந்ததை அறியலாம்.
கல்வெட்டு செய்தியில் குறிப்பிடப்படும் ஊர்களில் கணபதி ஏம்பல் ஊர் தவிர மற்ற ஊர்களான கங்கை கொண்ட நல்லூர், ,அகம்படிநல்லூர்,எழுநூற்றுவ மங்களம்,அணிவளநல்லூர் , சிவமங்களம்,சேருடைநல்லூர்,மருதங்குளம் கற்பகநிதி மங்களம் மஞ்சனேம்பல் என்ற ஊர்ர் பெயர்களும் இன்றைய காலத்தில் வழக்கத்தில் இல்லை என தெரிகின்றது.
கங்கை குலமும் கங்கை நாராயண சக்கரவர்த்தியும்
—————————————–
கல்வெட்டில் குறிப்பிடப்படும் அண்ணன் கங்கை நாராயண சக்கரவர்த்தி என்பவரின் பெயரே நமக்கு பல தகவல்களை வழங்குகிறது.
சக்கரவர்த்தி என்ற அடைமொழி மூலம் இவரும் அரசர் போல் அதிகாரம் படைத்தவர் என்பதும் இவர் இறையிழி நிலம் வழங்கியிருப்பதன் மூலமும் இந்த கருத்து உறுதி செய்யப்படுகிறது.ஏனென்றால் இறையிழி நிலம் அளிக்கும் உரிமை அரசர்களுக்குரியதாகும். ஏனென்றால் நிலத்தின் மீது வரி விதிக்கும் அதிகாரிக்கும் அதிகாரம் அரசிற்கே உரியதல்லவா?
கல்வெட்டு மெய்கீர்த்தியில் பாண்டிய அரசனின் மெய்கீர்த்தி வருவதால் இவர் பாண்டிய அரசனுக்கு கீழ் ஆட்சி புரிந்த சிற்றசராக இருந்திருக்க வேண்டும் என்பது உறுதியாக தெரிகிறது.
மேலும் வரலாற்று ஆசிரியர் வெ.வேதாச்சலம் என்பவரும் இதை கருத்தை தனது நூல்கள் மற்றும் கட்டுரைகள் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.
ஏற்கனவே நமது அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் சோழ கங்கதேவன், தென்ன கங்க தேவன் என்ற பெயரில் கங்கர் அடைமொழியுடன் உள்ள அகம்படியர் சமூகத்தினரின் கல்வெட்டுச்செய்திகளை படித்திருப்பீர்கள்!
மேலும் இந்த கல்வெட்டு செய்தியில் குறிப்பிடப்படுவரும் கங்கை என்ற அடைமொழியுடன் காணப்படுவதாலும் இவரை வரலாற்று ஆசிரியர்கள் பலர் கங்கை குலத்தவர் என்று குறித்திருப்பதையும் கொண்டு மேற்க்குறிப்பிட்ட தென்ன கங்க தேவன்,சோழ கங்க தேவன் போன்று இவரும் அகம்படியர் சமூகத்தவர் என்பதை அறிந்து கொள்ளலாம்.
மேலும் இந்த கங்கை நாராயண சக்கரவர்த்தி குறிப்பிட்ட மேலநெட்டூர் ஊரில் பிறந்து இப்பகுதிகளில் ஆட்சியாளராக திகழ்ந்தவன் என்பதாலும் அகம்படி சமூகத்தவர் செறிந்து வாழ்ந்த இந்த அகம்படிநல்லூர் மேலநெட்டூர் கிராமத்திற்கு மிக அருகே நிறைந்த ஊர் என்பதையும் பார்க்கும் போதும் , அகம்படி நல்லூர் என்ற கிராமத்தை தானம் வழங்கியுள்ள செய்தி போன்ற மூன்று விதமான தரவுகளை சீர்தூக்கிப்பார்க்கும் போது குறிப்பிட்ட இந்த கங்கை நாராயண சக்கரவர்த்தி என்பவர் அகம்படி சமூகத்தவர் என்பது திண்ணம்.
அகம்படியர்களும் பாண்டிய அரசர் மணவுறவுகளும்
———————————————-
அதாவது கல்வெட்டு செய்தியில் இவர் அண்ணன் என்ற அடைமொழியுடன் குறிப்பிடப்படுவதை கண்டோம். அண்ணன் என்ற அடைமொழி மூலம் இவர் பாண்டியனுக்கு அண்ணன் உறவுள்ளவராக இருந்துள்ளார் என தெரிகிறது.
