First
உலகப்பன் சேர்வைக்காரர் ஊரை திரும்ப உருவாக்கிய கல்வெட்டு
—————————————————–
இன்றைய விருதுநகர் திருச்சுழி அருகே கி.பி 18ம் நூற்றாண்டில்
கூத்தனார்கோட்டை என்ற ஊரும் காக்கனூர் குளம் என்ற இடங்களை ஓடை ( ஓடையில் ஏற்பட்ட தீடீர் வெள்ளத்தால்) அழிந்து போனதையடுத்து உலகப்பன் சேர்வைக்கார் (அகமுடையார்) என்பவர் பொன் போட்டு (பணம் செலவழித்து) ஊரில் உள்ள முக்கிய பகுதிகளையும் , குளத்தையும் உருவாக்கி சுதை(கோவில் ) உண்டாக்கி குடி ( மக்கள்) படை ( காவல்) ஏற்படுத்தி வரி ஊழியம் (வரிகளால் கிடைக்கும் வருமானம்) , நஞ்சை புஞ்சை சறுவமும் ( நஞ்சை ,புஞ்சைகளில் கிடைக்கும் வருமானம் அனைத்தையும்) (கல்வெட்டு சிதைந்துள்ளதால் யாருக்கு தானமளித்துள்ளார் என்று அறியமுடியவில்லை) . ஆனால்
கல்வெட்டின் இறுதியில் ஓம்படைகிளவி( தானத்தை அழிக்க முயற்சிப்பவர்களுக்கு கிடைக்கும் சாபம் பற்றிய எச்சரிக்கை) வருவதால் பெரும்பாலும் கோவில் ஏதேனும் பொதுக்காரியம் ஒன்றுக்கே உலகப்பன் சேர்வைக்காரர் தானம் அளித்திருக்க வேண்டும்.
ஊரை சீர்படுத்தி,குளங்களை ஏற்படுத்தி
குடிகளை குடியேற செய்து , காவலை ஏற்படுத்தி , வரிகளை தானம் வழங்கி , நிலங்களை தானம் செய்யும் அளவிற்கு மிகவும் அதிகாரம் பெற்றவராக உலகப்பன் சேர்வைக்கார் விளங்கியுள்ளார் மேலும் எந்த அரசர்/ஜமீன்களின் மேலாண்மை இல்லாத கல்வெட்டு என்பதால் இவர் திருச்சுழி பகுதியில் மிகவும் அதிகாரம் வாய்ந்தவராக (காணி ஆட்சி,அதிகாரம் கொண்டு ) விளங்கியவர் என்பது புரிகின்றது.
திருச்சுழிப்பகுதியில் அகமுடையார்கள் பெரும் ஆளுமைகளாக விளங்கியுள்ளார்கள் என்பது வேறு சில கல்வெட்டுக்களாலும் இவர்கள் வழங்கிய தானம் மூலமாகவும் தெரியவுகின்றது. இது பற்றி மற்றொரு நாள் விரிவாக காண்போம். குறிப்பிட்ட திருச்சுழி பகுதியில் வாழ்வோர் தங்களை பற்றிய செய்திகளையோ, தாங்கள் அறிந்த செய்திகளையோ கமேண்டில் பதிவு செய்யலாம்.
ஆதாரம்: விருதுநகர் மாவட்ட கல்வெட்டுக்கள் தொகுதி,கல்வெட்டு எண் 219/2005, தமிழக அரசு வெளியீடு
நன்றி: இக்கல்வெட்டினை நமக்கு அனுப்பியவர் அகமுடையார் அரண் திரு.பாலமுருகன் அகமுடையார் அவர்கள்.
அறிவிப்பு:
இந்த கல்வெட்டு செய்தியை கூடுதல் தகவல்களுடன் விரிவாக எழுதியிருக்கலாம். ஆனால் லேப்டாப் நீண்டநாட்களாக பழுதானதால் விரிவாக ஆய்வை விளக்கி காணொளியாகவோ, நீண்ட கட்டுரைகளாகவோ வெளியிட முடியாத நிலை.
அகமுடையார் வரலாற்று தரவுகளை நிறைய தேடி சேகரித்து ஆய்வு செய்துள்ளோம்.
சேர்த்த செய்திகளை அப்படியே வைத்திருந்தால் பயன்படாது சென்றுவிடலாம்.
அதனால் இனிவரும் காலங்களில் கிடைத்த கல்வெட்டு செய்திகளை சுருக்கமாக அல்லது அப்படியே பதிவு செய்யவிருக்கின்றோம். பெரிதும் முயன்று தேடி எடுத்த செய்திகளை அப்படியே வைத்திருப்பதை விட அப்படியே வெளியிடலாம் அல்லவா சமுதாயத்தில் உள்ள மற்றவர்கள் ஆய்வுக்கு பயன்படும் என்பதனால்) …
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்