ஏனென்றால் பொதுவாக கல்வெட்டு செய்தியில் பொதுவாக பெயருடன் அண்ணன் என்று வரும் போது அது அரசர்களுடன் அவர்களுக்குள்ளான அவர் உறவுகளை அது குறித்து நின்றது தெரியவருகின்றது. இந்த கல்வெட்டு மெய்கீர்த்தியில் மாறவர்மன் சுந்தர பாண்டியன் என்று குறிப்பிடப்படுவதால் குறிப்பிட்ட இந்த கங்கை நாராயண சக்கரவர்த்தி பாண்டியருடன் திருமண உறவில் இணைந்து அண்ணன் முறையானவர் என்பதை அறியலாம்.
பாண்டியர் அகம்படியர் திருமண உறவுகள் ஒன்றும் புதிதானது அல்ல
திருவாதவூர் கல்வெட்டு செய்தியில் குறிப்பிடப்படும்
நல்ல பெருமாளான அண்ணன் தமிழ் பல்லவராயர் என்பதன் மூலமும் , திருக்கோளக்குடி பாண்டியர் கல்வெட்டு செய்தியில் மைத்துனர் அழகப்பெருமாள் என்று குறிப்பிடப்படுவதன் மூலம் இன்றைய அகமுடையார் சமூகத்தினர் பாண்டிய அரசர்களுடன் கொண்ட மணவுறவுகளும் அதன் வாயிலாக ஏற்பட்ட இந்த உறவுமுறைகளும் கல்வெட்டு செய்திகள் வழியாக அறியக்கிடைக்கின்றது. அகம்படியர்களுக்கும் பாண்டிய அரசர்களுக்குமான திருமண உறவுகள் குறித்து சான்றுகளுடன் மற்றோரு பதிவில் விரிவாக காண்போம்.
போர்களம் பல கண்ட நெட்டூரூம் அகம்படியினரின் நிலைப்படையும்
———————————————————-
குறிப்பிட்ட இந்த நெட்டூர் கிராமம் வரலாற்று முக்கியத்துவம் கொண்ட போர்களை சந்தித்துள்ளது .
குறிப்பாக வீரபாண்டியனுக்கும் ,மூன்றாம் குலோத்துங்க சோழனுக்கும் நடந்த போர் குறிப்பிட்ட இந்த நெட்டூரிலேயே நடந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் கோவிலுக்கு தானம் அளிக்கப்பட்ட ஊர்களின் பட்டியலில் நெட்டூருக்கு அருகில் இருந்த ஊர்களின் பட்டியலில் எழுநூற்றுவமங்கலம் எனும் ஊரும் குறிப்பிடப்படுகின்றது. ஆகவே இந்த நெட்டூர்,அகம்படிநல்லூர் ஊருக்கு அருகில் எழுநூற்றுவர் படை இருந்துள்ளது தெரியவருகின்றது.
அகம்படி இனத்தவர் பெயரில் அமைந்த அகம்படிநல்லூரும் ,எழுநூற்றுவர் படை நிறுத்தப்பட்டிருந்த எழுநூற்றுவமங்கலம் எனும் ஊரும் மிக அருகில்அமைந்திருந்ததை காணும் போது இந்த எழுநூற்றுவர் படையானது அகம்படி சாதியினரின் படையேயாகும் என்பதை உணரலாம். ஏனென்றால் அக்காலத்தில் ராணுவத்தினரின் படைவீடு அருகில் வேறு ஒரு சாதியை சேர்ந்தவர்கள் தொகுப்பாக அமைந்திருப்பதை ஏற்புடையது ஆகாது .
மேலும் இதை உறுதி செய்வதற்கு மேலும் சான்றுகள் வேறு கல்வெட்டு செய்திகள் மூலம் கிடைக்கின்றது.
கி.பி 1212ம் வருடத்தின் மூன்றாம் குழோத்துங்கசோழன் காலத்து மதுராந்தகம் புக்கத்துறை கல்வெட்டில் “நந்திபன்மன் நிலைப்படைக்கு ஜீவிதமாக” என்ற செய்தி காணப்படுகின்றது. இச்செய்தியின் மூலம் குறிப்பிட்ட இந்த நந்தி பன்மன் பெயரில் சோழ அரசர்களின் நிலைப்படை இருந்துள்ளது தெரியவருகின்றது .
இந்த நந்திபன்மன் அகம்படியர் இனத்தை சேர்ந்தவன் என்பது இன்றைய சென்னைப்பகுதியில் அன்று அமைந்திருந்த திருநீர்மலை கோவில் கண்டறிப்பட்ட கல்வெட்டு செய்தி மூலம் அறிய முடிகின்றது. மேலும் சோழ கங்க தேவன் என்ற குறுநில அரசரின் கீழ் சோழ அரசரிடம் பணியாற்றியவன் என்பதையும் இதே கல்வெட்டு செய்திகளின் மூலம் அறிய முடிகின்றது.
இன்னும் விரிவாகவும் சரியாகவும் சொல்ல வேண்டுமென்றால் கங்கர் பட்டம் கொண்ட சோழ கங்கனின் உறவினரான இந்த கலியுக மெய்யனான நந்தி பன்மன் சோழ அரசிடம் பணியாற்றியுள்ளான். இந்த நந்திபன்மன் என்ற பெயரிலேயே நிலைப்படை இருந்துள்ளது.
அகம்படி என்ற பெயரில் மற்ற ஊர் தெரு பெயர்கள்
——————————————
சேலம் மாவட்டம் வாழகுட்டபட்டி என்னும் ஊரில் உள்ள ஏரி கி.பி 13ம் நூற்றாண்டு காலத்தில் அகம்படியார் ஏரி என்று அழைக்கப்ப்பட்டுள்ளது.
அதே போல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அகமுடி நாகமங்கலம் என்ற பெயரில் ஊர் அமைந்துள்ளது.இதில் அகமுடி என்பது அகம்படி என்ற சொல்லின் மக்கள் பயன்பாட்டில் ஏற்பட்ட திரிபாகும் .
ஊர்கள் மட்டுமல்ல அகம்படி,அகமுடையார் என்ற சாதி பெயரில் தெருக்களும் அமைந்துள்ளன்ன.
குறிப்பாக இலங்கையில் 12,13ம் நூற்றாண்டுகளில் அகம்படி வீதி,பரிவார வீதி போன்ற அகம்படியர் சம்பந்தமான தெருங்கள் பற்றிய தகவல்கள் கிடைக்கின்றன.
ஆதார நூல் :: History of Sri Lanka From Earliest Times Up to the Sixteenth Century page number 141 ஆசிரியர் :: W I Siriweera
தற்காலத்தில் குறிப்பிட வேண்டுமென்றால்
கும்பக்கோணம் தாராபுரத்தில்,,திருத்துறை பூண்டி ஊரில், பரக்கலக்கோட்டை, ஈரோடு மாவட்டம் அந்தியூர், அருப்புக்கோட்டை போன்ற பல ஊர்களில் அகம்படியர்,அகமுடையார் என்ற சாதி பெயரில் தெருக்கள் தற்போதும் உள்ளன.
இதைப்பற்றி மற்றொரு பதிவில் விரிவாக காண்போம்!
இக்கட்டுரையை இன்னும் பல்வேறு கல்வெட்டு செய்திகளுடன் ஒப்பிட்டு மேலும் விரிவாக எழுத முடியும்.ஆனால் ஏற்கனவே பல நாட்கள் இக்கட்டுரை செய்தி ஆராய்வதற்காக ஒதுக்கி நேரம் செலவளித்துவிட்டதால் இப்போது இத்துடன் இப்படியே இக்கட்டுரையை நிறைவு செய்கின்றோம்.
நன்றி:
நம் கல்வெட்டு ஆண்டறிக்கையில் உள்ள அகம்படி நல்லூர் என்ற ஊர் பெயரை கண்டறிந்து அதை ஆராய்ந்து கட்டுரை எழுதுமாறு கூறிய அகமுடையார் அரண் இயக்க ஒருங்கிணைப்பாளர் திரு.பாலமுருகன் அகமுடையார் அவர்களுக்கு நன்றி!
மேலும் வரலாற்று அறிஞர் வெ.வேதாச்சலம் தனது “பாண்டியநாட்டு வரலாற்றுமுறை சமூக நிலவியல்” நூலில் அகம்படிநல்லூர் குறித்து தெரிவித்து இருப்பதாக கூறி அந்த நூலை வாங்கி நம் பார்வைக்கு அனுப்பினார். அந்த நூலில் அகம்படிநல்லூர் என்ற ஊர் கி.பி 1300 வாக்கில் கல்வெட்டு செய்தியில் காணப்படுகின்றன என்றும் இவ்வ்வூர் பாண்டிய நாட்டின் கருங்குடி நாடு பிரிவின் வருகின்றன என்ற தகவலையும் அளித்தன.
இந்த ஒற்றைப்புள்ளி கருத்துடன் ,பல்வேறு கல்வெட்டு செய்திகளை ஒப்பிட்டு ஆராய்ந்து இக்கட்டை வரையப்பட்டுள்ளது.
கட்டுரை ஆசிரியர் மு.சக்திகணேஷ் (அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் ) பக்கத்திற்காக!
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்